null
- நவக்கிரகங்களில் வீரத்திற்கு பெயர் பெற்றவர் செவ்வாய் பகவான்.
- ஒரு கிரகம் தனது நட்பு வீட்டில் உச்சம் அடைவது பெரிய விசயம் அல்ல.
''சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு."
நவக்கிரகங்களில் வீரத்திற்கு பெயர் பெற்றவர் செவ்வாய் பகவான். நாரதர் உள்ள இடத்தில் எப்படி கலகம் நடக்குமோ? அதே போல் செவ்வாய் பகவான் நின்ற வீட்டின் மூலம் கலவரம் உண்டு.
செவ்வாய் பூமிக் காராகன், ரத்த காரகன் மற்றும் யுத்த காரகன். தைரிய வீரியத்திற்குரிய கிரகம். மேலும் உடன் பிறந்த சகோதரம் மற்றும் பெண்கள் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும் கிரகமாகும். இந்த செவ்வாய் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்பது பொது விதி. ஒரு கிரகத்தினால் ஏற்படும் நன்மை, தீமைகளை உயிர், பொருள், நோய் காரகத்துவம் என மூன்றாக வகைப்படுத்தலாம். அதன்படி செவ்வாய் பலம் பெற்றால் உயிர் காரகத்துவமான உடன் பிறந்தவர்களின் அன்பு, அனுசரனை, ஆதாயம் உண்டு. தைரியம், நிறைந்த குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழிநடத்தும் கணவர் கிடைப்பார். பொருள் காரகத்துவமான அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவராக இருப்பார்காள். செவ்வாய் பலம் குறைந்தால் உடன் பிறந்த ஆண்கள் கலகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும்.
பெண்களுக்கு கணவரின் அன்பும், அனுசரனையும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதே போல் திருமணத்திற்கு செவ்வாய் தோஷம் கணக்கிட வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறினாலும், செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது. உலகின் அனைத்து நிகழ்விலும் இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவது நாம் அறிந்ததே. அதனால் செவ்வாய் தோஷம் பற்றி 1000 பட்டி மன்றம் நடத்தினாலும் இது சர்ச்சைக்குரிய கருத்தாகவே இருக்கும். ஒரு கிரகத்தின் தன்மையை ஆதிபத்திய ரீதியாகவும், நின்ற நட்சத்திர சாரத்திற்கு ஏற்பவும், உடன் இணைந்த, சேர்ந்த, பார்த்த கிரகத்திற்கு ஏற்ப அணுகும் போதும் தீர்க்கமான முடிவு கிடைக்கும். அத்துடன் எந்த கிரகமாக இருந்தாலும் பொதுவாக யோகம், அவயோகம் என்று பலன் சொல்ல முடியாது. இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்தியத்திற்கு சுப பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது.
அதே போல் ஒரு கிரகம் தனது நட்பு வீட்டில் உச்சம் அடைவது பெரிய விசயம் அல்ல. தன் எதிரி வீட்டில் உச்சம் பெற்று தன் ஆளுமையை செலுத்துவது கெத்து தான். இதை மேலும் புரியும்படி கூறினால் உறவுக்காரன். நட்புகாரன் வீட்டிற்குச் சென்று ஒருவர் அதிகாரம் செய்தால் உறவினர்கள் அவரை கண்டு கொள்ளமாட்டார்கள். ஒருவர் தனக்கு கடும் பகைவன் வீட்டிற்குச் சென்று சிம்மாசனமிட்டு அமர்ந்து பகை வீட்டுக்காரனை அதிகாரம் செய்வது வீட்டு உரிமையாளர்களை ஏளனப்படுத்தும் செயலல்லவா?
அப்படிப்பட்ட வீரன் தான் செவ்வாய். செவ்வாய் தன் பகை கிரகமான சனியின் வீடான மகரத்தில் உச்சம் பெற்று எதிரி கிரகமான சனியை கட்டுப்படுத்தப் போகிறார். சிங்கம் சிங்கிளாக 45 நாட்கள் மகரத்தில் தன் உச்சபலனை வழங்கப் போகிறது. செவ்வாய் பகவான் கால புருஷ 10-ம் வீடான மகரத்தில் 5.2.2024 அன்று உச்சம் அடைகிறார்.
