- ராகு- கேது தரும் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருக்கும்.
- மன திருப்திக்காக கவலையே படாமல் ராகு- கேது தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்யலாம்.
ராகு-கேது இரண்டு கிரகங்களையும் பாம்பு என்று சொல்வார்கள். பாம்பின் தலையை ராகு என்றும், உடலை கேது என்றும் நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். வானத்தில் இந்த 2 கிரகங்களும் பின்னோக்கி நகர்வதாக அறிவியல் ஆய்வுகளில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் இந்த 2 கிரகங்களையும் நிழல் கிரகங்கள் என்று ஜோதிடர்கள் குறிப்பிடுவதுண்டு.
இந்த 2 கிரகங்கள் பற்றி ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல்வேறு தகவல்கள் உள்ளன. இரண்டுமே பொதுவான கருத்துக்கு ஏற்புடையதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ஆன்மிக ரீதியான தகவலை பார்க்கலாம்.
பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடைந்தபோது கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்குவதற்காக மகாவிஷ்ணு மோகினி வடிவம் எடுத்து வந்தார். தேவர்களை வரிசையாக நிற்க வைத்து அமிர்தத்தை கொடுத்தார். அப்போது சுவர்பானு என்ற அசுரன் தேவர்கள் வரிசையில் நின்று அமிர்தத்தை பருகினான்.
இதை மோகினி வடிவத்தில் இருந்த மகாவிஷ்ணுவிடம் சூரியனும், சந்திரனும் சுட்டிக்காட்டினார்கள். உடனே மோகினி சக்கராயுதத்தின் மூலம் சுவர்பானுவை வெட்டினார். தலைவேறு, உடல் வேறாக சுவர்பானு பிரிந்து விழுந்தான். அமிர்தம் சாப்பிட்டு இருந்ததால் அவனுக்கு மரணம் ஏற்படவில்லை. தலையிலும், உடலிலும் உயிர் இருந்தது.
இதையடுத்து மனம் இரங்கிய மகாவிஷ்ணு, சுவர்பானுவின் தலை பகுதிக்கு ராகு என்றும், உடல் பகுதிக்கு கேது என்றும் பெயர் சூட்டி கிரக அந்தஸ்தை கொடுத்தார். புராணத்தில் இந்த கதை விரிவாக சொல்லப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அறிவியலின் படி ராகு- கேதுக்கு தனி விளக்கம் அளிக்கப்படுகிறது.
பூமியை சந்திரன் சுற்றி வருவது நாம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படி சுற்றிக்கொள்ளும் போது பூமியின் சுற்று வட்டப்பாதையும், நிலவின் சுற்று வட்டப்பாதையும் ஒரு இடத்தில் வெட்டிக் கொள்ளும். அப்படி வெட்டிக்கொள்ளும் இடத்தை அறிவியல் ஆய்வாளர்கள் ஒரு புள்ளியாக சொல்வார்கள். அந்த புள்ளிதான் விஞ்ஞானப்படி ராகு- கேதுவாக கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே ராகு- கேதுவுக்கு உருவம் இல்லை. வீடு இல்லை என்பார்கள். மற்ற 7 கிரகங்களுக்கு இருப்பது போன்று கிரக வடிவமைப்பும்கூட ராகு-கேதுவுக்கு கிடையாது. ஆனால் மற்ற 7 கிரகங்களை விட ராகுவும், கேதுவும் சக்தி வாய்ந்தவர்கள். ஏனெனில் மற்ற 7 கிரகங்களும் ஏற்படுத்தும் அதிர்வுகள் அனைத்தையும் ராகு, கேது இரண்டும் தான் தங்களுக்குள் உள்வாங்கி அதை பூமிக்கு அனுப்பி வைப்பார்கள்.
எனவே ஒரு மனிதனுக்கு எந்த கிரகத்தின் மூலம் நன்மை ஏற்பட்டாலும் சரி, தீமை ஏற்பட்டாலும் சரி அவை ராகு- கேது வழியாகவே நமக்கு வந்து சேரும். அந்த வகையில் ராகுவும், கேதுவும் எண்ணற்ற அதிர்வலைகளை உண்டாக்கி பூமிக்கு அனுப்புகின்றன. எனவேதான் ராகு- கேது தரும் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருக்கும்.
