- நமது தேவைகளே நமது விருப்பங்களை நமக்கு வடிவமைத்துத் தருகின்றன.
- நமது அன்றாட வாழ்வியலே நமது அவ்வப்போதைய மனவிருப்பங்களைச் சார்ந்ததாகவே அமைகின்றது.
ஆசைக்கு அளவு உண்டா? அதற்கும் ஓர் அமைதி உண்டா? என்பதை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
உடம்பின் மூலை முடுக்கெல்லாம், நாடி நரம்புகளிலெல்லாம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன ஆசையின் குரல்கள். நமது ஒவ்வொரு அணுவளவு அசைவுக்கும் ஆசைகளே காரணங்களாக இருக்குமென்றால் நாம் எப்படி ஆசையைச் சாந்தப்படுத்துவது? அமைதியில் ஆழவைப்பது?.
நமது ஆசையே நமது எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று வள்ளுவர் முதலான ஞானிகளும் அறிஞர்களும் தெள்ளத் தெளிவாகவே எடுத்துரைத்துள்ளனர்.
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்"
எனும் வள்ளுவக் குறள், எந்தெந்தப் பொருள்களின் மீதும் செயல்களின் மீதும் நமக்கு ஆசைகள் இல்லையோ அந்தந்தப் பொருள்களாலும் செயல்களாலும் நமக்குத் துன்பங்கள் இல்லை என்று அனுபவ வார்த்தை பகர்கிறது. துன்பமில்லாத வாழ்க்கை வாழவேண்டுமானால், கடவுளின் திருவடிகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆன்மீகம், "ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்!" என்கிறது. எல்லா ஆசைகளையும் அறுப்பதற்கு, கடவுள்மீது கொண்டுள்ள ஆசையையும் அறுத்து எறியுங்கள் என்பது இதற்குப் பொருள்.
ஆசையில்லாத, பற்றற்ற துறவு வாழ்க்கை என்பது ஒருகாலத்தில் உலக வாழ்வை வெறுத்து வனங்களுக்குச் சென்று தவமியற்றுகின்ற துறவிகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய வாழ்வியல் போக்குகளைக் கணிக்கும்போது ஆசையற்ற வாழ்வே அமைதியான இல்லற வாழ்வுக்கும் ஏற்றதாக நினைக்கப் படுகிறது. இன்று உலகமெங்கும் பரபரப்பாகப் பயிற்றுவிக்கப்படுகிற யோக முறைகளும், தியான நிலைகளும் புதுமையான வழிகளில் இதனையே வலியுறுத்தவும் செய்கின்றன.
நமது வாழ்வியல் அசைவுகளின் மற்றொரு பக்கத்தை உற்றுப் பார்த்தால், ஆசைகளே நம்மை வழிநடத்துகின்றன என்பதையும் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். அன்றாடம் நமது தேவைகளும் ஆசைகளும் புதிது புதிதாகப் பெருகிக்கொண்டே செல்லச்செல்லப், புதுமையான கண்டுபிடிப்புகளும் வசதி வாய்ப்புகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன.' தேவைகளே கண்டுபிடிப்புகளின் தாய்' என்பது அழகான ஓர் ஆங்கிலப் பழமொழி.
நமது தேவைகளே நமது விருப்பங்களை நமக்கு வடிவமைத்துத் தருகின்றன. விருப்பங்கள் பெருகப் பெருக அவை ஆசைகளாக உருமாறத் தொடங்குகின்றன. ஆசைகள் நமக்குத் துன்பங்களைத் தரப் போகின்றனவா?
இல்லை இன்பங்களை வாரி வழங்கப் போகின்றனவா? என்பது நாம் நமது ஆசைகளைக் கையாளும் திறமைகளைப் பொறுத்தே அமையும். நமது அன்றாட வாழ்வியலே நமது அவ்வப்போதைய மனவிருப்பங்களைச் சார்ந்ததாகவே அமைகின்றது.
