சிறப்புக் கட்டுரைகள்

பெருமை பேசுவதை தவிர்த்திடுங்கள்!

Published On 2025-05-19 12:45 IST   |   Update On 2025-05-19 12:45:00 IST
  • உடல் நலம் என்பது கேள்விக்குறியாகி விடும்.
  • சத்து இல்லாத தவறான உணவு, முறையான தூக்கம் இன்மை.

மக்கள் மீதான மன நல தாக்குதலும் உடல் நல பாதிப்பிற்கு முக்கிய காரணம் என்பதனை நாம் அறிவோம். நம் மனம் பல விஷயங்களால் அன்றாடம் நொடிக்கு நொடி பாதிக்கப்படுகின்றது. இதனை நாமே அறிந்து உணர்ந்து நம்மை சரி செய்து கொண்டால் நம் உடல் நலமும் மன நலமும் நன்கு இருக்கும். அவற்றினை அறிவோம்.

* பல நபர்கள் இவ்வாறு பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். 'நான் இல்லைன்னா... அங்கே எதுவுமே சரியாக நடக்காது'. 'நான் இல்லைன்னா அய்யாவும், அம்மாவும் ரொம்ப கஷ்டப்படுவாங்க'. 'நான் இல்லைன்னா ஆபீசில் ஒரு துரும்பு கூட நகராது-இப்படி பல வசனங்களை நாம் கேட்கின்றோம். இது சொல்பவரின் முழு விசுவாசம், நேர்மை இவற்றினைத் துல்லியமாக காட்டுகின்றது. வரவேற்கத்தக்கதே. ஆனால் இவர்கள் ஒன்றினை உணர வேண்டும். இவர்கள் இருக்கும் அதே அளவு விசுவாசம் எதிர் பக்கத்திலும் இருக்கின்றதா? என்றால் அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்த அளவு முக்கியத்துவம் இவர்களுக்கு கிடைப்பதில்லை.

இன்று இவர்கள் இல்லையெனில் மற்றொருவர் என்ற நிலையில் தான் பல இடங்களில் நடக்கின்றது. இதனை உணரும் பொழுது பாதிக்கப்பட்டவர் உருக்குலைந்து விடுவார். உடல் நலம் என்பது கேள்விக்குறியாகி விடும். ஏன் இப்படி? என்று கேட்கலாம். பண்பு ஒழுக்கம் இவையெல்லாம் எழுத்தில் மட்டுமே காணக்கூடிய கலி காலம்.

நமக்கு இருக்கும் நல்ல பண்புகளோடு நாம் இருக்கலாம். ஆனால் அதனையே பிறரிடம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கக் கூடாது. இது உங்களின் உடல் நலத்தினையும், மன நலத்தினையும் நன்கு பாதுகாக்கும்.

'நீங்கள் உயிரையே ஒருவருக்காக கொடுத்தாலும் அவரே பின் முதுகில் குத்தலாம்' என்ற எச்சரிக்கை உணர்வோடு எந்த செயலையும் செய்வது நல்லது.

சினிமா, சீரியலில் கூட யாரேனும் அழுதால் விக்கி, விக்கி அழுபவர்கள் உண்டு. ஆனால் நிஜ வாழ்வில் உங்கள் கண்ணீரைக் கண்டு இரங்குபவர்கள் மிகக் குறைவு. 'உயிர் போனாலும் பிரியேன்' என்று காதலில் சத்தியம் செய்பவர்கள் எளிதில் பிரிவதை கண் கூடாக பார்க்கவில்லையா? உங்கள் தியாகங்களை பொறுத்தவரை அப்படி ஒன்று நடந்ததா? என்று பிறருக்கு கூட தெரியாது.

பெற்றோர்களுக்கான வார்த்தை- உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு தோள் கொடுப்பார்கள் என்ற கனவு வேண்டாம். நிறைய நல்ல பிள்ளைகள் இருக்கின்றார்கள். மறுக்க முடியாது. ஆனால் சதவீதம் குறைவுதான் என்பதனையும் உணர வேண்டும்.


வாழ்க்கை இப்படித்தான். உணர்ந்து வாழ்வதும் மூலையில் உட்கார்ந்து அழுவதும் தனி நபர் கையில்தான் உள்ளது. மேலும் ஒன்றினையும் அறிய வேண்டும். மன உளைச்சல் மன அழுத்தம் அதிகம் ஆவதற்கு இந்த காரணங்களும் உண்டு.

* உடற்பயிற்சி இன்மை, சூரிய ஒளியே உடலில் படாது இருத்தல்.

* சத்து இல்லாத தவறான உணவு, முறையான தூக்கம் இன்மை.

* அதிகம் டி.வி. செல்போன் என இருப்பது.