ஜாதக அமைப்புப்படி கட்டங்களில் ராகுவும், கேதுவும் எந்த இடத்தில் அமைகிறார்களோ அதற்கு ஏற்ப அந்த தாக்கம் இருக்கும். எனவேதான் திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது ராகு- கேது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை மிக முக்கியமாக பார்ப்பார்கள். பொதுவாக ராகு- கேது துணை இல்லாமல் எந்த திருமணமும் நடக்காது. ஆனால் அவை ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
ஜாதகத்தில் லக்னம் எனப்படும் ஒன்று மற்றும் 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் ராகு- கேது இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு திருமணம் கைகூடுவது சற்று தாமதம் ஏற்படும் என்று சொல்வார்கள். இதைத்தான் சர்ப்ப தோஷம் அல்லது ராகு- கேது தோஷம் என்று சொல்வார்கள். அதிலும் 1-7, 2-8 இடங்களில் ராகுவும், கேதுவும் இருந்தால் தோஷத்தின் வீரியம் மேலும் அதிகமாக இருக்கும் என்று ஒரு கருத்து உள்ளது.
லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதற்கு 7-ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பார்கள். காரணம் ராகுவும், கேதுவும் 150 டிகிரி கோணத்தில் நிரந்தரமாக சுற்றி வருபவர்கள். இப்படி சுற்றுவதால்தான் நிலையான சிந்தனை இருக்காது என்று பொதுவான ஒரு குறிப்பை ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.
2-8 கட்டங்களில் ராகு- கேது இருக்கும் பட்சத்தில் கணவன்-மனைவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பெரும்பான்மை ஜோதிடர்கள் கண்ணை மூடிக்கொண்டு பேசுவார்கள். ஆனால் இதற்காக பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் ஆதி காலத்து ஜோதிட நூல்களில் ராகு- கேதுவால் தனி நபர்களின் குணம் மற்றும் நடவடிக்கைகளில் ஏற்படும் விளைவு மட்டுமே சொல்லப்பட்டு இருக்கின்றன.
மேலும் திருமணத்துக்கு ராகு- கேது எப்போதும் துணையாக இருப்பார்கள் என்றுதான் ஜோதிட நூல்களில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளன. எனவே ராகு-கேது தோஷம் என்பது எந்த வகையிலும் திருமணத்தை நிறுத்தும் வகையில் நிச்சயமாக இருக்கவே இருக்காது. என்றாலும், ராகு- கேது கிரகங்களின் அதிர்வலைகள் ஏற்படுத்தும் தாக்கத்தால் நிகழும் குணமாற்றங்களை தடுக்க நாம் தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்யலாம்.
இதைத் தான் ராகு-கேது தோஷ நிவர்த்தி பூஜை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ராகு- கேது தோஷம் நிச்சயமாக திருமணத்தை பாதிக்காது என்ற நிலையில் சமீப காலமாக பரிகார பூஜைகள் அதிகமாக நடந்து வருகின்றன. மன திருப்திக்காக கவலையே படாமல் ராகு- கேது தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்யலாம். அதில் தவறில்லை.
ராகு- கேது தோஷங்கள் தீர்க்க ஏராளமான எளிய பரிகாரங்கள் உள்ளன. நாம் வசிக்கும் வீட்டில் வடமேற்கு அல்லது தென்கிழக்கு திசையில் பறவைகளுக்கு தானியங்களும், தண்ணீரும் வைத்தால் தோஷம் நீங்கும் என்கிறார்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புற்றுக் கோவில்களுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றி 9 முறை வலம் வந்தால் பலன் கிடைக்கும்.
தானங்கள் மூலமாகவும் ராகு- கேது தோஷ நிவர்த்தி பண்ணலாம். ஏழை- எளியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிற போர்வைகள் வழங்கலாம். வசதி இருப்பவர்கள் நாகர் கற்சிலையை வேப்பமரமும், அரச மரமும் இணைந்து இருக்கும் பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபடலாம்.
அடிக்கடி அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கட சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவது மிகவும் நல்லது. அதிலும் வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு உடனடியாக ராகு- கேது தோஷத்தை நிவர்த்தி செய்யும் என்கிறார்கள். விநாயகருக்கு விரதம் இருந்து வழிபட்டால் விரைவில் நல்லது நடப்பதை காணலாம்.
ராகு காலத்தில் ராகு பகவானுக்கு உளுந்தால் செய்யப்பட்ட பலகாரத்தை நைவேத்தியம் செய்து வழிபடலாம். ராகு காயத்ரி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது நல்லது. திங்கட்கிழமைகளில் கேது தொடர்பான வழிபாடுகள் செய்யலாம். கேதுவுக்கு பிரியமான கொள்ளு பயிறு படைத்து வழிபட்டு தானம் செய்வது நல்ல பலன் தரும்.