சுந்தர ஆவுடையப்பன்
பசி என்பது நம் உடலின் இயல்பான உணர்வு; பசிக்கிற நேரத்தில் ஊறுவிளைவிக்காத சமைத்த உணவு எதையாவது வயிற்றுக்குள் அனுப்பிவிட்டாலே போதும்; பசி அடங்கிவிடும். ஆனாலும் உணவு வயிற்றைச் சென்று அடைவதற்குமுன் அது வாய்க்குள் புக வேண்டும்; புகுந்த உணவை, உமிழ்நீரோடு பிசைந்து, பற்களால் அரைத்து, நாவின் சுவை நரம்புகளால் சுவைத்து உள்ளே உணவுக்குழாய் வழியே அனுப்பிவைக்க வேண்டும். அப்போது தான் அது உரிய காலத்தில் சீரணமாகும்.
உணவென்று எதைப் பார்த்தாலும் வாயில் உமிழ்நீர் சுரந்து விடுவதில்லை; அந்த நேரத்தில் எதைச் சாப்பிடவேண்டும் என்று முதலில் மனம் தீர்மானிக்க வேண்டும்; அது தீர்மானிப்பதற்கு வசதியாக ஏற்கனவே சுவைத்துப்பார்த்த அனுபவத்தை நாக்கு மனத்திற்குச் சொல்ல வேண்டும்; உணவின் நிறம் மற்றும் நறுமணம் நமது கண்களையும் நாசியையும் சுண்டி இழுப்பதாக இருக்க வேண்டும். அப்படியானால் ஒரு கவள உணவை நாம் உரிய முறையில் உண்பதற்கு ஐந்து புலன்களும் மனமும் ஒத்துழைப்பு நல்குவதாக அமைய வேண்டும். இந்த இடத்தில் தான் விருப்பம் என்பது அரும்ப ஆரம்பிக்கிறது.
உணவு விடுதிக்குள் பசியோடு நுழைந்தாலும், வயிற்றுக்கு இலகுவான நான்கு இட்லிகளை மட்டுமே சாப்பிடவேண்டும் என்று தீர்மானத்தோடு நுழைந்தாலும், மேஜையின் எதிரே ஒருவர் பரோட்டாவையும் சால்னாவையும் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சுவையான காட்சியைப் பார்த்தவுடன், நமது விருப்பத்தை மாற்றி நாமும் பரோட்டாவுக்குத் தாவ நேரிட்டுவிடுகிறது. இது உரிய முறையில் ஒன்றிரண்டு பரோட்டாவோடு நின்று, சீரணமாகிவிட்டால் துன்பமில்லை; ஆனால் விருப்பம் அளவிறந்த ஆசையாகி, எண்ணிக்கை பன்மடங்காகி, சீரணக் கோளாறாகி அடுத்த ஒருவாரத்திற்கு எதுவுமே சாப்பிடமுடியாமல் அவதிப்பட நேர்ந்தால், அதுவே ஆசைதருகிற துன்பமாகிப் போகும்.
மனித விருப்பங்கள் ஆசைகளாகிப் பெருகுவது பெரும்பாலும் உணவு, உடை, உறையுள் எனப்படும் வீடு ஆகிய மூன்று பொருண்மைகளில்தான். அளவான உணவு மருந்தாகி உடம்பைப் பேணிக் காக்கும்; அளவுக்கு மீறிய உட்கொள்கை உணவையே நோய்தரும் மூலங்களாக்கி அல்லல்படுத்தும்; சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம், மாரடைப்பு, உப்பு போன்றவை உணவின் மீது மனிதன் கொண்டுள்ள அளவிறந்த ஆசையால் விளைந்த துன்ப நோய்கள்; மற்ற நோய்களும் இணைநோய்களாக, உடம்பில் அவ்வப்போது வந்து இருக்கை அமைத்துக்கொள்ளும். உடை என்பது மானம் மறைப்பதற்கும் மரியாதை பேணுவதற்கும் உடுத்தப்படுவது; ஆனால் அளவிறந்த ஆசையால் உருவாகும் உடைமோகம், பொருள் விரயத்தையும், நாகரிக அவலத்தையும் ஏற்படுத்திப் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு அழைத்துச் சென்று விடுகின்றது.
