சிறப்புக் கட்டுரைகள்

கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி!

Published On 2025-05-01 12:11 IST   |   Update On 2025-05-01 12:11:00 IST
  • சங்கப் பாடல்களைப் போன்ற ஓசை மரபில் அழகிய மரபுக் கவிதைகளை நிறைய இயற்றியுள்ளார்.
  • உரைநடை எழுதும்போது வா.செ. குழந்தைசாமி என்ற சொந்தப் பெயரிலேயே எழுதுவார்.

தமிழறிஞரும் மரபுக் கவிஞருமான வா.செ. குழந்தைசாமி இந்தியப் பொறியியல் (நீரியல்) துறை விஞ்ஞானி. தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் உயர் படிப்புப் படித்தவர். நீர்வளத் துறையில் இவரது கண்டுபிடிப்பு `குழந்தைசாமி மாதிரியம்` என வழங்கப் படுகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.

திருச்சி அருகேயுள்ள கரூரைச் சேர்ந்த வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். அவரது மனைவி கே. சவுந்தரவல்லி திருப்பூரைச் சேர்ந்தவர். தம் கணவர் எண்பத்தேழு வயதில் காலமான பின், ஆண்டு தோறும் தம் கணவர் பெயரில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி வருகிறார் அவர்.

பழகுவதற்கு இனிய பண்பாளர் தமிழறிஞரும் விஞ்ஞானியுமான வா.செ. குழந்தைசாமி. ஆன்மிக நம்பிக்கை உள்ளவரல்ல. ஆனால் ஆன்மிக நம்பிக்கை உள்ள பலர் அவரது நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.

அந்த நட்பின் இடையே ஒருபோதும் எந்த விரிசலும் இருந்ததில்லை. அவரவர் கொள்கை அவரவருக்கு என்ற கருத்தும் அடுத்தவர் கொள்கைக்கு மரியாதை கொடுத்துப் பழகும் நாகரிகமும் அவரிடம் எப்போதும் இருந்தன.

சங்கப் பாடல்களைப் போன்ற ஓசை மரபில் அழகிய மரபுக் கவிதைகளை நிறைய இயற்றியுள்ளார். சித்தர் பாடல்களைப் போன்றவை அவை.

மனிதகுலம் வளர்ந்த வரலாறு முழுவதையும் அது நாகரிகமும் பண்பாடும் பெற்ற சரிதத்தையும் `மானுட யாத்திரை`யாக கவிதைப்படுத்தியிருக்கிறார்.

உரைநடை எழுதும்போது வா.செ. குழந்தைசாமி என்ற சொந்தப் பெயரிலேயே எழுதுவார். கவிதை எழுதும்போது குலோத்துங்கன் என்ற புனைபெயரில் எழுதுவார்.

திருப்பூர் கிருஷ்ணன்


குலோத்துங்கன் கவிதைகளுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்றுகூடச் சில அன்பர்கள் மேடையில் பேசியதுண்டு. (பி.எஸ். ராகவன் ஐ.ஏ.எஸ். தொடர்ந்து அப்படிக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர்.)

ஒருசீரான ஒலி ஒழுங்கு குலோத்துங்கன் கவிதைகளின் மேலான பண்பு. அவர் எழுதியவை யாவும் ஆசிரிய விருத்தம்போல் அமைந்த எளிய மரபுக் கவிதைகளே.

மரபில் வெண்பா, கட்டளைக் கலித்துறை போன்ற கடினமான யாப்பு வகைகளை அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை. கற்பனையை விடக் கருத்தே அவர் கவிதைகளின் மூலதனம். கவிதை எழுதுவதல்ல அவர் நோக்கம், கவிதை வடிவில் தம் கருத்துக்களைச் சொல்வதே அவர் நோக்கம் என்பதை அவரது கவிதைகள் புலப்படுத்துகின்றன.

`குலோத்துங்கன் கவிதைகள் - ஒரு திறனாய்வுப் பார்வை` என்ற தலைப்பில் கோவையில் வாழ்ந்த சிலப்பதிகாரத் தமிழ் அறிஞர் ம.ரா.போ. குருசாமி ஒரு சிறந்த ஆய்வு நூல் எழுதியிருக்கிறார்.

வா.செ.குழந்தைசாமியின் இலக்கியம் குறித்த நூல்களில் இன்னொரு முக்கியமான நூல், விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் வ.வே.சு. எழுதிய நூல்.

க.நா.சுப்பிரமணியம், அசோகமித்திரன், ஆர். சூடாமணி, (ஆங்கிலத்தில் எழுதும்போது சூடாமணி ராகவன்), இந்திரா பார்த்தசாரதி, ஜோதிர்லதா கிரிஜா, பிரேமா நந்தகுமார், கே.எஸ். சுப்பிரமணியம், பிரபா ஸ்ரீதேவன் போன்ற சிலர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதும் திறன் பெற்றவர்கள்.

