சிறப்புக் கட்டுரைகள்

'கள்ளன் பெரிதா... காப்பான் பெரிதா...?'

Published On 2024-08-25 15:50 IST   |   Update On 2024-08-25 15:50:00 IST
  • வங்கிகள் தந்துள்ள கடன் அட்டைகள், சேமிப்பு அட்டைகள் மூலமாகவும் பணம் செலுத்தி விடலாம்.
  • எல்லாமே டிஜிட்டல் மயம் என்று ஆகிவிட்டதால் இப்போது பணத்திருட்டும் டிஜிட்டல் மயமாக மாறிக்கொண்டிருக்கிறது.

திருட்டைப் பற்றித் தெரிந்துகொண்டு நேர்மையாக வாழ விரும்பும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

மனித வாழ்வியலில் மனிதர்கள் செய்யக் கூடாதவைகள் பல இருந்தாலும், பெரியோர்களும் அற நூல்களும் வலியுறுத்திக்கூறும் தலைசிறந்த "கூடாதுகள்" மூன்றே மூன்றுதாம். அவை, "திருடக் கூடாது!", பொய் சொல்லக் கூடாது!", "பிச்சை எடுக்கக் கூடாது!". 'திருட்டு' ஒரு மனிதருக்கு சகலவிதமான தீய குணங்களையும் கொண்டுவந்து சேர்க்கும்; 'பொய்' ஒரு மனிதரின் உண்மை அடையாளங்கள் அனைத்தையும் அழித்து விடும்; 'பிச்சையெடுத்தல்' ஒரு மனிதனைத் தன்மானம் அற்றவனாக்கித் தலைகுனிய வைத்து விடும். திருட்டு, பொய், பிச்சையெடுத்தல் ஆகிய இந்த மூன்றையும் சிறுவயது முதலே ஒருவர் செய்யாமல் வந்தால், அவர் வாழ்க்கையில் அப்பழுக்கற்ற மனிதராகத் திகழலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

திருட்டு என்பது அடுத்தவருக்குச் சொந்தமான பொருளை, அவருக்குத் தெரியாமல் அல்லது வேறு யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாகக் கவர்ந்து கொள்வது ஆகும். திருட்டுக்குத் தமிழில் 'களவு' என்று மற்றொரு பெயரும் உண்டு. ஆணும் பெண்ணுமாக நிகழ்த்தும் காதல் வாழ்வில், யாருக்கும் தெரியாமல் சந்திப்பு நிகழ்த்திடுவதைக் 'களவு' என்றும், பிறகு அவர்களே அனைவரும் அறிய மணம் முடித்துக்கொண்டு வாழ்வதைக் 'கற்பு' என்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் பகர்கின்றன. அந்த வகையிலான காதல் களவிற்கு இலக்கிய அடிப்படையிலான சமூக அனுமதி உண்டென்றாலும், அது தவிர்ந்த களவிற்கும் திருட்டிற்கும் சமூகத்தில் துளியளவும் அனுமதி கிடையாது.

சமூகத்தில் இன்றுநாம் சகலவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு வாழ்கிறோம்; நாட்டைப் பாதுகாப்பது முதற்கொண்டு, வீட்டைப் பாதுகாப்பது வரை ஏகப்பட்ட ஏற்பாடுகள். நம்முடைய பொருள்கள் மற்றும் உடைமைகள் மட்டுமல்ல, நம்முடைய உரிமைகளும் களவு போய்விடக் கூடாது என்பதில் பெருங்கவனத்தோடு செயல்பட வேண்டியிருக்கிறது.

திருடுபோய்விடாமல் தடுக்க நாம் எவ்வளவு கவனத்தோடு இருந்தாலும் திருடர்கள் நம்மை விட விழிப்புணர்வோடு திருட்டுத் தொழிலை நடத்தி விடுகிறார்கள். 'கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா?' என்கிற பழமொழி, திருடர்களே திறமைசாலிகள் என்பதை வலியுறுத்தி நம்மை உஷார்ப்படுத்தவே வந்தது ஆகும். திருடர்கள் எனப்படும் கயவர்களும் பார்ப்பதற்குச் சாதாரண மனிதர்களைப் போலவே இருப்பார்கள்; ஏமாந்து போகாதீர்! என்கிறார் திருவள்ளுவர். அவர் இன்னும் ஒருபடி மேலே போய், திருடர்கள், தங்களுக்கு விருப்பமான திருட்டுகளை, விரும்பியபடி நடத்திக் காட்டும் வல்லமை மிக்கவர்கள் என்பதனால் வானுலக தேவர்களுக்கு இணையானவர்கள் என்று புகழ்வதுபோல இகழ்கிறார்.

