கவியரசரின் கவிநயமும் எம்.எஸ்.வி.யின் இசை நயமும்
- “அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா” என்ற தாலாட்டுக்கும் அவர் குரலில் தான் பாட்டு!
- ‘பாவ மன்னிப்பு’ படத்தில் “அத்தான் என் அத்தான்” என்றொரு பிரபல பாடல் உண்டு.
பி.சுசீலாவின் தேன் சிந்தும் குரலுக்கு மயங்காதவர் யார்? அவரது காலகட்டத்தில் தென்னிந்தியாவின் மொழிகளில் வந்த எல்லா படங்களின் பாடல்களில் கதாநாயகியின் குரல் என்றால் அது அவர் குரல் தான்!
சாவித்திரி, சரோஜாதேவி உள்பட சில நடிகையர் எனக்கு சுசிலா தான் பின்னணி பாட வேண்டும் என்று நிபந்தனைகளை போட்ட வரலாறும் உண்டு!
"அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா" என்ற தாலாட்டுக்கும் அவர் குரலில் தான் பாட்டு!
கே..ஆர். விஜயா ஆவியாக வந்து "மன்னவனே அழலாமா? கண்ணீரை விடலாமா?" என்று பாடியதும் சுசிலா குரல் தான்!
சாவித்திரியின் இரண்டு பாடல்களுக்கும் இவர் குரலே தான் என கற்பகம் படம் முழுக்க "ஒன் உமன் ஷோ".
பாலும் பழமும்' படத்தில் "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்" என்ற பாடல் 1961ல் திருமணமான எல்லா பெண்களின் தேசிய கீதம் ஆகிவிட்டது என்னவோ உண்மை! நிறைய பேரை துளசி மாடத்தை சுற்றி வரும் போது முணு முணுக்க வைத்த பாடல்!
'பாவ மன்னிப்பு' படத்தில் "அத்தான் என் அத்தான்" என்றொரு பிரபல பாடல் உண்டு.
ஒரு முறை கவியரசர் காரில் பயணம் செய்தபோது நொறுக்கு வாங்கி சாப்பிட்ட தாளில், ராமச்சந்திர கவிராயர் எழுதிய "கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?" என்ற பாடலை படிக்கிறார். பிரம்மன் பொன்னை கொடுத்தும் அருளவில்லை. கல்லை, மண்ணை சாப்பிடவும் கற்றுத் தரவில்லை. எல்லோரிடமும் பல்லைக்காட்டி பிழைக்க வைத்து விட்டானே என தனது ஏழ்மையை நினைத்து புலவன் புலம்புவதாக எழுதிய பாடல்?
இதை படித்த கவியரசரை ஒவ்வொரு சொல்லிலும் இருந்த 'த்தான்' கவர்ந்து விடுகிறது. கவியரசர் இதே பாணியில், "அத்தான் என் அத்தான் அவர் என்னைத்தான்... எப்படி சொல்வேனடி" என்ற ஒரு பாடலை எழுதிவிட்டார்.
ஒருநாள் எம்.எஸ்.வியிடம் சொல்கிறார். "விசு, நான் ஒரு பிரமாதமானப் பாட்டு எழுதியிருக்கேன். அதை சிலரிடம் கொடுத்தேன். இதற்கெல்லாம் மெட்டு போட வராதுன்னு சொல்லிட்டாங்க. நீயும் முடியாதுன்னு சொல்லிடாதே".
"அப்படியா? கொடுங்க கவிஞரே பார்ப்போம்" என்று படித்துப் பார்க்கிறார். "மெட்டுப் போடலாமே" எனச் சொல்லிவிட்டு பாடிக் காட்டுகிறார்.
"அருமையாயிருக்கே, சரி அப்படியே தயாரிப்பாளர்கிட்டே பாடி காட்டி 'பாவ மன்னிப்பு ' படத்திலே சேர்க்க அனுமதி வாங்கிடலாம் விசு.
ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் ஹார்மோனியத்துடன் இந்தப் பாடலை வாசித்துப் பாடிக்காட்டினார் எம்.எஸ்.வி.
"இதென்ன ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் நடுவிலே இவ்வளவு இடைவெளி? வெத்தல பாக்கு மடிச்சு போடுற அளவு நேரமிருக்கே ரசிகர்கள் கேட்பாங்களா?"
"கேட்டாங்க சார், இசையோடு கூட கேட்டுப் பார்த்தா பிரமாதமா வந்திடும்"
அரைமனதுடன் சம்மதித்தார் ஏ.வி.எம் செட்டியார்.
தோழியிடம், தன் அத்தானைப் பற்றி நாயகி சொல்வதாகப் பாடல்! . சுசிலாவை பாட வைக்க நினைக்கிறார்கள். எம்.எஸ்.வி. மறுநாள் பாடல் ஒத்திகைக்கு வரச் சொல்லி தொலைபேசியில் சுசிலாவிற்கு சொல்ல. அவரோ, "சார் எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, குரல் சரியில்லை. இன்னொரு நாள் ரிக்கார்டிங் வச்சிக்கலாமா?" என்கிறார்.
