சிறப்புக் கட்டுரைகள்

அறம் செய்வதற்கு ஏது அளவீடு?

Published On 2025-09-28 12:45 IST   |   Update On 2025-09-28 12:46:00 IST
  • அறம் என்பதே மனிதர்க்கு ஒழுக்க நிலை சார்ந்த ஒழுகலாறு ஆகும்.
  • செல்வத்தைச் சேர்த்து வைத்திருந்தால் மட்டும் சொர்க்கத்தின் வாசல் திறக்காது

அறம் என்னும் தர்மத்திற்கு எல்லையும் அளவீடும் உண்டா? என்பதை அறிந்து கொள்வதற்கு ஆர்வத்தோடு காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

'அறம்' என்கிற சொல் அடுத்தவர்க்கு நாம் செய்ய நினைக்கிற நல்ல எண்ணங்களையும், செய்து உதவுகிற நல்ல செயல்களையும் அடிப்படையாகக் குறிப்பிட்டு நிற்பதாகும். அறம் என்பதே மனிதர்க்கு ஒழுக்க நிலை சார்ந்த ஒழுகலாறு ஆகும். நம்முடைய சிந்தனைகளிலும் சொற்களிலும் செயல்களிலும் நன்மை மட்டுமே நிரம்பி வழியுமானால் அதுவே அற வாழ்வு ஆகும். மாணிக்க வாசகர், தமது சிவபுராணத்தில், மானுட உடம்பு ஒவ்வொன்றும் 'அறம், பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டப்பட்டிருப்பதாகத்' தெரிவிக்கிறார்.

அறம் மட்டுமே செய்து இந்தப் பிறவியில் புண்ணியம் சேர்க்கப் போகிறோமா? அல்லது பாவம் மட்டுமே செய்து நரகப் படுகுழியில் உழலப் போகிறோமா? என்பது, இந்த உடம்பை எப்படி நாம் பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என்கின்றனர் தத்துவ ஞானிகள்.

'அறம் செய்ய விரும்பு' எனும் ஆத்திசூடி, அறம் செய்வதால் மனித சமுதாயத்தில், செய்பவருக்கும் நன்மையே விளையும்; செய்யப்படுவோருக்கும் உதவிகளே பெருகும்! என்பதை வலியுறுத்துகிறது. உலக மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது நிலைமைக்கு ஏற்ப, அடுத்தவர்தம் நன்மையைப் பேணும் அறத்தின் வழி செயல்பட்டால் ஒட்டுமொத்தச் சமூகமும் அறச் சமூகமாகப் பெருமை பெறும்.

"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்"

என்னும் திருக்குறளில் திருவள்ளுவர் அறம் என்ற சொல்லுக்கு அற்புதமான பொருள் விளக்கம் தருகிறார். கொடை என்றும், ஈகை என்றும், தர்மம் என்றும் பல்வேறு நிலைகளில் அறம் வலியுறுத்தப்பட்டாலும் வள்ளுவர் குறிப்பிடும் அற விளக்கம் வாழ்வியல் விழுமியங்களை அடியொற்றியதாகத் திகழுகிறது. மனிதன் முதலில் தனது மனத்தளவில் தூய்மையான அறமனிதனாகத் திகழ வேண்டும் என்கிறார் வள்ளுவர். அதற்கு அடிப்படையில், நம் நெஞ்சத்தளவில் மாசுகளாகக் குவிந்துள்ள பொறாமை, பேராசை, கோபம், இவற்றின் காரணமாக வெளிப்படுகின்ற கடுஞ்சொற்கள் ஆகிய நான்கும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தவர் வாழும் வளமான வாழ்க்கையைக் கண்டு, அவர்களை மகிழ்ச்சியோடு வாழ்த்தாமல், அவர்கள்மீது பொறாமை கொள்வது, நம்மை அறம்பிறழ்ந்த செயல்களைச் செய்வதற்கு வழி திறந்து விடும். இயல்பான விருப்பம் தவிர்த்து, தகுதிக்குமீறிய பேராசை வயப்பட்டால், அறம் தவறிய செயல்களைச் செய்து மனம் குறுகிப்போக நேர்ந்து விடும். கடுங்கோபமும், அதனால் உதிர்க்கப்படுகிற கடுஞ்சொற்களும்கூட ஒருமனிதனை அறமற்ற மனிதனாக ஆக்கிவிடும்.

