சிறப்புக் கட்டுரைகள்

முழுமனம் என்பது என்ன?... ஆன்மிக அறிவியல்- 18

Published On 2025-04-18 17:47 IST   |   Update On 2025-04-18 17:47:00 IST
  • மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று மேம்போக்காகக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
  • பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது தான் மனம் ஆகும்.

மனம், மனம் என்று நாம் பொதுவாகக் கூறுகிறோம். சாஸ்திரங்கள் இதனை அந்தக் கரணம் அல்லது அகக் கருவி என்று கூறுகின்றன.

புறத்தில் உள்ள கருவிகள் என்பவை யாவை?

கை, கால், கண், மூக்கு, செவி போன்றவை வெளிப்படையாகத் தெரியும்

வெளிப்புறக் கருவிகள் ஆகும். அவற்றை பயன்படுத்திதான் நாம் பல்வேறு செயல்களையும் செய்து வருகிறோம்.

அந்தக் கரணம் அல்லது அகக் கருவி என்பது யாது?

வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியாத அந்த அந்தக் கரணம் என்பது நான்கு வகையாக அமைந்துள்ளது.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் இவை நான்கும் மொத்தமாக சேர்ந்தால் அதன் பெயர் அந்தக் கரணம் அல்லது முழு மனம் ஆகும்.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று மேம்போக்காகக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

அதனை சற்று சுருக்கமாக பார்ப்போம்.

நாம் வழக்கமாக நடந்து செல்லும் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கிறோம். நமக்கு சுமார் ஐநூறு மீட்டர் தொலைவில் கும்பலாக ஆட்கள் பலர் நின்று கொண்டிருக்கிறார்கள்.

வழக்கமாக அப்படி எவரும் கூடி நிற்பதில்லை. அன்று அது வித்தியாசமாக உள்ளது.

"அருகில் சென்று பார்த்தால் என்ன?" என்று மனம் கூறுகிறது.

ஸ்ரீ பகவத்


அதே மனம் வேறு ஒன்றையும் கூறுகிறது: "அங்கு கூடியிருக்கும் ஆட்களைப் பார்த்தால் ஏதோ விவகாரம் பிடித்தவர்களாகத் தோன்றுகிறது. அங்கே சென்று தேவை இல்லாமல் வம்பை விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டாம். நாம் வேறு தெருவின் வழியாகப் போய்விடலாம்."

இப்படி இரண்டு வகையான எண்ணங்கள் நமக்கு ஏற்படுகின்றன.

இவற்றில் ஏதாவது ஒன்றைத் தான் செயல்படுத்த முடியும்.

பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது தான் மனம் ஆகும்.

அவற்றில் ஏதேனும் ஒன்றை செயல்படுத்துவதற்காக தேர்வு செய்யும் அமைப்புக்குப் பெயர்தான் புத்தி ஆகும்.

அடுத்து மூன்றாவதாக வருவது சித்தம். சித்தம் என்பது என்ன?

சித்தம் என்பது என்ன?

சித்தம் என்பது நமது அடிமனதைக் குறிக்கிறது. நமது இயல்புகள் அனைத்தும் குடியிருக்கும் பகுதிதான் இந்த சித்தம் ஆகும்.

அந்த சித்தம் எவ்வாறு செயல்படுகிறது?

கூடியிருந்தவர்களைப் பார்த்து நம் மனது இரண்டு விதமான ஆலோசனைகளை வழங்கி இருந்தது.

நமது புத்தி முதல் ஆலோசனையை தேர்வு செய்வதாக வைத்துக் கொள்வோம்.

முதலாவது ஆலோசனை என்ன?

கூட்டத்தின் அருகில் சென்று பார்த்தல் தான் முதலாவது ஆலோசனை.

நமக்கு எத்தகைய உணர்வு ஏற்பட்டால் நாம் அங்கே சென்று பார்ப்போம்?

ஆர்வம் என்ற உணர்வு ஏற்பட்டால் நாம் அருகில் சென்று பார்ப்போம்.

ஒரு வேளை நமது இரண்டாவது ஆலோசனையை புத்தி தேர்வு செய்வதாக வைத்துக் கொள்வோம்.

அந்த இரண்டாவது ஆலோசனை எது?

அந்தக் கூட்டத்தை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்பது தான் இரண்டாவது ஆலோசனை.

நமக்கு எத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால் நாம் அப்படி ஒதுங்கி ஓடுவோம்?

பயம் கலந்த உணர்வுகள் ஏதாவது ஏற்பட்டால்

நாம் அவ்வாறு ஒதுங்கி ஓடிவிடுவோம்.

