மனதினை குணப்படுத்தும் நம்பிக்கை!
- நமது சாதனைகள் நம்மைப் பற்றி பேசட்டும். நாம் பேச வேண்டாம்.
- தான் செய்யும் தான, தர்மங்களை பறை சாற்றக்கூடாது.
மனம் தான் மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. இது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். அதனை கட்டுப்படுத்த தெரியாமல் தானே மனிதன் ஒவ்வொரு நொடியும் பாடாய் படுகிறான். இந்த மனதில் ஆசை, கோபம், எதிர்பார்ப்பு, நோய் பற்றிய பயம், உறவுகள் பற்றிய கவலை, வீடு, சொத்து என எத்தனையோ எண்ணங்கள் ஓடி வந்து மனதில் புகுந்து வெளியே செல்ல மறுக்கின்றன. பட்டா வாங்கி தங்கி விடுகின்றன.
இதனால் முதலில் நோயினைப் பற்றி பார்ப்போம். எண் சாண் உடம்பில் எண்ணில் அடங்கா பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் தானே பல செய்திகளை அரைகுறையாய் அறிந்து தன்னைத் தானே அதிக பயத்திற்கு உட்படுத்திக் கொள்கின்றான். எப்போதும் அந்த நோயினைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்கின்றான்.
இதற்கு சரியான மருத்துவ ஆலோசனை, சிகிச்சையினை முறையாய் பின்பற்றுதல் மிக அவசியம்.
இதனுடன் சில மன நலப்பயிற்சிகளையும் செய்ய சில ஞானிகளின் வழி காட்டுதல்களும் இருக்கின்றன. அதனையும் பார்ப்போம். பயிற்சி செய்வோம். இவற்றில் பல மேல் நாட்டு ஞானிகளின் வழி காட்டுதல் முறைகளாக கூறப்பட்டிருந்தாலும் சில மேலை நாட்டு மகான்கள் மற்றும் நம் நாட்டு மகான்களும் இதனை பரிந்துரைக்கச் செய்கின்றனர்.
இம்முறையில் நம் ஆரோக்கியத்தினை நாமே உயர்த்திக் கொள்ள முடியும் என்கின்றனர். மனிதின் மூலம் இதனை செய்ய முடியும் என்கின்றனர். காட்டில் இருக்கும் விலங்குகளுக்கு யார் சென்று வைத்தியம் செய்கின்றனர். தன்னைத் தானே அவை குணப்படுத்திக் கொள்கின்றன. இதற்கு நம் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும்.
நம் உடல் பாதிப்பு துளிர் விடும் பொழுதே அறிகுறிகளைச் சொல்கின்றது. அதனை நாம் கவனிப்பதே இல்லை. நம் உடம்பிற்கும் மனதிற்கும் நல்ல தொடர்பு இருக்க வேண்டும். இதற்கு நாம் செய்ய வேண்டியது. அமைதியாய் கண்களை மூடி ஒரு பத்து நிமிடம் உட்காருங்கள்.
உங்கள் உருவத்தினை மனக்கண் முன் நிறுத்திக் கொள்ளுங்கள். எந்த பகுதியில் பாதிப்பு என்று நினைக்கின்றீர்களோ அப்பகுதி ஆரோக்கியமாய் இருப்பதாக உருவகித்து உணருங்கள். அமைதியாய், நிதானமாய் இதனைச் செய்யுங்கள்.
சிலருக்கு தன் உருவத்தினை மனக் கண்ணில் கொண்டு வந்து பார்ப்பது என்பது சற்று கடினமாக இருக்கலாம். இவர்கள் அமைதியாய் கண்களை மூடி உங்கள் கால் முதல் தலைவரை ஒவ்வொரு வெளி உறுப்பு, உள் உறுப்பு இவற்றில் கவனத்தினை செலுத்துங்கள். உங்கள் உடல் உங்களோடு பேசுவதனை உங்களால் உணர முடியும். பாதிப்பு இருக்கும் இடத்தில் கவனம் செலுத்துங்கள். அந்த உறுப்பு நல்ல ஆரோக்கியம் அடைவதாக உறுதியாய் நம்புங்கள். இப்பயிற்சி ஆரோக்கியத்தினைக் கூட்டுவதோடு மன பயத்தினையும் நீக்கும்.