* நேரத்தினை உபயோகமற்று செலவழிப்பது. வேலைகளை ஒத்திப் போடுவது ஆகியவை ஆகும்.

ஒவ்வொருவரும் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ள வேண்டும்

* சிலர் சாதாரணமாகவே ஏதோ தலை போகின்ற வேலை போல் நடையையே ஓட்டம் போல் நடப்பர். முட்டிக் கொள்வர். பரபரவென்று இருப்பர். கையில் உள்ள பொருட்கள் சிதறும். எதற்கு இந்த அவசரம் என்று அவர்களுக்கே தெரியாது. உடற்பயிற்சி தவிர்த்து மற்ற நேரங்களில் நிதானமாக நடை பழகுங்கள். இது உங்கள் கம்பீரம், மதிப்பு, மரியாதையினைக் கூட்டும்.

* சிறு விஷயங்களுக்குக் கூட 'ஆ..... ஊ.....' என்ற அமர்க்கலங்கள் செய்தால் டிராமா போன்று இருக்கும். ஆக உணர்ச்சிகளை கட்டுப்படுத்த பழகுங்கள்.

* யாராவது குற்றம் சொல்லும் விதமாக வேண்டுமென்றே குதர்க்கமான கேள்விகள் கேட்டால் பாய்ந்து பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சற்று நிதானித்து சரியான பதிலைக் கூறுங்கள்.

* நம் திட்டங்களை வெளிச்சம் போட்டு அனைவருக்கும் சொல்ல வேண்டுமா என்ன? நம் சாதனைகள் அதனை செய்யட்டுமே.

* நம் பின்னால் பேசுபவர்களைப் பற்றி கவனமே கொடுக்க வேண்டாம். அது தானே அழிந்து விடும்.

* இவைகளை செய்தாலே நம் ஒழுக்கமும், பலமும் கூடி விடும்.

கமலி ஸ்ரீபால்


மன உளைச்சல்-மன அழுத்தம் இவை அதிகரிப்பதற்கு இவையும் காரணங்கள் தான்.

உடற்பயிற்சி, சூரிய ஒளியே உடலில் படாது இருத்தல், சத்தற்ற, தவறான உணவு, முறையான தூக்கம் இன்மை, அதிகம் டி.வி., செல்போன் என இருப்பது, நேரத்தினை உபயோகமற்று செலவழிப்பது, வேலைகளை ஒத்திப் போடுவது ஆகியவை ஆகும்.

நீங்களே உங்களை அறிய:

சிலர் வந்தாலே போதும். அவரது அதிர்வலைகள் சுற்றி உள்ளவர்கள் மீது ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தும். காரணம் அவர்களது அதிர்வலைகள் கூடுதல் உறுதியானதாக இருக்கின்றது.

மற்றவர்கள் 'டக்கென' திரும்பி பார்ப்பது (அ) அடிக்கடி அவர் பக்கமே கவனமும், கண்களும் செல்வது அவர் வரும்போதே அந்த இடம் கூடுதல் சக்தி பெற்றது போன்ற உணர்வு.

முன்பின் தெரியாதவர் கூட அவரிடம் தன்னைப்பற்றி மற்றும் தன் வீட்டினைப்பற்றி பேசுவது. தீயவர்கள் இவர்களைக் கண்டால் ஒதுங்குவது.

தேவையில்லாமல், காரணம் இல்லாமல் அந்த நபர் மீது பொறாமை கொள்வது.

குழந்தைகள் அவரைப் பார்த்து சிரிப்பது.

விலங்குகள் கூட பூனை, யானை, குதிரை, நாய், பறவை போன்றவை கூட அவர் அருகில் தைரியமாய் பாதுகாப்பாய் இருப்பது போன்றவை அந்த நபரின் சக்திவாய்ந்த நல்ல அதிர்வலையினைக் காட்டுகின்றது.

சற்று நேரம் எதையும் நினைக்காமல் அமைதியாய் அமர்ந்தாலே அதிக சக்தி. அதன் அதிர்வு உங்களுக்குள் தோன்றிடும் நீங்கள் உறுதியானவர் தான்.

மூளை இளமையாக சுறுசுறுப்பாக இருக்க:

ஓய்வு நேரத்தில் படியுங்கள்

ஆரோக்கியம், செல்வம், தத்துவம், ஆன்மீகம் என பல பிரிவுகளில் படிக்கலாம்.

இயற்கையோடு கண்டிப்பாய் சிறிது நேரம் செலவழிக்கலாம்.

நல்ல சினிமா, பழைய ஓவியங்கள், பழைய கட்டிடக் கலை இவற்றினை ரசியுங்கள்.