நம் தமிழில், 'களவும் கற்று மற!' என்கிற ஒரு புதுமையான பழமொழியும் உண்டு. அப்படியானால் களவு என்பது கற்றுக்கொள்ள வேண்டிய அளவுக்கு ஒரு சிறந்த பாடமா? களவைக் கற்றுக்கொள்வதனால் விளையும் நன்மைகள் யாவை? அது ஏன் களவைக் கற்றுவிட்டுப் பிறகு மறந்துவிடச் சொல்கிறது பழமொழி? எனப் பல கேள்விகள் எழலாம்.

களவு எனப்படும் திருட்டு காலகாலமாக ஒரே மாதிரியாக இருப்பதில்லை; அது காலத்திற்குக் காலம் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. முன்பெல்லாம் சம்பாதித்த பணத்தையும் நகைகளையும் பொருள்களையும் அவரவர் தமது வீடுகளில் மட்டுமே பாதுகாத்து வைத்திருப்பர். திருடர்கள், பணக்காரர்கள் வீடுகளாக நோட்டமிட்டு, வீடு வீடாகச் சென்று சுவற்றிலோ அல்லது கூரைகளிலோ ஓட்டையிட்டு வீட்டுக்குள் புகுந்து அடுக்குப்பானை, அரிசிப்பானை, பீரோ, டிரங்குப்பெட்டி என ஒன்றுவிடாமல் அலசித், திருடிச் செல்வார்கள். வீட்டில் ஆள்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போதோ அல்லது வெளியூர், கோவில் குளங்களுக்குச் சென்றிருக்கும்போதோ இது நடக்கும். ஊர்க்காவல் தாண்டி, தெருக்காவல் தாண்டி, வீட்டுக்காவல் தாண்டி, நாய்கள் தொல்லைகள்தாண்டி, இந்தத் திருட்டை நிகழ்த்த வேண்டியது திருடர்களுக்குப் பெரும் சவாலாகவே இருந்தது.

இப்போது தெருக்கள்தோறும் வங்கிகள் வந்து விட்டன. பணத்தை மட்டுமல்ல, நகைகளையும் மதிப்புமிக்க பத்திரங்கள் போன்றவற்றையும் பாதுகாத்து வைப்பதற்குப் பாதுகாப்புப் பெட்டக வசதிகள் வந்துவிட்டன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை விரைந்த நடைமுறைக்கு வந்துவிட்டதால், இப்போதெல்லாம் யாருடைய பாக்கெட்டிலும் பர்சிலும் பணம் என்பதே இல்லாமல் போய்விட்டது. சாதாரண தேநீர்க்கடை முதற்கொண்டு, காய்கறிக்கடை, பலசரக்குக்கடை, இளநீர்க்கடை, ஆட்டோ, டாக்சி, ரயில் பயணங்கள், விமானப் பயணங்கள் என எல்லாவற்றிலும் செல்பேசிகொண்டே பணம் செலுத்தும் வசதிகள் வந்துவிட்டன. தவிர வங்கிகள் தந்துள்ள கடன் அட்டைகள், சேமிப்பு அட்டைகள் மூலமாகவும் பணம் செலுத்தி விடலாம். எனவே எல்லாருடைய மணி பர்சுகளும் தற்போது பண அட்டை வைக்கும் பர்சுகளாக மாறிவிட்டன.

எவர் கையிலும் , எந்த வீட்டிலும் பணம் இல்லை; எந்த வீட்டிலும் குண்டுமணித் தங்கம்கூட இல்லை; எல்லாம் வங்கிப் பெட்டகங்களில் பாதுகாப்பாக இருக்கின்றன; இனித் திருடுவதற்குத் திருடர்கள் எங்கே போவார்கள்?. இனி வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியே செல்வதில் எந்தப் பயனுமில்லை; திறந்துவைத்துவிட்டே அந்தக் காலங்களைப்போல செல்லலாம்; உள்ளே திருடும் நோக்கத்துடன் யார் நுழைந்தாலும் வெறுங்கையோடுதான் வெளியே செல்ல வேண்டும்.


