சிறப்புக் கட்டுரைகள்

மீனா மலரும் நினைவுகள்... அறுபட்ட விரலும், கொட்டிய ரத்தமும்!

Published On 2024-08-12 16:40 IST   |   Update On 2024-08-12 16:40:00 IST
  • நடிகர் ராஜசேகருடன் நான் நடித்த படம்.
  • மலேசியாவில் லங்கா என்ற இடத்தில் ஷூட்டிங்.

ஆ.... கை.... கை...

என்று நான் சத்தம் போட்டதை கேட்டு எல்லோரும் என் அருகில் ஓடி வந்தார்கள். எனது இடது கை மோதிர விரலில் அறுபட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

அய்யய்யோ... என்னம்மா... என்னாச்சு? என்று எல்லோரும் பதறிப்போனார்கள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை சொல்லும் நிலையில் நான் இல்லை.

நடிகர் ராஜசேகருடன் நான் நடித்த படம். மலேசியாவில் லங்கா என்ற இடத்தில் ஷூட்டிங். அதில் ஒரு காட்சியில் நான் காரின் முன்பக்கம் பேனட்டில் அமர்ந்து இருந்து ஆட வேண்டும். அவர் காரை மெதுவாக ஓட்ட வேண்டும். காட்சி இது தான்.

ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் நல்லாத்தான் இருந்தது. திடீரென்று அவர் பிரேக் போட்டதும் பேனட்டில் இருந்த நான் தடுமாறி கீழே விழப் போனேன். உடனே காரின் வைப்பரை பிடித்ததில் கைவிரல் அறுபட்டு ரத்தம் கொட்டியது.

உடனே அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். டாக்டர் பார்த்து விட்டு காயம் பெரியதாக இருந்ததால் கை விரல்களை சேர்த்து கட்டையும் பெரிதாக போட்டு விட்டார்.

காயம் சில நாட்களில் ஆறி விடும். ஆனால் மறுநாள் ஷூட்டிங்கில் நடிப்பது எப்படி என்ற கவலை எனக்கு. அதுவும் பாடல் காட்சிக்கு ஆட வேண்டும். கையில் போட்டிருந்த கட்டு தெரியவும் கூடாது.

கடைசியில் சேலையின் முந்தானை தலைப்பை இடது கையின் மேல் போட்டு கையை வெளியே தெரியாமல் வைத்துக் கொண்டு வலது கையை மட்டும் அங்கும் இங்கும் அசைத்து ஆடி முடித்தேன்.

சுந்தர்.சி டைரக்ஷனில் நானும் சரத்குமாரும் ஜோடியாக நடித்த படம். இந்த படத்தின் பாடல் காட்சிகள் சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையில் படமாக்கப்பட்டது. ரொம்ப ஜாலியாக இருந்தது.

ஆல்ப்ஸ் மலைத் தொடர் 1,200 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மிக நீண்ட மலைத் தொடர். இந்த மலைத் தொடரில் மொத்தம் 82 சிகரங்கள் இருப்பதாக கூறினார்கள்.


பனி நிறைந்த இந்த மலைத் தொடரை பார்த்து ரசிக்கவும், பனிச்சறுக்கு விளையாடவும் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். அந்த மலைத் தொடரில்தான் எங்களுக்கும் படப்பிடிப்பு. பனிமலை முகடுகளின் வழியாக நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்ல முடியாது. படப்பிடிப்பு குழுவினர் கேமராக்கள் மற்றும் உபகரணங்களை தோளில் தூக்கி சுமந்தபடிதான் செல்வார்கள்.

நானும் என்னால் சுமக்க முடிந்த அளவுக்கு பொருட்களை தூக்கி சுமந்து செல்வேன். ஹீரோ, ஹீரோயின் டெக்னீஷியன் என்று எங்களுக்குள் எந்த பாகுபாடும் பார்ப்பது கிடையாது.

எல்லோரும் ஒரு குடும்பம்போல் இருப்போம். ரொம்ப ஜாலியாக ஒவ்வொரு நாளும் சென்றது. ரோடுகள் பெரும்பாலும் கருங்கற்களால் அமைக்கப்பட்டிருக்கும். தார் ரோடுகளை நான் பார்த்தது இல்லை. அந்த கருங்கல் ரோடுகளில் நடப்பது சிரமமாக இருக்கும். ஆனால் சரத் வேகமாக நடப்பார்.

நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பஸ்சில்தான் மொத்த குழுவினரும் படப்பிடிப்புக்கு செல்வோம். நான் பஸ்சில் செல்லும் போதே மேக்-அப் போட்டுக் கொள்வேன். மேக்-அப் சாதனங்களும் இந்த காலத்தை போல் அப்போது விதவிதமாக கிடையாது. 'பான்கேக்' வைத்திருப்போம். சுவிட்சர்லாந்திலோ உறைய வைக்கும் குளிர்காலம். அந்த குளிரில் அது உறைந்து இருக்கும் முகத்தில் அப்படியே தேய்க்க முடியாது. அப்புறம் தண்ணீரை சுட வைத்து அதில் தொட்டு தொட்டு தடவுவேன்.

கை, முதுகு, இடுப்பு, வயிறு.... அதாவது கேமரா கண்களில் எந்தெந்த பகுதிகள் படுமோ அந்த பகுதிகள் முழுவதும் மேக்கப் போட வேண்டும்.

குளிர்ந்து இருக்கும் பான்கேக்கை வைத்து தடவினால் சில்லென்று நடுங்க வைக்கும். எனவே அந்த பகுதிகள் முழுவதும் சூடு தண்ணீரை தொட்டு தொட்டு மேக்-அப் போடுவேன்.

முக்கியமாக காஸ்ட்யூம் மாற்றுவதில் தான் பிரச்சனை. சரத் படக்குழுவினருடன் பஸ்சுக்குள்ளேயே காஸ்ட்யூமை மாற்றிக் கொள்வார்.

நான் அருகில் இருக்கும் பாத்ரூமுக்கு ஓடுவேன். அந்த நாட்டில் பாத்ரூமை பார்த்தால் முகம் சுளிக்க வைக்காது. அவ்வளவு சுத்தமாக பராமரிக்கிறார்கள்.

அதனுள் சென்றுதான் உடை மாற்றி விட்டு வருவேன்.

பாராட்டு என்பது கலைஞர்கள் எல்லோரும் எதிர் பார்ப்பது தானே! ஆனால் ஷீட்டிங்கில் ஏதாவது பாடல் காட்சியில் சரத் கொஞ்சம் நன்றாக ஆடிவிட்டால் போதும்... உடனே கை தட்டி பாராட்டுவார்கள்.

நானும் தான் உயிரை கொடுத்து ஆடுவேன். ஆனால் யாரும் கைதட்டி பாராட்ட மாட்டார்கள். அதற்காக கோபப்பட்டும் இருக்கிறேன். 'என்ன ஹீரோ ஆடினா பாராட்டுவீங்க. ஹீரோயின் ஆடினா பாராட்ட மாட்டீங்களா? என்ன சார் நியாயம் இது என்று சண்டையும் போட்டிருக்கேன். உடனே அவர்கள் அப்படியெல்லாம் இல்லை மேடம் என்று ஜகா வாங்கி விடுவார்கள்.

சரத் என்னிடம், 'உன்னை யாருப்பா நல்லா ஆடலைன்னு சொல்ல முடியும்?' என்று மழுப்புவார்.

'ஜம்போ இது காதல் செய்யும் நேரம்

நீ அளவாக வெட்கப்படு...

ஜம்போ இது காதல் செய்யும் நேரம்

நீ இடம் பார்த்து என்னைத் தொடு.... என்ற பாடல் காட்சி முழுக்க சுவிட்சர்லாந்தில் படமாக்கப் பட்டது. சுவிட் சர்லாந்தின் இயற்கை சூழ்ந்த பின்னணியிலும், அழகிய கட்டிடங்களின் பின்னணியிலும் எடுக்கப்பட்ட ஒவ்வொரு ஷாட்டும் மறக்க முடியாதவை.

சுவிட்சர்லாந்தின் கண்ணை கவரும் இயற்கை காட்சிகள்எ ன்றும் நினைவில் நிற்கும்....

பொது வாகவே ஐரோப்பிய நாடுகளில் கட்டிடங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். லண்டனுக்கு சென்றால் கட்டிடங்கள் பார்க்க அழகாக இருக்கும். அதே நேரம் அமெரிக்கா என்றால் பிரமாண்டம். எல்லாம் பெரிது பெரிதாக இருக்கும்.

மீண்டும் ஒரு தகவலுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன். பை... பை....

(தொடரும்....)

Tags:    

Similar News