சிறப்புக் கட்டுரைகள்
null

பேரானந்த நிலை தரும் தவம்!

Published On 2024-08-10 16:30 IST   |   Update On 2024-08-10 16:30:00 IST
  • தியான பயிற்சிகள் மூலம் மனம் அமைதியாகும்.
  • தியானம் என்பது வெறும் கண்களை மூடி கொண்டு செய்வது அல்ல.

தியானம் என்றால் என்ன என்பதற்கு பதிலாக வருவது, தியானம் என்பது எண்ணங்கள் அற்ற நிலை. தன்னை மறந்த நிலை, தன்னை அறிதல், அமைதி நிலையில் இருத்தல் என்று பல வகைகளில் கூறுவர்.

மகரிஷி தியானம் என்பது நமக்குள்ளாக இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்கின்றார். அப்படி அந்த நிகழ்வை நடத்துவதற்கு நமக்கு ஒரு குரு தேவைப்படுகிறார். குரு என்பவர் நம்மை ஒளிரச் செய்பவர் என்று பொருள். நம்முள் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துபவர்.

தியானம் என்றால் பற்றற்ற நிலை என்று பொருள் உண்டு. இந்த பற்ற நிலைக்கு வர வேண்டும் என்றால் தியானத்தில் படிப்படியாக முன்னேற வேண்டும். விஞ்ஞான ரீதியில் சொல்ல வேண்டும் என்றால் மனதின் அலைசூழல் வேகத்தை குறைத்து அந்த நிலையிலேயே நிற்பது தான் தியானம். இந்த நிலையில் மனம் அமைதி பெறுகிறது.

மனம் சரியில்லை என்றால் மற்ற இரண்டும் கெட்டுவிடும். தியானம் என்பது ஒன்று என்றாலும் , அது படிப்படியாக நம்மை உயர்த்த ஒன்பது வகையான தியானங்களை வேதாத்திரி மகரிஷி கொடுத்தார். அவற்றைப்பற்றி பார்ப்போம்.

கண்களுக்கு புலப்படாமல் நம்மை ஆட்டுவிக்கும் ஒன்று உள்ளது என்றால் அது நம் மனம் தான். மனம் என்றால் என்ன? உதாரணத்திற்கு ஒரு பூக்கடைக்கு சென்று கதம்பம் ஒரு முழம் கொடுக்கும் படி கேட்கிறோம். ஆனால் உண்மையிலேயே கதம்பம் என்கின்ற பூ ஒன்று உள்ளதா என்றால் இல்லை. அப்படி என்றால் ஏன் அந்த பெயர் வந்தது? பல மலர்களின் தொகுப்பு கதம்பம் என்கின்றோம். அதுபோல பல எண்ணங்களின் தொகுப்பு தான் மனம்.

இந்த மனதின் அபாயம் என்னவென்றால், அது எப்போதும் சுகத்தையே நாடும். மனதிற்கு அமைதி, இன்பம், சாந்தி, சுகம், பேரின்பம் என்று பல பெயர்கள் உண்டு. அப்படி என்றால் மனிதன் என்பவன் யார் என பார்த்தால், மனம் இதமானவர்கள் மனிதர்கள் எனப்படுகின்றனர். மனம் இதமானால் என்ன நடக்கும் என்றால் நினைப்பது நடக்கும். மேலும் கேட்டது கிடைக்கும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? எப்போதும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருக்கிறோம். முகத்தில் எப்போதும் ஒரு இறுக்கம் உள்ளது. இதனால் மனம் ஆனது அதிக அழுத்தத்திற்கு உட்பட்டு, உடல் இயக்கம், மன இயக்கம் இரண்டையும் கெட வைத்து உயிர் இயக்கத்தை பாதிக்கிறது. அப்படி என்றால் நாம், நம்முடைய செயல்கள் மூலமாக நம்மை நாமே தண்டித்து கொள்கிறோம்.

இதில் இருந்து விடுபட வழி உண்டா என்றால் உள்ளது. அது தான் தற்கால வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு நான் யார் என்பதை அறியும் அற்புதமான தியானப் பயிற்சி முறைகளை வேதாத்திரி மகரிஷி உருவாக்கி உள்ளார். இந்த தியான பயிற்சிகள் மூலம் மனம் அமைதியாகும்.

தியானம் என்பது வெறும் கண்களை மூடி கொண்டு செய்வது அல்ல. அப்படி செய்தால். உடல் மட்டும் தியானம் செய்யும் இடத்தில் இருக்கும். மனம் ஆனது பல எண்ணங்களாக விரிந்து புற உலகோடு தொடர்பு கொண்டு வியாபாரம் செய்து கொண்டு இருக்கும். இதனால் மனம் அதன் தன்மையான இதத்தை பெறாது. அப்படி என்றால் தியானத்தை எந்த முறையில் செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழும். இதற்கு விடையாக வருபவர் தான் வேதாத்திரி.

1.ஆக்கினைத் தவம் 2.சாந்தி தவம் 3.துரியம் தவம் 4.பஞ்சேந்திரிய தவம் 5.பஞ்சபூத நவக்கிரக தவம் 6.துரியாதீத தவம் 7.ஒன்பது மைய தவம் 8.நித்தியானந்த தவம் 9.இறைநிலை தவம் என்று ஒன்பது வகையான தவங்கள் உண்டு. இந்த தவ முறைகள் ஒரு மனிதரை மாமனிதர் ஆக்கும். எப்படி என்று ஆராய்ச்சி செய்தால் வியப்பாக இருக்கும்.

