சிறப்புக் கட்டுரைகள்

உசுரே நீ தானே! அத்தியாயம்- 20

Published On 2025-02-27 17:24 IST   |   Update On 2025-02-27 17:24:00 IST
  • தொலையாத சூட்கேஸ்க்கு, பொய்யான புகார் எழுத போன அவர்கள் கண்கள் இந்த நால்வரின் மேலேயே இருந்தது.
  • டேவிட் மற்றும் நண்பர்கள், மேரி அதிர்ச்சியில் உறைந்தார்கள். போன் ஸ்பீக்கரில் இருந்ததால், மேரி கேட்டாள்.

வேட்டைக்காரன் பங்களா...

உள்ளே நுழைந்த டேவிட் மற்றும் நண்பர்கள் அதிர்ந்ததுக்கு காரணம், உள்ளே யாரும் இல்லை. ஆனால், சற்று முன்னர்தான் அந்த இடத்தை காலி செய்ததற்கான அறிகுறிகள் அங்கே தென்பட்டன. சாப்பிட்ட இலைகள், பார்சல் கவர்கள், சிகரெட் துண்டுகள், பழைய சேர், திவ்யாவை கட்டி வெச்சுருந்த கயிறு, இப்படி ஒவ்வொன்றாக பார்த்த டேவிட் கண்களில் சட்டென்று பட்டது ஜன்னலோரம் வைக்கப்பட்டிருந்த துண்டுப் பேப்பரும், அதன் மேலே சின்னதாய் தெரித்த ஒரு பொருளும். ஓடிச்சென்று, அதை எடுத்து பார்த்தான். ஜிமிக்கி! தன் பாக்கெட்டில், ஏற்கனவே காட்டுக்குள் திவ்யாவை தேடும் போது எடுத்து வைத்திருந்த ஜிமிக்கியை எடுத்து, இரண்டையும் அருகருகே வைத்து பார்த்தான். அவன் கண்களில் தண்ணீர் முட்டிக் கொண்டு வர தொண்டை வரள, அந்த ஜிமிக்கிகளையே பார்த்தபடி நின்றான். திவ்யா... என் திவ்யா... இப்படி உன்னை பறி கொடுத்துவிட்டு தேடி தேடி அலையிறேனே... இதோ... ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தா... பார்த்து இருப்பேனே... யார் உன்னை இப்படி பண்றாங்கன்னு தெரியலை.. நீ என் கையில கிடச்சபிறகு அவனை நான் விடமாட்டேன். மனசுக்குள் கோபம், துக்கம், இயலாமை மூன்றும் கலந்துகட்டி, டேவிட்டுக்குள் சுழன்றது.

"மாப்ளே... லட்டர்ல என்னடா எழுதி இருக்கு?" அப்போதுதான், தன் நினைவுக்கு வந்த டேவிட், தன் நண்பர்களுக்கும், மேரிக்கும் கேட்கும்படி, வாய்விட்டு படித்தான்.

"புதுமாப்பிள்ளை டேவிட்!

உன் பொண்டாட்டிய தேடி, நீ இங்க வரேன்னு தெரியும். அதான் அவளோட நான் ஜஸ்ட் எஸ்கேப்! இனி என் அடுத்தடுத்த 'மூவ்'ல நீ ஆடிப் போயிடுவ! வரட்டா!! இப்ப உனக்கு உன் மாமன் கிட்ட இருந்து ஒரு போன் வரும். பேசு. நாம விளையாட்ட தொடரலாம் - நல்லவன்".

அவசரமாக எழுதியது அந்த லட்டரின் கிறுக்கல் எழுத்துகளில் பிரதிபலித்தது. டேவிட்டின் போன் அடித்தது. எடுத்து பார்த்தான். அந்த நல்லவன் சொன்ன மாதிரியே அவன் மாமா ரங்கராஜன்தான் அழைத்தார். ஸ்பீக்கரில் போட்டு "மாமா" என்றான்.

"டேவிட்டு... அந்தபாவிப்பய ஒரு பார்சல்ல திவ்யா தாலிய ரெண்டா வெட்டி அனுப்பி வச்சுருக்கான்..."

டேவிட் மற்றும் நண்பர்கள், மேரி அதிர்ச்சியில் உறைந்தார்கள். போன் ஸ்பீக்கரில் இருந்ததால், மேரி கேட்டாள்.

"மாமா... பார்சல் எப்படி மாமா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற உங்க கைக்கு வந்துச்சு.?"

"அது வந்து.. இங்க ரெண்டு பேரு...". அவர் சொல்லிமுடிக்கும் முன்பே போன் கட் ஆகியது. போலிஸ் ஸ்டேசனில், அந்த தடியன்,, "பெரிசு... போன் பேசினா.. மேட்டர் என்னவோ அத மட்டும்தான் சொல்லணும். புரியுதா...? சரி... சரி.. எல்லாரும் அவங்க... அவங்க போனை சுவிட்ச் ஆப் பண்ணி கொடுங்க.."

