புறா எச்சத்தால் விபரீதம்!... மீனா மலரும் நினைவுகள்
- சில ஐரோப்பிய நாடுகளிலும், கனடா மற்றும் அமெரிக்காவில் சில நகரங்களிலும் புறாக்கள் வளர்க்க தடையே உள்ளது.
- நம் நாட்டிலும் டெல்லியில் கூட புறா வளர்க்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கல்லீரல் பாதிப்புக்காக சாகரை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். ஒன்றிரண்டு நாளில் குணமாகி விடும் என்று தான் நினைத்தோம். ஆனால் ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் கூறி விட்டார்கள்.
டாக்டர்கள் அறிவுரைப்படி சிகிச்சை தொடர்ந்தது. பயப்படும் அளவுக்கு அவர் உடலில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ரொம்ப ஹெல்தியாகவே இருந்தார். எப்போதும் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு சின்ன புறாவின் எச்சத்தால் எவ்வளவு பெரிய கஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
புறா எச்சத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய தகவல்களை தேடினேன். அப்போது கிடைத்த தகவல்கள் நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
புறா எச்சத்தால் மனிதர்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகள், சுவாச கோளாறுகள் மற்றும் அரிதாக உயிருக்கு ஆபத்தான நோய்கள் கூட வரலாம் என்பதை உணர்ந்ததும் மனதுக்குள் என்னையும் அறியாமல் ஒரு விதமான பயம் சூழ்ந்தது.
60-க்கும் மேற்பட்ட நோய் தொற்றுக்கள் புறா எச்சங்களால் வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள் என்பதையும் படித்து தெரிந்து கொண்டேன்.
இதனால் சில ஐரோப்பிய நாடுகளிலும், கனடா மற்றும் அமெரிக்காவில் சில நகரங்களிலும் புறாக்கள் வளர்க்க தடையே உள்ளது. அழகிய புறாக்கள் கூட்டம், கூட்டமாக பறப்பதை ஆர்வத்துடன் பார்ப்போம். பலர் புறாக்களுக்கு உணவு வழங்குவதும் உண்டு. இதனால் புறாக்கள் வீட்டு மாடிகளிலும் தாழ்வாரங்களிலும் வந்து அமர்ந்து இருக்கும்.
ஆனால் புறா எச்சத்தால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்தவர்கள். அந்த நாடுகளில் புறாக்களை வீடுகளில் வந்து அமராதபடி கட்டமைத்து இருக்கிறார்கள். நம் நாட்டிலும் டெல்லியில் கூட புறா வளர்க்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சாகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார் என்றதும் அவரது நண்பர்கள் பலர் பார்க்க வருவதற்கு ஆசைப்பட்டார்கள். ஆனால் சாகர், அவர்களிடம் ரொம்ப ஜாலியாக போனில் பேசுவார். ஆஸ்பத்திரிக்கு எதுக்குடா? வர்றீங்க? நான் சீக்கிரம் குணமாகி வீட்டுக்கு வந்திடுவேன் அதன் பிறகு நாம் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று சொல்வார்.
ரொம்பவே தைரியமாகவும், நம்பிக்கையாகவும் இருந்தார். ஆனால் மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கட்டாயம் என்றதும் அதிர்ந்து போனேன்.
எப்படி கிடைக்கும்? எங்கே போய் தேடுவது? என்று எனக்கு அப்போது எதுவும் தெரியாது. மருத்துவ உலகம் தனி உலகம். அதில் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. கல்லீரலுக்காக அரசு பதிவேட்டில் பதிவு செய்தோம். நான் எதற்காகவும் யாரிடமும் எதையும் கேட்டது கிடையாது. என் சாகர் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பல இடங்களுக்கு சென்று உதவி கேட்டு அலைந்தேன்.
பல நேரங்களில் என்னை துரத்திய துயரத்தால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன். அப்போதெல்லாம் நான் நினைத்தது 'யாருக்கும்' இந்த மாதிரி உடல் நல பிரச்சினைகள் வரக்கூடாது என்பதுதான்.
அதிலும் பெண்களுக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது' என்பது தான்.
நெருக்கடிக்குள் இருந்த அந்த நேரத்தில் 'ஆர்கானிக் மாமா. ஹைபிரிட் அல்லுடு (மருமகன்)' என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தேன். அதற்காக முன்பணமும் பெற்று இருந்தேன்.
ஆனால் வீட்டு நிலைமை சிக்கலாக இருந்ததால் முழு ஈடுபாட்டோடு நடிக்க முடியுமா என்ற சந்தேகம். அதோடு சாகருக்கு ஆபரேஷன் எப்போது என்பதும் உறுதியாக தெரியாத நிலை. இந்த சூழ்நிலையில் படத்தில் நடிக்க முடியாது என்றும், அட்வான்ஸ் பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும தயாரிப்பாளரிடம் தெரிவித்தேன்.
அந்த படத்தின் டைரக்டர் கிருஷ்ணாரெட்டி. எனக்கு நன்கு தெரிந்தவர். ஏற்கனவே என்னை வைத்து இரண்டு படங்கள் இயக்க முடியாமல் போனதால் இந்த படத்தையாவது கண்டிப்பாக இயக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருந்தார்.
