சிறப்புக் கட்டுரைகள்
null

உறுப்பு தானம் அறிவோம்

Published On 2024-08-24 15:47 IST   |   Update On 2024-08-24 15:48:00 IST
  • உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை எவ்வளவு நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும்.
  • மூளைதானம் மற்ற உறுப்பு தானத்தில் இருந்து வேறுபட்டது.

உறுப்புதானம் என்பது மனித இனத்திற்கே கிடைத்த ஒரு பெரும் வரம் ஆகும். ஒருவரின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு உறுப்பு செயலிழந்து விட்டால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் அவருக்கு வாழ்நாளை அதிகப்படுத்தித்தர முடியும் என்பது, மருத்துவத்துறையின் மிகப்பெரிய சாதனையாகும்.

இந்தியாவில் "நவம்பர் 27" அன்று உடல் உறுப்புதான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அதன் சிறப்பைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் இந்த நாள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த உறுப்பு தானத்தைப் பற்றி இப்பகுதியில் காணலாம்.

உடல் உறுப்பு தானம் என்றால் என்ன?: நோயுற்று, உடலுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, நலமாக இருக்கும் மற்றொருவர் தேவையான உடல் உறுப்பைத் தானமாக அளிப்பது மட்டு மல்ல, மூளைசாவு அடைந்த ஒருவரிடமிருந்தோ, இயற்கையாக இறந்தவரிடமிருந்தோ சில மணிநேரங்களுக்குள் உடல் உறுப்புகளை எடுத்து, தேவையானவர்களுக்கு (ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு) அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்துவது ஆகும்.

உடல் உறுப்பு தானம் எத்தனை வகைப்படும்?:

1. உயிருடன் இருக்கையில் கொடுப்பது:- இதில் நோயாளிக்கு அவரின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ, அவர்களின் முழு ஒப்புதலுடன் உடல் உறுப்புகளைத் தானமாக அளிப்பது. இவர்கள் தானமாக அளிக்கக்கூடிய உறுப்புகள்:- ஒரு சிறுநீரகம், கல்லீரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி.

2. மூளை சாவிற்குப் பிறகு கொடுத்தல்:- மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை அவரின் குடும்பத்தினரின் ஒப்பத்துடன் பெறுவது இவர்கள் தானமாக அளிக்கக் கூடிய உறுப்புகள்:- இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா), எலும்பு மஜ்ஜை, எலும்பு, இதயத்தின் வால்வுகள், தசைநார் (டெண்டன்) மற்றும் தோல்.

3. இறந்தபின் தானம் செய்வது:- இறந்த சில நிமிடங்களில் ஒருவரின் உடலில் இருந்து கண், தோல், எலும்பு மற்றும் தசைநார் (டெண்டன்) ஆகியவை தானமாகப் பெறப்படுகின்றன.

ஒரு சிலர் தன் வாழ்நாட்களுக்குப் பிறகு, தன் உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் கொண்டுள்ளனர். ஆனால் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியாமல் உள்ளனர், அவர்கள் தமிழ்நாடு அரசின் https://transtan.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் தன் உறுப்பைத் தானம் செய்வதற்குப் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.

உறுப்புதானம் செய்வதற்குத் தகுதியானவர்கள் யார்?:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

என்கிறார் திருவள்ளுவர்.

அன்பு இல்லாதவர் எல்லாவற்றையும் தமக்கே உரிமை உடையதாய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்.

18 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி, தாமாக முன் வந்து உடலுறுப்புத் தானம் செய்யலாம்.

நலமாக இருப்பவர்கள், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், மஞ்சள் காமாலை, ஊது காமாலை போன்ற நோய்கள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது ரத்ததானம் செய்வது போன்று உறுப்பு தானமும் செய்யத் தகுதியானவர்கள்.

உறுப்பு தானம் செய்பவர் மருத்துவமனையில் இறந்தால் உறுப்பு தானம் செய்ய எளிதாக இருக்கும். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவே அவரின் உடலில் இருந்து உறுப்புகள் அறுவைச் சிகிச்சையின் மூலம் எடுக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாற்று அறுவைச் சிகிச்சை செய்து, தேவையானோருக்கு உடனடியாகப் பொருத்தப்படுகிறது. இதற்கான காலத்தேவை பற்றிக் கீழே பார்ப்போம்.

உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை எவ்வளவு நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும்?: ஒருவரிடமிருந்து பெறப்பட்ட உறுப்பை, மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் யாருக்குத் தேவையோ அவர்களுக்கு, குறிப்பிட்ட நேரத்திற்குள் பொருத்திவிட வேண்டும், குறிப்பாகச் சில உறுப்புகள் இவ்வளவு நேரத்திற்குள் மாற்றிவிட வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஏனென்றால் அதற்கு மேல் பொருத்தப்படும்போது, அந்த உறுப்புகள் தம் செயல்படும் திறனை இழந்துவிடுகின்றன.

மரு.அ.வேணி

சிறுநீரகம் : 48-72 மணி நேரம் வரை

கல்லீரல் : 12-18 மணி நேரம் வரை

இதயம் : 5 மணி நேரம் வரை

இதயம் / நுரையீரல் : 5 மணி நேரம் வரை

கணையம் : 8-12 மணி நேரம் வரை

கண் விழித்திரை (கார்னியா) : 10 நாட்கள் வரை

எலும்பு மஜ்ஜை : கால அளவு மாறும்

குடல் : 8 மணிநேரம்

தோல் : 5 வருடமும், அதற்கு மேலும்

எலும்பு : 5 வருடமும், அதற்கு மேலும்

இதயத்தின் வால்வுகள் : 5 வருடமும், அதற்கு மேலும் பாதுகாத்து, வைத்து பயன்படுத்தலாம்.

ஒருவரிடம் இருந்து பெறப்படும் உறுப்புதானம் எட்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

உறுப்புதானம் எல்லோருக்கும் பொருந்துமா? பொதுவாகவே நம் உடம்பிற்கு ஓர் இயல்பு உண்டு, தனக்குப் பொருந்தாத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், ஒதுக்கிவிடும். இதற்குக் காரணம் நம் உடலின் எதிப்பாற்றல்தான் (ரத்தத்திலுள்ள ஆன்டிபாடி). அதனால்தான் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் 'பிளாஸ்மாபெரிஸிஸ்' என்ற முறை மூலமும், சில மருந்து மாத்திரைகளின் மூலமும், உடலில் உள்ள எதிர்ப்பாற்றலைக் குறைத்து விட்டுத்தான் பொருத்தப்படுகின்றன. அப்போதுதான் அந்த உறுப்பைப் பொருத்தப்பட்டவரின் உடல் ஏற்றுக் கொள்கிறது. இரத்ததானம் செய்வதற்கு முன்பு இரத்த ஆய்வு செய்வதுபோல், உறுப்புதானம் செய்வதற்கு முன்பும் உறுப்புப் பொருத்தம் உள்ளதா? இல்லையா? என்று ஆய்வு செய்த பிறகுதான் தானம் பெறப்படுகிறது.

மூளைதானம் செய்ய முடியுமா?:

மூளைதானம் மற்ற உறுப்பு தானத்தில் இருந்து வேறுபட்டது. இன்றளவும் மூளைதானம் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதை மற்றொருவருக்கு பொருத்த முடியாது.

கண்தானம்;

வயது, பாலினம் மற்றும் ரத்தப்பிரிவு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் யார் வேண்டுமானாலும் தங்கள் கண்களைக் கொடுக்கலாம். இறந்த ஒரு மணிநேரத்திற்குள் கார்னியாவை அகற்ற வேண்டும். தானம் செய்யப்பட்ட நபரின்கண்கள், இரண்டு கண் பார்வையற்றவர்களின் பார்வையைக் காப்பாற்றும். கண்களை அகற்றுவதற்கு 10-15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். உறுப்புதானத்தில் மிக அதிகமாகத் தேவைப்படுவது, சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகும். தற்போது மாறியுள்ள உணவுக் கலாச்சாரத்தில் கல்லீரலின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. காற்றுமாசுபாடு மற்றும் புகைப்பழக்கத்தால் இரண்டு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையும் தற்போது தேவைப்படுகிறது. நாம் விரும்பும் ஒருவரின் இறப்பும் அவரை நம்மிடம் இருந்து பிரித்துவிட முடியாதவாறு, அவரின் உறுப்புகளைத் தானம் செய்வதன் மூலம் என்றுமே அவர் நம் வாழ்நாள் வரை இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்து வதற்கு இந்த உறுப்பு தானம் பெரிதும் உதவுகிறது என்றே நினைக்கிறேன்.

எனவே இதைப் படிக்கும் நீங்கள் உங்கள் வாழ்நாட்களுக்குப் பிறகு தானம் தரப் பதிவு செய்து கொள்ளுங்கள். வாழும்போது மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பின்னும் நாம் பிறருக்குப் பயன்படுமாறு வாழலாமே!

செல்: 75980-01010, 80564-01010.

Tags:    

Similar News