முதுமையில் நீரிழிவு கட்டுப்பட உணவும், மருந்தும்
- நடைப்பயிற்சியின் பலன்களை உறுதி செய்ய பல்வேறு ஆய்வுகள் உலகநாடுகள் பலவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- இன்சுலின் ஹார்மோன் பணியை செய்யவிடாமல் தடுக்க கூடியதாக இருப்பது உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் தான்.
'உலகின் நீரிழிவு நோயின் தலைநகரம்' என்று கருதப்படும் நாடாக உள்ளது இந்தியா. காரணம் உலகின் ஒட்டுமொத்த சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் 17 சதவீதம் பேர் நம் நாட்டினர் தான். அதில் வெறும் 40 சதவீதம் பேர் மட்டுமே உடற்பயிற்சியை மேற்கொள்வதாக ஆய்வுகள் கூறுவது வருத்தத்திற்குரியது.
பல ஆண்டுகளாக நீரிழிவு நோய்க்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் கூட உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ஆரோக்கியத்தின் மீது அக்கறை இல்லாமல், மருந்து மட்டுமே போதும் என்ற தவறான கணிப்பில் வாழ்க்கையை நகர்த்தி செல்கின்றனர்.
உண்மையில் சர்க்கரை நோயினைப் பொறுத்தமட்டில் மருந்துகள் தரும் பலனை விட நடைப்பயிற்சியும், உடல்பயிற்சியும், யோகாசனப் பயிற்சியும் மிகப்பெரும் பலன்களைத் தரக்கூடியதாக உள்ளன. நீரிழிவு நோயாளிகள் வாரத்திற்கு குறைந்தது 150 முதல் 300 நிமிடங்கள் வரை மிதமான செயல்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம் என்கிறது நவீன அறிவியல். இதனால் இன்சுலின் செயல்திறன் அதிகரிக்கும் என்றும், சர்க்கரை அளவு கட்டுப்படும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
முதுமையில் நீரிழிவு நோய் கட்டுப்பட உணவு கட்டுப்பாட்டிற்கு அடுத்தாற் போல், அடுத்து இருக்கும் ஒரே வழி உடல்பயிற்சி தான். முதுமையில் உடல் சோர்ந்து எலும்புகளும் தசைகளும் வலுவிழந்த நிலையில் அத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வது கடினம் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் நல்வாழ்வை நாட வேண்டி, மருத்துவமனை வாசலை நாடாமல் இருக்க, மனதில் திறம் கொண்டால் உடல் ஒத்துழைப்பு நல்கும். ஆரோக்கியம் கிட்டும்.
மனம் செம்மையானால் உடலில் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடும் சீராகும் என்கிறது நவீன அறிவியல். "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்" என்கிறது தமிழ் நூலான திருமந்திரம். அத்தகைய மனம் சீராக இருக்கவும், ஆயுட்காலம் கூடுவதற்கும் தியானப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. முதுமையில் அமர்ந்த இடத்திலேயே தியானப் பயிற்சியினை மேற்கொள்ள உடல் புத்துணர்வு பெறுவதுடன் மனஅழுத்தம் நீங்கி சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கப்படும்.
டைப் 1 மற்றும் டைப் 2 வகையான நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலானோர் தூக்கமின்மையால் அவதியுறுவதாக 'அமெரிக்கன் டயாபெடிக் அசோசியேஷன்' கூறுகின்றது. தூக்கத்திற்க்கும், உடலில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அத்தகைய தூக்கமின்மையைப் போக்குவது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் எளிய வழி. எனவே தியானம் செய்வதும், எண்ணெய் குளியல் எடுப்பதும் தூக்கமின்மையைப் போக்கி சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் தியானம் மேற்கொள்வது முதுமையில் இயல்பான தூக்கத்தை உண்டாக்கி ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.
தியானத்தை மையமாகக் கொண்டு 6 மாதங்கள் தொடர் கண்காணிப்பிற்கு பின், இதய நோயாளிகளிடம் நடைபெற்ற ஆய்வில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாக குறைவதாகவும், HbA1c எனும் மூன்று மாத மதிப்பீட்டின் அளவு குறைவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுவது சிறப்பு. ஆகவே தினசரி 20 முதல் 30 நிமிடங்கள் வரை தியானப்பயிற்சி மேற்கொள்வது முதுமையில் நீரிழிவைக் கட்டுப்படுத்தவும், இதயம் காக்கவும் எளிய வழிமுறை.
