- வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
- மனிதன் தன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழிகளை தேடிக்கொண்டேதான் இருக்கிறான்.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். "சீச்சீ! புத்தி ஏன் இப்படிப் போகிறது? பணமா முக்கியம்?" உங்களில் எத்தனை பேர் இந்த வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருக்கிறீர்கள்? என்னிடம் கூட சிலர் "ஏன் பொருளாதாரம் பற்றி எழுதுகிறீர்கள்? கடவுள், குடும்பம், சமையல் போன்ற விஷயங்கள் பற்றி எழுதலாம் அல்லவா?" என்று கேட்டிருக்கிறார்கள். வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவற்றைக் கேட்கும்போது ஏதோ பணம் தேடுவதும், அதற்கான வழிகள் பற்றிப் பேசுவதும் பாவம் என்பது போன்ற எண்ணம் தோன்றுகிறது அல்லவா? இது போன்ற கேள்விகள் செல்வத்தை நோக்கிய நம் பயணத்தில் நம்மை சோர்வடையச் செய்யும்.
பணம் முக்கியமல்ல என்று கூறுபவர்கள் மறந்துவிட்ட விஷயம் ஒன்று உண்டு. பணத்துக்கானமுக்கியத்துவம் இன்று புதிதாக வந்தது அல்ல. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்று உள்ளது. ஆம், அப்போது வாழ்ந்த வள்ளுவர் கூட அறத்துக்கு 380 குறள்களும், இன்பத்துக்கு 250 குறள்களும் எழுதி விட்டு, பொருட்பாலுக்குத்தானே 700 குறள்கள் எழுதியிருக்கிறார்?
இன்றும் இணையதளங்களின் ஹாட் டாபிக் காசு, பணம், துட்டு, மணி! துறவிகள் கூட"அத்தனைக்கும் ஆசைப்படு" என்று கூறும் காலம் இது. மனிதன் தன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழிகளை தேடிக்கொண்டேதான் இருக்கிறான். ஏனெனில் பணம் என்பது உலக இன்பங்களோடு, மனத் திருப்தியையும், ஆத்ம சாந்தியையும் கூடத் தரவல்லது.
தீதின்றி வந்த பொருள்
தங்கைக்கு ஒரு சுடிதார், தாத்தாவுக்கு ஒரு கைத்தடி, பாட்டிக்கு ஒரு பல்செட் இப்படியெல்லாம் நம் முதல் சம்பளத்தில் வாங்குவதில் நமக்கு எத்தனை மகிழ்ச்சி! நாம் எடுத்த ஹெல்த் இன்சூரன்ஸ் நம் பெற்றோருக்கு உதவும்போது எத்தனை மனத்திருப்தி! கடன் வாங்கியாவது நம் குழந்தைகளைப் படிக்க வைப்பது எத்தனை பெருமை!
நம் போன்ற சாமானியர்களுக்கு இவையெல்லாம் இன்பம் என்றால், வாரன் பபெட், பில் கேட்ஸ், அசிம் பிரேம்ஜி போன்ற பெரும் பணக்காரர்கள் கோடிகளைக் கொட்டி ஏழைகளுக்கு உதவுவது முழுக்க முழுக்க அறம்! "பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை; தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை" என்ற வாலியின் வரிகளைப் பொய்யாக்கி விட்டவர்கள் இவர்கள். ஆகவே அறமும், இன்பமும் ஒன்றாகத் தரவல்ல இந்தப் பொருளை சம்பாதிக்கவும், பெருக்கவும் நாம் முயற்சி செய்வதில் எந்தத் தவறும் இல்லை!
இந்த இடத்தில் ஒன்றை மட்டும் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்: பணம் எவ்வளவு முக்கியமோ, அது வரும் வழியும் அவ்வளவே முக்கியம். வள்ளுவர் கூறுவது போல் "தீதின்றி வந்த பொருள்" மட்டுமே அறத்தையும், இன்பத்தையும் தரும். பணம் செய்கிறேன் பேர்வழி என்று லஞ்சம், ஊழல், கொள்ளை போன்றவற்றிற்குத் துணை போனால், அப்புறம் அறமாவது, இன்பமாவது? ஆகவே சேமிப்பு, முதலீடு என்பது பற்றியெல்லாம் இந்தக் கட்டுரை பேசும்போது பணம் என்பது நேர்வழியில் வந்ததாக இருக்கவேண்டும் என்பதை தயவு செய்து மனதில் நிலைநிறுத்துங்கள்.
