null
- ஆன்மா என்பது இகத்தில் உள்ளது. இந்தக் கணத்தில் உள்ளது.
- நம்மைப் பொறுத்தவரையில் நமது உடலாகவும், மனதாகவும் வெளிப்பட்டுள்ளது.
ஆன்மிகம் என்றால் என்ன?
ஆன்மா + இகம் = ஆன்மிகம்.
இகம் என்றால், இங்கேயே இப்போதே என்று பொருள்.
இங்கேயே இப்போதே என்றால் என்ன?
நேற்று என்பது, நடந்து முடிந்து போன ஒன்று. இப்போது, இந்த கணத்தில் அது இல்லை. அது போல் நாளை என்பதும் இந்த கணத்தில் இல்லாத ஒன்று.
நடந்து கொண்டிருப்பது மட்டுமே நிஜமாக உள்ளது; நிகழ்காலமாக உள்ளது.
ஆன்மா என்பது இகத்தில் உள்ளது. இந்தக் கணத்தில் உள்ளது.
அந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு கதை.
ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர் . அந்த கணவனுக்கு தொழில் நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அந்த வெளியூர் என்பது அந்த மனைவியுடைய சொந்த ஊர்.
அதனால் அவள் கணவனிடம், " நீங்கள் எங்கள் ஊருக்குப் போகிறீர்கள் . அப்படியே அங்கே இருக்கும் எங்கள் வீட்டிற்கும் சென்று வாருங்கள் " என்று கேட்டுக் கொண்டாள்.
அது போல் அந்த ஊருக்குச் சென்ற கணவனும், தனது மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு மாலையில் சென்றான் . அவன் போகும் போது அவனுக்கு நல்ல பசி. மாமியார் வீட்டில் சாப்பிடலாம் என்று தான் அவன் போயிருந்தான்.
அது போல் அவனை தடபுடலாக வரவேற்று உபசரித்தார்கள்.
மாமியாரும் அவனிடம்,
" உங்களுக்குப் பிடித்தமானதைக் கூறினால் அந்த சாப்பாட்டை தயார் செய்து விடுவோம் " எனப் பணிவாகக் கேட்டாள்.
மருமகனல்லவா அவன். அவனும் பெருந்தன்மையாக, "உங்களுக்காக என்ன செய்து வைத்திருக்கிறீர்களோ அதுவே எனக்குப் போதும்" என்று கூறினான்.
மாமியார் வெட்கப்பட்டவாறே, "இன்று ஏகாதசி அல்லவா? அதனால் எங்களுக்கு இன்று உபவாசம் மட்டும் தான். உங்களுக்கு பிடித்ததைச் சொன்னால் அதைச் செய்து கொடுக்கிறோம்" என்று கூறினாள்.
உபவாசம் என்றால் என்ன என்பது அவனுக்குத் தெரியாது. வாசனையான ஏதோ ஒரு வகையான உணவு என அவன் எண்ணிக் கொண்டான். உண்மையில் உபவாசம் என்றால் உண்ணாவிரதம் என்று பொருள்.
உபவாசத்தையுந்தான் இன்று சாப்பிட்டு பார்ப்போமே என்று நினைத்து அவன் "எனக்கும் உபவாசமே போதும்" என்று தீர்மானமாகக் கூறி விட்டான்.
அந்த குடும்பத்தில் உள்ளவர்கள், உபவாசத்தின் போது இடித்த எள் உருண்டை மட்டும் எடுத்துக் கொள்வதுண்டு.
" எள் உருண்டை சாப்பிடுகிறீர்களா?" என்று கேட்டார்கள்.
ஸ்ரீ பகவத்
அதையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டான்.
உரலில் போட்டு எள்ளை இடித்தார்கள் . உபவாசத்தைதான் தயார் செய்கிறார்கள் என அவன் எண்ணிக் கொண்டான்.
வீட்டில் உள்ளவர்கள் எள் உருண்டையை சாப்பிட்டு விட்டுத் தூங்கி விட்டார்கள்.
உபவாசத்தைக் கொண்டு வருவார்கள் என காத்திருந்த அவன் அலுத்துப் போய்விட்டான். வயிற்றுப் பசி வேறு கண்களைக் கட்டியது.
எழுந்து சென்று பார்த்தால் அனைவரும் நன்கு தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஏதோ உரலில் போட்டு இடித்தார்களே என்று எண்ணிய வாறே இருட்டுக்குள் உரலைத் தேடிக் கண்டுபிடித்தான்.
