சிறப்புக் கட்டுரைகள்

மனிதரை ஆட்டிப்படைக்கும் பணம்!

Published On 2024-11-03 23:15 IST   |   Update On 2024-11-03 23:15:00 IST
  • மனிதர்களின் மனநிலை தொடங்கி வாழ்நிலை வரை பெரும்பாடு படுத்தி வருகிறது.
  • நம்முடைய உழைப்பிற்கு நமக்குக் கிடைக்கவேண்டியது சரியாகக் கிடைத்தாலே போதுமானதுதான்.

பணத்தின் அருமை பெருமைகளை அறிந்து கொள்வதில் ஆர்வத்தோடு காத்திருக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்.

பணம் தொடர்பான பழமொழிகள் பணம் தொடங்கிய காலம்தொட்டே நம் தமிழில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. "பணம் பத்தும் செய்யும்!" என்பதில் தொடங்கி, "பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்" என்பது வரை பழமொழிகள் நிறைந்தே கிடக்கின்றன. நமக்குத் தேவைப்படுகிற பொருள்களை, நம்மிடம் இருக்கும் பொருள்களைக் கொடுத்து, மாற்றிப் பெற்றுக்கொள்ளும் 'பண்டமாற்று முறை' முன்னொரு காலத்தில் இருந்தது. நம்மிடமிருக்கும் பொருள்களைக் கொடுத்துத் தான் பெறமுடியும் என்கிற அவசியநிலை இருந்த காலத்தில், அத்தியாவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்தி வந்தோம். உணவு, உடை, உறைவிடம் ஆகிய அத்தியாவசியங்கள் மூன்றினுள், அவ்வப்போது முக்கியத் தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்துப், பண்டமாற்று முறையில் பொருள்களைப் பெற்று வந்தோம்.

ஆனால், பணப்புழக்கம் பெருகிவிட்ட காலங்களில், எது அவசியம்? என்பதை மறந்து, எதுவசதி? என்பதில் லயித்து அனாவசியங்களிலும், ஆடம்பரங்களிலும் பணத்தைத் தண்ணீராய்ச் செலவழித்து வருகிறோம். அதிலும் சொந்தமாகச் சம்பாதிக்கும் பணம் போதவில்லை என்றால், அடுத்தவரிடமிருந்து பணத்தைக் கடன் வாங்கியாவது, தவணை முறைகளிலாவது பொருள்களைப் பெற்று நுகர்ந்தே ஆகவேண்டும் என்கிற வெறியோடு மனிதன் நுகர்வு மோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறான். இங்கே பணம் என்பது பொதுப்பொருள் ஆகிவிட்டபடியால், தன்னுடைய பணத்தைக் கொண்டுதான், தனக்குரிய பொருள்களை வாங்க வேண்டும் என்பது மாறி, யார் பணத்தைக் கொண்டும், தனக்குரிய பொருள்களைப் பெற்று அனுபவிக்கும் ஆசை பெருகிவிட்டது.

பணம் என்பது ஒரு பொருளையோ அல்லது ஒரு சேவையையோ அடுத்தவரிட மிருந்து பெற்றுக்கொள்வதற்கு விலையாகத் தரப்படுகிற ஒரு கருவி அல்லது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, தாள் அல்லது நாணயம் ஆகும். பண்டமாற்று முறை மாறிய பின்னர், மக்கள் மதிப்புமிக்க தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்களைப் பணமாகத் தந்து பொருள்களையும் சேவைகளையும் பெற்றுவந்தனர். அதன்பிறகு வெற்றுத் தாள்களிலும், உலோகக் காசுகளிலும், பணத்தின் மதிப்புகளை அச்சடித்து, அவற்றைப் பணமாக ஆட்சி செய்வோரின் சான்றொப்பத்துடன் புழக்கத்தில் விட்டனர். அரசாங்க முத்திரை பெற்றவுடன் பணம் பல்வேறு மதிப்புகளை உடையதாக மாறத் தொடங்கி விட்டது.