பணம் நகைகள் எல்லாம் வங்கிப் பெட்டகங்களுக்குச் சென்றுவிட்டதால், திருடர்களின் முற்றுகையெல்லாம் தற்போது வங்கி வளாகங்களை நோக்கியே இருக்கின்றன. தானியங்கிப் பணம் வழங்கும் இயந்திரங்களைத் தகர்ப்பது; வங்கிக் கட்டிடங்களை ஓட்டையிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும், பலமாக இருக்கும் பாதுகாப்பு வளையங்களால் திருடர்களின் முயற்சிகள் முழு வெற்றிகள் அடைவதில்லை.

எல்லாமே டிஜிட்டல் மயம் என்று ஆகிவிட்டதால் இப்போது பணத்திருட்டும் டிஜிட்டல் மயமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் சாதாரண மனிதர்கள்கூடக் களவைக் கற்று மறக்க வேண்டிய தருணத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். முன்பெல்லாம் பணத்தை, உடையவருக்குத் தெரியாமல் எடுப்பது திருட்டாக இருந்தது; ஆனால் இன்று சைபர் குற்றமாகும் டிஜிட்டல் திருட்டில், உடையவரின் கைகைகளைக் கொண்டே அவருடைய பாக்கெட்டிலேயே விரல்களை நுழைத்து அவருடைய சொந்தப்பணத்தையே எடுக்கவைத்துப் பெற்றுக்கொள்ளும் வினோதத் திருட்டுமுறை நடந்து கொண்டிருக்கிறது.

முகநூல் வழியே போலி அடையாளங்களை உருவாக்கிப் பணம் கேட்பதும், குறுஞ்செய்திகள் வழியே லிங்க்கைத் தொடச் சொல்லி வங்கிக் கணக்கு வரை அழைத்துச் சென்று பணம் பறிப்பதும் நடக்கின்றன. செல்பேசியில், பதிவு செய்யப்பட்ட குரல்வழியே," நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள்!, ஒன்றை அழுத்துங்கள்! ஓடிபி வந்தால் உடனே அழுத்துங்கள்! என்று நம் கை விரல்களை வைத்தே நமது வங்கிச் சேமிப்பைத் திருடும் கும்பல் அலைந்து கொண்டிருக்கிறது. வங்கியில் இருந்து அழைப்பதுபோல் நம் விரல்கொண்டு நம்கண்ணைக் குத்துவதுபோல் திருடுவோரும் உண்டு. களவைக் கற்று மற! என்று அந்தக் காலத்தில் சொன்னது, இந்தக்கால டிஜிட்டல் திருட்டு முறைகளில் இருந்து தப்பிக்கும் விழிப்புணைர்வை அடைவதற்காகத்தானோ என்னவோ!.

திருட்டு என்பது உடம்பால், உடம்பின் அங்கங்களால் பொருள்களைக் களவாட நிகழ்த்தப்படும் திருட்டு மட்டுமல்ல; யாருக்கும் தெரியாமல் நிகழ்த்தப்படும் எந்தத் தீய செயலும் திருட்டுத்தான். திருட்டு என்பது அடுத்தவர் அறியாமல் அடுத்தவர்பாக்கெட்டிலிருந்து எடுக்கப்படும் பத்து ரூபாயும் திருட்டுதான்; கோடிக்கணக்கில் ஊழல் செய்து பெறப்படும் லஞ்சப்பணமும் திருட்டுதான். அளவுக்குமீறி லாபம் வைத்துப் பொருள்வணிகம் செய்து பணம் சம்பாதிப்பதும் திருட்டுதான்; வாங்கிய சம்பளத்திற்கும் கூலிக்கும் உழைக்காமல் ஏமாற்றித் திரிவதும் திருட்டுதான். மகாத்மா காந்தியடிகள் கூறுவார், உண்ணும் உணவுக்கேற்ற உடலுழைப்புச் செய்யாமல் உண்பதுகூடத் திருட்டுதான்.