என்னதான் இடித்தார்கள் என்று தனக்குள் கேட்டவாறே உரலுக்குள் தலையை விட்டுத் தேடவும், அவனுடைய தலை உரலுக்குள் மாட்டிக் கொண்டதாக இந்தக் கதை தொடர்கிறது.
அவனுடைய கற்பனையில் பட்டினி கிடப்பது,
விருந்து சாப்பிடுவதாக அமைந்து விட்டது.
இவ்வாறுதான் ஆன்மாவின் மீது அதீதமான கற்பனைகளையெல்லாம் இணைத்து,
உண்மையை தவற விட்டு விடுகிறோம்.
ஆன்மா என்பது எளிமையானது; இயற்கையானது. தனிப்பட்ட ஒரு நபரைப் பொறுத்தவரை, அவரிடம் உள்ள உயிர்த்தன்மையை, ஆன்மா அல்லது ஜீவான்மா என்று பெயரிட்டு ஆன்மிக சாஸ்திரங்கள் விளக்கம் கொடுக்கின்றன.
பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கும் உயிர்த்தன்மையை பரமாத்மா அல்லது பிரம்மம் எனப் பெயரிட்டு சாஸ்திரங்கள் அழைக்கின்றன.
ஒரே ஆகாயம் எல்லா இடங்களிலும் ஊடுருவி இருப்பதைப் போல், ஒரே பிரம்மமே பல வகைப்பட்ட ஆன்மாக்களாக தோற்றமளிக்கின்றது.
பிரம்மம் என்பது ஒரு ஜடப் பொருள் அல்ல. பிரம்மம் மட்டுமே உயிர்ப் பொருள்.
பிரம்மத்தை நாம் அறியப் போகிறோமா?
பிரம்மத்தையோ, ஆன்மாவையோ நாம் அறியப் போவது இல்லை.
அவற்றை அறியவும் முடியாது.
"பிரக்ஞானம் பிரம்மம்" என்று வேதாந்த சாத்திரங்கள் கூறுகின்றன.
பிரம்மம் என்பது பிரக்ஞை வடிவில் ,
உணரும் தன்மையாக இருக்கிறது என்பது தான் இதன் பொருள்.
உணரும் தன்மையுடைய பிரம்மம் தான்
நம்மைப் பொறுத்தவரையில் நமது உடலாகவும், மனதாகவும் வெளிப்பட்டுள்ளது. அதனால் நமது உடலும் மனமும் உணர்வுடன் இருக்கிறது. நாம் நமது எல்லா செயல்களையும் நமது உடலின் மூலமாக மட்டுமே நிறைவேற்ற முடியும்.
நாம் செய்ய வேண்டிய செயல்களை முறைமைப் படுத்தி செயல்படுத்துவதற்கு உதவியாக அமைந்ததுதான் நமது மனம்.
உடலின் செயல்பாட்டிற்கு மட்டுமே நமது மனம் தேவையாக உள்ளது. நமக்கு சொந்தமாக நகரத்தில் ஒரு பெரிய வீடு ஒன்று இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த வீட்டை ஒருவரிடம் வாடகைக்கு விட்டு விடுகிறோம்.
வாடகைதார் வாடகை தராமலும் , வீட்டைக் காலி செய்து கொடுக்காமலும் இருந்து வருகிறார்.
அவரை எப்படி வீட்டில் இருந்து வெளியேற்றுவது என்பது நமக்குத் தெரியவில்லை.
அவரை வெளியேற்றித் தருகிறேன் என்று சொல்லி நண்பர் ஒருவர் உதவிக்கு வருகிறார்.
வாடகைதார் குடியிருக்கும் வீட்டோடு சேர்ந்த அவுட் அவுசில் தங்கிக் கொள்கிறார்.
நமது அவுட் அவுசில் தங்கிக் கொண்ட நமது நண்பர் சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த வாடகைதாரரை வெற்றிகரமாக வெளியேற்றி அனுப்பி விடுகிறார்.
வாடகைதாரரை வெளியேற்றிய நமது நண்பர், வாடகைதாரர் தங்கியிருந்த வீட்டிலும் குடியேறி அந்த வீட்டை ஆக்கிரமித்து விடுகிறார்.
அந்த வீட்டில் இருந்து நமது நண்பரை வெளியேற்றுவது எவ்வாறு? இவ்வாறு தான் - உடலுக்கு உதவி செய்ய வந்த மனமானது, தனக்கென ஒரு தனி அரசாங்கத்தை நடத்த ஆரம்பித்து விட்டது.
