சிறப்புக் கட்டுரைகள்

வியக்கும் விஞ்ஞானியாகவும் திகழ்ந்த நடிகை ஹெடி லமார்!

Published On 2024-08-07 16:45 IST   |   Update On 2024-08-07 16:45:00 IST
  • மேயர் லண்டனில் இருந்த ஹெடி லமாரை அழைத்தார்.
  • தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கற்கள்.

ஹலோ! நல்லா இருக்கீங்களா?

இன்று கையில் செல்போனை வைத்துக் கொண்டு இப்படி பேசாதவர் யாருமே உலகில் இல்லை எனலாம். எதற்கெடுத்தாலும் எங்கு சென்றாலும் எப்போதும் எல்லோரிடமும் செல்போன், – தகவல் தொடர்புக்கு இன்றியமையாத சாதனமாகத் திகழும் இதைக் கண்டுபிடிக்க வழி வகுத்தவர் ஒரு நடிகை என்றால் ஆச்சரியமாக இல்லை. – ஆம், அந்த பேரழகியான நடிகை ஒரு விஞ்ஞானியும் கூட என்றால் இன்னும் வியப்பு அதிகமாகும்!

அவர் பெயர் ஹெடி லமார்!

பிறப்பும் இளமையும்: ஆஸ்திரியாவில் லிவிவ் என்ற இடத்தில் (இப்போது உக்ரேனில் உள்ள இடம் இது) 1914-ம் ஆண்டு ஹெடி லமார் என்ற ஈவா மேரி கியஸ்லர் பிறந்தார். தந்தை ஜெர்ட்ருட் ட்ரூட் கியஸ்லர் ஒரு உயர் அதிகாரி. யூதரான தாயார் எமில் கியஸ்லர் பியானோ வாசிப்பவர்.

ஐந்து வயதிலேயே புதிதாக எதையும் செய்யும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. பழைய மியூசிக் பாக்ஸ் ஒன்றை எடுத்து அதைப் பிரித்துப் போட்டு விட்டு, திருப்பியும் அதை அப்படியே அசெம்பிள் செய்தார் அவர். படிக்கும் போது அவருக்கு ரசாயனத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டானதால் கெமிக்கல்களை ஒன்றுடன் ஒன்று கலந்து பார்ப்பது அவரது வழக்கமானது. அதே சமயம் தந்தையாருடன் நடைப்பயிற்சி செய்யும் போது, அவர் எப்படி நவீன சாதனங்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்பதை விளக்குவார்.

திரைப்பட வாய்ப்பு: 12-ம் வயதில் வியன்னாவில் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பரிசைத் தட்டிச் சென்றார் அவர்.

முதன் முதலாக 1933-ல் அவரது 19-ம் வயதில் செக்கோஸ்லேவிய, ஆஸ்திரிய தயாரிப்பான எக்ஸ்டஸி என்ற படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்த பிரதான நடிகை ஒரு யூதர் என்பதால் அதை ஹிட்லர் தடை செய்தார்.

ஆனால் படிப்படியாக அவரது நடிப்பு மக்கள் மனதை ஈர்க்கவே அவர் புகழ் பெறலானார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் ஜிக்பீல்ட் கேர்ள் (1941) மற்றும் சாம்ஸன் அண்ட் டிலைலா (1949) அவரை புகழேணியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