ஒரு கிராமத்து விவசாயி, தன்னுடைய நிலத்தில் அந்த போகத்தில் அமோகமாக விளைந்த தானியங்களை மூட்டைகளாகக் கட்டி வண்டியில் ஏற்றி அருகிலிருந்த நகரத்துச் சந்தைக்கு வந்து விலைக்குப் போட்டார். அமோக விளைச்சல் என்பதால் பணமும் அமோகமாகக் கிடைத்தது. பணத்தை ஒரு மஞ்சள் துணிப்பையில் எடுத்துக்கொண்டு, வண்டியை கிராமத்துக்கு அனுப்பி வைத்துவிட்டுச், சந்தைக்கு அருகிலிருந்த சிவன்கோவிலுக்கு வந்து மனமுருக வழிபட்டார்; வீட்டுக்குக் கிளம்பும் அவசரத்தில் கோவில் சன்னதி அருகில் இருந்த திண்டில் பணப்பையை மறந்து வைத்துவிட்டார். அவர் அங்கிருந்து சென்றபிறகு, அந்த ஊரின் ஓய்வுபெற்ற ஆசிரியர் வழிபாட்டிற்கு வந்தார். வழிபாடு முடித்தபின் திண்டில் பணப்பை இருப்பதைப் பார்த்தார்; அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார்.

சுந்தர ஆவுடையப்பன்

ஆசிரியரின் வீடு கோவிலை ஒட்டியதாக இருந்தது. வீட்டிற்கு வந்த ஆசிரியர், ஒரு சிலேட்டில் இவ்வாறு எழுதினார்," கோவிலுக்குள் பணப்பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொலைத்தவர்கள் அடையாளம் கூறிப் பெற்றுக் கொள்ளலாம்". பணப்பை தொலைத்த விவசாயி, கோவிலுக்குள் நுழைந்து தேடினார்; காணவில்லை; கோவிலுக்கு வெளியே வந்தார்; ஆசிரியர் வீட்டு வாசலில் சிலேட்டில் எழுதப்பட்டிருந்த அறிவிப்பைப் படித்தார். உள்ளே சென்று அடையாளம் சொன்னார் விவசாயி. பையை எடுத்துவந்து விவசாயியிடம் தந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், பணம் சரியாக இருக்கிறதா? என எண்ணிப்பார்த்து எடுத்துச் செல்லுங்கள்! என்று தந்தார்.

எண்ணிப்பார்த்த விவசாயி, சரியாக இருக்கிறது என்று கூறிவிட்டுச், சரிபாதி பணத்தைக் கட்டுகளாக எடுத்து, இதை எனது அன்பளிப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள்! என்று ஆசிரியரிடம் நீட்டினார். " ஐயா இந்தப் பணத்தின்மீது எனக்கு ஆசை இருந்திருந்தால், உங்களுக்குத் தராமல் முழுப்பணத்தையும் நானே எடுத்து வைத்திருப்பேன்!. இது உங்கள் பணம்; நீங்களே எடுத்துச் செல்லுங்கள்!" என்றார் ஆசிரியர். சற்றும் எதிர்பாராத வண்ணம் பாதிப்பணத்தை ஆசிரியர் வீட்டு மேசையில் வைத்து விட்டு, வீட்டை விட்டு வெளியே ஓடத்தொடங்கினார் விவசாயி. உடனே ஆசிரியர்,"ஐயோ திருடன்! திருடன்!" என்று சத்தம்போட்டுக் கத்தத் தொடங்கி விட்டார்.

இங்கே விவசாயி எப்படித் திருடன் ஆனார்? அவர் பணத்தை அல்லவா விட்டுச் செல்கிறார்!. அக்கம் பக்கத்தார் ஆசிரியரிடம் வந்து கேட்டனர், "அவர் எதைத் திருடிக்கொண்டு செல்கிறார்?". ஆசிரியர் சொன்னார், " என்னுடைய நேர்மையை!.... இதுவரை நான் சம்பாதித்த நாணயத்தை!... இந்தப் பணத்தை இங்கே வைத்துவிட்டுச் செல்வதன் மூலம் திருடிக் கொண்டு செல்கிறார்" என்று.

ஆம்!. திருட்டு என்பது அங்கங்களால் நிகழ்த்தப்படும் பொருள் திருட்டு மட்டுமல்ல!; அடுத்தவரிடம் ஒரு நல்ல பொருள், விலைமதிக்கமுடியாத பொருள் இருந்தால், 'ஆஹா! திருடினால் என்ன?' என்று மனத்தால் திட்டமிட்டாலே திருட்டுதான்.

"உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்" என்பது வள்ளுவம்

தொடர்புக்கு 9443190098

Tags:    

Similar News