மனம் மனம் என்று கூறுகிறோம்.
இந்த மனம் என்பது என்ன?
புராணக் கதைகள் நிறைய உள்ளன. பின்வரும் இந்தக் கதையை ஒரு வேளை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.
தேவர்கள், அசுரர்கள் என இரு தரப்பினர் ஒருவருக்கு ஒருவர் எப்போதும் சண்டை போட்டு வருவதாகவும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
ஒரு முறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடந்துகொண்டிருந்தது.
அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் அசுரர்களுக்கு உதவுவதற்காக யாகம் ஒன்றைச் செய்தார்.
அந்த யாக குண்டத்தில் இருந்து பயங்கரமான பூதம் ஒன்று வெளியிடப்பட்டது.
அந்த பூதத்தை அவர்கள் தேவர்களின் மீது ஏவினர். அந்த பூதமும் தேவர்களை அடித்து துவம்சம் செய்தது. பூதத்தை எதிர்க்க முடியாமல் தேவர்கள் தடுமாறினர்.
அந்த பூதத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்று கேட்டு, தேவர்கள் விஷ்ணு பகவானின் உதவியை நாடினார்கள்.
விஷ்ணு பகவானும், "உங்களால் அந்த பூதத்தை சண்டையிட்டு ஜெயிக்க முடியாது.
ஏனெனில் அந்த பூதத்துக்கு மனம் என்ற எதுவுமே கிடையாது . அதனால் அது உங்கள் அனைவரையும் விட சக்தி வாய்ந்தது...
"ஆனால் நீங்கள் ஒன்று செய்யுங்கள். அந்த பூதத்தை எதிர்த்து சண்டையிடுவது போல் சண்டையிட்டு தப்பி ஓடிவந்து விடுங்கள். உண்மையாக சண்டை போட வேண்டாம். இப்படி மூன்று முறை தப்பி ஓடிவந்து விடுங்கள்" என்று கூறி தேவர்களை அனுப்பினார்.
அதன்படி தேவர்களும் மூன்று முறை அந்த பூதத்தை எதிர்த்து சண்டையிடுவது போல் சண்டையிட்டு தப்பி ஓடி வந்தனர்.
அடுத்து என்ன செய்ய வேண்டுமென விஷ்ணு பகவானிடம் ஆலோசனை கேட்டனர்.
பகவானும், "இனி நீங்கள் உண்மையிலேயே அந்த பூதத்தை எதிர்த்து சண்டையிடலாம்"
என்று அனுமதி வழங்கினார்.
அதன்படியே தேவர்களும் பூதத்தை எதிர்த்து சண்டையிட்டு அந்த பூதத்தை அழித்தனர்.
இங்கு என்ன நிகழ்ந்துள்ளது?
தேவர்கள் அந்த பூதத்தை எதிர்த்து ஒவ்வொரு முறை சண்டையிடுவது போல் சண்டையிட்டதும், அது ஒவ்வொன்றும் நினைவுக் குறிப்பாக -- மெமரியாக அந்த பூதத்தினுள் பதிவாகி விட்டது.
நினைவுக் குறிப்புகளின் காரணமாக அந்த பூதத்துக்கும், மனம் உருவாகி விட்டது.
மனம் உருவாகி விட்ட நிலையில் அந்த பூதமும் பலத்தை இழந்து விட்டது . தேவர்களும் சுலபமாக அந்த பூதத்தை அழித்துவிட்டனர்.
மனம் எப்படி உருவாகின்றது என்ற விஞ்ஞானம், புராண காலத்திலேயே விவரிக்கப்பட்டுவிட்டது.
நான் இருக்கிறேன் என்ற உணர்வு நம் அனைவருக்கும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இதைத் தான் அறியும் தன்மை அல்லது பிரக்ஞை என்று கூறுகிறோம்.
இந்த உணரும் தன்மையானது,
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து புலன்களின் மூலமாக வெளிப்படும்போது ஐந்து விதமான புலன் உணர்வுகளாக வெளிப்படுகிறது.
இந்த உணரும் தன்மையே , மெமரி எனப்படும் நமது நினைவுக் குறிப்புகள் வழியாக வெளிப்படும்போது அதுவே மனம் என்ற பெயரில் வெளிப்படுகிறது.
நினைவுக் குறிப்புகள் வாயிலாக ஏதாவது ஒன்று எப்போதுமே வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் காரணத்தினால், மனம் என ஒன்று நிரந்தரமாக நமக்கு இருந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.
தொடர்புக்கு - sribagavathji@gmail.com