- தினையானது சற்றே கூடுதல் கசப்புச் சுவையைக் கொண்டிருக்கும்.
- கசப்புச் சுவை என்றாலே ரத்தத்தைப் பெருக்கும் இரும்புச் சத்து உடையது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
தினை என்ற சிறுதானியம் புல்வகையைச் சேர்ந்தது. அதாவது நிறைய நீர்த் தேவைப்படுவதில்லை, தினைதானியம் வளர்ந்து கதிர்பற்ற அதிக நீர் தேவையில்லை. எனவே மேட்டு நிலத்திலும் பயிரிடலாம். போதிய மழைப் பொழிவு இல்லாத வருடத்தில் விதைத்து விட்டு இரண்டுமுறை மேலோட்டமாகக் களைஎடுத்து விட்டால் போதும், பயிர் ஜிவ்வென்று எழுந்து உயர்ந்து விடும். மெல்லிய தண்டுதான் என்றாலும் உறுதியாக வேர்பற்றி நிற்பதால் கதிர் பற்றி, முற்றி, தானிய மணிகள் கனத்த பின்னரும் பயிர் சாய்ந்து விடாது. எனவே தானியம் விரயமாகாது.
சிறுதானியங்கள் அனைத்தும் லேசான கசப்புச் சுவை உள்ளவைதான். ஆனால் தினையானது சற்றே கூடுதல் கசப்புச் சுவையைக் கொண்டிருக்கும். எனவே வரகு, சாமை, குதிரைவாலி போன்று நேரடியாகச் சோறாகச் சமைத்து உண்ணமுடியாது. கசப்புச் சுவை என்றாலே ரத்தத்தைப் பெருக்கும் இரும்புச் சத்து உடையது என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஐந்திற ஆற்றல் (பஞ்சபூதம்) கசப்புச் சுவை என்பது நெருப்பு மூலகமாகிய இதயத்திற்குப் பலம் தரக்கூடியது.
மனித உடலில் ரத்தம் மட்டுமே வெப்பத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ரத்தம் பாயும் வரையிலுமே உடலில் வெப்பம் இருக்கும். இறப்பின் அடையாளமாக மூக்கின் அருகில் கைவைத்து மூச்சு வருகிறதா என்று பார்க்கிறோம். இதயம் துடிக்கிறதா என்ற மார்புக்கூட்டில் கை வைத்துப் பார்க்கிறோம். இவை எதிலும் உறுதிப்படுத்த முடியாதபோது கால் கைகளில் சூடு இருக்கிறதா என்று பார்க்கிறோம். அதாவது உதிரம் உடலெங்கும் பாய்கிறதா என்று உறுதிசெய்கிறோம். உதிரவோட்டம் தன்னில் ஆக்சிஜன் எனப்படும் உயிர்வளியைச் சுமந்து செல்லும் வரையே இந்த உடலில் உயிர் நிலைத்திருக்கும். உதிரத்தில் உயிர்வளியை (வளி - காற்று) ஏற்றி உடலின் இறுதிப் பகுதிவரை எடுத்துச் செல்லப்படும் வரைதான் உடலின் இயக்கம் இருக்கும்.
வயது ஏற ஏற உடலின் செயல்திறன் குறைந்து கொண்டே வருகிறது. வயது ஏறுவதால் செயல்திறன் குன்றுமா என்றால் நிச்சயமாக இல்லை. நம்முடைய உணவு, நீர், காற்று இவற்றின் வழியாக உடலில் சேரும் கழிவுகள் இளம் வயதில் வெளியாவது போல வெளியேற நாம் அவகாசம் தருவதில்லை. எனவே அவை உள்ளே தங்கித் தங்கி நரம்பு மண்டலம், உள்ளுறுப்புகள், மூட்டு இணைப்புகள் ஆகியவற்றில் தேங்க ஆரம்பிக்கிறது. கழிவுகளின் தேக்கம் அதிகமாகும் பொழுது நம்மை அறியாமலே நம்மில் சோம்பல் படிகிறது. இச்சோம்பலால் கழிவுத் தேக்கம் இன்னமும் கூட இதயத்தால் உதிரம் செல்லும் பாதையில் உந்தித்தள்ள முடியவில்லை. பெரும்பாலான இறப்புகள் மாரடைப்பால் நிகழ்கின்றன. அல்லது நுரையீரலில் சளி சேர்ந்து நீர்கோர்த்து நடக்கின்றன. உண்மையில் இயற்கையான இறப்பு என்பது ஒருமனிதனின் செயல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து உடலின் சதையனைத்தும் வற்றி, நீர் வற்றி, எலும்புகள் சுருங்கி இன்னும் உத்தேசமாக எத்தனை நாட்கள் இருக்க முடியும் என்பதை அறிவித்து விட்டு அமைதியாக இறப்பதே இயற்கையான இறப்பாகும்.