"நல்லது செய்தால் நல்லது நடக்கும்! அல்லது செய்தால் தீயதே நடக்கும்!" என்பது இடம் காலம் தாண்டி எப்போதாவது நடக்கலாம் என்று இருந்துவிடக் கூடாது; 'முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்' என்பது வள்ளுவர் குறிப்பிடும் உடனடி விளைவியல் தத்துவம். இது பிறவிகள் கடந்து பின்விளைவாகலாம்!; அல்லது செய்தவரைச் சாராமல் அவர்தம் வழித்தோன்றல்களுக்கு நேரலாம்! என்பதெல்லாம் வள்ளுவத் தத்துவத்தில் கிடையாது.

"பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின்

தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்"

நல்வினையோ தீவினையோ!, அறமோ பாவமோ! காலையில் செய்தால் மாலையில் வரும்! உடனடியாக வரும்! உறுதியாக வரும்! அதுவும் செய்தவருக்கே வரும்! என்பதே சிந்திக்க வேண்டிய செய்தி.

ஒவ்வொரு மனிதனுக்கும் மரணத்திற்குப் பின் என்ன? என்பது பெரும் கேள்விக்குறி. வாழும் காலத்தில் நல்லபடியாக வாழ்ந்து அறம் செய்திருந்தால் சொர்க்கமும். பாவம் செய்திருந்தால் நரகமும் கிட்டும் என்பது காலகாலமாக இருந்துவரும் மதம்சார்ந்த நம்பிக்கை. 'சாவின் தருணங்களுக்குப் பின் நேரப்போவதைப் பற்றி இப்போதே எதற்குக் கவலைப்பட வேண்டும்? அப்போது பார்த்துக் கொள்ளலாம்!; இளமையை மனத்திற்குத் தோன்றியபடி செயல்பட்டு அனுபவிப்போம்!; அறம் தர்மம் செய்வதைப் பற்றியெல்லாம் வயதானபிறகு யோசித்துக் கொள்வோம்!. இளமையில் செய்த தீங்குகளையெல்லாம் முதுமை வந்த பிறகு நன்மைகள் செய்து நேர் செய்துகொள்வோம்!' என்று சிந்திக்கக் கூடிய அதிபுத்திசாலிகளும் நம்மிடையே பெரும்பான்மையில் இருக்கிறார்கள். இவர்களுக்காகவே திருவள்ளுவர் ஓர் எச்சரிக்கைத் திருக்குறளை எழுதியிருக்கிறார்.

"அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை"

முதுமை வரும்போது பார்த்துக்கொள்வோம் என்று நினைக்காமல் இளைஞராக இருக்கும் காலத்திலேயே அறம் செய்துவிடவேண்டும்; அப்படி இளமையிலேயே செய்கிற அறச் செயல்கள்தாம் நாம் மறைகிற காலத்தில் நமக்கு மறையாப் புகழ்தந்து காக்கின்ற உற்ற துணையாக இருக்கும். ஆனால் நாம் அப்படியா இருக்கிறோம்?.

ஓர் ஊரில் ஓர் இளைஞர்; அயராது உழைப்பதில் கெட்டிக்காரர். உழைப்பதில் மட்டுமல்ல; உழைத்துப் பொருளீட்டுவதிலும் கெட்டிக்காரர். பொருளீட்டுவது மட்டுமல்ல; ஈட்டிய பொருளை எதற்கும் செலவு செய்யாமல் பாதுகாத்து வைப்பதிலும் அதிபுத்திசாலித் தனமாய் நடந்து கொள்பவர். அவரைப் பொறுத்தவரை நிதி மேலாண்மையில் வரவு மட்டுமே!; செலவு என்பது கைவிளங்கி நடைபெறாது. அரிதான முறையில் தனக்கும் தன் குடும்பத்தினருக்குமான செலவைக்கூட வெகு கஞ்சத்தனமாக மேற்கொள்பவர். பொதுக் காரியங்களுக்கும், சமூக நன்மைக்கும் என ஒரு காசுகூடச் செலவு செய்யாத கருமி. அடுத்தவர், தனது உறவினராக இருந்தாலும் எதுவுமே உதவ மாட்டாத சுயநலவாதி.