மன அழுத்தமே முதுமையில் பல்வேறு நோய்நிலைகளுக்கு காரணம். எனவே தியானம் செய்வது 'என்டார்பின்ஸ்' எனும் மனமகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன் சுரப்பிகளை தூண்டி மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இந்த என்டார்பின்கள் முதுமையில் இயற்கை வலிநிவாரணிகளாகவும் செயல்படுவது கூடுதல் சிறப்பு.
முதுமையில் மூன்று மாத கணிப்பான HbA1C அளவானது என்ன மருந்து எடுத்தாலும், பலருக்கு கட்டுப்படாமலே இருக்கும். இந்த சர்க்கரை அளவை எண்ணி எண்ணியே பலர் மனம் உடைந்து முதுமையில் ஆரோக்கிய நம்பிக்கையை இழக்கின்றனர். இத்தகைய நிலைகளில் பிற மருந்துகளுடன் சித்த மருத்துவத்தை மேற்கொள்வது HbA1C அளவைக் குறைக்க உதவும். அது மட்டுமின்றி பல்வேறு காரணிகள் HbA1C அளவை பாதிப்பதாக உள்ளன.
ரத்த சோகை நோய், வைட்டமின் பி-12 குறைபாடு, குடிப்பழக்கம், ரத்தத்தில் அதிகரித்த பித்தத்தின் (பிலிரூபின்) மற்றும் யூரியா அளவு போன்ற நோய்நிலைகள் HbA1c அளவை பொருத்தமில்லாமல் அதிகமாக காட்டும். அதே போல் ரத்த இழப்பு, கல்லீரல் நோய்கள், குருதியேற்றம், ரத்தத்தில் அதிகமாகும் டிரைகிளிசெரைட் அளவு, ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் HbA1c அளவை பொருத்தமில்லாமல் குறைவாக காட்டும் என்கின்றன ஆய்வுத்தரவுகள். எனவே மனம் தளராமல் மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
மருத்துவர் சோ.தில்லைவாணன்
நீரிழிவு நோயின் மிக முக்கிய தொந்தரவாக கருதப்படுவது நீரிழிவுப்புண். நாட்பட்ட புண்ணை ஆற்றுவதற்கு மத்தன் தைலம், வெட்பாலை தைலம் போன்ற பல சித்த மருந்துகள் பலன் தருவதாக உள்ளன. மன அழுத்தம், குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் இவற்றால் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, சிறு ரத்தக் குழாய் பாதிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பை உண்டாக்கி புண் ஆறுவதைத் தள்ளிப்போடும். எனவே மது அருந்துதல், புகைப்பிடித்தலை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
முதுமையில் மதுப்பழக்கமும், புகைப் பிடித்தலும் நீரிழிவு நோயில் கூடுதல் சவால்களை உண்டாக்கும் என்கின்றன ஆய்வுகள். ஆல்கஹால் குடிப்பதால் "உடலுக்கு நல்லது, தூக்கம் வரும், துக்கம் நீங்கும்" போன்ற தவறான தகவல்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் தவறான பாதை. திடீரென உண்டாகும் மாரடைப்புக்கும், பக்க வாதத்திற்கும் இது துணை புரியும். இன்னும் பல நோய்நிலைகளுக்கு இவை முக்கிய காரணம் என்பதை மறந்து விடக்கூடாது.
"உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு" என்பது சொலவடை. அதாவது உணவு உண்ட பின், ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவானது சோம்பலையும், மயக்கத்தையும் உண்டாக்கும். ஆதலால் 'நண்பு பெற உண்டபின் குறுநடை கொள்வோம்' என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. உணவு உண்ட பிறகு நடைப்பயிற்சி, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
நடைப்பயிற்சியின் பலன்களை உறுதி செய்ய பல்வேறு ஆய்வுகள் உலகநாடுகள் பலவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தினசரி 10000 காலடிகள் (steps) நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைவதுடன், ரத்த அழுத்தத்தின் அளவும் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது சிறப்பு.