வா.செ.குழந்தைசாமி அந்த வகையில் இவர்கள் வரிசையில் இணைகிறார். கட்டுரைகளை ஆங்கிலத்திலும் எழுதிய அவர் கவிதைகளைத் தமிழில் மட்டுமே எழுதி வந்தார்.

தமிழை அவரைப் போல் நேசித்தவர்கள் மிகக் குறைவு. பழந்தமிழும் அறியாமல் நவீனத் தமிழும் அறியாமல் ஆனால் `தமிழ் வாழ்க!` என்று மட்டும் கூச்சலிடுபவர்களைப் போன்றவர் அல்ல அவர்.

புறநானூறு தொடங்கி புதுமைப்பித்தன் சிறுகதை வரை, எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர். அனைத்து நூல்களைப் பற்றியும் அவரிடம் பேசி மகிழலாம். சங்க காலம் தொடங்கி வளர்ந்த பல நூற்றாண்டுத் தமிழில் ஆழங்கால் பட்டவர்.

திருக்குறளில் அபாரமான புலமை உடையவர். திருக்குறளே தம் வாழ்வின் வழிகாட்டி என்று அவர் சொல்வதுண்டு.

`வாழும் வள்ளுவம்` என்ற திருக்குறளைப் பற்றிய அவர் கட்டுரை நூல், சாகித்ய அகாதமி பரிசைப் பெற்றது. அறிவியல் துறையில் மட்டுமல்லாமல் இலக்கியத்திலும் முத்திரை பதித்த பெருமகன் என்ற பெருமையை அவருக்கு இந்தப் பரிசு பெற்றுத் தந்தது.

தம்மை விஞ்ஞானி என்று சொல்லிக் கொள்வதை விடத் தமிழ்க் கவிஞன் என்று சொல்லிக் கொள்வதையே பெரிதும் விரும்பினார். அப்படித்தான் தாம் அடையாளம் காணப்பட வேண்டும் என்று அவர் ஆழ்மனம் விரும்பியது. ஆனால் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத் தத்தை அவர் முன்னிலைப் படுத்தியபோது சில தமிழறிஞர்கள் அவரைக் கடுமையாக விமர்சிக்கவும் தலைப்பட்டார்கள்.

ஏற்கெனவே உள்ள தமிழ் எழுத்து வடிவத்தை மாற்ற முயல்வது வீண்வேலை என்றும் அவரைப் போன்ற உயர்நிலைப் பிரமுகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட முனையக்கூடாது என்றும் வன்மையான கண்டனக் கணைகள் தமிழ்ச் சூழலில் எழுந்தன. கண்டனங்கள் தாம் எதிர்பார்த் தவைதான் என்று பதறாமல் சொன்ன அவர், தம் நிலைப்பாட்டில் இறுதிவரை உறுதியாகவே இருந்தார். தொடர்ந்து எழுத்துச் சீர்திருத் தத்தைப் பற்றி மேடைகளில் பேசிவந்தார்.

சங்க காலம் தொட்டுக் காலந்தோறும் தமிழ் வரிவடிவம் மாறியே வந்திருக்கிறது என்றும், வீரமாமுனிவர் பல மாறுதல்களைச் செய்ய வில்லையா என்றும், அரசு வற்புறுத்தியதன் பேரில் எல்லா நாளிதழ்களும் பதிப்பகங்களும் சீர்திருத்த எழுத்துக்களைப் பயன்படுத்த வில்லையா என்றும் அவர் தம்மைத் தாக்கியவர்களை நோக்கி எதிர்க் கேள்விகளை எழுப்பினார்.

பொதிகைத் தொலைக்காட்சி அவரது எழுத்துச் சீர்திருத்த எண்ணங்களை மையப்படுத்தி, இரண்டு அரைமணிநேரப் பகுதிகளாக, இரண்டு வாரங்கள் அவரது நேர்காணல்களை ஒளிபரப்பியது.

நேர்காணல்களில் அவரிடம் பதற்றம் எதுவும் தென்படாது. கேள்விகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு பதில் சொல்வது, எந்தத் தயக்கமுமில்லாமல் பளிச்சென்று பேசுவது, அடுத்த கேள்விக்கு வழிவிட்டு, கேட்ட கேள்விக்கு மட்டும் கூர்மையாக விடையளிப்பது, கடினமான செய்தியைக் கூடப் பாமரனுக்கும் புரியும் வகையில் விளக்குவது என உரையாடல் கலையில் அவர் வித்தகர்.

மிகச்சிறந்த மேடைப் பேச்சாளரும் கூட. கைதட்டல்களுக்காக மலினமான நகைச் சுவையை அவர் நம்பியிருக்கவில்லை. அறிவுபூர்வமாகப் பேசியே சபையைக் கட்டக்கூடிய வல்லமை அவருக்கு உண்டு.

