செய்திகள்

ரியோ ஒலிம்பிக்கில் தாக்குதல் நடத்த உருவான கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது

Published On 2016-07-21 22:26 IST   |   Update On 2016-07-21 22:27:00 IST
அடுத்த மாதம் 5-ந்தேதி பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சயோ பவுலோ:

அடுத்த மாதம் 5-ந்தேதி பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று அடிப்படையில் பிரேசில் நாட்டில் ஒரு குழு உருவாகியுள்ளது. இந்த குழு எப்படி ஆயுதம் வாங்குவது என்று ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த விவரம் போலீசாருக்கு தெரியவர துரித நடவடிக்கை எடுத்த 10 பேரை அதிரடியாக கைது செய்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் நாட்டின் நிதித்துறை மந்திரி அலேக்சாண்ட்ரே டி மொரேஸ் கூறுகையில் ‘‘தாக்குதல் நடத்த தற்காப்புக் கலை, வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கையாள்வது குறித்து பயிற்சி தொடங்க வேண்டும் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். இது நடந்து கொண்டே இருந்தது. அவர்களில் ஒருவன் பராகுவேயில் உள்ள ஆயுத விற்பனை கும்பல் உடன் தொடர்பு கொண்டு ஏ.கே. 47 துப்பாக்கி வாங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கும்பல் இன்டர்நெட் மூலம் தொடர்புகொண்டு வந்ததை காண்காணித்தபோது அவர்களது திட்டம் குறித்து தெரியவந்தது. இதனால் 130 அதிகாரிகள் இந்த கும்பலை தேடும் வேட்டையில் ஈடுபட்டது. இதில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இந்த கும்பலைச் சேர்ந்த மேலும் 19 பேரை தேடிவருகிறோம்’’ என்றார்.

ரியோ ஒலிம்பிக் தொடர் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தீவிரவாத செயலுக்காக காத்திருந்த கும்பல் பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News