நாஜி ஜெர்மனியில் ஹிட்லரின் கொடுமை தாங்காமல் அனைத்து யூதர்களும் அங்கிருந்து தப்பி ஓடிய காலம் அது! ஆகவே பிரபலமான எம்ஜிஎம் உரிமையாளரான லூயிஸ் பி. மேயர், ஜெர்மனியிலிருந்து ஐரோப்பாவிற்கு வந்திருக்கும் நல்ல நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்யலாம் என்று அங்கு வந்தார். மெட்ரோ கோல்ட்வின் மேயரைப் பார்க்கவே தவம் செய்வார்கள் எல்லா பிரபலங்களும்! அவர் எப்போது தம்மைக் கூப்பிடுவார் என்று அனைவரும் ஏங்கியிருந்தனர். மேயர் லண்டனில் இருந்த ஹெடி லமாரை அழைத்தார். "உனக்கு வாரத்திற்கு 125 டாலர் சம்பளம் தருகிறேன். ஹாலிவுட் வருகிறாயா?" என்று கேட்டார். "சாரி! அந்தச் சம்பளத்திற்கு என்னால் வர முடியாது" என்று டக்கென்று பதில் சொல்லி விட்டார் லமார்.

மேயர் மட்டுமல்ல, அனைவருமே திகைத்துப் போனார்கள். கூடுதல் சம்பளத்திற்கு வழி என்ன என்று யோசித்தார் லமார். ,மேயர் திருப்பி அமெரிக்கா செல்லும் கப்பல் எது என்று அறிந்து அதிலேயே தனக்கும் ஒரு டிக்கட்டை பதிவு செய்தார் அவர்.

ஒரு நாள் கப்பலில் மேல்தளத்தில் அவர் அமர்ந்திருந்த போது பளபளக்கும் ஆடையை அணிந்து அவர் டேபிளின் அருகே அவர் தன்னைப் பார்க்கிறாரா என்று நன்கு கவனித்து ஒய்யாரமாக அன்ன நடை நடந்தார் அவர்.

மேயர், லமாரை அழைத்து வாரத்திற்கு ஐநூறு டாலர் தருகிறேன் என்றார். ஒப்பந்தம் கையெழுத்தானது!

புதிய பெயர்: ஹாலிவுட்டில் நடிக்க அவருக்கென பிரத்யேகமாக ஒரு பெயர் தேவை என்று கோல்ட்மேயர் நினைத்தார். கோல்ட்மேயரின் மனைவி மார்கரெட் மவுனபட காலத்தில் பிரசித்தமாக விளங்கிய நடிகையான பார்ப்பாரா லமார் பெயரில் உள்ள 'ல மார்' என்பது பிரெஞ்சு வார்த்தை போல இருப்பதால் அதை அவருக்குச் சூட்டலாம் எனக் கூறினார். அது முதல் அவர் ஹெடி லமார் ஆனார். டிஸ்னியில் வரும் கார்ட்டூன் கதாபாத்திரமான ஸ்நோ ஒய்ட்டும், பேட்மேனில் வரும் கேட் உமனும் அவரைப் பார்த்து பெற்ற உத்வேகத்தால் அமைக்கப்பட்டவையே.

தொடர்ந்து அவரது திரை வாழ்க்கையில் ஏராளமான படங்களில் அவர் நடித்துப் புகழ் பெற்றார். வானொலி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கு பெற்றார். தானே ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும் ஆனார்.

ச.நாகராஜன்

விருதுகள்: ஏராளமான விருதுகளை அவர் வாழ்ந்த போது பெற்றார். அவர் மறைந்த பிறகு இன்னும் பல விதத்தில் அவரது நினைவு போற்றப்படுகிறது. வியன்னா பல்கலைக்கழகத்தில் 2014-ம் ஆண்டு அமைக்கப்பட்ட குவாண்டம் டெலஸ்கோப்பிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2019, ஆகஸ்ட் 27-ம் தேதி ஒரு விண்கல்லுக்கு "32730 லமார்" என்று அவரை கவுரவிக்கும் வண்ணம் பெயர் சூட்டப்பட்டது.

குடும்பம்: லமாரைப் பாராட்ட வந்த ஏராளமானோரில் பிரெடெரிக் மாண்டில் என்பவரும் ஒருவர். அவர் ராணுவத்திற்கு ஆயுதம் விற்கும் வியாபாரி.