சிலர் இந்த நோயின் காரணமாக தன்னைத் தானே வெறுத்துக் கொள்வார்கள். தன் உடலின் மீதே வெறுப்பு கொள்வார்கள். இப்படி செய்யவே கூடாது. உங்கள் உடலினை ஆரோக்கியத்தினை நீங்கள் நேசிக்கின்றீர்கள், அன்பும், கவனமும் காட்டுகின்றீர்கள் என்ற எண்ணம் மனதில் பதிய வேண்டும்.
அதே போன்று சிலருக்கு ஒரு பழக்கம் உள்ளது. அளவுக்கு மீறிய கஷ்டம், வறுமை வரும் போது தனக்கு வேலை கேட்கும் இடத்தில் தனது கஷ்டங்களை அதிகம் விவரித்து கூறுவார்கள். இவர்களுக்கு தகுதியும், படிப்பும் நன்கு இருந்தாலும் கூட வேலை கொடுப்பவர். இவரது வறுமை நிலையினை புரிந்து ஆதாயம் எடுப்பார். குறைந்த சம்பளம், அதிக நேர வேலை என இவர்கள் இன்னமும் சோர்ந்து விடுவார்கள். ஆகவே பரிதாப நிலை மூலம் தீர்வு காண முயல்வது அநேக இடங்களில் இன்றைய கால சூழ்நிலையில் சரி வருவது இல்லை. ஆக ஒருவர் தானே தன்னை சுய பரிதாபத்திற்கு உள்ளாக்கும் மன நிலையினைக் கொள்ளக் கூடாது.
* உறவுகள், நண்பர்கள் இவர்களுக்கு நம் வாழ்க்கை பாதிப்புகளை சினிமா படம் போல் காண்பிக்க வேண்டாமே. இவ்வாறு செய்ய செய்ய மனம் உறுதியற்ற நிலையினை அடைந்து விடும்.
கமலி ஸ்ரீபால்
* நாம் கடந்த காலத்தில் சில தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம். (உதாரணமாக) இந்த தொழில் நல்ல லாபம் கொடுக்கும் என எண்ணி கடன் வாங்கி முதலீடு செய்து அதிக நட்டத்தினை அடைந்திருக்கலாம். இது உங்களது பிரச்சினை. நீங்கள் தான் தீர்வு காண வேண்டும். மற்றவர்களிடம் இதனை விளாவாரியாக கூறும் போது அவர்கள் உங்கள் எதிரே பரிதாபப்பட்டு பேசுவது போல் நடித்து பின்னால் கை கொட்டி சிரிப்பர். இது உங்கள் மனதினை அதிக காயப்படுத்தும். ஆக இந்த 'கதை' சொல்வதினை நிறுத்த வேண்டும். அதே போல் வருங்கால திட்டங்களையும் பகிரக் கூடாது.
நமது சாதனைகள் நம்மைப் பற்றி பேசட்டும். நாம் பேச வேண்டாம்.
* பல அலுவலகங்களில் இதனை நான் கவனித்துள்ளேன். மாமியார்-மருமகள், பிள்ளை- பெற்றோர் பிரச்சினைகளை அன்றாடம் வரும் தொடர் சீரியல்கள் போல் ஒரு வரி விடாது பேசுவார். இது தேவையா? விடாது உங்கள் மனதிற்கு அழிவுப் பூர்வமாகவே சிந்திக்க சொல்லிக் கொடுக்கின்றீர்கள். மேலும் உங்களிடம் கதை கேட்பவரே உங்கள் எதிரி ஆகலாம்.
* அதே போல் தனக்கு வரும் வருமானம், அதனை திறமையாய் செலவு செய்யும் விதம் இதனை பட்டியல் இட்டு பேசக் கூடாது.
* தான் செய்யும் தான, தர்மங்களை பறை சாற்றக்கூடாது.
மேற்கூறப்பட்டவை சொல்பவர், கேட்பவர் இருவரின் மனநிலையினையும் பாதிக்கின்ற செயல்கள் என்பதால் இவை அனைத்தையும் நீக்கி விட வேண்டும். அப்போது தான் மனம் காலியாய் இருக்கும்.
அநேகருக்கு பிறர் தன்னை எப்போதும் மனதால் காயப்படுத்திக் கொண்டும், அவமானப்படுத்திக் கொண்டும், ஏளனப்படுத்திக் கொண்டும் இருப்பதாகக் கூறி மனம் நொந்து, உடைந்து இருப்பர். தனக்கு மரியாதை என்பதே இல்லை என நினைப்பர்.
