சிறப்புக் கட்டுரைகள்
null

நரம்புகளின் உறுதியே இளமையின் ரகசியம்!

Published On 2024-08-04 17:08 IST   |   Update On 2024-08-04 17:09:00 IST
  • நரம்புகளை உறுதிப்படுத்தினால் அது தளர்ச்சி அடையாது.
  • ஆரோக்கியமாக முதுமை தவிர்த்து மரணத்தை தள்ளிப்போட்டு வாழ்வோம்.

வாழ்க்கையில் வயது ஏற ஏற முதுமையை நோக்கி நாம் செல்கிறோம் என்று பொருள். முதுமை வருவதற்கான அறிகுறிகள் என்பது நரம்புகள் தளர்ச்சி அடைவது, மேல்புற தோலில் சுருக்கம் விழுவது, கண் பார்வை குறைதல், உடல் சோர்வு, மூட்டுக்களில் வலி போன்றவைகள்தான்.

இப்படி உடல் சார்ந்த பிரச்சனைகள் நமக்கு வந்தவுடன், இந்த மனமானது நமக்கு முதுமை என்பது வந்து விட்டது என்று சொல்லும். ஆனால் நாம் அதை ஏற்க மறுக்கிறோம். நாம் முதுமையை மறைத்தல் என்று நமது தலைமுடிக்கு நிறத்தை மாற்ற அல்லது மறைக்க டை அடிப்பது மட்டும் போதும் என்று அக உடலை மறந்து விடுகிறோம்.

பொதுவாக உள் உறுப்புகளில் நோய் வருவதற்கான அறிகுறிகளை நமக்கு உணர்வு மூலமாக கொடுக்கும். நாம் அதை உதாசீனம் படுத்தி விட்டால் அதுவே முதலில் வலியாக ஆரம்பம் ஆகி நோயில் சென்று மரணத்தில் முடியும்.

எனவே நோயின்றி வாழ்ந்து முதுமையை தவிர்க்க வேண்டும் என்றால், நமது நரம்புகளுக்கு உறுதி தன்மையை கொடுக்க வேண்டும். நரம்புகளை உறுதிப்படுத்தினால் அது தளர்ச்சி அடையாது. அப்படி தளர்ச்சி அடையாமல் இருந்தால் தோளில் சுருக்கம் விழாது. என்றும் நாம் இளமையாக இருப்போம். இதனால் முதுமை தவிர்க்கப்படுகிறது அல்லது தள்ளிப் போடப்படுகிறது.

இதற்குத்தான் காயகல்பம் என்கிற பயிற்சியானது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கலையானது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக வரலாறு சொல்கிறது. ஆயக்கலைகள் 66 உள்ளது என்பது நமக்குத் தெரியும். அந்த 66 கலைகளிலே நரம்புகளை உறுதிப்படுத்தும் கலை ஒன்றும் உண்டு. இதுவே காயகல்பம். இந்த கலையை கற்று தினமும் செய்பவர்கள் வாழும் காலத்தில் இந்த ஜீவனுக்கு முக்தி நிலையை கொடுக்கலாம்.

இப்படி சித்தர்களால் ரகசியமாக வைக்கப்பட்டும் பரிபாசைகளால் சொல்லப்பட்ட இந்த அற்புதப் பயிற்சியைதான் வேதாத்திரி மகரிஷி நமக்கு எளிமையாக கொடுத்துள்ளார். குறிப்பாக குழந்தை பிறப்பு காரணமாக பிரச்சனை உள்ள இளம் தம்பதியினருக்கும், பெண்கள் சம்பந்தப்பட்ட மாதவிடாய், கர்ப்பப்பை, பிரச்சனைகள், குறிப்பாக சிறுநீர் கற்கள் மற்றும் நீர் கட்டிகள் போன்ற பிரச்சனைகள், மலட்டுத்தன்மை பிரச்சனை, ஆண்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைந்து இருத்தல் போன்ற பிரச்சனைக்கு நல்ல பலனை கொடுக்கும் அற்புதமான பயிற்சிதான் காயகல்பம் ஆகும். மேலும் இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் மற்றும் நாம் சிக்கி இருக்கும் பிரச்சனையான சர்க்கரை நோயில் இருந்து விடுபடவும் இந்த பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