 

வேறு வழியின்றி, 'திவ்யாவுக்கு வேறு ஏதாவது ஆகிவிடக்கூடாதே' என்ற பயத்தில், நால்வரும் தங்களது போன்களை, ஆப் பண்ணி, அந்த இருவரிடமும் தந்தனர்.

ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, தன் பாக்கெட்டில் சொருகினான் அந்த இருவரில் ஒருத்தன். போலீஸ் ஸ்டேஷனில், ஒருபுறம் இப்படி ஒரு விசயம் நடந்து கொண்டு இருப்பது தெரியாத ஏட்டு, அவர் இருந்த இருக்கையில் இருந்து குரல் கொடுத்தார்.

"யாருப்பா அந்த ரெண்டு பேரு? சூட்கேஸ் காணோம்னு வந்தது..?"

"நாங்கதான் ஐயா...! - அப்பாவியாய் நடித்தபடி இருவரும் சொல்ல, "வாங்கய்யா...வந்து புகார் எழுதி தாங்க...!"

தொலையாத சூட்கேஸ்க்கு, பொய்யான புகார் எழுத போன அவர்கள் கண்கள் இந்த நால்வரின் மேலேயே இருந்தது.

"பேசிக்கிட்டு இருக்கும்போதே போன் கட் ஆகிடுச்சு.. மறுபடியும் போட்டா, ஸ்விட்ச் ஆப்னு வருதே..."

குழப்பத்தில் இருந்த டேவிட் சொல்ல, "ஒருவேளை சிக்னல் பிராபளமா இருக்கும்..." செந்தில் சமாதானப்படுத்தினான்.

"ஆனா... பார்சல் எப்படி போலீஸ் ஸ்டேஷன் வந்துச்சுன்னு கேட்டப்போ, இங்க ரெண்டு பேரு...ன்னு உங்க அப்பா ஏதோ சொல்ல வரும்போது, லைன் கட் ஆயிடுச்சே. அப்போ ஸ்டேஷனுக்கு, அந்த நல்லவனோட ஆட்கள் ரெண்டு பேரு வந்திருக்காங்க..." மேரி யூகித்தாள்.

"எக்ஸாக்ட்லி... டேவிட்டு... அவங்க யாரோ பப்ளிக் மாதிரி ஸ்டேஷனுக்கு வந்திருக்கணும். அதான் அங்க இருக்கிறது போலீசுக்கு சந்தேகம் வரல.."

தியாகு சொல்ல, நெல்சன் குறுக்கிட்டான்.

"வேணும்னா... நாம ரெண்டு பேரு, திரும்பவும் ஸ்டேஷன் போலாமா?"

"வேண்டாம்... எங்க அப்பா எக்ஸ் மிலிட்டரி. தைரியசாலி... சமாளிச்சுக்குவாரு. முதல்ல எனக்கு ஒரு டவுட்!"

"என்னது...?"- கோரசாய் கேட்டார்கள்.

"நாம திவ்யாவை தேடி, இங்க வரப்போறது ஏற்கனவே அந்த நல்லவனுக்கு தெரிஞ்சு இருக்கு. அதைத்தான் இந்த லட்டர்ல மென்ஷன் பண்ணி இருக்கு. அப்போ அந்த நல்லவனுக்கு தகவல் தர்றது, நம்ம நடவடிக்கைகள் தெரிஞ்ச ஒரு ஆளு! யாரு அவன்...?"

அனைவரும் யோசித்தனர்.

"நமக்கு தகவல் தந்தது கான்ஸ்டபிள் மணி... நாம இங்க வரப்போறது அவரை தவிர அம்மா, அப்பா, மாமா, அத்தை, நீங்க நாலு பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.. அப்புறம் எப்படி நல்லவனுக்கு தகவல் போயிருக்கும்..."

இயக்குநர் A. ெவங்கடேஷ்


 

"ஒருவேளை மாமா பெருமாளுக்கு சொல்லி, பெருமாள் நல்லவனுக்கு சொல்லி... இடத்தை மாத்த சொல்லிட்டு... நம்ம கூடவே சேர்ந்து திவ்யாவை தேடுற மாதிரி நடிக்கிறானோ...?"

டேவிட் கேட்க, அனைவரும் உறைந்தனர்...

"முதல்ல பெருமாளுக்கு மாமா தகவல் கொடுத்தாங்களான்னு, ஒரு போன் போட்டு கேளு..

மேரி டேவிட்டை அவசரப்படுத்தினாள், டேவிட் போன் போட 'சுவிட்ச் ஃஆப்' என வர, மற்ற மூவரின் நம்பருக்கும் போன் போட, 'சுவிட்ச் ஆப்' என்றே வந்தது.

"நாலு பேரு போனுமே சுவிட்ச் ஆப்!"

டேவிட்டின் பதட்டமான குரல் 'ஏதோ தப்பு நடந்திருக்கு' என்று எச்சரிக்க, மேரி, "நான் வேணா ஸ்டேஷன் போயி என்னன்னு பாக்கட்டா.. இப்படி மொத்தமா எல்லாரோட போணும் ஆப் ஆகி இருக்குனா சம்திங் ராங்க்.."

