சிறப்புக் கட்டுரைகள்
null

வாய்ப்பு வரும்போதே வாழ்ந்து விடுக!

Published On 2024-08-11 16:12 IST   |   Update On 2024-08-11 16:15:00 IST
  • வாய்ப்பு வாய்க்கும் வரை காத்திருந்தே ஆகவேண்டும்.
  • சிலர் ஒவ்வொன்றுக்கும் ஒரு கால அட்டவணை தயாரித்து வைத்திருப்பார்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் வாய்ப்பாகக் கருதக்கூடிய வாசகப் பெருமக்களே! வணக்கம்.

வாழ்க்கையில் எல்லோரும் முனைப்போடு செயலாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்; ஆனால் அவையெல்லாவற்றிலும் வெற்றி கிட்டி விடுகிறதா?. சிலவற்றில் தொடங்கியவுடன் தோல்வி!; சிலவற்றில் பாதிவரை வெற்றி! பாதிக்குப்பின் படுதோல்வி!; சிலவற்றில் இறுதிவரை வெற்றி; ஆனால் எல்லைக் கோட்டை எட்டிப்பிடிக்கும்போது பேரிடியாகும் பெரும்தோல்வி!; இப்படித் தோல்விகள் தொடர்ந்து வரக் காரணங்கள் என்ன?.

எல்லாம் சரியாக இருந்தும் வாய்ப்பு வாய்க்காமல் போனதே தோல்விக்குக் காரணம் என்று சிலர் சொல்லலாம். அது என்ன வாய்ப்பு?. வாய்ப்பது வாய்ப்பு!; அடடே! அவ்வளவுதானா?. ஆமாம் அவ்வளவுதான். ஆனால் எவை வாய்ப்பது வாய்ப்பு?. ஒரு செயலை அல்லது ஒரு தொழிலைச் செய்யும்போது அதற்கான முதலீடு வேண்டும்/ உரிய திட்டமிடல் வேண்டும்; நேரமும் இடமும் பொருந்தி வர வேண்டும். நேரம் என்றால் ராசிபலன் கணிப்பதல்ல; ஒரு தேநீர்க்கடை தொடங்குவதற்குக் கூட அது குளிர்காலமாக இருக்க வேண்டும். ஏசி மிஷன் விற்கும் விளம்பரத்தைக் கோடைகாலத்தில் போட்டால் தான் விற்பனை நம்மைக் குளிர்விப்பதாக இருக்கும். ஆக, காலம், இடம், கருவி ஆகியவற்றின் துணை கொண்டு வாய்ப்புகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

வாய்ப்பு இரு வகையில் வரும்; ஒன்று அதுவாக வருவது; வாய்ப்பது!. மற்றொன்று நாமே உருவாக்கிக்கொண்டு அதற்கேற்ப வெற்றிகளையும் லாபங்களையும் குவிக்கத் திட்டமிடுவது. எப்படியாயினும், அதுவாக வாய்க்கும் வாய்ப்பிற்கே வீரியம் அதிகம். தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வெற்றியை நிர்ணயிக்கும் வாய்ப்பு வருகிறது. ஆண்டு முழுவதும் வகுப்பறைகளில் கற்றவற்றை ஆண்டுக்கு ஒருமுறை தேர்வாக எழுதித் தமது அறிவின் திறத்தை வெளிப்படுத்திக் காட்டும் வாய்ப்பே தேர்வு. நல்ல பணிவாய்ப்பைப் பெறுவதற்கான தருணங்களைப் போட்டித் தேர்வுகள் உருவாக்கித் தருகின்றன.

எது எப்படியாயினும், வெற்றியாளர்களாகச் சாதிக்க விரும்புபவர்கள், வாய்ப்பு வாய்க்கும் வரை காத்திருந்தே ஆகவேண்டும் . அந்தக் காத்திருப்பும் எப்படி இருக்கவேண்டும்? என்பதற்கு ஓர் அழகிய உதாரணத்தைக் காட்சிப்படுத்திக் காட்டுகிறார் திருவள்ளுவப் பெருந்தகை. குளக்கரைகளில், ஆற்றுப் படுகைகளில் ஓடுமீன் ஓட, உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு. அதுவும் ஒற்றைக்காலை ஊன்றி, மற்றொரு காலைத் தூக்கித், தனது நீண்ட கூரிய அலகைத் தண்ணீர்ப் பரப்பளவோடு சமமாக்கி வைத்து, எந்த நேரத்தில் வாய்த்தாலும் அந்த மீனை ஒரே குத்தில் குத்தித் தூக்கிவிடும் விழிப்புணர்வோடு காத்திருக்குமாம் கொக்கு.

