null
- பல ஆண்டுகள் பூஜை செய்த மக்களுக்கு இத்தகைய வாய்ப்பு கிடைக்கும்.
- தவம் என்பதே விரதம், வைராக்கியம், நோன்பு ஆகும்.
அதிகாரம்: தவம்
இந்த அதிகாரத்தில் ,
உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.
என்ற குறளில் தொடங்கி
இல்ர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோவா தவர்.
-என்ற குறள்வரை 10 குறட்பாக்கள் உள்ளன. உண்மைப் பொருளை அறிந்து, தலைவன் மீது பக்தி செலுத்தி, திருவடியைப் பற்றித் தியானிப்பதே தவமாகும். ஒருவருடைய தவம் முற்றுப் பெறுவதற்கு 27,000 ஆண்டுகள் பலபிறவிகளில் தவம் செய்திருக்க வேண்டும். பல ஜென்மங்களில் பாடுபட்டு, ஒரு ஜென்மத்தில் மரணத்தை வெல்லுவதே தவம்.
தவத்திற்கு அடிப்படை சரியை, கிரியை, யோகம், ஞானம். சரியை என்பது இனிமையாக நடந்து கொள்ளுதல், பொய் சொல்லாதிருத்தல், நீதிக்குட்பட்டு பொருள் சேர்த்தல், சிறுதெய்வ வழிபாட்டில் ஈடுபடாது இருத்தல், புலால் உண்ணாதிருத்தல் போன்றவற்றைச் கடைப்பிடித்து பண்புள்ளவனாக மாறுவதாகும். கிரியை என்பது தலைவன் யார் என்று அறிந்து, அவர் மீது பக்தி செலுத்தி பூஜை செய்வது.
யோகம் என்பது மூச்சுக் காற்று. நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போகும், அதனை எப்படிச் செயல்படுத்துவது என்பதை அறிந்து கொள்வதாகும். ஞானம் என்பது மூச்சுக்காற்றைப் புருவ மத்தியில் ஒடுக்க வேண்டும். அங்கே ஒடுங்குகின்ற காற்று அங்கேயே தங்கி விடும். அது கபத்தை அறுக்கும், தேகக்கசடாகிய களிம்பை நீக்கும்.
அந்த களிம்பை நீக்குவதுதான் ஞானம். இத்தகைய செயல் இயற்கையால் கொடுக்கப்பட்டது. தேகக்கசடை நீக்கவில்லையென்றால், தவத்தைத் தட்டி எழுப்ப முடியாது, நமக்குள் ஜோதி தோன்றாது, இயற்கை அன்னை இந்த தேகத்தை படைக்கும்பொழுதே கசடையும் சேர்த்து வைத்திருக்கின்றாள். நெல்லில் உமி இருப்பது போல காமதேகம் நீங்கினால் உள்ளுடம்பு தோன்றும். அத்தகைய உள்ளுடம்பு, ஞான உடம்பு, ஒளி உடம்பு. அருள் உடம்பு தோன்றுவதற்கு இந்த புறஉடம்பு துணையாக இருக்கும்.
புருவ மத்தியில் ஒடுங்குகின்ற காற்றுதான் கசடை நீக்கி ஒளி உடம்பை எழுப்பும். உமிநீங்கினால் அரிசி முளைக்காததுபோல காமதேகம் நீங்கினால் மீண்டும் பிறக்க மாட்டான். இது தொன்றுதொட்டு பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தாலும் தவமுயற்சியாலும் கைகூடும். திருமணம் செய்து கொண்டு தவம் மேற்கொள்வது சிறந்தது ஆகும்.
முன் ஜென்மத்தில் மிகுந்த புண்ணிய பலமும் தவ முயற்சியும் உள்ளவர் வெகுசிலரே. அவர்கள் திருமணம் செய்ய முயற்சித்தாலும் தடைபட்டு அவர்களை தலைவன் யோக வழியில் நடத்திச் செல்வான். அது எல்லோருக்கும் சாத்தியமாகாது. தலைவனின் ஆசி இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
திருமணம் செய்து கொள்ளவில்லை எனில், மனம் தடுமாறும், காம விகாரம் மேலோங்கும். அப்போது மனம் தடுமாறி தவறு செய்து விடுவான். அதனால் இல்லறமும் கெட்டு துவறமும் கெட்டு வீணாகி விடுவான். எனவே, இல்லறத்தில் இருந்து துறவறம் மேற்கொள்வது சிறப்பைத் தரும்.
ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்
தவத்திற்கு உற்ற துணையாக மனைவி இருப்பாள். காமத்தாலும் மழலையின் ஸ்பரிசத்தாலும் மனம் சாந்தப்படும். மனைவி, விருந்தை உபசரிக்கவும், புண்ணியம் செய்யவும் உறுதுணையாக இருப்பாள். காலம் கைகூடி வருகையில் தவ வாழ்க்கையும் தொடரும். சரியையில் ஒரு ஜென்மமும் கிரியையில் ஒரு ஜென்மமும் யோகத்தில் ஒரு ஜென்மமும் முறையாகச் செய்துவந்தால் இறுதியில் ஞானம் கைகூடும். பல ஆண்டுகள் பூஜை செய்த மக்களுக்கு இத்தகைய வாய்ப்பு கிடைக்கும். எந்த அளவு பாடுபட்டாலும் வீண்போகாது. அடுத்தடுத்த பிறவியில் பலன் கிடைக்கும். முன் ஜென்மத்தில் ஏற்பட்ட அனுபவமும் செய்த முயற்சியும் பின் ஜென்மத்தில் பலனைக் கொடுக்கும்.
பலர் ஆர்வத்தின் காரணமாக முறையான வழிகாட்டுதல் இல்லாமல், மூச்சுக்காற்றை நிறுத்துவார்கள். அதனால் ரத்தக் கொதிப்பு, குடல்புண், வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் உண்டாகி இறந்து போவார்கள்.
பிராணாயாமம் செய்பவர்கள், இரவு தங்களின் உடல்நிலையை அறிந்து, அதற்கேற்றவாறு உணவு உட்கொள்ளுதல் வேண்டும். சிறிதளவு பாசிப்பயறு, சிறிதளவு உணவு, ஒன்றிரண்டு பழங்கள், இவ்வாறாக அரைவயிறு உணவு உட்கொள்ள வேண்டும். சுலபமாக ஜீரணிக்கக் கூடிய உணவையே ஆகாரமாகக் கொள்வது நல்லது. இது எங்கள் அனுபவம். காலையில் எழுந்து மலம் கழித்து காலைக் கடன்களை முடித்து, வெறும் வயிற்றுடன் பத்மாசனம் போட்டு முதுகுத் தண்டு நிமிர்ந்து இருக்குமாறு அமர்ந்து மூச்சை ஒரு பக்கம் லேசாக இழுத்து ஸ்தம்பித்து, சிறிது நேரம் நிறுத்தினால் பிராணன் துடிக்கும், ரத்தம் சுத்தி ஆகும், நன்றாகப் பசி வரும். உடல்நிலை யோகாப்பியாசத்திற்குத் தகுந்த உடம்பாக இருக்க வேண்டும். நோயுள்ளவர்கள் பயிற்சி செய்தால் வேறுவிதமான சிக்கல்கள் தோன்ற வாய்ப்பு உண்டு. யோகாப்பியாசத்தால் சில நோய்கள் நீங்குவதற்கும் வாய்ப்புண்டு.
அதற்கு தக்கபயிற்சி உள்ள உண்மைப் பொருள் அறிந்தவர்கள் வழி காட்டுதலாக அமையவேண்டும். அதற்கு முன்ஜென்ம புண்ணியமும் அருள் பலமும் இருக்க வேண்டும். சிலர் செடி கொடிகளைச் சாப்பிடச் சொல்வார்கள். சிலர் தண்ணீருக்குள் தியானம் செய்யச் சொல்வார்கள். மனைவி மக்களை விட்டுவிட்டு, காடு, மலையெல்லாம் திரிவார்கள். இவையெல்லாம் சரியான முறை அல்ல.
உடம்பை மையமாகக் கொண்டதே ஞானம். தவம் மேற்கொள்பவர்கள் அதிகமாக போகத்தில் ஈடுபடுதல் கூடாது. வரம்புமீறி தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் நோய்வாய்ப்படு தலுக்கு வாய்ப்பு உண்டு, இல்லறத்தில் இருந்தே உடலைப் பக்குவ நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும். புண்ணியத்தைத் தொடர்ந்து செய்யவும், இல்லறத்தை நடத்தவும், தவத்தை மேற்கொள்ளவும், உடல்நலம் முக்கியமானது. பல சிந்தனைகள் இருந்தாலும் பிரச்சினைகள் இருந்தாலும் தொடர்ந்து பூஜை செய்து மனதை ஒருநிலைப்படுத்தும் பக்குவம் வரவேண்டும்.
மற்றவற்றை தானாக தலைவன் பார்த்துக்கொள்வான். நாம் கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. வைராக்கியத்துடன் உலக நடையில் இருந்தே பூஜை செய்து வந்தால், மலைமடுவில் உள்ள தண்ணீரில் தங்கியுள்ள மீன், திடீரென்று ஒருநாள் வரும் மழைநீரில் வெளியேறிவிடும். அதுபோல் கர்மவினை முடிந்தவுடன் ஞானிகளின் திருவடியை அடைவார்கள்.
தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்பு பத்து நிமிடம் பூஜை செய்தால் பண்புள்ள புத்திர பாக்கியம் உண்டாகும். தவத்திற்குத் தேவையான பொருள் உதவி இல்லையென்றாலும், பிரச்சனைகள் இருந்தாலும், எதிரிகளால் தொல்லைகள் இருந்தாலும், எல்லா இடையூறுகளையும் பொறுத்துக் கொண்டு நாம் பிறருக்கு நன்மை புரிவதே தவத்திற்குச் சிறந்த இலக்கணமாகும். முன் செய்த நல்வினை இருந்தால் தவம் கைகூடும். அவர்களுக்கே மூச்சுக் காற்று வசப்படும். மற்றவர்களுக்கு முழுமையான பலன் தராது. பாடுபட்ட அளவு மறுபிறப்பில் பயன்தரும். தலைவனை அறிந்து பூஜை செய்து தவம் மேற்கொள்ளவேண்டும். தவத்திற்கு ஏற்ற சூழல் நமக்கு அமையவில்லையெனில் அதற்காக ஏங்க வேண்டாம். உடலையும் உயிரையும் அறிந்து, உடம்பிலுள்ள காமதேகம் நீங்குவதற்காக யார் தவம் மேற்கொள்கின்றார்களோ அவர்களுக்கு உணவு கொடுப்பதும் ஒரு தவமே. தவசிகள் மனம்மகிழ்ந்து ஒருமுறை ஒருவர் வீட்டில் உண்டால் மூன்று புவனத்தார் உண்டதற்கும், ஆயிரத்தி இருபத்து நான்கு அண்டங்களில் உள்ளவர்கள் உண்டதற்குமான புண்ணியம் சன்மார்க்கவாதிகளுக்கு உணவு அளிப்பதும் புண்ணியம் ஆகும். கிடைக்கும்.
அதிக சொத்துக்கள் உள்ளவர்கள் மேலும் பொருள் வெறி கொண்டு பணம் ஈட்டுவதில் குறியாய் இருப்பார்கள். உலகியல் கடமைகளை மட்டுமே செல்வார்கள். பொருள் பற்றினால் ஆன்மாவிற்கு எந்தப் பயனும் இல்லை. பொருள் சேர்ப்பது அவன் சாகும் வரை மட்டுமே. ஆனால் தவம் அவனுக்கு உயர்ந்தநிலையை உருவாக்கி முக்தியடையச் செய்யும். தவம் செய்கின்ற மக்களுக்கு எல்லா நன்மைகளும் வல்லமைகளும் உண்டு.
தவத்திற்கு எமனை வெல்லும் சக்தி உண்டு, பகைவர்களை அடக்கலாம். தவசியின் மனம்மகிழும்படி நடக்கும் மக்களை, தொண்டனை, சீடனை தவசி மனமுவந்து நீடூழி வாழ வைக்கலாம். தவத்தின் வலிமையால், யாராலும் வெல்ல முடியாத காமத்தை வெல்லமுடியும். தவம் என்பதே விரதம், வைராக்கியம், நோன்பு ஆகும். புலால் உண்ணாது இருப்பது ஒருவகை நோன்பு. உயிர்க்கொலை செய்யாது இருப்பது ஒருவகை விரதம். தொடர்ந்து தடைபடாமல் ஞானிகளைப் பூஜைசெய்வது ஒருவகை வைராக்கியம்.
விருந்தை உபசரிப்பது, பசியாற்றுவது, ஞானிகளின் நூலை படிப்பது, பிறருக்குத் துன்பம் செய்யாது இருப்பது, உடலைக் காப்பாற்றிக்கொள்வது, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வது ஆகிய எல்லா செயல்களும் தவமாகும். தவத்தை மேற்கொண்டு, மானிடப்பிறவியைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும். இவர்களே பேரறிவு படைத்த இறைவனை மனம் உருகி தியானம் செய்வார்கள். தன்உடம்பை காப்பதற்காக பிறஉயிர்களின் உடம்பை உண்ணுதல் கூடாது. பிற உயிர்களை கொலை செய்வதால் பாவம் சூழ்ந்து நோய்வாய்ப்பட்டு துன்பங்களை அனுபவிக்க நேரிடும். தலைவனின் அருளைப் பெற, பிற உயிர்கள் மீது நாம் அன்பு செலுத்த வேண்டும். பிற உயிர்களைக் கொலை செய்கின்றவரின் மனம் கொலைக் கருவிப் போன்றது. பிற உயிர்களைக் கொலைசெய்யாதவர்களை எல்லா உயிரினங்களும் வாழ்த்தும். அவர்கள் தலைவனின் அருளைப் பெறுவார்கள்.