இந்த எளிய பரிகாரங்களை தவிர ஆலயங்களுக்கு சென்று பரிகாரங்கள் செய்தே தீர வேண்டும் என்று சொல்லப்பட்டால் அதற்கும் தமிழ்நாட்டில் ஏராளமான ஆலயங்கள் உள்ளன. அதில் புகழ் பெற்றவைகளாக சில ஆலயங்கள் குறிப்பிடப்படுகின்றன. ராகு தலமாக சொல்லப்படும் கும்பகோணம் அருகே சிவனை ராகு வழிபட்ட திருநாகேஸ்வரத்திலும், சிவபெருமான் வாசுகி என்னும் நாகத்துக்கு வரம் தந்த இடமான கேது தலம் என்று சொல்லப்படும் கீழப் பெரும்பள்ளம் ஆலயத்திலும் பூஜைகள் செய்யலாம்.
இரண்டு கிரகங்களுக்கும் சேர்த்து தோஷ நிவர்த்தி பூஜை செய்ய விரும்புபவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் ஆலயத்துக்கு செல்வது மிகவும் நல்லது. அங்கு தினமும் காலையில் நூற்றுக்கணக்கானவர்கள் ராகு- கேது தோஷ நிவர்த்தி பூஜை செய்து கொள்கிறார்கள். திருபேரை தலத்திலும் இந்த பூஜை செய்யலாம்.
ராகு- கேது 2 கிரகங்களும் நம்மை பயமுறுத்தும் கிரகங்கள் அல்ல. ஆலயங்களில் உரிய பரிகாரம் செய்தாலே இந்த 2 கிரகங்கள் மூலம் அபரிமிதமான பலன்களை பெற முடியும். குறிப்பாக ராமேஸ்வரத்துக்கு சென்று 3 நாட்கள் தங்கி இருந்து கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தாலே போதும் ராகு-கேது தோஷங்கள் பறந்துபோய்விடும். ராகு-கேதுவால் நீண்ட நாட்கள் திருமணம் தாமதம் ஆவதாக கருதினால் துர்க்கை அல்லது காளியை நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடவும். ராகு காயத்ரியையும், கேது காயத்ரியையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கலாம்.
சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில், திருப்பனந்தாள் அருண ஜடேஸ்வரர் ஆலயம், கோடகநல்லூர் மாதவ பெருமாள் ஆலயம், கோட்டைக்காடு நாகேஸ்வரர் ஆலயம், நெடுங்குடி கைலாசநாதர் ஆலயம், மதுரை சந்தன மாரியம்மன் ஆலயம், உடையார்குடி அனந்தீஸ்வரர் ஆலயம், வாழ்க்கை புத்தகளூர் ஸ்ரீபரமசுந்தரர் ஆலயம், புட்டிரெட்டிபட்டி சோம நாகேஸ்வரர் ஆலயம், பேரையூர் ஸ்ரீநாகநாதர் ஆலயம், சென்னை செம்பாக்கம் ஸ்ரீஜம்புகேஸ்வரர் ஆலயம், செம்பான்குடி நாகநாதர் ஆலயம், கோடங்குடி ஸ்ரீகார்கோடகநாதர் ஆலயம், சென்னை குன்றத்தூர் ஸ்ரீநாகேஸ்வர சுவாமி ஆலயம், உத்தமபாளையம் அருகே உள்ள காளத்தீஸ்வரர் ஆலயம், சென்னை காட்டாங்குளத்தூர் காளத்தீஸ்வரர் ஆலயம், நத்தம் தென் காளத்தீஸ்வரர் ஆலயம், நெய்வேலி அக்னீஸ்வரர் ஆலயம், நெல்லை செய்துங்கநல்லூர் வியாக்ரபாதர் ஈஸ்வரர் ஆலயம், சென்னை மாடம்பாக்கம் ஸ்ரீதேனு புரீஸ்வரர் ஆலயம், திருக்கண்டியூர் வடக்கு மருதூர்பிரம்மா ஆலயம், திருமணஞ்சேரி ராகு பகவான் ஆலயம், கதி ராமங்களம் ஸ்ரீவன துர்க்கை ஆலயம், காஞ்சிபுரம் ஸ்ரீசித்ர குப்தர் ஆலயம் ஆகியவை ராகு-கேது தோஷ நிவர்த்தி வழிபாட்டு தலங்களாக திகழ்கின்றன.