தனது 4-ம் பார்வையால் மேஷ ராசியில் உள்ள குரு பகவானைப் பார்க்கிறார். இது குருமங்கள யோகம். 7-ம் பார்வையால் கடக ராசியையும் 8ம் பார்வையால் சிம்ம ராசியையும் பார்வையிடுவார். இது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மையும், தீமையும் சேர்ந்த பலனை வழங்கும். இனி பனிரெண்டு ராசிக்கும் உச்ச செவ்வாய் ஏற்படுத்த போகும் மாற்றங்களையும் அதற்கான பரிகாரங்களையும் காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு செவ்வாய் ராசி அதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. ராசி அதிபதியாக செவ்வாய் தனது தொழில் ஸ்தானமான 10-ம் இடத்தில் உச்சம் பெறுவது சிறப்பு. தொழிலில் ஒரு உன்னத நிலையை அடைய முடியும். தனது மற்றொரு வீடான விருச்சிகத்திற்கு அவர் அஷ்டமாதிபதி என்பதால் ஒரு நல்லது நடந்தாலும் ஒரு அவச்சொல், அவமானம் ஏற்பட்டாலும் ஜாதகரே காரணமாக இருப்பார். சுய ஜாதகரீதியாக செவ்வாய் தசை, புத்தி நடப்பவர்களுக்கு ஒரு வம்பு, வழக்கு, சர்ஜரி, தீராத நோய், கடன் இருந்தே தீரும்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் முருகனை வழிபட வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு செவ்வாய் 7,12-ம் அதிபதி. செவ்வாய் களத்திர ஸ்தான அதிபதி. 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் 7, 12-ம் அதிபதி செவ்வாய் உச்சம் பெறுவதால் திருமணத் தடை அகலும். நல்ல வரன் அமையும். தம்பதிகளுக்குள் நிலவிய கருத்து வேறுபாடு குறையும். சில தம்பதிகள். தொழில் உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரிந்து வாழும் நிலை ஏற்படும். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண உறவை ஏற்படுத்தும். செவ்வாய் தசை, புத்தி நடப்பில் இருந்தால் தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள் அல்லது அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்வார்கள்.
பரிகாரம்
செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை வழிபட வேண்டும்.
ஐ.ஆனந்தி
மிதுனம்
மிதுன ராசிக்கு செவ்வாய் 6, 11-ம் அதிபதி என்பதால் செவ்வாய் ஆட்சி உச்சம் பெறுவது சிறப்பல்ல. அதே நேரத்தில் செவ்வாய் சுப வலுப் பெற்றால் மிகப் பெரிய லாபம் கிடைத்து எவ்வளவு அதிகமான கடன் இருந்தாலும் விரைவில் தீர்ந்து விடும். செவ்வாய்க்கு குரு சம்பந்தம் குருமங்கள யோகமாக செயல்படும். லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் உள்ள குருவை செவ்வாய் பார்ப்பது குருமங்கள யோகமாக வரமாக செயல்படும். அதனால் செவ்வாயால் கடன், நோய் உருவாகினாலும் கடன், நோய் நிவர்த்தியாகும்.
பரிகாரம்
செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் சிவ வழிபாடு செய்வது நல்லது.
கடகம்
கடக ராசிக்கு செவ்வாய் 5, 10-ம் அதிபதி. ஏக யோகாதிபதி என்பதால் உச்ச செவ்வாய் கடக ராசிக்கு வரம். ராசிக்கு 7ல் நின்று ராசியை பார்ப்பதால் ஜாதகருக்கு மிடுக்கான தோற்றம், ஆளுமைத் திறன் கூடும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். சிலருக்கு புதியதாக காதல் ஆசை துளிர் விடும். புதுமண தம்பதிகளுக்கு புத்திர பிராப்தம் உண்டாகும். நண்பர்கள், தொழில் கூட்டாளி வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு. கடக ராசிக்கு சந்திர மங்கள யோகம், குரு மங்கள யோகம் ஏற்பட்டுள்ளது.
பரிகாரம்
செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு செய்து வரும் கடக ராசியினருக்கு தொடர் அதிர்ஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு செவ்வாய் 4,9-ம் அதிபதி. ஒரு கேந்திரத்திற்கும் திரிகோணத்திற்கும் அதிபதி. தாய், தந்தை வழி உறவுகளின் அன்பு, அனுசரனை இருக்கும். தாய் வழி, தந்தை வழி பூர்வீகச் சொத்து கிடைப்பதில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். தீர்த்த யாத்திரை செல்லுதல், தானதர்மம் செய்தல் போன்ற பாக்கிய பலனை அதிகரிக்கும் செயலில் ஈடுபடுவார்கள். அரச உத்தியோகம், அரச பதவி போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும். செவ்வாய் தனது 8ம் பார்வையால் ராசியை பார்ப்பதால் பிரயாணங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரிகாரம்
செவ்வாய் கிழமை சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்வதால் நன்மைகள் இரட்டிப்பாகும்.
கன்னி
கன்னி ராசிக்கு செவ்வாய் 3, 8-ம் அதிபதி என்பதால் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெறக் கூடாது. இடப்பெயர்ச்சி நடக்கும். மனதில் வெறுமை தேவையில்லாத கற்பனை பய உணர்வு நிரம்பும். ஞாபக சக்தி குறையும். கடன் தொல்லை அதிகரிக்கும். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு, உடன் பிறந்தவர்களுடன் சொத்துத் தகராறு, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை, விபத்து, கண்டம், சர்ஜரி வம்பு, வழக்கு ஏற்படலாம். தேவையற்ற வழக்குகள் மற்றும் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட சொத்து, நகை, பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை புதன் ஓரையில் வாராகி அம்மனை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்கு செவ்வாய் 2, 7-ம் அதிபதி. வாக்கு வன்மை பெறும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள். ஆடம்பர விருந்து உபசாரங்களில் கலந்து கொண்டு அறுசுவை உணவு அருந்துவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். தன வரவில் தன்னிறைவு உண்டாகி கடன் சுமை குறையும். கண், பல் போன்றவற்றிற்கு சிகிச்சை செய்வீர்கள். திருமணத் தடை அகலும். திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள்.