கொக்கொக்கக் கூம்பும் பருவத்து

மற்று அதன்

குத்தொக்கச் சீர்த்த இடத்து.

வாய்ப்புக்காகக் காத்திருத்தல் என்பது தூங்கி வழிந்துகொண்டு சோம்பேறியாகச் செயலின்றி இருப்பதல்ல; தனக்குரிய வாய்ப்பு வரும்வரை, விழிப்புணர்வோடு கவனமாகக் காத்திருப்பது; வாய்த்தவுடன் கொத்தித் தூக்கிவிடும் வீரியத்தோடும் சுறுசுறுப்போடும் காத்திருப்பது ஆகும்.

வாழ்க்கையில் சிலபேரைப் பார்த்திருப்போம்; ஐம்பது வயதுவரை எந்த வாய்ப்புமே வாய்க்கவில்லை; இன்னமும் காத்துக்கொண்டேதான் இருக்கிறோம் என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். நான் படித்த படிப்பிற்கான வேலை இன்னும் கிடைக்கவில்லை; அதனால் வேலைக்குப் போகாமல் காத்திருக்கிறேன்; நான் எதிர்பார்த்த மாதிரி மணமகளோ, மணமகனோ கிடைக்கவில்லை; அதனால் திருமணம் செய்துகொள்ளாமல் காத்திருக்கிறேன்; வீடு வாசல் வாங்குவதற்கேற்ற வருமானத்தை இன்னும் எட்டிப் பிடிக்கவில்லை; அதனால் சொந்த வீடு வாங்காமல் காத்திருக்கிறேன்; இப்படி எதற்கெடுத்தாலும் காத்திருப்பவர்களுக்குக் காத்திருப்பதே சுகமாகிப் போகுமேயொழிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது வாய்க்காமலேயே போய்விடும்.

சுந்தர ஆவுடையப்பன்

ஒரு கிராமத்தில் ஒருவர் ஜல்லிக்கட்டு சமயத்தில் ஒரு போட்டி அறிவித்தார்; தான் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்போகும் மாட்டைப் பிடிப்போர்க்குப் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்றார். ஜல்லிக்கட்டு என்றால் மாட்டின் திமிலையும் கொம்பையும் பிடித்து அடக்க வேண்டும்; ஆனால் இந்தப்போட்டியில் சில சலுகைகளையும் அறிவித்தார். அதாவது வருகிற மாட்டின் கொம்பையோ திமிலையோ பற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; ஆனால் மாட்டின் வாலைத் தொட்டாலே போதும்; இதில் மேலும் ஒரு சலுகை என்னவென்றால், ஒரு மாட்டிற்குப் பதிலாக வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக மூன்று மாடுகள் வரும்; இவற்றில் ஏதேனும் ஒரு மாட்டின் வாலைத் தொட்டாலும் பரிசுத்தொகை உண்டு என்றார்.

மாட்டின் வாலைத் தொட்டுப் பரிசினை வெல்ல நான் ரெடி! என ஒரு வீராதிவீரன் வந்து களத்தில் நின்றான். வாடிவாசல் வழியே மிகக் கூர்மையான கொம்புகளுடன் சீறிப்பாயும் மூச்சொலியுடன் பருத்த ஒருமாடு வந்து நின்றது; பார்த்தான் வீரன்! நமக்குத்தான் மூன்று வாய்ப்பு இருக்கிறதே! என்று எண்ணி, அந்த அடங்காத காளையைத் தொட்டுக்கும்பிட்டு அனுப்பி வைத்து விட்டான். இரண்டாவது மாடு வாடி வாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டது; அந்த மாடும் முந்தி வந்த மாட்டில் முக்கால் பங்கில் இருந்தது; அடுத்து வரும் மாடு இதில் பாதியாக வரும்; அப்போது பார்த்துக்கொள்வோம் என்று நினைத்து இந்த மாட்டையும் பிடிக்காமல் விட்டுவிட்டான்.