ஆக்கினை தவம் என்பது வாழும் காலத்திலேயே உயிரை உணரும் தவம் ஆகும் பொதுவாக ஒரு மனிதர் இறக்கும் தருவாயில் தான் தன் உயிரை உணர்வார். ஆனால் இந்த தவத்திலே வாழும் காலத்திலேயே உயிரை உணர முடியும்.

இரண்டாவதாக சாந்தி தவம் என்பது உணர்ந்த உயிருக்குள் உள்ள அமைதியை உணரும் தவம் ஆகும்.

மூன்றாவதாக எந்த உயிருக்குள் அமைதியை உணர்ந்தோமோ அந்த மன அலை சுழல் வேகத்திலேயே உயிரோடு ஒடுங்கி நிற்கின்ற தவம் தான் துரியம்.

நான்காவதாக மனம் ஆனது உயிரோடு ஒடுங்கி இருக்க வேண்டும் என்றால் ஞான இந்திரியங்கள் என்று சொல்கின்ற தோல் தொடு உணர்வு, நாக்கு சுவை உணர்வு, மூக்கு சுவாச உணர்வு, கண் பார்வை உணர்வு மற்றும் காது ஓசை உணர்வு இந்த ஐந்து புலன்களும் நமமுடைய கட்டுக்குள் இருக்க வேண்டும். அப்படி இந்த புலன்களை புற உலகத்தோடு உள்ள தொடர்பை குறைத்து அக உலகத்திற்கு திருப்பும் தவம் தான் பஞ்சேந்திரிய தவம்.

ஐந்தாவதாக நம் வாழ்க்கையானது கர்ம வினை பதிவுகளின் படி கோள்களின் சுழற்சி அலைசூழல் வேகத்திற்கு ஏற்றவாறு வாழ்க்கையில் இன்ப துன்ப நிகழ்வுகளை நாம் அனுபவிக்கிறோம். கோள்கள் சாதகமாக இருந்தால் நன்மைகளும் பாதகமாக இருந்தால் துன்பங்களும் நேரிடும். எனவே எப்போதும் இந்த கோள்களை நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் தவம் தான் பஞ்சபூத நவகிரக தவம் ஆகும்.

ஆறாவதாக எந்த கோள்கள் நம் வாழ்க்கையை தசை மற்றும் புத்தியின் மூலமாக தீர்மானிக்கிறதோ அந்தக் கோள்கள் அனைத்தும் இந்த பிரபஞ்சத்திலேயே மிதந்து கொண்டு இருக்கிறது. அந்தக் கோள்கள் சுய அறிவோடு ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் அதனுடைய இயக்கப் பாதையிலே முறையாக எந்த தவறும் செய்யாமல் சுழல்கிறது.

இப்படி இந்தக் கோள்கள் இயங்கி கொண்டு இருக்கிறதே அது பெரிதா அல்லது இந்த கோள்களை மிதக்க விட்டு கொண்டு இருப்பவர் பெரியவரா என்றால், மிதக்க விட்டுக்கொண்டு இருப்பவர் தான் பெரியவர். அவரே இறைவன். அந்த அந்தத்தை உணரும் நிலைதான் அடுத்த தவமாகிய துரியாதீதம் தவம். இந்த தவம் தான் தானாக நின்று விஸ்வரூபம் தரிசனம் எடுத்து தன் மூலத்தை உணரும் நிலையாகும்.

இப்படி வாழும் காலத்திலேயே மூலத்தை உணர்ந்து விட்டால் நம் பதிவுகளை சரியான முறையில் கழிக்க வேண்டும் என்றால் நோய் வராமல் தடுக்க வேண்டும். அதற்கு உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் சரியான முறையில் இயங்க வேண்டும். அப்படி உடலில் உள்ள ஏழு சுரப்பிகளையும் கடந்து வெளியே இரண்டு படிகளை கடக்கும் தவம் தான் ஏழாவது தவமான 9 மைய தவமாகும்

இந்த தவத்தினால் உடல் ஆரோக்கியம் பெற்று மனம் அமைதி நிலை என்கின்ற ஆனந்த நிலை அடையும். இந்த ஆனந்தம் ஒரு நாளோ ஒரு மாதமோ ஒரு வருடமோ அல்ல நமக்கு உயிர் உள்ளவரை வேண்டும். அதற்குத்தான் எட்டாவது தவமாகிய நித்தியானந்த தவத்தை மகரிஷி கொடுத்தார்.

சரி இப்போது நாம் ஆனந்தமாக இருந்தால் ஒரு கேள்வி எழும். எப்போதும் ஆனந்தமாக உள்ளது எது என்று. அதுவே இறைவன் அல்லது இறைநிலை. அதன் தன்மை அன்பு மற்றும் கருணை மட்டுமே. அது துன்பம் இல்லாமல் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறது. அது அன்பு கருணையோடு இருக்கிறது.

நாமும் நித்தியானந்த தவத்தின் மூலம் எப்போதும் ஆனந்தமாக இருப்பதால் ஒன்பதாவது தவம் ஆகிய இறைநிலை தவத்தை நாம் செய்தால் நமக்குள்ளும் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும். இப்படி சாதாரணமான மனிதராக இருந்த நாம் ஆக்கினை தவத்தில் ஆரம்பித்து படிப்படியாக தவங்கள் செய்து கடைசியாக இறைநிலை தவத்திலேயே மாமனிதராக மாறுகிறோம். இது தான் தியானத்தின் சிறப்பு.

போன்: 9444234348

Tags:    

Similar News