ஷெட்யூல்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்த நேரம் வாருங்கள். ஒரு வாரத்துக்குள் முடித்து விடலாம் என்றார். அரைகுறை மனதோடு தான் ஷூட்டிங் கிளம்பி சென்றேன். படப்பிடிப்பின் போது சிறிது நேரம் கிடைத்தாலும் ஆஸ்பத்திரிக்கு போன் பண்ணி விசாரிப்பேன். சாகரிடமும் வீடியோகாலில் பேசுவேன்.
அப்போதும், முழு கவனத்துடன் நடி. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். என்னை நினைத்து கவலைப்படாதே என்று எனக்கு நம்பிக்கை தருவார். சில நாட்கள் கிளம்பி சென்னைக்கு வந்து ஆஸ்பத்திரியில் இரவு தங்கி விட்டு மறுநாள் காலையில் படப்பிடிப்புக்காக செல்வேன்.
நைனிகாவும் அப்பாவை பார்க்க வருகிறேன் என்று அடிக்கடி சொன்னாள். ஆனால் சாகர் தான் 'அவள் சின்ன பொண்ணு' ஆஸ்பத்திரிக்கெல்லாம் அழைத்து வராதே என்று கூறி விட்டார். போனில் பேசிக் கொள்வார்.
இப்படியே ஆஸ்பததிரி வாசம் சுமார் ஒரு மாசமானது...
ஆனால் கல்லீரல் கிடைக்கவில்லை. இதனால் ஆபரேசனும் தள்ளிக் கொண்டே போனது. எத்தனையோ வழிகளில் எவ்வளவோ முயற்சித்தும் உறுப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியவில்லை. உறுப்பு கிடைத்து ஆபரேஷன் முடியும் வரை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்ற நிலை.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகம் போலவே நகர்ந்து கொண்டிருந்தது. ஒப்பந்தப்படி நடித்து வந்த படத்தின் 2-வது ஷெட்யூல் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றனே். படப்பிடிப்பு தீவிரமாக சென்று கொண்டிருந்தது.
எனது மனம் மட்டும் ஆஸ்பத்திரியிலும், ஷூட்டிங் தளத்திலுமாக அலை பாய்ந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தாலும் அவர் எப்படி இருக்கிறாரோ என்ற எண்ணம் தான் எழுந்து வரும்.
உடனே டாக்டருக்கு போன் போடுவேன். இப்போ எப்படி சார் இருக்கிறார்? என்பேன். டாக்டரும் பயப் பட தேவையில்லை. நன்றாக இருக்கிறார். நீங்கள் தைரியமாக இருங்கள் என்பார். அதை கேட்டதும் சற்று ஆறுதலாக இருக்கும். உடனே நம்பிக்கையோடு படப்பிடிப்புக்கு செல்வேன். இப்படித்தான் ஒவ்வொரு நாளும் சென்றது. 3 மாதங்கள் ஆஸ்பத்திரி வாசம்தான். மன ரீதியாக மிகப்பெரிய அழுத்தத்தில் இருந்தேன்.
ஒருநாள் இரவு படப்பிடிப்பு முடிந்து அறையில் இருந்தேன். அப்போது திடீரென்று போன் மணி ஒலித்தது. அழைப்பை பார்த்ததும் நெஞ்சுபடபடத்தது.
மறுமுனையில் என்னிடம் பேசிய டாக்டர் 'மேடம், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உடனே புறப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வாருங்கள்' என்றார். வழக்கமாக இப்படி உடனே வரும்படியெல்லாம் அவர் அழைக்கமாட்டார். எனவே அவரது அழைப்பு எனக்கு கூடுதல் பயத்தை ஏற்படுத்தியது.
நான் பதட்டத்துடனேயே, 'சார், சாகர் எப்படி இருக்கிறார்' என்றேன்.
சீரியசாகத்தான் இருக்கிறார். நீங்கள் உடனே வாருங்கள் என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டார்.
நான் அவசர அவசரமாக சென்னை புறப்பட்டேன். இரவு நேரம்.... இந்த சூழ்நிலையில் என்னை தனியாக அனுப்புவது சரியல்ல என்று தயாரிப்பாளர் அவரது மனைவியை என்னுடன் துணைக்கு அனுப்பி வைத்தார். சென்னை விமான நிலையத்தில வந்து இறங்கிய பிறகும் அவர் திரும்பி செல்லவில்லை. என்னோடு துணைக்கு ஆஸ்பத்திரி வரை வந்து இரவில் அங்கேயே இருந்தார். சாகரின் உடல் நிலையை விளக்கிய டாக்டர், 'மிக மோசமான நிலையில் இருக்கிறார்' என்றதும் என்ன சொல்வது? என்ன செய்வது? என்று எதுவும் தெரியாத வளாய் நிலை குலைந்து போனேன்.
என்ன நடந்தது....?
அடுத்த வாரம் சொல்கிறேன்....
(தொடரும்)