இன்று கத்தரிக்காய் பயிரிடுபவர் தொடங்கி, கார் உற்பத்தி செய்பவர் வரை எல்லாரிடத்திலும் பணம் இருக்கிறது. அவரவர் உற்பத்தி செய்யும் பொருள்களைக் கொண்டு பண்டமாற்றுச் செய்து வாழ்க்கைப் பிழைப்பை நடத்திக்கொள்ளலாம் என்கிற நிலை தற்போது மாறிவிட்டது. கத்தரிக்காய் விவசாயியிடம் கார் முதலாளி தன்னுடைய காரைக்கொடுத்து, தனக்கு வேண்டிய வீட்டு உபயோகப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள முடியாது. அதேபோல ஒரு கார் வியாபாரியிடம் தன்னுடைய கத்தரிக்காய்களைக் கொடுத்துத், தனக்கு வேண்டிய நெல் முதலிய உணவுப் பொருள்களையும் பெற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில்தான், பண்டமாற்று முறையினைத் தாண்டிப், பணத்தை மதிப்புமிக்க பொதுப்பொருளாக்கிப், பொருளாதார நிலையை உருவாக்கும் கட்டாயம் உண்டானது.

பணத்தின் மதிப்பைப் பொறுத்து, அதனை வைத்திருப்போரின் மதிப்பு அளவிடப்படும் சமூகநிலை இன்று உருவாகி இருப்பதால், பணத்தை எப்படியாவது சம்பாதித்தே ஆகவேண்டும் என்கிற கட்டாய நிலைக்கு மனிதர்கள் எல்லாருமே தள்ளப்பட்டிருக்கின்றனர். பணம் வைத்திருப்போர் பணக்காரர், அது இல்லாதோர் ஏழை என்னும் பிளவுபடுத்தும் ஏற்றத் தாழ்வுப் பாகுபாடு, சமூகத்தில் மனிதர்களின் மனநிலை தொடங்கி வாழ்நிலை வரை பெரும்பாடு படுத்தி வருகிறது.

'நில்லாதவற்றை நிலையானது என்று நம்பி விடாதே!' என்றும், 'பொருளுடைமை நில்லாது நீங்கிவிடும்' என்றும், பணத்தாசை தேவையற்றது என்பதைக் குறிப்பிடும் வள்ளுவர், ஒரு பொருட்டாக மதிக்கத் தகுதியில்லாதவரைக்கூட மதிப்பு மிக்கவராக மாற்றிக் காட்டுவது பணம் என்று மற்றோர் இடத்தில் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாது, "செய்க பொருளை!" என்று கட்டளை பிறப்பித்துப் பொருள் சம்பாதிக்கும் வழிமுறைகளில் விடாது கவனம் செலுத்தவும் சொல்கிறார்; அப்படிப் பணக்காரர் எனும் மதிப்புமிக்கவராக மாறினால்தான், உன்னை ஏழை என்று ஏளனம் செய்யும் பகைவர்களின் செருக்கை உன்னால் அறுத்தெரிய முடியும் என்கிறார் வள்ளுவர்.

