null
- வருகிற கவலைகள் அனைத்துமே அனைவருக்கும் ஒரே மாதிரிதான் வரும் என்பது கிடையாது.
- பொது வழிமுறை தேடினால் நமக்கான சாதனை தவறிப்போகும்.
கவலைகளையும் கற்றுக்கொண்டு அவற்றோடு வாழக் காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
' மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா!' என்று ஒரு திரைப்படப் பாடலில் கவியரசு கண்ணதாசன் குறிப்பிட்டிருப்பதைப் போல, மனிதனின் பெரும்பாலான கவலைகளுக்குக் காரணம் அவனது மனமே ஆகும். இன்னும் சொல்லப்போனால் மனிதன் கவலைப்படுவது கூட ஒருவகை மனநோய் தான். வாழ்க்கையில் வருகின்ற துன்பங்கள் துயரங்கள், இன்பங்கள், இழப்புகள் என எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துக்கொண்டு, எல்லாவற்றையும் இயல்பாகக் கடந்துபோகக் கற்றுக்கொள்பவர்க்குக் கவலைகள் என்பவை ஒரு பொருட்டாகவே அமையாது!.
"இடும்பைக்கு இடும்பைப் படுப்பர்
இடும்பைக்கு
இடும்பைப் படாஅ தவர்"
என்னும் குறளில் திருவள்ளுவர், தமக்கு வருகிற துன்பத்தைக்கண்டு வருந்தி நிற்காதவர்கள், அந்தத் துன்பத்தையே துன்பப்படுத்தும் வல்லமை மிக்கவர்கள் என்று குறிப்பிடுகிறார். வருத்தப்படுகிற மனத்தை, வருத்தப்படாத மனத்தை வைத்துத்தான் வெற்றி கொள்ள வேண்டும்.
மனம் உடையவன் மனிதன். அவன் உழைப்பதற்காக உடலை, உடல் அங்கங்களைக் கொடுத்த கடவுள், மனிதனுக்கு மூளையையும், இதயத்தையும், மனத்தையும் படைத்துச் சிந்திக்கும் ஆற்றலையும் தந்திருக்கிறார். மனம், 'இருப்பதைக்கொண்டு நிறைவாக வாழ்!' என்று சொன்னால் கேட்டு அடங்காது!; கடந்த காலத்தில் அடைய முடியாமல் தொலைத்து விட்டவற்றைப் பற்றியே, நிகழ்காலத்தில் பெரும்பகுதி நேரம் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கும்!.
அல்லது எதிர்காலத்தில் என்னென்ன செய்து சாதிக்க வேண்டும் என்று கற்பனைக் கோட்டைகட்டி, அதைப்பற்றியே எந்த முயற்சியும் இல்லாமல் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். எதிர்பார்த்தல், அல்லது ஏமாந்து போதல் ஆகிய இவ்விரண்டின் அடிப்படையிலேயே நம்முடைய பெரும்பாலான கவலைகள், நம் வாழ்க்கையில் கூடு கட்டிக் குஞ்சு பொறித்துக் கொண்டிருக்கின்றன.
வாழ்க்கையில் அவரைப்பார்! இவரைப்பார்!.
அவர்களைப்போல முன்னேறு! என்று பல வெற்றியாளர்களின் சாதனை வரலாறுகளை, நமக்குப் படிப்பினைகள் ஆக்கப்பலர் முயல்வார்கள். அந்த வெற்றியாளர்களின் வாழ்வியல் நிகழ்வுகள் அவர்களின் வெற்றிக்கு வேண்டுமானால் உறுதுணையாக அமையலாம்; ஆனால் உண்மையான வாழ்வியல் வடிவம் என்பது, ஒவ்வொருவருக்கும் என்று தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நமக்கென்று உள்ள தடைகளையும், கவலைகளையும் நமக்கென்று உள்ள சிறப்பு முயற்சிகளில் உடைத்து முன்னேறுவதே நமக்கான தனித்துவ வெற்றிக்கு அடையாளமாகும். கவலைகளும், தடைகளும் வருவது என்பது அனைவருக்கும் பொதுவானது, இயற்கையானது தான். ஆனால் வருகிற கவலைகள் அனைத்துமே அனைவருக்கும் ஒரே மாதிரிதான் வரும் என்பது கிடையாது. அவரவருக்கு வருகிற துன்பங்களையும், கவலைகளையும் அவர் அவர்க்கு உரிய வழி சென்று மாற்ற வேண்டுமேயொழிய, பொது வழிமுறை தேடினால் நமக்கான சாதனை தவறிப்போகும்.