இப்படி ஆர்வம் போன்ற பல்வேறு உணர்வுகளை உருவாக்கி வெளிப்படுத்தும் அமைப்புக்குப் பெயர்தான் சித்தம் ஆகும்.

அடுத்து அகங்காரம் என்றால் என்ன?

சித்தம் உருவாக்கும் எல்லா உணர்வுகளுடைய மொத்தமான பெயர்தான் அகங்காரம் ஆகும்.

அந்த உணர்வுகள் தாம் நமக்கு "நான்"

என்ற அனுபவத்தை ஏற்படுத்துகின்றது.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற இவை அனைத்தும் மொத்தமாக முழு மனம் என அழைக்கப்படுகிறது.

இந்த நான்கில் முதலாவது வரும் மனம் என்பது மட்டும் தனியாக உணர்மனம்

என்று அழைக்கப்படுகிறது.

முழு மனம் 100% சக்தியை உடையது. உணர்மனம் வெறும் 25% சக்தியை மட்டுமே உடையது.

உணர்மனம் மட்டுமே செயல்படும் போது நாம் மிகவும் பலவீனமாக இருப்போம்.

ஆனால் முழு மனம் செயல்படும் போது நாம் பலமுடையவர்களாக இருப்போம்.

முழு மனம் என்பது சித்தம் எனும் நமது அடிமனதை உள்ளடக்கி உள்ளது.

இந்த அடிமனதினுள்ளேதான் நமது மனோசக்திகள் அனைத்தும் மறைந்து கிடக்கின்றன. இந்த அடிமனதின் ஒரு பகுதியாகவே நமது ஆழ்மனதும் உள்ளது. ஆழ்மனது என்பது பிரபஞ்ச ஆற்றல்கள் அனைத்தும் குவிந்து கிடக்கும் ஒரு இரகசிய அமைப்பு ஆகும்.

மொத்தத்தில், முழு மனம் என்பது ஒரு குட்டிக் கடவுளாகவே உள்ளது.

அது மட்டும் அல்லாமல் நமது உணர் மனமும் கூட, முழு மனதின் ஒரு பகுதியாகவே உள்ளது.

நாம் எதனைச் செய்தாலும் உணர் மனதின் மூலமாகவே செய்தாக வேண்டும்.

அந்த உணர் மனமானது தான் மட்டும் தனியாக இருந்தும் செயல்படலாம். அல்லது முழு மனதின் பகுதியாக இருந்தும் செயல்படலாம்.

தனியாக இருந்து செயல்பட்டால் அது தடுமாற்றத்துடன் செயல்படும். அதுவே முழு மனதின் பகுதியாக இருந்து செயல்பட்டால் தடுமாற்றம் இல்லாத ஆற்றலோடு செயல்படும்.

அது ஒரு பெரிய பங்களா. வாயிற் காப்பாளர் மட்டும் வாசலில் நின்று கொண்டிருக்கிறார். வீட்டு உரிமையாளர் வீட்டினுள் இருக்கிறார்.

ஒரு நாள் முரட்டு மனிதர் ஒருவர்

வாசலுக்கு வந்து, முரட்டுக் குரலில் "உங்கள் முதலாளியைப் பார்க்க வேண்டும்"

என்று கூறுகிறார்.

அவர் முரட்டுத்தனமான மீசையும் வைத்திருக்கிறார். இடுப்பில் பெரிய பட்டாக்கத்தி ஒன்றையும் சொருகி வைத்திருக்கிறார்.

அவரை வீட்டுக்குள்ளே அனுப்ப தயக்கமாக இருக்கிறது.

முதலாளியை இன்டர்காமில் அழைத்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்கிறார்.

முதலாளியும், வந்தவரை உள்ளே அனுப்புமாறு கூறுகிறார்.

வாயிற் காப்பாளரும், தயக்கத்துடனேயே அவரை உள்ளே அனுப்புகிறார்.

என்ன நடக்கிறது என்பதை இவரும் எச்சரிக்கையோடு கவனித்துக்

கொண்டிருக்கிறார். வந்திருந்த அந்த முரட்டு மனிதர் மெயின் ஹாலினுள் நுழைந்து அங்கிருந்த முதலாளியைச் சந்திக்கிறார்.

முதலாளிக்கு வந்தனம் செலுத்தியவாறே,

இடுப்பில் சொருகியிருந்த பட்டாக்கத்தியைக் கழற்றி மேஜையின் மீது வைக்கிறார். மீண்டும் ஒருமுறை வணக்கம் செலுத்திவிட்டு வெளியே சென்று விடுகிறார்.