"எங்கே இந்த வரியை பாடிக் காட்டுமா பாக்கலாம்" என்று ஒரு வரியை போனிலேயே சொல்கிறார் எம்.எஸ்.வி.
"இந்த வாய்ஸ் போதும் இந்தப் பாட்டுக்கு" இந்த குரல் தான் வேணும். நிறுத்தி நிதானமாக பாடுவதற்கு இந்த குரல் போதும். நாளை ரெக்கார்டிங்க்கு வந்துடுங்கமா".
மறுநாள், வெட்கமும் தயக்கமுமாக 'எப்படி சொல்வேனடி' என்று வரும் "வால்டஸ்"வகைப் பாடல். லதா மகேஷ்கர், "இது போன்ற பாடல் தருவதாக இருந்தால் நான் இங்கே வந்து பாடுகிறேன்" என்று ஆசைப்பட்ட பாடல்.
கவியரசர் வேண்டுகோளால் நமக்கு கிடைத்த இந்த பாடல் 63 ஆண்டுகளாக காற்றில் கலந்து நம் காதோரம் "என் அத்தான் அவர் என்னைத்தான்" என்று காதோரம் கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறது. இடையிசையில் முதலில் வரும் நீண்ட 'அகார்டியான் ' இசை ஆளை அசத்திவிடும்!
'நெஞ்சில் ஒரு ஆலயம்' என்ற படத்தில் "சொன்னது நீ தானா? என்ற பாடல்.
கி.பானுமதி கிருஷ்ணகுமார்
நோயினால் தான் இறந்து விடுவோமோ என்று நினைக்கும் கணவனாக நடிகர் முத்துராமன், மனைவி தேவிகாவிடம் தன் காலத்துக்குப் பிறகு மறுமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்.
துடித்துடிக்கும் மனைவியோ, "சொல் சொல் சொல்" என்னுயிரே என்று கேள்வியிலேயே உலுக்குகிறார்! "ஏன் ஏன் ஏன்" என்று ஏறுமுகமாக ஆரோகனமாக கேட்டுவிட்டு சலித்துப் போய், சுயபாச்சதாபம் மேலிட, " ஏன் ஏன் ஏன்" என்னுயிரே என்று இறங்கு முகமாக அவரோகனத்தில் பாடுவாரே அங்கு தெரியும் மெல்லிசை மன்னர்களின் பேருரு! "இறுதிவரை துணையிருப்பேன் என்றதும் நீ.... தா.....னே...?" என்று தழுதழுத்த குறளில் பாடலை கேட்கும்போது எப்படிப்பட்ட முரட்டு குணத்தவரின் கண்களில் ஓரமும், ஈரமும் மின்னும்; அப்படிப்பட்ட பாடல் அது!
கண்ணதாசனும், மெல்லிசை மன்னர்களும், சுசீலாவும் அந்த பெண்ணின் மனதுக்குள் கூடுவிட்டு கூடு பாய்ந்து இருப்பார்கள்! அதனால் தான் இது போன்ற பாடல்கள் எல்லாம் இன்றும் எல்லோரின் கண்ணதாசன் தொகுப்பிலும், எம்.எஸ்.வி தொகுப்பிலும், சுசிலா தொகுப்பிலும், முதல் 10 பாடல்களில் ஒன்றாக சப்பணம்மிட்டு உட்கார்ந்து இருக்கின்றன.
சிதார், தில்ரூபா தபலா டோலக் என குறைந்த இசைக்கருவிகளுடன் வந்தாலும் காலத்தை வென்ற பாடல்! இந்தப் பாடலைப் பற்றி ஒரு சுவையான நிகழ்ச்சி..
"எனக்கு மிகவும் பிடித்த மதம் தாமதம்" என்று சொல்பவர் கண்ணதாசன். 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்திற்கு "சொன்னது நீ தானா?" பாடல் எழுதும் முன் எல்லோரும் வந்து காத்திருக்கிறார்கள். கண்ணதாசன் வரவேயில்லை. வெகு நேரம் காத்....திருந்....தார்கள். எம். எஸ்.விகோ வேறு நிறுவனங்களுக்கு இசையமைக்க போகவேண்டிய வேலை இருந்தது.
"என்ன இவர் நேரத்திற்கு வராமல் இப்படி பண்றார்" என சலித்துக் கொண்டார். இதை வரும்போது யாரோ கவியரசிடம் போட்டுக் கொடுத்து விட்டார்கள். எம்.எஸ். விடம் மிகவும் அன்பு வைத்திருந்த அவரால் இதை நம்பவே முடியவில்லை. இயக்குனர் ஸ்ரீதர் சூழலை சொல்கிறார், கண்ணதாசன் பாடலைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
"சொன்னது நீதானா? சொல் சொல் சொல் என்னுயிரே"
இந்த வரிகளின் உயிரோட்டத்தில் மதி மயங்கி விட்ட எம்.எஸ்.விகோ அது தனக்கு சொல்லப்பட்ட வரிகள் என்று புரியவில்லை. பிறகு கவியரசரே சொன்னபோது தான் புரிந்தது.
