செய்திகள்

10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனைகள் சண்டேலா, அயோனிகா ஏமாற்றம்

Published On 2016-08-06 18:24 IST   |   Update On 2016-08-06 18:24:00 IST
10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அபூர்வி சண்டேலா, அயோனிகா பால் ஆகியோர் தகுதிச் சுற்றில் ஏமாற்றம் அடைந்து இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தனர்.
ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்று வரும் போட்டிகளில் பதக்கத்திற்குரிய போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியும் ஒன்று. இந்த போட்டியில் இந்தியா சார்பில் அபூர்வி சண்டேலா, அயோனிகா பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் நாளிலேயே இந்தியாவிற்கு இவர்கள் பதக்கம் வாங்கித் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 51 பேர் கலந்து கொண்ட தகுதிச் சுற்றில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீராங்கனைகளும் நான்கு முறை சுட வேண்டும். இதில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள்.

அதன்படி நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனைகள் அபூர்வி சண்டேலா 411.6 புள்ளிகள் பெற்று 34-வது இடத்தையும், அயோனிகா பால் 407.0 புள்ளிகள் பெற்று 43-வது இடத்தையும்தான் பிடிக்க முடிந்தது.

சீன வீராங்கனை லீ டு 420.7 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்தார். இது ஒலிம்பிக் சாதனையாகும். ஜெர்மனி வீராங்கனை 420.3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையம், ஈரான் வீராங்கனை 417.8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர். ரஷ்யா, அமெரிக்கா (2), குரோஷியா, சீனா வீராங்கனைகள் முறையே 4-வது இடம் முதல் 8-வது இடங்களை பிடித்தனர்.

தகுதிச் சுற்றோடு வெளியேறியதால் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் சுற்றில் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது.

Similar News