அவர் லமாரை விடாது தொடரவே அவரை 1933-ல் லமார் மணந்தார். ஆனால் அவர் முசோலினிக்கு மிக நெருங்கியவராக இருந்ததோடு ஹிட்லருக்கும் வேண்டியவராக இருந்தார். ஆகவே திருமணம் நிலைத்திருக்கவில்லை. பாரிசுக்கு விரைந்தார் அவர். இதன் பிறகு ஐந்து முறை மணந்தார் அவர். அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. 1955-ல் நடந்த கடைசி திருமண முறிவுக்குப் பின்னர் 35 வருடங்கள் அவர் தனியாகவே வாழ்ந்தார்.

புதிய கண்டுபிடிப்பு: உலகப் போர் மும்முரமான போது தகவல் தொடர்பு மிக முக்கியமான ஒன்றாக ஆனது. ஹிட்லர் எனிக்மா என்கோடிங் மெஷின் என்ற ரகசிய சங்கேதம் அனுப்பும் மெஷினை வைத்தே தனது ரகசிய திட்டங்களையும் ஆணைகளையும் அனுப்பி வந்தான். டைப்ரைட்டர் அளவே உள்ள அந்த சிறிய மெஷின் பதினைந்து லட்சம் கோடி சங்கேத முறைகளில் வேறு வேறாகச் செய்திகளை அனுப்பும் திறன் வாய்ந்தது. பிரிட்டிஷ் ராணுவம் இந்த சங்கேதங்களை இடைமறித்துக் கேட்டாலும் அது என்ன என்று அவர்களுக்குப் புரியவில்லை. இதனால் நேச நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தன.

நேசநாட்டு ராணுவத்தினருக்கு ஜெர்மனிக்கு ஈடு கொடுத்து ஆணைகளை விரைவாக அனுப்புவது இன்றியமையாத தேவையாக ஆகி விட்டது. முக்கியமாக கடற்படையினருக்கு விரைவாக அனுப்பும் தகவல் தொடர்பு முக்கியமானதாக ஆனது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் லமார் உச்சகட்ட புகழில் இருந்த போது பிரபல இசையமைப்பாளரான ஜார்ஜ் அன்தெய்லுடன் இணைந்து ஒரு ரகசிய தகவல் தொடர்பு அமைப்பைக் கண்டுபிடிப்பதில் முனைந்தார். லமார் ஒரு கணித நிபுணி. அன்தெய்லின் உதவியுடன் பியானோவை இசைக்கும் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பிரீக்வென்சி ஹாப்பிங் எனப்படும் அலைவெண் தத்தலைக் கண்டுபிடித்து உரிய பேடண்டையும் எடுத்தார். இதன் மூலம் ரேடியோ மூலம் டார்பிடோ குண்டுகளை வழி நடத்தி, ஏவி எதிரிகளை நிலைகுலைய வைக்கலாம் என்ற எண்ணத்துடன் அமெரிக்க கடற்படையை அணுகி தனது கண்டுபிடிப்பைப் பற்றிச் சொன்னார்.

பியானோவை வைத்து அதில் 88 வெள்ளை மற்றும் கறுப்பு கீ- கள் இருப்பதால் அதை வைத்து அலைவெண்களுக்கு இடையே மாற்றுகின்ற ஒரு புதிய உத்தியை அவர் கண்டுபிடித்தார். இதன் மூலம் டார்பிடோ குண்டுகளை வழி நடத்தலாம் என்று அவர் கூறினார்.

அவரை புகழ்பெற்ற நடிகையாகப் பார்த்து மட்டுமே பழக்கப்பட்டிருந்த கடற்படை அதிகாரிகள் இவராவது டார்பிடோ குண்டுகளை ஏவுவதாவது என்று எண்ணிச் சிரித்தனர். அவரது கண்டுபிடிப்பின் பெருமை பற்றி அறிய அவர்கள் முற்படவில்லை. ஆனால் 1962-ம் ஆண்டு தான் இதைப் பற்றி கடற்படைநன்கு அறிந்து அதை அமல்படுத்தியது.