அத்தகைய இயற்கையான இறப்பு இன்று மிகமிக அரிதாகி விட்டது. ஒன்று மிக இளம் வயதிலேயே திடீர் மாரடைப்பால் இறக்கின்றனர். அல்லது வயதான பின்னர் தொடர் மருந்துகளால் உள்ளுறுப்புகளிலும் ரத்தவோட்டப் பாதையிலும் கழிவுகள் அடைத்து உடலியக்கம் இறுக்கமடைந்து தவிப்பு நிலைக்கு ஆளாகின்றனர். அப்போது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கும் மருந்துகளால் நிலைமை சிக்கலாகி அங்கேயே சுவாசம் நிற்கிறது. அல்லது சுவாசத்திற்காக உயிர்வளி உருளைகள் (ஆக்சிஜன் சிலிண்டர்) உதவியுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உடல் வீக்கமடைந்து நினைவு தப்பிய நிலையிலேயே உயிர் பிரிகிறது.
இத்தகைய அகால இறப்பிற்கு அடிப்படையான காரணங்கள் இரண்டு. ஒன்று நாம் உணவில் மிதமிஞ்சியளவில் எடுத்துக் கொள்ளும் சர்க்கரை. சர்க்கரை தான் உடலின் இயக்க எரிசக்தி. ஆனால் எவ்வளவு சர்க்கரையை நாம் எடுத்துக் கொள்கிறோமோ அவ்வளவையும் எரிக்கிறோமா என்றால் இல்லை. அப்படி எரிக்கப்படாத சர்க்கரை உடலில் தேங்கத் தேங்க மேற்சொன்னவாறு உடலின் இயக்கம் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அடுத்து நாம் எடுக்க மறந்துபோன கசப்புச் சுவை. கசப்புச் சுவை என்றதும் நமக்குத் தெரிந்ததெல்லாம் பாகற்காய் மட்டுமே. அரிசி உட்பட உணவுகள் அனைத்திலும் மெலிதான கசப்புச் சுவை உண்டு. ஆனால் அவை எல்லாவற்றில் இருந்தும் தீட்டுதல் என்ற பெயரில், சுவையூட்டல் என்ற பெயரில் அனைத்து உணவுகளிலும் உள்ள கசப்புச் சுவையை நீக்கி விட்டோம். அதன் விளைவைத்தான் நாம் நோயாக அனுபவித்துக் கொண்டுள்ளோம். மிதமாகத் தொடர்ந்து எடுத்து வரும் கசப்புச் சுவை உணவுகள் இக்கட்டுரையின் துவக்கத்தில் கூறியுள்ளது போல ரத்தவோட்டத்திற்கும், ரத்த உற்பத்திக்கும் பேருதவி செய்யும்.
