செய்திகள்

300மீ ஓட்டத்தில் மோதி பார்ப்போமா?: 400மீ உலக சாதனையாளருக்கு உசைன் போல்ட் சவால்

Published On 2016-08-16 19:09 IST   |   Update On 2016-08-16 19:09:00 IST
ரியோ ஒலிம்பிக் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தென்ஆப்பிரிக்காவின் வேட் வான் நிகெர்க் புதிய உலக சாதனை படைத்தார். அவரை 300 மீட்டர் ஓட்டத்தில் தன்னுடன் ஓடத் தயாரா? என்று போல்ட் சவால் விட்டுள்ளார்.
நேற்று காலை நடந்த 400 மீட்டர் ஓட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் வேட் வான் நிகெர்க் புதிய உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை புரிந்தார். அவர் பந்தய தூரத்தை 43.03 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு அமெரிக்க வீரர் மைக்கேல் ஜான்சன் 43.18 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 17 ஆண்டுகால 400 மீட்டர் உலக சாதனையை இன்று நிகெர்க் முறியடித்தார்.

இவரை 100 மீட்டர் ஓட்டத்தின் முடிசூடா மன்னான உசைன் போல்ட் சவாலுக்கு அழைத்துள்ளார். மூன்று முறை தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வாங்கிய உசைன் போல்ட், 200 மீட்டர் மற்றும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றிலும் மூன்று தங்க பதக்கம் வாங்க காத்துக் கொண்டிருக்கிறார்.

தற்போதைய ரியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்றாலும், அவர் எதிர்பார்த்த வேகம் கிடைக்கவில்லை. அரையிறுதியில் ஓடியதை விட கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளவேண்டியதாயிற்று. தங்கம் வாங்கியதைத் தவிர உலக சாதனை, ஒலிம்பிக் சாதனை என்ற ஏதும் படைக்க முடியாமல் போனது.

அதேசமயத்தில் அமெரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஜான்சன் சாதனையை தென்ஆப்பிரிக்கா வீரர் வேட் வான் நிகெர்க் புதிய உலக சாதனைப் படைத்துள்ளார். இவரது பெயரே ஓங்கி ஒலிப்பதால், இருவரும் 300 மீட்டர் ஓட்டத்தில் ஓடி யார் சிறந்த வீரர் என்று பார்ப்போமா? என்று போல்ட் சவால் விட்டுள்ளார்.

இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில் ‘‘அரிதாக நடக்கும் 300 மீட்டர் ஓட்டத்தில் என்னுடன் ஓட வேட் வான் நிகெர்கிற்கு நான் சவால் விடுகிறேன். அது உண்மையிலேயே சிறந்த ஓட்டமாக இருக்கும்’’ என்றார்.

மைக்கேல் ஜான்சன் 300 மீட்டரை 30.85 வினாடிகளில் கடந்து சாதனைப் படைத்துள்ளார். போல்ட் 30.97 வினாடிகளிலும், வான் 31.03 வினாடிகளிலும் கடந்துள்ளனர்.

Similar News