சுந்தர ஆவுடையப்பன்

பண்டமாற்று முறையில் தம்மிடமிருக்கும் உற்பத்திப் பொருள்களை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் கையிருப்பு வைத்துக் கொள்ள முடியும்; பொருள் காலாவதி ஆவதற்குள், வேறு பொருள்களை மாற்றாகப் பெற்று, அவற்றையும் பயன்படுத்தித் தீர்த்துவிட வேண்டும்; அடுத்தாண்டுக்கு ஆகும்! அடுத்த தலைமுறைக்கு ஆகும்! என்று சேமித்து வைக்க முடியாது. ஆனால் பணம் அப்படி இல்லை. அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தியது போக, மீதப் பணத்தைச் சேமித்து வைக்க முடியும்; அடுத்த தலைமுறைக்கும் பயன்படக் கூடிய அளவுக்குத் தங்கம், நிலபுலன்கள் போன்றவற்றை வாங்கி இருப்பில் வைக்கவும் முடியும். பணம் மதிப்புக் குறையாதது; அதே நேரத்தில் தன்னை வைத்திருப்போரையும் மதிப்பில் உயர்ந்தவராக உயர்த்திக்கொண்டே இருப்பது. அதனால்தான் பணம் சம்பாதிக்க வேண்டியது வாழ்க்கையின் கடமை என்பது மாறி, ஒவ்வொரு மனிதரையும் பணத்தாசை பிடித்த வெறியர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

பணம் என்பது, உழைப்பிற்குக் கிடைத்த ஊதியமாகவும், சிந்திய வியர்வைக்குக் கிடைத்த வெகுமதியாகவும், கடுமையாகப் பார்த்த பணிக்குக் கிடைத்த கூலியாகவும், அன்றாட ஜீவிதத்திற்குக் கிடைத்த சம்பளமாகவும் கருதப்பட்ட பெருமைக்குரிய காலம் தற்போது இல்லை. எப்படியாவது பணத்தைச் சம்பாதித்தே ஆகவேண்டும்; குறுக்கு வழியோ நேர் வழியோ எந்த வழியாக இருந்தாலும் அது பணம் சம்பாதிக்கும் வழியாக இருக்க வேண்டும்! என்றே பெரும்பான்மையோர் கருதத் தொடங்கி விட்டனர். பணம் என்பது நமது வாழ்நிலைத் தேவைகளுக்கு உதவி செய்கிற புனிதப்பொருள் என்பது மாறி, நிமிடத்திற்கு நிமிடம் மனிதர்களை மாற்றிக் காட்டும் மாயப்பொருள் என்று எண்ணப்படுகிறது.

காலில் தட்டுப்படுவது மண்ணாங்கட்டியா? அல்லது தங்கக் கட்டியா? என்பதைக்கூட யோசிக்காமல், கானகங்களில் வாழ்ந்து வரும் முற்றும் துறந்த துறவிகளுக்கு வேண்டுமானால் பணம் வெற்றுக் காகிதமாக இருக்கலாம்; ஆனால் உலகியலில் சகல ஆசாபாசங்களுக்கும் அடிமையாகிப்போன சாதாரண மனிதர்களுக்கு?!...

காட்டில் பல்லாண்டுகாலம் தவமிருந்து விட்டு நாட்டுப்பகுதிக்குள் வந்தார் ஒரு துறவி; தலை முகமெல்லாம் நீண்டு வளர்ந்த உரோமக் காடாக இருந்தது. அந்தத் துறவி, மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்கிற கோட்பாடு உடையவர். எனவே சிகையை ஒழுங்கு செய்வதற்காக ஒரு சிகை திருத்தும் நிலையம் நோக்கிச் சென்றார்.

வழியில், ஒரு பெரும்பணக்காரர், கையில் நிறைய தங்க நாணயங்களைக் கொண்ட ஒரு பையோடு வந்து துறவியின் கால்களில் விழுந்தார்." சுவாமி நான் நிறையப் பாவங்களைச் செய்துவிட்டேன்; அதற்குப் பிராயச்சித்தமாய் நான் கொண்டு வந்துள்ள இந்த தங்க நாணயப் பையைத் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று மன்றாடிக் கேட்டார். துறவியும் எந்தவிதமான சலனமும் இல்லாமல், தனது இடது கையால் அந்தப் பையை எடுத்துக்கொண்டு முடிதிருத்தும் நிலையத்திற்குள் புகுந்தார்.