போப்பு
96293 45938
இந்த உண்மையை அறியாமல் நடுத்தர வயதைக் கடந்தபின்னர் சர்க்கரையைக் குறைக்கிறேன் என்று அன்றாடம் பாகற்காயை அரைத்துக் குடித்து உடலின் உள்ளுறுப்புகளுக்குக் கூடுதல் சுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறோம். நம் அனைவருக்கும் தெரிந்த பழமொழி அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை இனிப்புச் சுவையின் உச்சத்தில் இருந்து விட்டு, பிறகு அதற்கு நேர் எதிர்த்திசையில் இன்னொரு விளிம்பிற்குப் போகிறோம். இரண்டுமே உடலுக்கு ஆபத்தானவை தான். எனவே தான் இங்கு நாம் முக்கியமாகத் தானியப் பயன்பாடு பற்றி மிக அளவிற்குப் பேசிக் கொண்டுள்ளோம். தானியங்களிலும் தினை நம்ப முடியாதளவிற்கு, பனையளவிற்கு மகத்தான ஆரோக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளது.
இத்தொடரில் முன்னரே கூறியுள்ளதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ராகி, கம்பு தானியங்களில் பெருந்தானியமான அரிசி, கோதுமையைக் காட்டிலும் இனிப்பு (கார்போஹைட்ரேட்) குறைவாகவும், கசப்பு மற்றும் நார்ச்சத்துக் கூடுதலாகவும் இருப்பதைப் பார்த்துள்ளோம். அதேபோல பிற சத்துக்கூறுகளும் மிகுதியாக உள்ளன. அதேவகையில் தினையில் மற்றெல்லாத் தானியங்களை விட தினையில் கசப்புச் சுவைக் கூடுதலாக உள்ளது. சற்றே தூக்கலாக உள்ளது. அதனால் தான் தினை என்றதும் கூடவே இணைந்து வரும் சொல்லாக இருக்கிறது தேன். தேனும் தினை மாவும் என்ற சொல்லை பழந்தமிழ் இலக்கியங்களில் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம்.
இரண்டு கைகளில் எடுக்கும் அளவிற்கு உருண்டையான தினைமாவினைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதாவது கிட்டத்தட்ட நல்ல திரட்சியான தேங்காய் அளவிற்கு என்று வைத்துக் கொள்ளுங்களேன். மாவுருண்டையில் தேன் கலந்திருந்தால் தான் நம்மால் அதனை உண்ண முடியும். அப்படி மாவின் மூன்றில் ஒருபங்கு தேன்கலந்து உருண்டை பிடித்து நாவில் சுவைத்து உண்டு விட்டால்போதும், இரண்டு நாட்களுக்குப் பின்னர் கூட நிதானமாகத் தான் பூனையைப் போல எட்டிப் பார்க்கும். அவ்வளவு ஆற்றல் நிரம்பியது தினைமாவும், அதனுடன் கலந்த தேனும். என்னதான் நமக்கு இனிப்பு பிடிக்குமென்றாலும் இரண்டு தேக்கரண்டிக்கு மேல் தேனைக் குடித்து விட முடியாது. அதுபோலவே தினைமாவு நல்ல ஆற்றல் தரக்கூடியது என்றாலும் எலுமிச்சம் பழ உருண்டை அளவிற்கு மேல் அதனைத் தனியாக உண்டு விட முடியாது. ஆனால் தேனைத் தினைமாவில் ஊற்றிப் பிசைந்தால் ஒரு தேங்காய் அளவிற்குத் தின்று விடலாம்.
தேனும், தினைமாவும் எனில் அது இன்றளவும் மலைப்பகுதியில் மட்டுமே கிடைக்கக் கூடியது. ஆனால் தினை விளைச்சல் சமநிலத்தில் கிட்டத்தட்ட தமிழகத்தில் டெல்ட்டா, கடலோரப் பகுதி தவிர்த்து அனைத்துப் பகுதிகளிலும் விளையக்கூடியது. பசுமைப்புரட்சி என்று சொல்லப்பட்ட சிறுதானியங்கள் அழித்து ஒழிக்கப்பட்ட சென்ற நூற்றாண்டின் எழுபதுகள் எண்பதுகளோடு தினை விளைச்சலும் குறைந்து விட்டது. ராகியும் கம்பும் விளையும் அளவிற்கும் கூட தினை விளைவிக்கப்படுவதில்லை.
