செய்திகள்

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவுக்கு ரூ.13 கோடி பரிசு

Published On 2016-08-21 07:11 IST   |   Update On 2016-08-21 08:09:00 IST
ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சிந்துவுக்கு பணம், கார், வீடு என போட்டி போட்டு பரிசுகளை வழங்குகிறார்கள். இதுவரை அவருக்கு ரூ.13 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் நடந்து வரும் 31-வது ஒலிம்பிக் போட்டி நாளையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இதுவரை 2 பதக்கங்களே கிடைத்து உள்ளன. பதக்க ஏக்கத்தை தணித்த இருவருமே பெண்கள் ஆவர்.

பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங் கனை பி.வி.சிந்து 21-19, 12-21, 15-21 என்ற செட் கணக்கில், உலக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீராங் கனை கரோலினா மரினிடம் போராடி தோல்வி கண்டார். 2-வது இடம் பிடித்த சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது.

ஒலிம்பிக் வரலாற்றில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சிந்து தான். இதனால் ஒட்டுமொத்த தேசமும் அவரை பாராட்டி கொண்டாடுகிறது.

வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள 21 வயதான சிந்து, பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ரூ.13 கோடிக்கும் அதிகமாக பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் வசிக்கிறார். சிந்துவின் வசிப்பிடம் தெலுங்கானா என்றாலும், அவர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரா? அல்லது ஆந்திராவைச் சேர்ந்தவரா? என்று ஒரு பக்கம் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு மத்தியில் இவ்விரு மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு அவருக்கு பரிசுகளை அறிவித்து உள்ளன.

தெலுங்கானா பிரிவதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநில அணிக்காக போட்டிகளில் பங்கேற்றவர் சிந்து. ஒலிம்பிக்கில் பதக்க மங்கையாக உருவெடுத்துள்ள அவருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் ரூ.3 கோடி தொகை, மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதியில் 9 ஆயிரம் சதுர அடியில் வீட்டு மனை, குரூப்-1 நிலையில் உள்ள அரசு பணி ஆகியவை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று அறிவித்தார்.

சிந்து தனக்கு விரும்பிய பணியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறிய சந்திரபாபு நாயுடு, சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, சிந்துவுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று நேற்று முன்தினம் அறிவித்து இருந்த தெலுங் கானா அரசு, அந்த தொகையை தற்போது ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறது. அத்துடன் அவருக்கு 3 ஆயிரம் சதுர அடி நிலமும் வழங்குவதாக அறிவித்துள்ள தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், சிந்து விரும்பினால் தெலுங்கானா அரசு பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் கூறி உள்ளார்.

மேலும், சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் தெலுங்கானா அரசு அறிவித்து உள்ளது.

அத்துடன் நாளை (திங்கட்கிழமை) தாயகம் திரும்பும் சிந்துவுக்கு பிரமாண்டமான வரவேற்பு விழா நடத்தவும் தெலுங்கானா அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது.

டெல்லி மாநில அரசு தனது பங்களிப்பாக சிந்துவுக்கு ரூ.2 கோடி வழங்குவதாக கூறி உள்ளது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த பி.வி.சிந்து ஐதராபாத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் உதவி மேலாளராக (விளையாட்டு) பணியாற்றுகிறார். இதனால் அவருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன சேர்மன் வரதராஜன் அறிவித்து உள்ளார். மேலும், சிந்துவுக்கு பதவி உயர்வும் அளிக்கப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

மேலும் சிந்துவுக்கு அரியானா மாநில அரசு ரூ.50 லட்சமும், மத்திய பிரதேச அரசு ரூ.50 லட்சமும், இந்திய பேட்மிண்டன் சங்கம் ரூ.50 லட்சமும் வழங்க இருக்கின்றன. வெள்ளிப்பதக்கம் பெற்றதன் மூலம் மத்திய அரசின் வெகுமதி ரூ.50 லட்சம், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பரிசு ரூ.30 லட்சம் ஆகியவையும் சிந்துவுக்கு கிடைக்கும்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், நடிகருமான விஜய் சந்தர் அளித்த பேட்டியில், ‘ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவின் பெயரில் 2 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டு, அதற்கான பத்திரத்தை எங்கள் கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி சிந்துவிடம் வழங்குவார். இந்த நிலம் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் பண்ணை வீட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது’ என்றார்.

இது தவிர, விளம்பரத்துக் காக சிந்துவை ஒப்பந்தம் செய்ய பல்வேறு நிறுவனங்கள் காத்து இருக்கின்றன. அவரது மெச்சத்தகுந்த சாதனைக்காக கார், நகை, வீடுகளை வழங்கவும் பல தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஐதராபாத் பேட்மிண்டன் சங்கம் பி.எம்.டபிள்யூ. சொகுசு கார் வழங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற (வெண்கலம்) முதல் இந்தியர் என்ற சாதனைக்குரிய, அரியானாவைச் சேர்ந்த 23 வயதான சாக்‌ஷி மாலிக்குக்கும் பரிசுகள் குவிகின்றன.

டெல்லி மாநில அரசு சார்பில் சாக்‌ஷி மாலிக்குக்கு ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. அரியானாவின் ரோட்டக் நகரில் உள்ள சாக்‌ஷியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்த டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா, பின்னர் இந்த பரிசு அறிவிப்பை வெளியிட்டார்.

சாக்‌ஷியின் தந்தை சுக்பிர் மாலிக், டெல்லி போக்கு வரத்து கழக பேருந்தில் கண்டக்டராக வேலை பார்க்கிறார். சாக்‌ஷியின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கும் அவரது தந்தை சுக்பிர் மாலிக்கையும் கவுரவப்படுத்த விரும்பிய டெல்லி அரசு, அவருக்கு பதவி உயர்வு வழங்க முடிவு செய்து இருக்கிறது.

சாக்‌ஷி மாலிக்குக்கு, அரியானா அரசு பாராட்டு விழா நடத்தி ரூ.2½ கோடி வழங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா அரசும் சாக்‌ஷிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்து உள்ளது.

Similar News