சுந்தர ஆவுடையப்பன்
கவலைகளை மகாகவி பாரதி, 'ஈனக்கவலைகள்!' என்றும், 'கொன்றழிக்கும் கவலைகள்' என்றும் கவலை தோய்ந்த வரிகளால் குணப்படுத்துவார். கவலைகளை நாம் எப்போதும் 'நறுமண வாசமிக்கவை' என்று பாராட்டுவதில்லை, இருக்கிறதிலேயே கீழ்த்தரமான நிலையில் இருப்பவையும், அந்த நிலைக்கு நம்மைக் கொண்டு செல்பவையும் கவலைகள் என்பதால், 'ஈனக்கவலைகள்' ஆயின. அதிகமாகக் கவலைப்படும் மனம் 'கவலைகள் போட்டு வைக்கும் நாற்றமெடுத்த குப்பைத் தொட்டி' என்றும் கூட உருவகப் படுத்தப்படும். மனத்தில் கவலைகள் குவியக் குவிய அவை நோயாக மாறி, நம்மையே கொன்று அழித்துவிடக்கூடிய தீய செயலுக்கும் துணிந்து விடும்; எனவே தான் அவை 'கொன்றழிக்கும் கவலைகள்!'.
வாழ்க்கை எப்போதுமே முரண்பாடுகளின் முடிச்சுதான். ஒளியுள்ள பகலும், ஒளியற்ற இருளும் ஒரு நாளின் பகுதிகளாக மாறி மாறி வந்து, ஒரு நாளை உணர்த்துவது போல, இன்பமும், துன்பமும் மாறி மாறி வந்து நமக்கு வாழ்க்கையை உணர்த்துவதும் இயற்கை ஆகும். மேடு-பள்ளம், ஒளி-இருள், மழை- வெயில், இனிப்பு-கசப்பு என்று எல்லாமே வாழ்க்கையில் இயற்கையானதுதான்; இயல்பானதுதான் என்றால், பிறகு ஏன் நாம் வாழ்க்கையில் கவலைகள் கண்டு வருந்த வேண்டும்? இன்பங்கள் கண்டு மகிழ வேண்டும்?.
''இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்"
என்பது வள்ளுவர் வாக்கு. எந்நேரமும் இன்பம் தேடி அலைவதுதான் மனத்தின் குணம். அதுகுறித்து மட்டும் மனத்தைக் கொஞ்சம் கட்டுக்குள் வைத்துக் கொண்டால், பிறகு, துன்பம் என்பது எப்போதுமே இயல்பாக வரும் என்கிற மனநிலை தாமாகவே நமக்கு வந்துவிடும். இன்பத்தின் பக்கம் நமது எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால், துன்பம் நமது பக்கம் எட்டிக்கூடப் பார்க்காது என்பது வருத்தம் குறைக்க வள்ளுவர் நமக்குத் தந்த வாக்கு மருந்து.
இன்றைய 21-ம் நூற்றாண்டு எதிர்பார்ப்புகளின் நூற்றாண்டாக மாறி விட்டது. நம்மால் எது முடியாதோ அதை முயன்று பெற வேண்டும் என்று இடைவிடாது எதிர்பார்த்துக் கவலைப் பட்டுக்கொண்டே இருப்பதே பலருக்கு வாடிக்கையாகிப் போனது. விமானம் ஓட்டுவதற்கு அடிப்படையில் அறிவியல் கற்றிருக்க வேண்டியது அவசியம்; ஆனால் அக்கவுண்டன்சி படித்தவர் அதற்கு ஆசைப்பட்டால் வெற்றுக் கவலைகளைத் தவிர வேறென்ன பரிசாகக் கிடைக்கப் போகிறது.