அதனால் தான் மனிதன், உணவு உடை விஷயத்தில் அளவோடு வாழ்ந்து ஆசைகளைக் கட்டுப்படுத்திச் செல்வத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நக்கீரர், "உண்பது நாழி உடுப்பவை இரண்டே! பிறவும் எல்லாம் ஓரொக்குமே!" என்கிறார். உறையுள் எனப்படும் வீடு சார்ந்த வீட்டு உபயோகப் பொருள்களின் மீது மனிதனுக்கு இருக்கும் ஆசை எல்லையற்று வளர்ந்துகொண்டே போவதாகும். ராஜபோகம் என்பது ஒருநாட்டில் ராஜா மட்டுமே வாழுகிற ஆடம்பர வாழ்க்கை; ஆனால் இன்றோ மக்கள் அனைவரும் ராஜா போலவே ராஜபோகமாக வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்; மக்களாட்சிக் காலத்தில் எல்லோரும் ஆசைப்படுவதில் தப்பில்லை; ஆசைக்கேற்ற நேர்மையான உழைப்பும் சம்பாத்தியமும் அமையாத பட்சத்தில், உழைப்புக்கும் சம்பாத்தியத்திற்கும் ஏற்ற வகையில் நேர்மையான ஆசைகளை அளவாக அமைத்துக் கொள்வதில் தவறே இல்லை.
ஒரு நாடு வளமிக்க நாடாகத் திகழ்ந்தது; நாட்டை ஆண்டுவந்த அரசருக்குக் குழந்தைகள் கிடையாது; எனவே அவருக்குப்பின் நாட்டில் மன்னராகப் பொறுப்பேற்கப் போவது யார்? என்பது தெரியாமலேயே அரசாங்கம் நடந்து வந்தது. ஒரு நாள் மன்னரும் மரணமடைந்தார்; உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறுநாள் அமைச்சரவை கூடி அடுத்த மன்னரை எப்படித் தேர்ந்தெடுப்பது என்கிற ஆலோசனை நடத்தப்பட்டது. வாரிசு இல்லாத நாட்டில் அடுத்த மன்னரைத் தேர்ந்தெடுக்கும் பழைய முறையையே இங்கும் கடைப்பிடிப்பது என்று அமைச்சரவையில் முடிவானது.
அதன்படி நாட்டுமக்கள் அனைவரையும் ராஜபாட்டைக்கு வரச்சொல்லி, நாட்டின் பட்டத்து யானையின் துதிக்கையில் மாலையைக் கொடுத்து உலா வரச் செய்தார்கள். நடந்துவரும் பாதையில் யார்கழுத்தில் யானை மாலையைப் போடுகிறதோ அவரையே மன்னராக ஏற்றுக்கொண்டு பட்டம் சூட்டி ஆட்சிபுரிய வைப்பதெனத் திட்டம். ராஜவீதியின் இருபுறமும் நின்றிருந்த மக்களைப் பார்த்த படியே கையில் மாலையுடன் யானை நடந்து வந்தது. அந்தக் கூட்டத்தில், நடக்கும் நிகழ்ச்சியை வேடிக்கை பார்ப்பதற்காகக் காட்டிலிருந்து ஒரு துறவியும் வந்து நின்றிருந்தார். யாரும் எதிர்பாராத வகையில், யானை தனது துதிக்கையிலிருந்த மலர்மாலையை அங்கு நின்றிருந்த துறவியின் கழுத்தில் போட்டுவிட்டது.