காயகல்பம் பயிற்சியை பற்றி துவாபரயுகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒரு மனிதருக்கு எது உள்ளதோ, இல்லையோ அடிப்படையாக நமக்கு வேண்டியது ஒழுக்கமாகும். இந்த ஒழுக்கம் என்பது, நாம் நம்முடைய வாழ்நாளில் யாருக்கும் உடல், மனம், உயிர் அளவில் நம்முடைய செயல்கள் மூலமாக துன்பம் கொடுக்காமல் வாழ்வதாகும். மேலும் நமக்கும் துன்பத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழும் வாழ்க்கைதான் ஒழுக்கமான வாழ்க்கையாகும்.

இந்த அடிப்படை ஒழுக்கத்தை நாம் மாணவப் பருவத்தில் இருந்து கொடுத்து விட்டால் அவர்கள் வாழ்க்கை அற்புதமான வாழ்க்கையாக மாறும். இதுவே நம்முடைய எதிர்கால சந்ததிகளுக்கு நாம் கொடுக்கும் சீதனம்.

பஞ்சபூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று சொல்லுவோம். இந்த பஞ்ச பூதங்களின் கூட்டுக் கலவைதான் உலகில் உள்ள எல்லா தோற்ற பொருள்களும் ஆகும். இதில் மனிதரும் விதிவிலக்கல்ல.

பஞ்சபூதங்களில் நிலம் என்பது நமது பருஉடல், நீர் என்பது ரத்த ஓட்டம், நெருப்பு என்பது உடலில் உள்ள வெப்பம், காற்று என்பது உடலில் உள்ள மூச்சு, ஆகாயம் என்பது உயிர் ஆகும்.

கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

அதாவது ஆகாயத்தில் இருந்து தோன்றி பூமிக்கு வந்து வாழ்ந்து விட்டு மீண்டும் ஆகாயத்திலேயே நாம் சேர்ந்து விடுவோம். இதைத்தான் பிறப்பு மற்றும் இறப்பு என்றும் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்தான் (120 ஆண்டு காலம்) வாழ்க்கை என்றும் சொல்கிறோம்.

இந்த 120 ஆண்டுகள் ஆயுள் காலம் என்பது, அவரவர்கள் கர்ம வினை பதிவுகளுக்கு ஏற்றபடி பிறக்கும்போது அது நிர்ணயிக்கப்படும். இதை கண்டு அறியும் விஞ்ஞானம் தான் ஜோதிட கலையாகும். இந்த கர்ம வினை பதிவுகள் தாயின் வயிற்றில் கருவாக உருவாகும்போது நம்முடைய கரு மையத்திலேயே உருவாகிறது. இதைத்தான் மகான்கள் இறைவன் நம்மை படைக்கும்போது, நம் கர்மாவை படைத்துவிட்ட பிறகுதான் நம்மை படைப்பார் என்கின்றனர்.

இந்தக் கர்ம வினை பதிவுகள்தான் உடலில் நோயாகவும், மனதில் சஞ்சலமாகவும் வந்து அதை நம் வாழ்நாளில் சந்தித்தும் அனுபவித்தும் வருகிறோம்.

இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால், மூன்று விஷயங்களில் நாம் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். அவைகள் என்னவென்றால், ஒன்று நோயின்றி வாழ வேண்டும். இரண்டு முதுமையை தவிர்க்க வேண்டும். மூன்று மரணத்தை தள்ளி போட வேண்டும். இதற்குத்தான் காயகல்பம் பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.