"தனியா போய்டுவியா..."

"பயப்படாதீங்க… நான் நாம வந்த வண்டிய இங்க விட்டுட்டு, ஒரு ஆட்டோ அல்லது காரை புடுச்சு, ஸ்டேஷனுக்கு போயிட்டு, அவங்களையும் கூட்டிட்டு நீங்க எங்க இருக்கீங்களோ அங்கையே வந்துடுறேன்.. நீங்க மட்டும் உங்க நடவடிக்கைகளை எனக்கு அப்பப்போ போன் பண்ணியோ, வாட்ஸ்-அப்லேயோ அப்டேட் பண்ணிக்கிட்டு இருங்க.."

"சரி.. ஜாக்கிரதையா போ…"

டேவிட் அனுமதித்த, அடுத்த நிமிடம் புயல் வேகத்தில் கிளம்பி சென்றாள் மேரி. அவள் போனதும் மீண்டும் அந்த வேட்டைக்காரன் பங்களாவுக்குள் நுழைந்த டேவிட்.. "டேய்.. இங்கே இருக்கிற ஒவ்வொரு இடத்தையும் இன்ச் இன்ச்சா அலசுங்க.. நிச்சயமா ஏதாவது ஒரு 'க்ளூ' கிடைக்கும்..!"

அலச ஆரம்பித்தார்கள்.

பண்ணையார்பட்டி.

தன்னுடைய விசாரணையில் எந்த உருப்படியான தகவலும் கிடைக்காமல் தளர்வாக ஜீப்பில் ஏறும் சமயம், அந்த நான்கு கார்கள் வரிசையாக வந்து நின்றன. முதல் காரிலிருந்து பெருமாள் அவனது ஆட்களும், மற்ற காரிலிருந்து, கட்சிக்காரர்களும் இறங்கினர். ஒரு கணம் இன்ஸ்பெக்டர் அழகர் பதறிவிட்டார்.

"என்ன பெருமாள்.. கூட்டமா வந்து இருக்கீங்க…" அவரது குரலில் கடுமை ஏறியது.

"சார்.. எஸ்.பி - கிட்ட சொல்லிட்டு தான் நாங்களும் திவ்யாவ தேடுற வேலையில் இறங்கலாம்னு வந்து இருக்கோம்...''

"ஒ.. போலீஸ் எங்களால முடியாதத.. நீங்க பு... புலனாய்வு செஞ்சு, அந்த கிட்நாபர்களை புடிச்சு, உங்க தங்கச்சிய மீட்டு எடுத்துருவீங்களா..?" - அழகர் கோபத்தை காட்டாமல், நார்மலாய் பேசுவது போல் பேசினார்.

அதை அறிந்து கொண்ட பெருமாள் பதிலுக்கு சற்றும் சளைக்கா, "காக்கி கூட விசாரணையில, எங்கையாவது பாக்கி விட வாய்ப்பு இருக்குன்னுதான், வெள்ளை வேட்டிகள் எல்லாம் ஒண்ணா கூடி வந்திருக்கோம் அழகர் சார்…" என்று சொல்லிமுடிக்கவும், " சரி.. நான் இப்ப என்ன பண்ணனும். சொல்லுங்க பெருமாள்?" அழகர் கேட்டார்.

"இந்த பண்ணையார்பட்டி கிராமத்துல விசாரிச்சீங்களே என்ன சார் முன்னேற்றம்?" 'ஒண்ணும் இல்ல.. புதுசா யாரையும் ஊருக்குள்ள பாக்கலை. வித்தியாசமா எந்த காரும் போகலைன்னுதான் எல்லாவனும் சொல்றான்... வேணும்னா நீங்க கூட்டமா மறுபடியும் விசாரிச்சு பாருங்க…"

"தேவையில்லாம எந்த ஈகோவும் பாக்காம நான் சொல்றத கேட்குறீங்களா.." பெருமாள் கேட்டான்.

"சொல்லுங்க... அதையும் கேட்குறேன்...!" அலட்சியமாய் சொன்னபடி, சிகரெட்டை பற்ற வைத்தார் அழகர்.

"சார்.. திவ்யாவுக்கு கடத்துனவனால உயிருக்கு எத்த சேதமும் வராது. அவன் பேச்சிலே அது தெரியுது.. இதுவரைக்கும் அவன் பணம் எதுவும் கேட்கல…"

"சரி... மேல சொல்லுங்க..."

"ஆனா, அவன் என்ன நோக்கத்துக்காக அவளை கடத்துனான்னு இதுவரைக்கும் தெரியல. இதுல ஒருத்தன் இல்ல.. ஒரு கும்பலே பின்னாடி இருக்கும்னு எனக்கு தோணுது..."

"எனக்கு ஒண்ணு தோணுது...சொல்லட்டா..."சற்று நக்கலாய் கேட்டார் அழகர்.

(தொடரும்)  E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

Tags:    

Similar News