ஒருமுறை, இரு முறை மற்றவர் உங்களை காயப்படுத்தினால் அது அவர்களின் தவறாக இருக்கலாம். ஆனால் எப்போதுமே இப்படி நடக்கின்றது என்றால் அதற்கு அவரவரே பொறுப்பாவர்.
* எதற்கு எடுத்தாலும் 'சரி', 'ஆமாம்', 'எஸ்' என்று சொல்வது தவறு. முறையல்லாதவற்றில் 'சரியில்லை', 'தவறு', 'நோ' என்று சொல்லும் திறன் வேண்டும். எல்லாவற்றுக்கும் 'சரி' என சொல்பவர்களை சிந்திக்கும் திறன் அற்றவர்களாகத்தான் இந்த உலகம் பார்க்கும். அவர்கள் மீது எந்த மரியாதையும் இருக்காது.
*அடிக்கடி அழுவது, பிறரை குறை கூறுவது அடுத்தவருக்கு ரொம்ப 'போர்' அடிக்கும். அனைவரும் சிரித்து மகிழ்ச்சியாய் இருக்கவே விரும்புகின்றனர். ஆகவே அழுது, புலம்பி பிறரை குறை கூறும் மனநிலையில் இருப்பவர்களிடம் இருந்து அனைவரும் ஓடி விடுவர்.
* நீங்கள் கூப்பிடும் அடுத்த நொடியில் நான் அப்படியே ஓடி வந்து விடுவேன் என்று யாரிடமும் கூறாதீர்கள். அப்படி நடக்காதீர்கள். இது மற்றவர்களை உங்கள் மீது அதிக ஆதிக்கம், அதிகாரம் செய்ய வைக்கும். நீங்கள் அதிகம் பாசம் வைக்கும் நபருக்காக செய்யும் இந்த செயல் உங்களுக்கு அந்த நபராலேயே மன வேதனை களைத் தரும்.
உங்கள் நேரம், உங்களுக்கான ஓய்வு என உங்களுக்கு கவனம் செலுத்தும்போது மரியாதையும் கூடும். மன நிலையும் கூடும்.
* ஏழ்மை என்பதனை நம் வாழ்வில் நம் முயற்சியால் நாம்தான் உழைத்து, சேமித்து துரத்தி அடிக்க வேண்டும். ஏழ்மையினை நினைத்து மூலையில் உட்கார்ந்தால் ஒன்றும் நடக்காது.
சிலர் பகலில் சக்தி குறைவாக, சோர்வாக இருப்பார்கள். கேட்டால் இரவில் தூக்கம் சரியாக இருப்பதில்லை. அதிகம் புரண்டு புரண்டு படுக்கிறேன். இதனால் பகலில் மிகவும் சோர்வாக இருக்கின்றேன் என்பர்.
* தூக்கமின்மைக்கு மருத்துவ காரணங்களும் உண்டு. ஆனால் அமைதியற்ற மனமும், அதிக எண்ண ஓட்டங்களும் கூட தூக்க மின்மைக்கு முக்கிய காரணம் ஆகின்றது. அதுவும் அழிவுப்பூர்வமான எண்ணங்கள் இருக்கும் போது அதே எண்ண ஓட்டத்தால் தூக்கமின்மை ஏற்படுகின்றது.
* தினமும் குறித்த நேரம் (உதாரணமாக) 9 மணி அல்லது 10 மணி என தூங்க செல்ல வேண்டும். அதனை விடுத்து மாறி மாறி ஒருநாள் 9 மணி, ஒருநாள் 12 மணி என உறங்க சென்றால் முறையான தூக்கம் இருக்காது.
* தூங்க செல்வதற்கு 3 மணி நேரம் முன்பே எளிதான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். கனமான உணவு, உணவு உண்டவுடன் அப்படியே படுப்பது போன்றவை தூக்க மின்மை, உடல் நல பாதிப்பு என ஏற்படுத்துகின்றன.
* குடியும், புகையும் தூக்கத்தினை வெகுவாய் கெடுக்கும். தூக்கமின்மை மன நலத்தினை பாதிக்கக் கூடியது. மேற்கூறப்பட்டுள்ள அனைத்து கருத்துக்களுமே புத்தரின் போதனைகளை எளிய நடையினில் தொகுத்து கொடுக்கப்பட்டு உள்ளன. இவை மன நலத்தினை காப்பதற்கும், அமைதியான தியான முறையினை பின்பற்றவும் பெரிதும் உதவும்.