தீதின்றி வந்த பணமாக இருந்தாலும், நாம் அதனை அறவழியில் செலவழித்தாலும், நம் வருங்கால வசதியைத் தீர்மானிப்பது நம் வருமானமல்ல; அந்த வருமானத்தில் நாம் எவ்வளவு சேமித்தோம்; எவ்வளவு முதலீடு செய்தோம் என்பதுதான். இது நான் கூறியதல்ல; பீட்டர் லின்ச் என்னும் முதலீட்டு வல்லுனர் கூறியிருப்பது.
அவர் கூற்று எந்தக் காலத்திற்கும், எந்த நாட்டுக்கும், எந்த மனிதருக்கும் பொருந்துவதாக உள்ளது. உலக அளவிலும் சரி; இந்திய அளவிலும் சரி; இதற்கான ஏராளமான உதாரணங்கள் நம்மிடையே உள்ளன.
கடன்பட்டுக் கலங்கிய மைக்கேல் ஜாக்சன்
மைக்கேல் ஜாக்சன் தெரியும், அல்லவா? தன் பாட்டு, நடனம் போன்றவற்றால் உலகம் முழுவதையும் பித்துப் பிடித்து ஆட வைத்தவர். அவர் மட்டும் இந்த அறிவுரையைப் பின்பற்றியிருந்தால், மாடி வீட்டு ஏழையாக, கடனாளியாக இறந்திருக்க மாட்டார். தன் வாழ்நாளில் சுமார் 3 பில்லியன் டாலர்களை வருமானமாகப் பெற்ற கிங் ஆப் பாப், செலவழிப்பதிலும் கிங்தான்.
மைக்கேல் ஜாக்சனின் கண் கவரும் கையுறைகளின் விலை மட்டுமே லட்சங்களைத் தொட்டது. 2600 ஏக்கர் தோட்டத்துடன் கூடிய பங்களா, 75 கார்கள், தனி விமானங்கள், ஹெலிகாப்டர்கள், அவருக்கு மட்டுமே சொந்தமான மிருகக் காட்சி சாலை, அதில் அவர் வளர்த்த ஒட்டகச் சிவிங்கிகள், புலிகள், முக்கியமாக பபிள்ஸ் என்ற பெயருடன் அவருடன் வலம் வந்த சிம்பன்சீ குரங்கு, அதற்கான ஆடை, அணிகலன்கள், இவை தவிர அவர் மீதிருந்த வழக்குகள் இவை எல்லாமே அவரின் வரவை விட செலவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தன.
ஆனால் சேமிப்பு பற்றி சற்றும் கவலைப்படாமல் தன் செலவுகளை அதிகரித்தபடியே இருந்த மைக்கேல் ஜாக்சன், ஒரு கட்டத்தில் தினசரி செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் மட்டும் தன் வருமானத்தில் ஒரு 10 சதவீத அளவு சேமித்திருந்தால் கூட, கடனாளியாக இல்லாமல் கிங்காகவே வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவ்வப்போது வாங்கிய கடன்கள் 360 மில்லியன் டாலராக வளர்ந்து அனகோண்டாவாகப் படமெடுத்து நின்றபோது, அவர் நிம்மதி பறி போயிற்று. கோடிகளைக் கொட்டிக் குவித்த அவர், கடனாளியாக இறக்க நேர்ந்தது.
வினையாகும் விளையாட்டுப் போக்கு
இவர் மட்டுமல்ல; கையில் பணம் புரளும் போது மனித அறிவு தடம் புரண்டுவிடுகிறது என்பதை இந்த பண்ம சூழ் உலகம் அடிக்கடி நிரூபித்து வருகிறது. விளையாட்டு வீரர்களை நிஜ வாழ்வின் ஹீரோக்களாக எண்ணிப் போற்றுபவர்கள் அனேகம். ஆனால் விளையாட்டு வீரர்களில் 78 சதவீதம் பேர் ஓய்வு பெற்று இரண்டே வருடங்களில் தங்கள் பணத்தை இழந்து திவாலாகி விடுகிறார்களாம். அமெரிக்காவின் கால்பந்து விளையாட்டு வீரர் டெரல் ஓவன்சின் கதை இதற்கு உதாரணம். 80 மில்லியன் டாலர்களை கால்பந்து விளையாட்டில் அநாயசமாக ஈட்டிய இவரிடம் இன்றிருப்பது வெறும் ஐந்து லட்சம் டாலர்கள் மட்டுமே..