சீரான நடைப்பயிற்சி மேற்கொள்வதால் HbA1C 0.5 சதவீதம் அளவு குறைவதுடன், ரத்த அழுத்தம் குறைவதாகவும், உடல் எடை குறைவதாகவும் ஆய்வுத்தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே முதுமையில் முடிந்த வரை நடைப்பயிற்சி செய்வது சர்க்கரை நோயை முடிவுக்கு கொண்டு வரும்.
ஆக கொஞ்சம் நடைப்பயிற்சியும், அத்துடன் தியானப் பயிற்சியும், யோகாசனப் பயிற்சியும் பழகுவது சர்க்கரை அளவைக் குறைத்து முதுமையில் வாழ்வை இனிப்பாக்கும்.
முதுமையில் இடுப்பு மூட்டு எலும்புகள் தேய்மானத்தால் நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் வீட்டில் அமர்ந்தபடியே யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இது சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
எளிய யோகாசனப் பயிற்சிகளான தாடாசனம், கோமுகாசனம், பாவன முக்தாசனம், சலபாசனம், வக்ராசனம், தனுராசனம், பட்சி மோத்தாசனம், மயூராசனம் ஆகியவற்றை பழகி வருவது நல்லது. வைட்டமின் டி3 அளவு குறைவதும் நீரிழிவு உண்டாக காரணமாக நவீன அறிவியல் கூறுகின்றது. எனவே வெயிலில் கொஞ்சம் நடைபயிற்சி செய்வதும், சூரிய வணக்கம் செய்வதும் முதுமையில் பலன் தரக்கூடும்.
நீரிழிவு கட்டுப்பட எக்காலத்திலும் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நம் குடலில் உட்கிரகிக்கப்படும் சர்க்கரை சத்து உடல் செல்களை சென்றடைவதற்கு இன்சுலின் ஹார்மோன் திறவுகோலாக உள்ளது.
அத்தகைய இன்சுலின் ஹார்மோன் பணியை செய்யவிடாமல் தடுக்க கூடியதாக இருப்பது உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் தான். ஆகவே உடலில் கொழுப்பின் அளவை சீராக கட்டுப்பாட்டில் வைப்பது இன்சுலின் பணியை சீராக்கி, சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். இதற்கு நடைப்பயிற்சி, உடல் பயிற்சி போன்றவை பேருதவி புரியும்.
இதய நோய், புற்றுநோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றிற்குப் பின் அமெரிக்கா மற்றும் கனடாவில் இறப்புக்கான நான்காவது முக்கிய காரணியாக, மருந்துகளின் பக்க விளைவுகள் (ADR) இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகளவில் இறப்புக்கான காரணங்களில் ஏ.டி.ஆர். ஆறாவது இடத்தில் இருப்பதாக உள்ளது. ஆகவே நீரிழிவு கட்டுப்பட மருந்துகளைக் குறைத்து, உணவுக் கட்டுப்பாடும், உடல்பயிற்சியும் மேற்கொள்வது மருந்துகளைக் காட்டிலும் சிறந்தது.
5000 ஆண்டுகளுக்கு முன்னரே திருமூலரும், பதஞ்சலியும் தோற்றுவித்த யோகாசனக் கலையை இன்றைய உலகம் தலையில் வைத்துக் கொண்டாடுவதோடு பயன்படுத்த அறிவுறுத்தி அங்கீகாரம் அளிக்கின்றது. நம் முன்னோர்கள் நமக்காக, நம் நலனிற்காக, தோற்றுவித்த மரபுக்கலைகளும், மரபு வாழ்வியல் முறைகளும் இன்னும் ஏராளம்.
இவற்றை மறந்த நாம் தாராளமாய் மருந்துகளை உட்கொண்டு ஆரோக்கியத்தை தேடி அலைவது என்பது அறியாமையின் உச்சம். ஆகவே இனியும் விழிபிதுங்கி நிற்காமல் விழிப்புடன் செயல்பட்டு, நல்வாழ்விற்கான பாதையை உருவாக்க வேண்டியது அவசரமான அவசியம்.
(தொடரும்...)
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com