செய்திகள்

வீடியோ: டைவ் அடித்து 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வாங்கிய பனாமா வீராங்கனை

Published On 2016-08-16 18:07 IST   |   Update On 2016-08-16 18:07:00 IST
பெண்களுக்கான 400 மீ்ட்டர் ஓட்டப் பந்தயத்தில் பனமா வீராங்கனை ‘டைவ்’ அடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ரியோ ஒலிம்பிக்கில் திங்கட்கிழமை (நேற்று) பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் தங்க மங்கை அல்லிசன் பெலிக்ஸ், பனாமா வீராங்கனை ஷயுனேயி மில்லர் உள்பட 8 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

போட்டி தொடங்கியதும் அமெரிக்காவின் அல்லிசன் பெலிக்ஸ், ஷயுனேயி மில்லர் ஆகியோர் சிட்டாக பறந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஓடினார்கள்.

ஒரு கட்டத்தில் பனாமா வீராங்கனை முன்னணி வகித்தார். அதன்பின் அமெரிக்க வீராங்கனை பனாமா வீராங்கனையை நெருங்கினார். இருவரும் பந்தய தூரத்திற்கான இலக்கை ஒரே அளவில் நோக்கி வந்தனர். அப்போது அமெரிக்க வீராங்கனை பந்தய தூரத்தில் கால் வைக்கவும், பனாமா வீராங்கனை ‘டைவ்’ அடித்து தனது கையால் பந்தய தூரத்தை தொட்டார்.

இதனால் பனமா மங்கை 0.07 வினாடி வித்தியாசத்தில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். பனாமா வீராங்கனை பந்தய தூரத்தை 49.44 வினாடிகளிலும், அமெரிக்க வீராங்கனை 49.51 வினாடிகளிலும் கடந்தனர்.

பனாமா வீராங்கனை ‘டைவ்’ அடித்ததால் பெலிக்ஸின் ஐந்தாவது தங்கப் பதக்கம் பறிபோனது.

Similar News