அந்த ஊருக்கு ஒருநாள் ஒரு துறவி வந்திருந்தார். ஊர்மக்கள் அனைவரும் திரளாக வந்திருந்து அவரை வரவேற்று உபசரனைகள் செய்தனர். பிறகு மக்களுக்கான அருளாசிகளை அறிவுரைகளாக துறவி வழங்கினார். ஊர்மக்களில் பெரும்பாலோர் அவர்களது வாழ்வியல் சிக்கல்களை அவரிடம் கூறி, விளக்கங்கள் கேட்டனர்; துறவியும் உரியவாறு வழிமுறைகளைக் கூறினார். இதைக் கேள்விப்பட்ட நமது கஞ்சமகாப் பிரபு இளைஞரும் துறவியைப் பார்க்க வந்திருந்தார். "இவ்வளவு காலமும் இடைவிடாது உழைத்துப், பல தலைமுறைகளுக்கான சொத்துக்களைச் சேர்த்து வைத்திருக்கிற எனக்கு, என் மரணத்திற்குப் பிறகு சொர்க்கம் கிட்டுமா? சொர்க்கத்திற்குப் போக நான் என்ன செய்ய வேண்டும்?"- துறவியிடம் கேட்டார்.

"செல்வத்தைச் சேர்த்து வைத்திருந்தால் மட்டும் சொர்க்கத்தின் வாசல் திறக்காது!; சொர்க்கம் கிடைக்க வேண்டுமென்றால் புண்ணியத்தைச் சேர்த்து வைத்திருக்க வேண்டும்" என்றார் துறவி. " புண்ணியத்தைச் சேர்க்க என்ன செய்ய வேண்டும் சாமி?" ஒன்றும் தெரியாததுபோல் கேட்டார் இளைஞர். "அதற்கு அன்றாடம் அறம் செய்ய வேண்டும்!. காசோ பணமோ உணவோ பொருளோ எதுவாயினும் தேவைப்படுவோருக்குக் கொடுத்து உதவ வேண்டும்!. அறம் செய்யச் செய்யப் புண்ணியம் வளரும். புண்ணியம் வளர வளரச் சொர்க்கத்தின் வாசல் உன்னை வரவேற்கத் தாமாகவே திறந்து கொள்ளும்" என்றார் துறவி.

அன்று முதல் துறவி சொன்னதையே வேத வாக்காகக் கொண்டு, அன்றாடம் அறம் செய்வது என்று முடிவு செய்தார் இளைஞர். இப்போதெல்லாம் வணிகக் கணக்குப் போல, ஈட்டுகிற வருவாயில் இத்தனை சதவீதம் அறம் செய்வதற்கு! என்று ஒதுக்கீடு செய்து தர்மம் செய்கிறார்கள். இளைஞர் அப்படியெல்லாம் கணக்குப் பார்க்காமல், நாள்தோறும் ஒருவருக்கு, அவர் ஏழையா? பணக்காரரா?, உண்மையிலேயே உதவி தேவைப்படுபவரா? இல்லையா? என்றெல்லாம் பார்க்காமல் ஒரு 'கைப்பிடி' அரிசியை தானமாக வழங்கத் தொடங்கினார். நமது சொர்க்க நுழைவுக்கான புண்ணியக் கணக்குத் தொடங்கிவிட்டதாக நம்பவும் தொடங்கினார். இப்படியே ஏறத்தாழ ஓராண்டு கழிந்தது.

