செய்திகள்

ரியோ: ஜெர்மனி படகு போட்டி அணியின் பயிற்சியாளர் கார் விபத்தில் மரணம்

Published On 2016-08-16 16:40 IST   |   Update On 2016-08-16 16:40:00 IST
ஜெர்மனி நாட்டின் கனோய் அணியின் பயிற்சியாளர் கார் விபத்தில் பலியானார். மற்றொருவர் காயத்துடன் உயிர்தப்பினார்.
பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் படகு போட்டியின் நீர்ச்சறுக்கு (canoe slalom) பிரிவில் ஜெர்மனி அணி இடம்பிடித்துள்ளது. இந்த அணிக்கு பயிற்சியாளராக ஸ்டீபன் ஹென்சா உள்ளார். இவரும் அணியுடன் ரியோ சென்றிருந்தார்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது சக பயிற்சியாளர் கிறிஸ்டியன் கயாடிங் உடன் இணைந்து காரில் ரியோ ஒலிம்பிக் நகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஸ்டீபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கிறிஸ்டியனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த ஸ்டீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என்று ஜெர்மன் அணி நேற்று தெரிவித்துள்ளது.

‘‘ஸ்டீபன் மரணம் அடைந்த இந்நாள் முடிவில்லா சோகத்தை ஏற்படுத்திய நாள்’’ என்று ஜெர்மன் ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பு தலைவர் அல்போன்ஸ் கோயர்மான் அறிக்கை விடுத்துள்ளார்.

Similar News