காவலாளி நிம்மதியடைகிறார்.

இங்கே காவலாளியாக வருபவர் தான் உணர்மனம்.

முதலாளியாக வருபவர் தான் முழு மனம்.

உணர்மனம் எப்போதும் தடுமாற்றத்துடனேயே இருக்கும். முடிவெடுக்கத் தெரியாது.

முழு மனதில் தயக்கம் எதுவும் இருக்காது. அது சுலபமாக முடிவுகளை எடுத்துவிடும்.

அந்தக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு கதை.

அக்காலத்தில் சில குடும்பங்கள் திருடுவதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

அப்படி ஒரு குடும்பத்தில், ஒருவர் மட்டும் திருட்டுகளைச் செய்து வந்தார்.

அவரை நம்பி அவரது மனைவியும் மகனும் வாழ்ந்து வந்தார்கள்.

மகனுக்கும் வயதாகிக் கொண்டு வந்தது.

ஒரு நாள் மகன் தகப்பனிடம் கேட்டான்:

"நீ திருடிக்கொண்டு வருவதை வைத்து தான் நாங்கள் எல்லோரும் சாப்பிடுகிறோம்.

உனக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது.

நானும் வளர்ந்து பெரியவனாகி விட்டேன். உனக்குப் பிறகு நான்தானே இந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். திருடுவது எப்படி என்று இதுவரை எனக்கு நீ கற்றுக் கொடுக்காமல் இருக்கிறாயே? திருடுவதை நீ எனக்கு கற்றுக் கொடுக்க வேண்டாமா?"

அந்தத் தகப்பனும், "நீ சொல்லுவதும் சரிதான். இன்று நான் திருடப் போகும் போது நீயும் என்னுடன் சேர்ந்துகொள். நாம் இருவருமாக சேர்ந்து சென்று திருடுவோம். நீயும் திருட்டை கற்றுக் கொள்ளலாம்" என்று கூறினான்.

அன்று இரவு ஊர் அடங்கிய பிறகு இருவரும் திருடுவதற்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

திருடுவதற்காக ஒரு பெரிய மாளிகையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

சாமர்த்தியமாக இருவரும் அந்த மாளிகையினுள் நுழைந்தார்கள்.

ஒரு பெரிய அறையில் விலை உயர்ந்த நகைகளை வைக்கும் ஒரு பெரிய இருப்புப் பெட்டி இருந்தது.

பெரிய திருடன் தன்னிடம் இருந்த கள்ளச் சாவிகளைக் கொண்டு சாமர்த்தியமாக அந்த இரும்புப் பெட்டியைத் திறந்து விட்டான்.

ஒரு நபர் சாதாரணமாக உள்ளே நுழையும் அளவுக்கு அது ஒரு பெரிய இரும்புப் பெட்டி.

"இரும்புப் பெட்டிக்குள் நுழைந்து நமக்கு வேண்டியதை எல்லாம் எடுத்து மூட்டையாகக் கட்டு" என்று தகப்பன் மகனிடம் கூறினான்.

மகனும் அந்த இரும்புப் பெட்டியினுள் நுழைந்தான்.

அந்த இரும்புப் பெட்டியினுள் இருந்த நகைகளையும் பணத்தையும் பார்த்து மலைத்துப் போய்விட்டான். போதும் போதும் என்ற அளவுக்கு நகைகளையும் பணத்தையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டினான்.

அந்நிலையில் அந்தத் தகப்பன் அவனை அப்படியே இரும்புப் பெட்டியினுள் வைத்துப் பூட்டிவிட்டு தான் மட்டும் தப்பிச் சென்றான்.

இரும்புப் பெட்டியினுள் மாட்டிக் கொண்ட மகன் திகைத்துப் போனான்.

"திருடுவதற்கு கற்றுக் கொடுக்கச் சொன்னது

தவறா? என்னைக் கொல்லவேண்டும் என்று

திட்டம் போட்டிருந்தானா?" அவனால்

நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை.

மரண பயத்தினால் வேர்த்து விறுவிறுத்துப் போய்விட்டான்.

சப்தம் போட்டும் எவரையும் உதவிக்குக் கூப்பிட முடியாது.

செய்வதறியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டான்.

பொழுதும் விடிந்துவிட்டது.

அந்த அறையை சுத்தம் செய்ய வேலைக்காரியும் வந்து விட்டாள்.

அடுத்து என்ன நடந்தது?

தொடர்புக்கு: வாட்ஸப் - 8608680532

Tags:    

Similar News