ஓராண்டிற்குப்பின், பழைய துறவி அந்த இளைஞர் வாழும் ஊருக்கு வருகை தந்தார். ஊர்மக்களோடு சேர்ந்து அந்த இளைஞரும் சென்று வரவேற்றார். துறவி எல்லாருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருக்கும்போது, நம்முடைய இளைஞர் குறுக்கே புகுந்து, " சாமி! நீங்கள் கூறியபடியே, இந்த ஓராண்டாக அறம் செய்து கொண்டிருக்கிறேன்! எனக்கு சொர்க்கம் நிச்சயம் தானே?" என்று கேட்டார். " அறமாக என்ன செய்து கொண்டு வருகிறீர்?" இளைஞரிடம் துறவி கேட்டார்." சாமி! நாள்தோறும் ஒரு கைப்பிடி அரிசியை யாராவது ஒருவருக்கு வழங்கி வருகிறேன்!" என்று பெருமையாக இளைஞர் சொன்னார்.

ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த துறவி, இந்த இளைஞருக்கு மறுமொழி கூறாமல், அருகிலிருந்த மரத்தின் அடிப்பகுதியைத் தனது கைவிரல் நகம்கொண்டு கீறத் தொடங்கி விட்டார். பொறுமையிழந்த இளைஞர் துறவியைப்பார்த்து, " என்ன சாமி! எனக்கு பதில் சொல்லாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். துறவி, " நான் இந்த மரத்தின் அடிப்பகுதியை வெட்டி வீழ்த்துவதற்கு முயன்று கொண்டிருக்கிறேன்!. அப்படியே உன்னுடைய வினாவிற்கு விடையும் பகர்ந்து கொண்டிருக்கிறேன்!" என்றார்.

"மரத்தை யாராவது விரல் நகம்கொண்டு வெட்டிவீழ்த்த முடியுமா?. அதற்குக் கோடரி, ரம்பம் போன்ற பெரும்பெரும் ஆயுதங்கள் கொண்டு பெரிய அளவில் அல்லவா முயல வேண்டும்?. விரல்நகம் எப்படிப் பயன்தரும்?" துறவியிடம் கேட்டார் இளைஞர். சிரித்துக்கொண்டே பேசினார் துறவி, " அதே போலத்தான் நீ அறம் செய்கிற முறையும்!. நீ செய்கிற அறம் பயனுள்ள வகையில் இருந்தால் தான், அது உரிய புண்ணியத்தை உன்னிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும். போனால் போகிறது என்று ஏனோதானோ என்று நீ ஒரு கைப்பிடிஅரிசியைத் தானமாகக் கொடுப்பது என்பது, கைவிரல் நகம்கொண்டு மரம் வெட்டக் கிளம்புவது போன்றதுதான்!: பயன் தராது"என்றார்.

தன் தவறை உணர்ந்து கொண்டார் இளைஞர். ஆம்!. அறம் செய்வதற்கு அளவீடு என்பது கிடையாது; கடவுளோடோ அல்லது செய்யும் வணிகத்தோடோ பேரம் பேசிக்கொள்வதோ, லாபத்தின் சதவீதக் கணக்கைப் பங்கீடு செய்துகொள்வதோ உண்மையான அறம் கிடையாது. கிடைக்கிற செல்வத்தை, உண்மையான உதவி தேவைப்படுவோருக்குப், பிரதிபலன் கருதாமல் வழங்குவதே உண்மையான அறம். அதன் பலனாக, இந்த வாழ்விற்குப் பிறகு சொர்க்கம் கிடைக்கிறதோ இல்லையோ, வாழும் காலத்திலேயே நிலைத்த வளத்தையும், எல்லை கடந்த மகிழ்ச்சியையும் நாம் செய்யும் அறம் நமக்குக் கொண்டுவந்து சேர்க்கும். மன நிம்மதிக்கு மீறிய சொர்க்கமும் வேறு தேவையுண்டோ?!.

தொடர்புக்கு 9443190098

Tags:    

Similar News