செய்திகள்

பிரிஸ்பேன் டெஸ்ட்: பாகிஸ்தான் 97 ரன்னுக்குள் 8 விக்கெட்டை இழந்து திணறல்

Published On 2016-12-16 11:28 GMT   |   Update On 2016-12-16 11:28 GMT
பிரிஸ்பேன் டெஸ்ட் 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 97 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. பகல் - இரவு டெஸ்டான இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவன் ஸ்மித் (130), ஹேண்ட்ஸ்காம்ப் (105) ஆகியோரின் சதத்தால் முதல் இன்னிங்சில் 429 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது ஆமிர், வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அசார் அலி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.



அடுத்து சமி அஸ்லாம் உடன் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 43 ரன்னாக இருக்கும்போது பாபர் ஆசம் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன. 67 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

9-வது விக்கெட்டுக்கு சர்பிராஸ் அஹமது உடன் மொகமது ஆமிர் ஜோடி சேர்ந்தார். இருவரும் 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட்டுக்கள் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.



சர்பிராஸ் அஹமது 31 ரன்னுடனும், மொகமது ஆமிர் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 8 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ள பாகிஸ்தான், தற்போது வரை 332 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

நாளைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி எப்படியும் பாலோ-ஆன் ஆவது உறுதி. ஆனால், ஆஸ்திரேலியா பாலோ-ஆன் கொடுக்குமா? அல்லது தொடர்ந்து அந்த அணி 2-வது இன்னிங்சை தொடங்குமா? என்பது தெரியவில்லை.

Similar News