கூர்மையான அறிவுக்கு:

வைட்டமின் பி12, சிங்க், ஆன்ட்டி ஆக்சிடென்ட், போலேட் இவற்றினை மருத்துவ ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.

குறுக்கெழுத்து, புதிர், கணக்கு இவை மூளையை கூர்மையாக்கும்.

நல்லவர்களோடு மட்டுமே இருங்கள்.

உடற்பயிற்சி-தன்னம்பிக்கை, நல்ல தூக்கம், மன அமைதி இவற்றினைத் தரும்.

புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ளலாமே.

இவை அனைத்துமே மூளையினை சுறுசுறுப்பாக வைக்கும். இத்தோடு, போதுமான அளவு நீர் குடிப்பதும், ஓடி ஆடும் விளையாட்டுக் கூட அவசியமே.

சில அறிகுறிகளை நாம் கவனிக்க தவறக்கூடாது:

அடிக்கடி தவைலியா, உயர் ரத்த அழுத்தம் இருக்கின்றதா? என பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

விடாத நெஞ்செரிச்சல்: இருதய பாதிப்பு இருக்கின்றதா? என்பதனையும் மருத்துவர் பரிசோதிப்பார். இது வீண் செலவு அல்ல.

காரணமின்றி எடை குறைகின்றதா: சர்க்கரை நோய்க்கும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மயக்கம் போல் இருக்கின்றதா: சர்க்கரை அளவு ரத்தத்தில் குறைந்து இருக்கலாம். சோதித்துக் கொள்ளலாமே.

விடாத இருமல்: அலர்ஜி கூட இருக்கலாம்.

மரத்து போதல்: நரம்பு மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

மூச்சு வாங்குதா: பல சோதனைகளுடன் ஆஸ்த்மாவையும் பரிசோதித்துக் கொள்ளலாம்.

திடீர் நெஞ்சு வலி : மாரடைப்பாக இருக்கலாம்.

எப்போதும் குளிர்போல் இருத்தல் : 'ரத்த சோகை' பரிசோதனை செய்து கொள்ளலாம்.

அடிக்கடி சிறுநீர் போகுதல்: நீரிழிவு நோய் பாதிப்பாக இருக்கலாம். ஆக இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

சின்ன சின்ன கவனங்கள்

தக்காளி, பால், அடர்ந்த சாக்லேட், தயிர், பூண்டு, முட்டை, பட்டை, கிரீன் டீ இவை உங்கள் அன்றாட உணவில் இடம் பெறுகின்றதா?

உயர் ரத்த அழுத்தம் பாதிப்பா? உப்பு அதிகம் உள்ள உணவுகள், சர்க்கரை, சிகப்பு அசைவம், கேபின், கொழுப்பு உணவு இவை தவிர்த்து விடுகின்றீர்களா?

உயர் ரத்த அழுத்தமா? பப்பாளி, கொய்யா, கொழுப்பில்லாத காரட், வாழைப்பழம், ஆரஞ்சு, ஓட்ஸ். இவை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்கின்றீர்களா?

மண்ணீரல் பலம் பெற சோளம், சோயா, சிறுதானியம், மஞ்சள் கொடை மிளகாய், மஞ்சள் வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சை, மாம்பழம் என மஞ்சள் நிற உணவுகள் உதவுகின்றன.

புரத உணவு என்பது முதல் முக்கியத்துவம் பெற வேண்டும்.

எப்போதும் எதிலும் விழிப்புணர்வு என்ற பழக்கம் வேண்டும். இது நம்மை அமைதியோடு இருக்கவும் வழிவகுக்கும். இதற்கு சில பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

நேரம் கிடைக்கும் போது நம் மூச்சின் இயக்கத்தினை கவனிக்க வேண்டும்.

கேட்கும்போதும், படிக்கும் போதும் முழு கவனத்துடன் செய்யவும்,

ஒரு நேரத்தில் ஒரு வேலையினை முழு கவனத்துடன் செய்யலாம்.

இயற்கையின் காலை, மாலை பொழுதில் சிறிது நேரம் கவனிக்கலாம்.

உங்கள் டைரி, எண்ணங்களை நோட்புக், பேனா கொண்டு எழுதுங்கள். இதன் வலிமை அதிகம்.

உடற்பயிற்சி அவசியம். ஒரு மணி நேரத்திற்கொரு முறை 5 நிமிடங்கள் வீட்டினுள் கூட நடக்கலாமே.

தியானம்-அன்றாடம் 5 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

அன்றாடம் எதிலும் குறிப்பிட்ட நேரம் என்பதில் ஒழுக்கம் வேண்டும்.

நாமே தவறு செய்திருந்தாலும் நம்மை நாமே மன்னித்து திருத்திக் கொள்ளலாம்.

Tags:    

Similar News