இள மஞ்சள் நிறத்தில் கேழ்வரகைக் காட்டிலும் சிறிய தானியமான தினையின் மேலோடு நீக்கிய பின்னரே சமைக்க முடியும். தினைச்சோறு அவ்வளவாக மக்கள் எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அதீத சத்துக்கள் நிரம்பிய உணவுத் தானியத்தைத் தனியாக ஒரு அளவிற்கு மேல் எடுத்துக் கொள்ள முடியாது. அதனை உளுந்துடன் சேர்த்து (தினை ஐந்தில் ஒருபங்கு உளுந்து) அரைத்து நான்கு மணிநேரம் புளிக்க வைத்துத் தோசையாக ஊற்றினால் சாதாரணமாகவே நெய் விட்டுச் சுட்டது போல சுவையும் மொறுமொறுப்பும் அபாரமாக இருக்கும். நார்ச்சத்தும் வறள் தன்மையும் அதிகம் என்பதால் தோசையாக ஊற்றுவதற்கு மிகவும் ஏற்றது தினை. மேலும் தோசைக்கல்லுக்கு அதிக வெப்பம் ஏற்றாமலே குறைவான சூட்டில் அழகாக நல்ல நிறமாகப் பெயர்ந்து வரும் தோசை. அப்படியே சுவையும் மொறுமொறுப்பாக இருக்கும். கர்நாடகாவில் தினைமாவை ஊறவைத்து அதனுடன் சிறிதளவு உளுந்தும், புளியும் சேர்த்தரைத்து அடையாகச் சுடுவதாகக் கேள்வி.
தினையில் உள்ள மெதுவாகக் கரையும் நார்ச்சத்து இருப்பதால் நாம் உண்ட பின்னர் மிகவும் நிதானமாகவே சத்துக்களாக மாற்றப்படும். எனவே ரத்தத்தில் சர்க்கரையை அவ்வளவு எளிதில் ஏற்றாது. இரைப்பையில் தங்கும் பொழுது உருவாகும் தனிச்சிறப்பு மிக்க பாந்தோனிக் மற்றும் பிரெனுலிக் அமிலங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கவல்லவை. முன்னரே சொன்னது போல ரத்தத்தை பெருக்கவல்லது என்பதால் ஆண்களுக்கு வீரியத்தை வழங்குவதாகவும் இருக்கும்.
காதல் குருவிகளுக்கும், 300 கிமீ நிற்காமல் நீண்டதூரம் பறக்கும் புறாக்களுக்கும் மிகவும் பிடித்த உணவு தினைத்தானியந்தான். ஏனென்றால் உடலில் வெப்பத்தை நிதானமாக ஏற்றி சத்துக்களை வழங்கிக் கொண்டே இருப்பதால் தான் புறாவால் அவ்வளவு தொலைவிற்கு நிற்காமல் பறக்க முடிகிறது. பறவைகளிலேயே அதிக வெப்பத்தைத் தக்க வைத்திருப்பது புறாதான். ஆகையால் தான் மூச்சிரைப்பு, தொடர் சளித்தொல்லை போன்ற நோய்களுக்கு புறாக்கறியை தேர்ந்தெடுத்து உண்கிறார்கள். புறாவின் ரத்தம் நம்முடைய தலைமுடிக்குத் தேவையான புரதத்தை வழங்குவதாகச் சொல்லப்படுவது எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் புறாவின் ஆற்றலுக்கு ஆதாரமானது தினை என்பது மட்டும் உண்மையிலும் உண்மை.
தினையின் நார்ச்சத்துகூறுகள் நம்முடைய சிறுகுடல், பெருங்குடலுக்கும் நன்மை செய்பவை. குடலில் நீண்ட நேரம் தங்குவதால் உடலில் சுரக்கும் சுரப்புகளை சீரமைக்கிறது. குறைவாக எடுத்து நீடித்த ஆற்றலை வழங்கும் வகையில் உடல் எடையைக் குறைப்போர் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தானியம் தினை.
தொடர்ந்து பார்ப்போம் தானியங்களின் சிறப்பு குறித்து...