இப்போதெல்லாம், அதிகாலையில் எழுந்து பல் துலக்கிக் காலைக் கடன்களை முடிக்கிறார்களோ இல்லையோ, கண் விழித்தவுடன், கவலைப்படத் தொடங்கி விடுகிறார்கள். அதற்கு என்ன செய்யப் போகிறோம்?, இதற்கு என்ன செய்யப் போகிறோம்? என்று தேவையற்ற கவலைகளை மூளையில் திணித்துக்கொண்டும், மனத்தில் சுமந்து கொண்டும், ஒரு செயலும் ஆற்ற முடியாமல் சும்மா இருந்து கவலைப்பட்டே களைத்துப் போகிறோம். யாரையாவது பார்த்து 'எப்படியிருக்கிறீர்கள்?' என்று நலம் விசாரிக்கத் தொடங்கி விட்டால் போதும்!. 'அதை ஏன் கேட்கிறீர்கள்? என்று கஷ்டப் புலம்பல்களைக் காவியம்போல வர்ணிக்கத் தொடங்கி விடுவார்கள்; இதில் அடுத்தவர் கவலைகளோடு நம்முடைய கவலைகளை ஒப்பிடுவது வேறு சர்வ சாதாரணமாக நடைபெறும்.
கடவுளைக் காண வேண்டி, ஒருவன் தன்னுடைய ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் தவமிருந்தான். அவனது தவத்தை மெச்சிய கடவுள், அவன்முன் நேரில் தோன்றி, 'உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். ' கடவுளே நாள்தோறும் நான்படுகிற துன்பங்களின் அளவு மற்ற எவரை விடவும் அதிகப்படியானதாக இருக்கிறது. என்னுடைய கவலைகளைக் குறைத்து விடுங்கள்! என்று நான் கேட்கவில்லை. என்னுடைய துன்பச் சுமையை அடுத்தவர்க்கு மாற்றிவிட்டு, அவருடைய சுமையை எனக்கு ஏற்றி விடுங்கள்!; கொஞ்ச நாள் நான் ஜாலியாக அந்தச் சுமையைத் தூக்கிச் சுமக்கிறேன்!' என்று கேட்டான். இந்த உலகிலேயே மற்ற எவரையும் விட அதிகமான கவலைகளைத் தான் மட்டுமே சுமந்து வருவதாக அவனுக்கு நினைப்பு.
கடவுளும், அன்று இரவு பத்து மணிக்கு, அந்த ஊர்மக்கள் அனைவர் கனவிலேயும் தோன்றி, 'இன்று நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு, ஊர் மக்கள் அனைவரும் அவரவர் கவலைகளை மூட்டைகளாகக் கட்டிக் கொண்டு, நமது ஊர்க் கோவில் பிரகாரத்துக்கு வந்து விடுங்கள். சரியாகப் 12 மணிக்குக் கோவில் விளக்கு அணைக்கப்படும். அப்போது ஒவ்வொருவரும் தாம் கொண்டு வந்திருந்த கவலை மூட்டைகளை, பிரகாரச் சுவரில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளில் தொங்க விட்டு விட வேண்டும்; பிறகு விளக்கு எரியும். இந்த ஊரிலேயே கவலை இல்லாதவர் எவர்? அதிகக் கவலை உள்ளவர் எவர்? மிகக் குறைந்த கவலைகளோடு வாழ்பவர் எவர்? என்பதைக் கண்டு பிடிக்கவே இந்த ஏற்பாடு.
பிறகு மற்றுமொருமுறை விளக்கு அணைக்கப்படும்போது, யார் யாருக்கு எந்த மூட்டை வேண்டுமோ அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
மீண்டும் விளக்கு எரியும்போது எடுத்த மூட்டையோடு அவரவர் வீட்டுக்குச் செல்லலாம்!' என்று தெரிவித்தார்.