மூன்றாவது மாடு வாடிவாசலை வந்து எட்டிப் பார்த்தது; வீரன் இந்தப் பக்கத்திலிருந்து எட்டிப் பார்த்தான். அவன் நினைத்தது போலவே பலவீனமான ஒரு கன்றுக்குட்டியே வந்து நின்றிருந்தது. "அவிழ்த்து விடட்டும்; வால் மட்டுமென்ன? மாட்டின் கொம்பு திமில் எல்லாவற்றையும் பிடித்துப் பரிசுத்தொகையைப் பெற்றுவிடுவோம்" என்று ஆவலோடு காத்திருந்தான் வீரன். அந்தோ பரிதாபம்! வாடிவாசல் வழியே வெளியே வந்த மாட்டிற்கு வாலே இல்லை!; அந்த வீரன் இப்போது எதைப்பிடித்துப் பரிசைப் பெறுவான்?.

இப்போதெல்லாம் நாம் இப்படித்தான் அடுத்த வாய்ப்பு சுலபமாகக் கிட்டும் என்று எண்ணி எண்ணி, இருக்கிற எளிய வாய்ப்புகளையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம். வெற்றிகளை ஈட்டித்தரும் சாதனை வாய்ப்புகள் எல்லாம் எளிமையாக வாய்த்து விடுவதன்று. தேர்வு எழுதத் தரப்படும் வினாத்தாள்களில் கேள்விகள் விருப்ப அடிப்படைகளில் தேர்வு செய்துகொள்ளும்படி அமைந்திருப்பதையே மனம் விரும்பினால், கடின முயற்சிகளில் ஈடுபட்டு அரிய சாதனைகளைப் புரிவது எவ்வாறு?.

திருவிழா நாள்களில் பெரும் நகரங்களிலிருந்து தமது சொந்த ஊருக்குச் செல்வோர் பேருந்தைப் பிடிப்பதற்காகப் பேருந்து நிலையங்களில் கூடுவர். தமது ஊருக்குச் செல்ல வருகிற பேருந்துகளெல்லாம் கட்டுக்கடங்காத கூட்டத்தோடு வந்தால், கூட்டம் குறையட்டும் அதன்பிறகு ஏறிக்கொள்ளலாம்! என்று காத்திருக்கத் தொடங்கினால் அன்று இரவு முழுவதும் கூட்டம் குறையப் போவதுமில்லை; நாம் ஊருக்குப் பேருந்தில் செல்லப் போவதுமில்லை. அதே நேரத்தில், திருவிழாநாள்களில் ஊருக்குச் செல்வதற்கான பேருந்து, ரெயில் முன்பதிவு எப்போது திறக்கப்படுகிறது? எனக் கவனத்துடன் காத்திருந்து திறந்தவுடன் முன்பதிவு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்: அதுதான் வாய்ப்பை முன்கூட்டியே திட்டமிட்டுக், காலம் வரும்போது பயன்படுத்திக் கொள்ளும் கவனம்.


சிலர் ஒவ்வொன்றுக்கும் ஒரு கால அட்டவணை தயாரித்து வைத்திருப்பார்கள்.

படிப்பை எந்த வயதில் முடிப்பது; வேலை வாய்ப்பை எந்த வயதில் பெறுவது; பிறகு திருமணம், குழந்தை பெற்றுக்கொள்வது, வீடு வாங்குவது… இப்படி ஒவ்வொன்றுக்கும் கால அட்டவணை தயாரித்து அதன் படியே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சம்பாதிப்பதற்கு ஒரு காலம்; சேமிப்பதற்கு ஒரு காலம்; தர்மம் செய்வதற்கு ஒருகாலம். இடையில் எந்த மாற்றம் வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமும் இல்லாமல் இருப்பார்கள். திட்டமிடுவது நல்லதுதான்; ஆனால் திட்டமிட்டபடியா எல்லாமே வாழ்க்கையில் நடக்கின்றது?. திட்டமிட்டபடி எதுவும் நடக்காமல் போவதுதானே வாழ்க்கையில் சுவாராஸ்யம்!.