அவர் பேச்சின் இடையே கைதட்டல்கள் அதிகம் ஒலிக்காது. தம் ஆழ்ந்த சிந்த னையோடு பார்வையாளர்களைத் தன்வயப் படுத்துவார் அவர். ஆனால் அவர் பேசி முடித்தபின் எழும் கைதட்டல்கள் ஓய நெடுநேரம் பிடிக்கும். சபையில் அத்தனை பேர் மனங்களையும் அள்ளிச் சாப்பிட்டுவிடும் அவர் பேச்சு. தாம் பேசிய பேச்சுக்கள் பலவற்றைக் கட்டுரைகளாகவும் எழுதினார். எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூல்களாகவும் வெளியிட்டார்.

அவர் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் ஒன்றரை மணிநேரத்திற்குமேல் தங்குதடை இல்லாமல் மேடையில் பேசக் கூடியவர். ஆச்சரியம் என்னவென்றால் அவர் தமிழில் பேசும்போது ஆங்கில வார்த்தைக் கலப்பே இருக்காது. தமிழைத் தமிழாகவும் ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் கையாண்ட அறிஞர் அவர்.

ஆங்கிலம், தமிழ் இரண்டிலுமே செம்மாந்த மொழிவளம் படைத்தவர். வார்த்தைகளை உச்சரிப்பதில் மிகுந்த தெளிவுடையவர். ழகர ளகர லகரம், ணகர னகரம் போன்றவையெல்லாம் அவர் உச்சரிப்பில் மிகத் திருத்தமாக இருக்கும்.

அவர் பேசி முடித்தபிறகு ஒரு கம்பீரமான இசைக் கச்சேரி நிறைவுற்றதைப் போன்ற உணர்வே கேட்பவர்களுக்கு ஏற்படும்.

திருமூலர் போல கவிதையைக் கற்பனை உலகிலிருந்து அறிவுலகிற்குக் கடத்திச் சென்றவர் அவர்! கற்பனையல்ல, கருத்துக்களே அவர் கவிதைகளின் மூலதனம். ஓசை நயத்திலும் கூட அவரிடம் திருமூலர் சந்தத்தை நாம் உணர முடியும்.

உ.வே.சா. நூலகத்தின் தலைவராக இயங்கியவர். அவர் செயற்குழுக் கூட்டங்களை நிகழ்த்தும் பாணி அத்தகைய கூட்டங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுப்பதுபோல் இருக்கும்.

ஒரு வினாடி தவறாமல் சரியான நேரத்திற்கு வருகை தருவார். மற்றவர்களும் அப்படி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

உறுப்பினர்கள் வளவளக்காமல் கருத்தைச் சுருக்கமாகவும் கூர்மையாகவும் தெரிவிக்க வேண்டும் என்பார். ஒருவர் பேசும்போது மற்றொருவர் பேச ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.

நிறைவுரையில் விவாதபூர்வமாக குழு எடுத்த முடிவுகளை பகுத்தும் தொகுத்தும் எடுத்துச் சொல்வார். எடுத்த முடிவுகளை அறிக்கைப் புத்தகத்தில் எழுதச் செய்வார். வந்த உறுப்பினர்கள் அனைவரும் அதன்கீழ் ஒப்புதல் கையெழுத்திட்டார்களா என்பதைச் சரிபார்ப்பார்.

கூட்டத்தை நடத்தி முடித்தபின் அவர் கம்பீரமாக எழுந்து செல்லும்போது ஒரு சிங்கம் நடந்து செல்வதைப் போல் தோன்றும். நிர்வாகம் செய்வதில் அவர் ஒரு சிங்கம்தான் என்பதில் சந்தேகமில்லை.

பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற இந்திய அரசின் உயரிய விருதுகள் பெற்றவர். ஆறு கவிதைத் தொகுப்புகளும் ஏழு கட்டுரைத் தொகுப்புகளும் எழுதியுள்ள இவருக்கு தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் விருதளித்துக் கெளரவித்துள்ளது.

இவரது உயரிய தமிழ்ப் பணிகளுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் கெளரவ முனைவர் பட்டம் அளித்துள்ளது. தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி பற்றி ஓர் ஆவணப் படம் வெளியிடப்பட்டுள்ளது.

தம் அறிவார்ந்த கட்டுரைகளின் இடையே தம் கவிதை வரிகளையே மேற்கோளாக அவர் கொடுப்பதுண்டு. அந்த சந்தர்ப்பங்களில் `என்றான் ஒரு கவிஞன்` என்று குறிப்பிடுவாரே தவிர, அது தம் கவிதைதான் என்பதைத் தெரிவித்துக் கொள்ள மாட்டார்.

தம் கட்டுரைகளின் இடையே தாம் எழுதிய கவிதைகளை அவர் தம் பெயரைச் சொல்லாமல் குறிப்பிட்டாலும், அவரது கட்டுரைகளுக்காகவும் கவிதைகளுக்காகவும் தமிழ் அவர் பெயரை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும்.

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail

Tags:    

Similar News