காவலர்கள் புடைசூழ அமைச்சர்கள் வந்து துறவியை வணங்கி, ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தார்கள். 'நான் துறவி! நமக்கு இதுவெல்லாம் ஒத்து வராது! என்னை விட்டுவிடுங்கள்!' என்று எவ்வளவோ வாதாடிப்பார்த்தும், அமைச்சர்கள் விடுவதாயில்லை; "இது தெய்வத்தின் கட்டளை" என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று துறவிக்குப் பட்டம் சூட்டிவிட்டார்கள். துறவியோ தனது இயல்பான குணத்தை மாற்றிக் கொள்ளாமல், ஆசையோ பற்று, பாசமோ எதுவுமின்றி ஆட்சியை நடத்தி வந்தார். நாடும் நல்ல வளத்தோடு செழித்திருந்தது.
'துறவி ஆளும் நாடு செழிப்போடு இருப்பதா?' என்று பொறாமைப்பட்ட பக்கத்து நாட்டு அரசன், சொல்லாமல் கொள்ளாமல் நாட்டைக் கைப்பற்றப் படையெடுத்து வந்து விட்டான். துறவிநாட்டின் தளபதியும் அமைச்சர்களும் அரசனான துறவியிடம் வந்து, "கட்டளயிடுங்கள்! நொடிநேரத்தில் போர்நடத்தி வீழ்த்தி , எதிரிநாட்டு மன்னனைத் தங்கள் காலடியில் பணிய வைக்கிறோம்!" என்று அனுமதி கேட்டார்கள். துறவி ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்,"போர் வேண்டாம்! எனக்கு இருக்கிற நாட்டை நடத்துவதே சிரமமாக இருக்கிறது. இதில் புதிய நாட்டைப் பிடிக்கும் ஆசையே இல்லை; எதிர்க்காதீர்கள்; எதிரிப்படை உள்ளே வந்து நாட்டை எடுத்துக்கொண்டு போகட்டும்!" என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார்.
எதிரி நாட்டு மன்னன் நேராகத் துறவியிடம் வந்தான், " வாருங்கள் சண்டைக்கு!" நேருக்கு நேராக அழைத்தான். துறவி கூறினார், " நான் துறவி!, உலக நன்மையில் மட்டுமே அக்கறை உள்ளவன்!; எனக்குச் சண்டையில் விருப்பமில்லை; உன் நாடு மட்டுமல்ல; இந்தநாட்டையும் சேர்த்துத் தருகிறேன். தாராளமாக எடுத்துச்செல்!. நான் நிம்மதியாகக் காட்டிற்குச் செல்கிறேன்!. நீ உனது ஆசை நிறைவேறிய நிம்மதியில் இந்த நாட்டையும் சேர்த்து ஆண்டு கொள்! " என்றார். துறவியின் பேச்சில் மனம் மாறிய அரசன், " துறவியர் பெருமானே! நானும் மாறிவிட்டேன்!. உங்கள் நாடு எனக்கு வேண்டாம். அதோடு இதுவரை நான் ஆண்ட என்னுடைய நாட்டையும் உங்களிடமே ஒப்படைக்கிறேன்; என்மக்களும் இனி உங்கள் ஆட்சியில் நிம்மதியாக இருக்கட்டும்; காட்டிற்குச் சென்று துறவியாகி நானும் நிம்மதியாக இருக்கிறேன்" என்று கிளம்பிவிட்டான்.
ஆசை வளர்ந்துகொண்டே போகும்! துன்பங்களையும் வளர்த்துக்கொண்டே போகும்; ஆசையின்மை நிம்மதியைப் பெருக்கும்; இல்லாமையை இல்லாமையாகக் கருதாத மன நிறைவை அளிக்கும்.
விருப்பங்களும் ஆசைகளும் உலகியல் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் செயலூக்கிகள். ஆனால் அவற்றை அளவோடு எல்லையறிந்து வைத்துக்கொண்டால் எல்லையற்ற மகிழ்ச்சிதான். புள்ளிகள் இல்லாமல் கோலங்கள் இல்லை; ஆனால் புள்ளிகளே கோலங்களும் இல்லை. ஆசைகள் இல்லாமல் வாழ்வியல் இல்லை; ஆனால் ஆசைகள் மட்டுமே வாழ்வியலும் இல்லை. ஆசைகளை அமைதிப்படுத்துவோம்.
தொடர்புக்கு 9443190098