என்ன நடந்தது என்பதை அவர் 'பாம்ப்ஷெல்: தி ஹெடி லமார் ஸ்டோரி' என்ற ஒரு பதிவில் தானே பேசி இருக்கிறார்.

பெரிதும் நிராசையடைந்த லமார் ஒரு விதமாக அங்கீகாரமும் கிடைக்காமல் போக, பேடண்ட் உரிமையும் காலாவதி ஆகவே முயற்சியையும் கை விட்டார். நம்பிக்கையையும் இழந்தார்.

ஆனால் இன்றைய கணினி யுகத்தில் செல்வாக்கு பெற்றுள்ள செல் போன், புளுடூத், மற்றும் வைபை போன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு விதை ஊன்றியவரே அவர் தான். அவருக்கு அதற்கான புகழ் கிடைக்கவில்லை.1997-ல் தான் அவர் பெருமை உலகிற்கு தெரிய வந்தது. அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது மட்டுமல்ல, மிக பிரம்மாண்டமாக வரவேண்டிய கண்டுபிடிப்பு தொகையும் அவருக்குக் கிடைக்கவில்லை.

லமார் பற்றிய படங்களும், புத்தகங்களும்: லமார் பற்றி ஏராளமான கட்டுரைகளும், புத்தகங்களும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அவரைப் பற்றிய டாகுமெண்டரி படங்களும், கூட வெளி வந்து விட்டன. அவரது சுயசரிதை பற்றி அவர் கூறுகையில், "இது சரியான சுயசரிதை இல்லை. இதை என் சார்பாக எழுதியவர் தனக்குத் தோன்றியதை எழுதி விட்டார். உண்மை சரிதத்தை நானே எழுதுகிறேன்" என்றார். ஆனால் அதை எழுதுவதற்குள் அவரது இறுதி நெருங்கி விட்டது.

மறைவு: லமார் தனது இறுதி ஆண்டுகளில் யாருடனும் நேரில் பேசவில்லை. யாரானாலும் போனில் மட்டுமே பேசி வந்தார்.

2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி தனது 85-ம் வயதில் அமெரிக்காவில் ப்ளோரிடாவில் காஸல்பெர்ரி என்னுமிடத்தில் அவர் இதயநோய் காரணமாக இறந்தார். அவரது மகன் அவரது அஸ்தியின் ஒரு பகுதியை அவரது விருப்பப்படி ஆஸ்திரியா கொண்டு சென்று வியன்னா காடுகளில் தூவினார்.

2014-ல் அவரது நினவுச் சின்னம் வியன்னா சென்ட்ரல் கல்லறையில் நிறுவப்பட்டது. மீதமுள்ள அஸ்தியும் அங்கு புதைக்கப்பட்டது.

அனுபவ மொழிகள் :

தனது வாழ்க்கையின் அனுபவ மொழிகளாக அவர் பல பொன்மொழிகளைக் கூறியுள்ளார். அவற்றில் சில:

எந்தப் பெண்ணுமே கவர்ச்சியானவள் தான். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முட்டாள் போல நின்று கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான்!

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கற்கள்.

உண்மையான நல்ல கண்டுபிடிப்பு சமுதாயத்தின் மீது நலன் தரும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமே உரித்தானவை. ஆனால் தொழில்நுட்பமோ என்றுமே உள்ளது. சிரஞ்சீவியானது.

எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும் எதையும் அறியும் ஆர்வமுமே உத்தரவாதங்களை விட மேலானவை. நம்மால் உணரமுடியாதவையே என்ன ஈர்த்தன. ஈர்க்கின்றன.

அடுத்த முறை செல்போனை எடுத்து ஹலோ என்று சொல்லும் போது அதற்கு வழிகோலிய லமாரை மனதாரப் பாராட்டலாம், இல்லையா!

Tags:    

Similar News