செய்திகள்

உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு முறையீடு: நர்சிங் யாதவ் ரியோவில் பங்கேற்பாரா?

Published On 2016-08-16 15:00 GMT   |   Update On 2016-08-16 15:00 GMT
உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு முறையீடு செய்துள்ளதால் நர்சிங் யாதவ் ரியோவில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் (வயது 26) டெல்லி காமன்வெல்த் (2010) போட்டியில் தங்கமும், 2014 ஆசிய விளையாட்டில் வெண்கலமும் வென்றவர். 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கிலோ) வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

கடந்த ஜூன் 25-ல் இவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், தடைசெய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது 'ஏ, பி' என இரு மாதிரிகளிலும் உறுதியானது. இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் நர்சிங் யாதவ் கலந்து கொள்வது கேள்விக்குறியானது. இதனால் அவருக்குப் பதிலாக பிரவீண் ராணா மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையே தேசிய ஊக்கமருந்து சோதனை அமைப்பின் ஆணையம் நர்சிங் யாதவ் பிரச்சனை குறித்து விசாரணை நடத்தியது. அப்போது, தனக்கு தெரியாமல் உணவில் ஊக்கமருந்தை கலந்து விட்டதாகவும், இது தனக்கு எதிராக நடந்த சதி என்றும் நரசிங் யாதவ் குற்றம்சாட்டினார். மேலும், ஆணையம் முன் ஆஜராகி 600 பக்க விளக்கத்தையும் சமர்ப்பித்தார். மொத்தம் மூன்றரை மணி நேரம், மூடப்பட்ட அறையில் விசாரணை நடந்தது. தங்களது தரப்பு வாதங்களுக்குரிய ஆதாரங்களை எடுத்துக் கூறினர்.

விசாரணை முடிவில் ‘‘நரசிங் யாதவ் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம். நரசிங் மீது எந்த தவறும் இல்லை. விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்கமருந்து கலந்துள்ளது. அவர் தெரியாமலேயே இதை பயன்படுத்தியுள்ளார்’’ என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் ரியோ போட்டியில் கலந்து கொள்வதற்கு பிரேசில் சென்ற நர்சிங் யாதவ், நாளைமறுநாள் தனது முதல் போட்டிக்காக ஆயத்தமாகி வருகிறார்.

இந்நிலையில் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (WADA) இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA) நர்சிங் யாதவிற்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை எதிர்த்து முறையீடு செய்துள்ளது. இதனால் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள நர்சிங் யாதவிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இந்த விசாரணையின் முடிவில் அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, ரியோவில் நாளைமறுநாள் நர்சிங் யாதவ் போட்டியில் கலந்து கொள்வது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

நர்சிங் யாதவ் கலந்து கொள்ளவில்லை எனில், பிரவீண் ராணா கலந்து கொள்வாரா? என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

Similar News