மிகுந்த பணிவோடு வரவேற்ற சிகைதிருத்தும் தொழிலாளி, துறவியை நாற்காலியில் அமரவைத்தார். துறவி தன்னுடைய இடதுகையில் இருந்த பையைக், கடையில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு, இதைக் கூலியாக எடுத்துக்கொண்டு எனக்கு முடிதிருத்தும் வேலையைச் செய்துவிடுங்கள்! என்று கூறினார். தொழிலாளியும் மிகுந்த சிரத்தையோடு துறவிக்கு சிகைதிருத்திவிடும் வேலையைச் செய்யத் தொடங்கினார்.

அப்போது கடையின் வாசலில் நின்றுகொண்டு ஒரு ஏழை புலம்பிக் கொண்டிருந்தார்; அவருடைய புலம்பல், கடைக்குள்ளிருந்த சிகைதிருத்தும் தொழிலாளிக்கும் துறவிக்கும் மிகத் தெளிவாகவே கேட்டது. " குடும்பம் பெரிய குடும்பம்; இனிமேல் கடன் வாங்க முடியாத அளவுக்குக் கழுத்துவரை கடன்; இனிமேல் வாழ்வது என்பது எந்த வகையிலும் சாத்தியமில்லை; யாராவது திரும்பக் கேட்க முடியாத அளவுக்குப் பிச்சையாகப் பணம் தந்து உதவினால் உண்டு; இல்லையென்றால் தற்கொலையைத் தவிர வேறு வழியே இல்லை" என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

துறவிக்கு முடிவெட்டிக்கொண்டிருந்த தொழிலாளி, எதுவும் பேசாமல், ஒருநிமிடம் வேலை செய்வதை நிறுத்திவிட்டு, அந்தப் புலம்பல் ஏழையை சைகைசெய்து உள்ளே அழைத்தார்; வந்தவுடன், துறவி மேஜையில் வைத்த பையைக் காட்டி, இதை எடுத்துப்போ! என்று சைகையாலேயே கூறினார். பதறிப்போன துறவி அந்த சிகைதிருத்தும் தொழிலாளியிடம், " நீ எடுத்துப்போகச் சொல்லியிருக்கும் பைக்குள் என்ன இருக்கிறது தெரியுமா? அத்தனையும் மதிப்புமிக்க தங்க நாணயங்கள்!" என்றார்.

சிரித்துக்கொண்டே தொழிலாளி சொன்னார்; "ஐயா துறவியாரே! நீங்கள் என் கடைக்குள் நுழைந்தபோதே, உங்களிடம் கூலி எதுவும் வாங்கக்கூடாது என்று முடிவெடுத்து விட்டேன். அதனால் நீங்கள் கூலி என்று கூறி வைத்த பையை ஏறெடுத்தும் நான் பார்க்கவில்லை. எனவே எனக்குச் சொந்தமில்லை என்று ஒதுக்கிவிட்ட அந்தப்பையில் தங்கம் இருந்தால் என்ன? வேறு நாணயங்கள் எவை இருந்தால்தான் என்ன?. அவற்றின் மதிப்பைப்பற்றி எனக்குக் கவலையே இல்லை!. அதனால்தான் தேவைப்படுவோருக்கு அது பயன்படட்டுமே என்று எடுத்துப் போகச் சொன்னேன்!".

இங்கே முற்றும் துறந்த முனிவருக்கே பணத்தின் மதிப்புமீது அக்கறை வந்து ஒட்டிக்கொண்டாலும், அதைத் துச்சமாக மதித்த அந்தத் தொழிலாளியின் பணம் குறித்த பற்றுதலில்லாத சித்தாந்தம்தான் சிறப்பானது. நமக்குச் சொந்தமில்லையென்றால் அந்தப்பணத்தின்மீது ஆசைப்படுவது தேவையற்ற செயல் தானே!. நம்முடைய உழைப்பிற்கு நமக்குக் கிடைக்கவேண்டியது சரியாகக் கிடைத்தாலே போதுமானதுதான்.

தொடர்புக்கு 9443190098

Tags:    

Similar News