வாய்ப்புகளை நோக்கிக் காத்திருப்பது என்பது பெரும்பெரும் லட்சியங்களுக்கு வேண்டுமானால் ஒத்துப் போகலாம்; அன்றாட வாழ்வியலில் ஒரு வாய்ப்புத் தவறிப்போனால், அடுத்து வருகிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை. சிலர் வாய்ப்பைத் தேடி அலையோ அலையென்று அலைந்து கொண்டிருப்பார்கள்; தேடிய வாய்ப்புகள் கைக்கு அகப்படாதபோது, உள்ளங்கைக்குள் ஓடிவந்து உட்காருகிற வாய்ப்பை உதாசீனப் படுத்தலாமா?.

ஒரு நிறுவனமோ, ஒரு தொழிலோ, ஒரு குடும்பமோ, ஒரு தனி மனிதனோ வெற்றி வாய்ப்பைப் பெற வேண்டுமானால் நான்கு நிலைகளில் அவர்களின் தன்மைகள் ஆராயப்பட வேண்டும். முதலில் அவர்களின் 'பலம்' என்ன? என்பது கண்டறியப்பட வேண்டும்; அடுத்து அவர்களின் 'பலவீனம்' ஆராயப்பட வேண்டும்; மூன்றாவதாக,'வாய்ப்புகள்' குறித்து யோசிக்கப்பட வேண்டும்; நிறைவாக இந்தச் செயல் முடிந்த பிறகோ அல்லது முன்போ ஏற்படப்போகும் அச்சுறுத்தல்கள் ஆராயப்பட்டு களையப்பட வேண்டும். எப்படியாயினும் வாய்ப்புள்ளபோதே அது சிறியதோ பெரியதோ உடனே பற்றிக்கொண்டு முன்னேறும் குணம் முதன்மையானதாக இருக்க வேண்டும்.

ஓர் அழகிய சிறிய குருவி காட்டில் கனவு கண்டது; ஓர் அழகிய அருவி, இனிய நீரோடை, பூத்துக்குலுங்கும் மலர் வனங்கள், நெடிதுயர்ந்த மலைகள், பசுமைப் பள்ளத் தாக்குகள், சண்டையிட்டுக்கொள்ளாத உயிரினங்கள். கனவில் பார்த்த இந்த இடம் எங்கே இருக்கிறது?. ஒரு யானையிடம் கேட்டது. அந்த இடம் எனக்குத் தெரியும்; ஆனால் அந்த இடத்திற்கான வழியை நான் சொல்ல வேண்டுமானால், உன்னுடைய சிறகில் ஒன்றைப் பரிசாகத் தரவேண்டும்!. அப்படியே தருகிறேன்!. சிறகு தந்து பறந்து சென்றது. கொஞ்ச நேரத்தில் குருவிக்கு வழி மறந்துபோனது. அங்கிருந்த ஒர் பட்டாம்பூச்சியிடம் வழி கேட்டது; பட்டாம்பூச்சியும் பரிசாகச் சிறகு ஒன்றைப் பெற்றுக்கொண்டு வழிகூறிப் பறந்து சென்றது.

கொஞ்சதூரம் சென்றதும் குருவிக்கு வழி மறந்துபோய்விட்டது; பிறகு கனவில் கண்ட இடத்திற்கான வழியைப் பாம்பு, சிங்கம், மான், குரங்கு போன்ற விலங்குகளிடம் கேட்டுப் பரிசாக ஆளுக்கொரு சிறகை வழங்கிக்கொண்டே சென்றது. இப்போது கண்ணுக்கெட்டிய தூரத்தில் அந்த இடம் வந்து விட்டது. இன்னும் இரண்டுமணிநேரம் பறந்தால் அந்த இடத்தைக் குருவியால் அடைந்துவிட முடியும். ஆனால் அந்த இரண்டுமணிநேரப் பறத்தலுக்கான தெம்பு அந்தக் குருவியிடம் இல்லை; ஏனெனில் தன்னிடம் இருந்த சிறகுகளையெல்லாம் வழி கேட்பதிலேயே பரிசாக வழங்கிச் செலவழித்து விட்டது.

இப்படித்தான் வாழ்க்கையில் நம்மில் பலரும் வருகின்ற வாய்ப்பையே பயன்படுத்தி வாழ்ந்து விடாமல், தெம்புள்ள போது வீணே செலவழித்துவிட்டு, கடைசியில் தொடமுடியாத வாய்ப்பை எண்ணி வீழ்ந்து போகிறோம்.

வாய்ப்புகளை வாய்ப்பாக்கி வாழ்ந்து மகிழ்வோம்!

தொடர்புக்கு 9443190098

Tags:    

Similar News