சுந்தரி ஜகதீசன்
பணம் வர வர தன் வாழ்க்கைத் தரத்தை பலரும் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயர்த்தும் ஆசை இவருக்கு வந்துள்ளது. தன்னிடம் அந்த அளவு பணமில்லாத போதும் மெர்சிடிஸ் கார், கண் கவரும் நகைகள் என்று செலவழித்தது தவறு என்று அவர் புரிந்து கொண்டபோது காலம் கடந்து விட்டிருந்தது.
கல்லெழுத்து
அமெரிக்காவின் 18வது ஜனாதிபதியாக இருந்த யுலிஸஸ் கிரான்ட், விளையாட்டு வீரர் மைக் டைசன் போன்ற பிரபலங்களின் கதையும் இதுவே. இவர்கள் கையில் புரண்ட பணத்திற்கு அளவேயில்லை. ஆனால் அதை சரியாக உபயோகித்து வாழ்வை வளமாக்கத் தவறியவர்கள் இவர்கள்.
அவ்வளவு ஏன், நம் ஊரிலும் தியாகராஜ பாகவதர், சந்திரபாபு, சாவித்திரி போன்ற பிரபலங்கள் பணத்தின் உச்சியில் இருந்து சரிந்து, பாதாளத்தில் வீழ்ந்த கதைகளைக் கேட்டிருக்கிறோம் அல்லவா? தியாகராஜ பாகவதர் தமிழ் நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார். தங்கத் தட்டில்தான் சாப்பிடுவாராம். பல வீடுகளுக்கு உரிமையாளர். அவர் போல ஹேர்ஸ்டைல் அமைத்துக் கொள்வதுதான் அன்றைய பேஷன். ஆனால், 50 வயதுக்குள் அத்தனை செல்வத்தையும் இழந்த அவர் கண்பார்வை பாதிக்கப்பட்டு, வறுமையில் இறந்தார்.
மகா நடிகை என்று கொண்டாடப்படும் சாவித்திரியும் முப்பது வருடங்கள் நடித்து, பணத்தின், புகழின் உச்சியில் இருந்தவர்தான். சென்னையின் ஹபிபுல்லா ரோடில் ஒரு பங்களா, கொடைக்கானலில் ஒன்று, ஐதராபாத்தில் ஒன்று என இருந்த வீடுகளும், இன்னும் பல சொத்துக்களும் கடனில் முழ்கின. உடல் நிலையும் பாதிக்கப்படவே, பல நாட்கள் கோமாவில் இருந்து இறந்தார்.
நடிகர் சந்திரபாபு பற்றியும் அறிவோம். காரிலேயே மாடி வரை செல்ல வசதியாக அமைக்கப்பட்டிருந்தது அவர் பங்களா. ஆனால் அவரும் கடைசி காலத்தில் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டார். ஆகவே "உங்கள் வருங்கால செல்வ நிலையைத் தீர்மானிப்பது உங்கள் வருமானமல்ல; அந்த வருமானத்தில் நீங்கள் எவ்வளவு சேமித்தீர்கள்; எவ்வளவு முதலீடு செய்தீர்கள் என்பதுதான்" என்று அறிஞர்கள் கூறுபவை கல்லெழுத்தாக நம் மனதில் பொறிக்கப்பட வேண்டியவை.
இந்தக் கட்டுரையில் பணம் பற்றிய நம் எண்ணங்கள் சரியே என்றும், வருமானத்தை விட, சேமிப்புதான் முக்கியம் என்றும் பார்த்தோம். இன்று வரை நீங்கள் சம்பாதித்தது எவ்வளவு, அதில் சேமித்தது எவ்வளவு என்று கணக்கிட்டுப் பாருங்கள். உங்கள் வருமானத்தில் குறைந்தபட்சம் 20 சதவீதம் நீங்கள் சேமித்திருந்தால்... பிடியுங்கள் வாழ்த்துக்களை! ஆல் த பெஸ்ட்!