சொத்துக்களால், கூட்டுத் தொழிலால், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை கால பைரவரை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு செவ்வாய் 1, 6-ம் அதிபதி. ராசி அதிபதியே 6ம் அதிபதியாக இருப்பதால் விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பல்ல. தங்களுக்கு ஏற்படும் நல்லது, கெட்டது இரண்டிற்கும் இவர்களே காரணமாக இருப்பார்கள். முன் கோபத்தால் சொந்த செலவில் தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொள்வார்கள். உத்தியோக மாற்றம் செய்வது, கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். சிறு சிறு நோய் தாக்கம் இருக்கும். கடனால் கவலை, எதிரிகளால், உயர் அதிகாரிகளால் மன சஞ்சலம் இருக்கும்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை சரபேஸ்வரரை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்கு செவ்வாய் 5, 12-ம் அதிபதி. செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்பதால் குழந்தை பேறு, குல தெய்வ அனுகிரகம், பங்குச் சந்தை ஆதாயம், பிள்ளைகளுக்கு நல்ல உத்தியோகம், சுப விசேஷங்கள் நடக்கும். பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலம். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டம் உண்டாகும். அதே நேரத்தில் அவரே விரயாதிபதி என்பதால் அவரவரின் சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப சுப அசுப விரயங்கள் உண்டு. சிலர் வெளி நாட்டு பயணம் மேற்கொள்ளலாம். வீடு வாகனம் வாங்கலாம். சிலருக்கு மருத்துவச் செலவு கூடுதலாகும்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை குரு ஓரையில் நவகிரக செவ்வாய் பகவானை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்கு செவ்வாய் 4, 11-ம் அதிபதி. உச்சம் பெற்ற செவ்வாய் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தருவார். சொந்த வீடு, வாகனம் அமையும். ஏற்கனவே வாங்கிய சொத்துக்களின் மதிப்பு உயரும். தாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறைந்து நல்ல புரிதல் உண்டாகும். மாணவர்கள் நன்கு படிக்கத் துவங்குவார்கள். சிலர் புதியதாக உயிரினங்கள் வளர்ப்பார்கள். மூத்த சகோதரம், சித்தப்பா, இளைய மனைவி போன்ற உறவுகளால் ஆதாயம் உண்டு. செவ்வாய் பாதகாதிபதி என்பதால் சிலருக்கு உயிர் காரக துவத்தையும், சிலருக்கு பொருள் காரகத்துவத்தையும் பாதிக்கலாம்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை திருவண்ணாமலை சென்று வர நன்மைகள் கூடும்.
கும்பம்
கும்ப ராசிக்கு செவ்வாய் 3, 10-ம் அதிபதி. சகாய ஸ்தான அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி. தொழில், உத்தியோக ரீதியாக வாழ்வியல் மாற்றம் தரும் நல்ல இடப் பெயர்ச்சி நடக்கும். ஞாபகசக்தி கூடும். உயில் எழுதுதல், உயிலில் மாற்றம் செய்தல் , கடனை புதுப்பித்தல் போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதாயம், ஆதரவு புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் வந்து மனதை மகிழ்விக்கும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். செவ்வாய் குரு சம்பந்தம் குரு மங்கள யோகம் ஸ்திர சொத்துக்கள் சேரும். தொழில், உத்தியோக உயர்வை நிச்சயம் தரும்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை பழநி முருகனை வழிபட நிலையான முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்
மீன ராசிக்கு செவ்வாய் 2, 9-ம் அதிபதி. செவ்வாய் தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி. பாக்கியா திபதி. லாப ஸ்தானத்தில் உச்சம் பெறும் செவ்வாய் வாக்கு பலத்தை வழங்குவார். குடும்பத்தில் நிலவிய சலசலப்பு குறைந்து கலகலப்பு கூடும். ஏற்கனவே வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவை பார்ப்பது குருமங்கள யோகம். வங்கி, ஆசிரியப் பணி , ஜோதிடம், நிதி நிர்வாகம், அரசியல், ஆன்மீகம் போன்ற பணிகளில் தனித் திறமையுடன் மிளிர்வார்கள். இதில் ஆர்வம் ஆதாயமும். அதிகமாகும். முன்னோர்கள் வழிச் சொத்து கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு, தீர்த்த யாத்திரை செல்லுதல் முன்னோர்களுக்கு பித்ரு சாந்தி செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும்.
பரிகாரம்
செவ்வாய் கிழமை குரு ஓரையில் திருச்செந்தூர் முருகனை வழிபட ஏற்றம் அதிகரிக்கும். எந்த ஒரு பலனும் அதன் தசாபுத்திகளிலேயே அப்பட்டமாக வெளிப்படும். எனவே செவ்வாய்க்கு உரிய பரிகாரங்களை பயன்படுத்தி உயர்வு பெற வாழ்த்துக்கள்.