அதாவது இந்த உடல் பூமி என்றால் ஆகாயம் என்பது நமது தலை உச்சியாகும். காயகல்பம் பயிற்சி என்பது பருஉடலில் உள்ள சத்தை ஆகாயத்தில் ஏற்றி மறுசுழற்சி மூலமாக மீண்டும் பரு உடலில் தங்க வைத்து நரம்புகளுக்கு ஊக்கத்தை கொடுத்து உயிரை இந்த உடலிலேயே தங்க வைப்பதாகும். இதனால் நாம் நீண்ட காலம் வாழலாம். இப்படி நீண்ட காலம் வாழும்போது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி இளமையை காத்து மரணத்தை தள்ளி போடலாம்.

இப்படி நாம் நீண்ட காலம் வாழ்ந்தால் நம்முடைய பதிவுகளை நாமே அனுபவித்து நம் அடுத்த சந்ததிகளுக்கு பதிவுகள் இல்லாத நல்ல வாழ்வை நம்மால் அளிக்க முடியும்.

சித்தர்கள் இந்தப் பயிற்சியினால் நமது உடலில் அமுத ரசம் உருவாகும் என்கின்றனர். இதை வேதாத்திரி மகரிஷி தனது கவியிலே வித்து, காயகல்பம் பயிற்சியினால் அமுத ரசமாக மாறும் என்கிறார். அமுத ரசம் என்றால் உயிர் சத்துக்கள் அடங்கிய ஒரு தெய்வீக திரவம் என்று திருமூலர் கூறுகிறார்.

எனவே சித்தர்களின் இந்த ரகசியமான ஒரு கலையை வேதாத்திரி மகரிஷி உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்கின்ற பரந்த மனநிலையில் இந்தப் பயிற்சியை நமக்கு கொடுத்துள்ளார். இதன் மூலம் உடல் மனம், உயிர், ஆத்மா, தூய்மை அடையும் என்கிறார்.

இன்றைய விஞ்ஞானம் இது போன்ற பயிற்சிகள் செய்வதால் நமது மரபணுவிலே மாற்றம் ஏற்படுகிறது என்று சொல்கிறது. மரபணுவில் மாற்றம் ஏற்படும்போது விதி என்கிற கர்ம வினை பதிவுகள் மாற்றம் பெறும் அல்லது தாக்குதலை குறைத்து விடும். மேலும் உடலை வளர்ப்பது உணவுதான் என்பது நமக்குத் தெரியும். அந்த உடல் சரியான முறையில் வளர வேண்டும் என்றால் உணவு ஏழு தாதுக்களாக சரியாகப் பிரிந்தால்தான் உடல் சரியாக வளரும். அந்த உடல்தான் ஆரோக்கியமான உடலாக இருக்கும்.

இந்த ஏழு தாதுக்கள் என்பது நாம் உண்ணும் உணவே ரசம், ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஞ்சை மற்றும் விந்து நாதமாக மாற்றம் பெறுகிறது. இந்த ஏழு தாதுக்களை சரியான முறையில் பிரித்துக் கொடுக்க காயகல்பம் பயிற்சி பெரிதும் உதவி செய்கிறது. எனவே இந்த அற்புதப் பயிற்சியை நாம் செய்வோம். ஆரோக்கியமாக முதுமை தவிர்த்து மரணத்தை தள்ளிப்போட்டு வாழ்வோம்.

இந்த பயிற்சி வேதாத்திரி மகரிஷியால் உருவாக்கப்பட்ட உலக சமுதாய சேவா சங்கத்தின்கீழ் இயங்குகின்ற அறிவு திருக்கோவில்கள், அறக்கட்டளைகள், தவ மையங்கள் மற்றும் ஆன்மீக கல்வி நிலையங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. நமது அடுத்த ஆராய்ச்சி மனதை வளமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வோம்.

போன்: 9444234348

Tags:    

Similar News