அவரது கவனமோ "சொல் சொல்" என்ற வரிகளை சுசிலா நா தழுதழுக்க பாட வைக்கும் யோசனையில் இருந்திருக்கும். ஒரே அறைக்குள் அலுப்புத் தட்டாமல் வேறு வேறு கோணங்களில் 50க்கும் மேற்பட்ட காட்சிகள் வரும். கேமராவுக்கான பாடமாக திரைப்படக் கல்லூரியில் வைக்கலாம்!
பி.சுசிலாவின் ஆகச் சிறந்த படைப்புகளில் 'பாக்கியலட்சுமி 'என்ற படத்தில் வரும் "மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி" என்ற பாடலை தவிர்க்க முடியாது! இந்த பாடலைப் பற்றி சிறந்த இசையமைப்பாளரான இளையராஜா மிகவும் சிலாகித்து பேசுவார்.
குழந்தைப் பருவ திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு பெண் அவளது கணவன் சிறுவயதிலேயே இறந்ததாக தெரிவிக்கப்பட்டு கைம்பெண் கோலத்தில் வாழ்ந்து வருகிறாள். அவர் தான் சவுக்கார் ஜானகி. தோழி ஈ.வி. சரோஜாவின் வீட்டில் வாழ்கிறாள். தோழி ஒரு முறை பாட்டு பாடச் சொல்லிக் கேட்க தனது உள்ளத்திலிருப்பதை பாடலில் கொட்டுகிறாள். இந்த பாடல் வரிகளில் சொல்லப்பட்ட அவளின் மனவலிகளுக்கு சற்றும் குறையாதது எம்.எஸ்.வி. பாடலை கட்டமைத்த விதம்!
பாடல் சந்திரா கெலன்ஸ் என்ற ராகத்தில் அமைத்திருப்பார்கள். இரவு 9 மணி முதல் 12 மணி வரை பாடக்கூடிய ராகம் சந்திரா கெலன்ஸ் என்பதை கவனிக்கவும்.
மென்மையாக, நிதானமாக ஆரம்பிக்கும் பாடலின் பல்லவி. இந்த பாடலும் அதிக சொற்கள் கொண்ட நீள நீள வரிகள் உடையதுதான்!
தோழி உற்சாகமாகத்தான் வீணையில் ஆரம்பிக்கிறாள். பாடப் பாட சோகம் முற்றி இருளைப் போல செனாய் இசையின் வழியே அவளின் துக்கம் அதிகமாகி கொண்டே போவதை உணரலாம்.
தோழியே நெகிழ்ந்து போய் வீணையை சோகமாக வாசித்து முடிக்கிறார். பாடல் முடிவில் சிதாரில் ஒரு துண்டு வாசிக்கப்படும். Resolute என்று சொல்வார்கள். அது 'ரவிச்சந்திரிக்கா ' இராகமாம். அவளுக்கு தூக்கம் இல்லாமலே பொழுதே விடிந்து விட்டது! என்பதை இசையால் சொல்லும் உத்தி அது!
சந்திரன் வரும்போது (சந்திரா ஹெலன்ஸ்) ஆரம்பிக்கும் துயரம், ரவிச்சந்திரிகாவில் முடிகிறது!
கவியரசர் அந்தப் பெண்ணின் மனதை எக்ஸ்ரே எடுத்தார் என்றால், அதைவிட அதிகமாக பெண்ணின் மனதை ஸ்கேன் எடுத்துப் பார்த்து சொல்லி இருப்பார். எம்.எஸ்.வி! இந்தப் பாடலை சுசீலாவை தவிர வேறு யார் குரலிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதுதானே? இந்தப் பாடலைக் கேட்டால் மறுமணத்தை ஆதரிக்க தோன்றும்!
படகோட்டி என்ற படத்தில் "என்னை எடுத்து தன்னைக் கொடுத்துப் போனவன் போனாண்டி" என்று ஒரு பாட்டு உண்டு. இதுவும் உச்சஸ்தாயில் கழி நெடிலடி பாடல்தான். கவிஞர் வாலி எழுதியது. இதிலும் சரண வரிகள் பாடி இடைவெளி இல்லாமல் அப்படியே பல்லவிக்கு வந்து முடிக்கும் பாடல்!
இதுபோன்ற பாடலுக்கு மூச்சை ஆளும் தன்மை நன்றாக இருந்தால் மட்டுமே பாட முடியும். இதில் சுசீலா முதன்மையானவர் என்று சொல்வதற்கு இன்னும் இதுபோல நிறைய பாடல்கள் இருக்கின்றன. சுசீலா திறனறிந்து இதுபோன்ற பாடல்களைத் தந்து அவரது ஒட்டுமொத்த திறனை வெளிக்கொண்டு வந்ததில் எம்.எஸ்.வி அவர்களின் பங்கு அதிகம்.