அன்று நள்ளிரவுக்கு முன்பாக, ஊரிலுள்ள அனைவரும் கவலை மூட்டைகளோடு கோவில் வரத் தொடங்கினர். கடவுளிடம் வரம்கேட்ட நம்ம ஆளும் தன்னுடைய கஷ்டங்களை ஒரு பெரிய சாக்கு மூட்டையில் கட்டித் தோளில் தொங்கவிட்டுக்கொண்டு கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தான். ஊர்மக்கள் ஒவ்வொருவரும் கொண்டுவரும் கவலை மூட்டைகளின் அளவுகள் மிகப் பெரியனவாகவே இருந்தன. தலைச்சுமையாகக் கொண்டு வந்தவர்களை விட, ஆட்டோவிலும், மாட்டு வண்டிகளிலும், லாரிகளிலும், பேருந்துகளிலும், ரெயில்களிலும் கொண்டுவந்தவர்கள் எண்ணிக்கைதான் அதிகம்.
அனைவரும் அவரவர் கவலை மூட்டைக் குவியல்களோடு, கோவில் பிரகாரத்தில் வந்து நின்றனர். நள்ளிரவு சரியாகப் 12 மணிக்கு விளக்கு அணைக்கப்பட்டது; ஓரிரு நிமிட இடைவெளிக்குப் பின் விளக்குப் போடப்பட்டது. ஆச்சரியம் என்னவென்றால், வந்திருந்தவர்களில் எவருமே தங்களது கவலை மூட்டைகளை பிரகாரச் சுவற்றில் இருந்த ஆணிகளில் தொங்க விடவே இல்லை. அவரவர் கொண்டு வந்திருந்த கவலை மூட்டைகளின் அளவைப் பார்த்தவுடன் அனைவருமே மலைத்துப் போய் விட்டனர்.
இந்த ஆணிகளில் நம்முடைய மூட்டைகளை மாட்டி, நமக்குத் தெரியாத மூட்டைகளை எடுக்க நேரிட்டால் இன்னும் கவலைகள் பெருகுமேயொழிய குறையாது!. தெரியாத கவலைகளைப் புதிதாக ஏற்றுக்கொள்வதைவிட, ஏற்கனவே தெரிந்த கவலைகளோடு வாழ்வதே புத்திசாலித்தனம் என்கிற முடிவிற்கு அவர்கள் வந்து விட்டனர்.
உண்மையில் கவலை என்று எதுவும் அதுவாக நம்முன் வந்து நிற்பதில்லை. நாம்தான் நமது எண்ணங்களில் ஏற்படுகிற சிறு சிறு சிக்குகளையும், சிடுக்குகளையும் பூதாகரப்படுத்தி நாம் விரிக்கும் எண்ண வலைகளில் நாமே மாட்டிக்கொள்கிறோம். 'இடியாப்பச் சிக்கல்' என்று சில கவலைகளை நாமே உருவகப்படுத்திக்கொள்வோம்.
கொஞ்சம் தேங்காய்ப் பாலையும், சிலகரண்டி இனிப்புகளையும் போட்டு ஊறவைத்து உண்டால் அதைவிடச் சுவையானது வேறு எதுவாக இருக்க முடியும்?. சிக்கல்களைக் கரைப்பதற்கான வழியை விட்டுவிட்டுப் பெரிதாக்க எண்ணினால் சிக்கலோ சிக்கல்தான்.
எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டால், ஏமாற்றங்களும் குறைந்துபோகும். ஏமாற்றங்கள் குறையக் குறையக் கவலைகளும் சுவடுகளின்றி மறைந்தே போகும். நம்முடைய ஒவ்வொரு முயற்சியிலும் கவலை தரக்கூடிய தடைகள் இருக்குமானால், அந்தக் கவலை, நம்மை கவனத்துடன் செயலாற்றத் தூண்டும் ஊக்கமாகவும் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கவலைகள் நம்மை எச்சரிக்கை செய்வன என்றாகிப்போனால் கவலைகளும் நல்லவைகள் தானே!. கவலைகள் யாருக்குதான் இல்லை!; அவற்றைக் கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு, உற்சாகமாகச் செயலாற்றத் தொடங்குவோம்!.
தொடர்புக்கு 9443190098