செல்வச் செழிப்பு தரும் ஏகாதசி விரதம்
- திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம் என்பது பெரியோர் வாக்கு.
- ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்க விரும்பும் அனைத்து புண்ணியத்தையும் கொடுக்கும் விரதம்.
பணம் அனைவருக்கும் மிக முக்கியமான விஷயம். பணம் உள்ள நபருக்கு சொத்து, புகழ், கவுரவம், அதிகாரம் எல்லாம் உண்டு. பணம் உள்ளவனையே சக்தி வாய்ந்தவன் என்று நம்புகிறார்கள். பல வீடுகளில் பணப் பற்றாக்குறையால் பரஸ்பரம் தகராறுகள் ஏற்படுகிறது. போதுமான பணம் இல்லாததால், உறவுகளில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் அன்பு இருந்தால் மட்டுமே வாழ்க்கை அழகாக இருக்கும்.
பணப்பற்றாக்குறை மற்றும் கடனில் சிக்கித் தவிக்கும் பலர் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் தயங்குவதில்லை.
சிலர் பணம் சம்பாதிப்பதற்காக ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் தனது தேவைகளை பூர்த்தி செய்ய பணம் சம்பாதிப்பது அவசியமாகிறது. மனிதர்கள் இந்த பிறவியில் படும் துன்பங்களுக்கு காரணம் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாமிடம் தோஷமுள்ளதாக இருப்பது என்று ஜோதிடம் கூறுகிறது. மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குமே அதிர்ஷ்டசாலியாக செல்வச் செழிப்புடன் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஒருவரின் சுய ஜாதகத்தில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பற்றிக் கூறும் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெற்றால் சிறிய முயற்சியில் அல்லது எந்த முயற்சியும் செய்யாமல் அதிர்ஷ்டம் வெகு விரைவில் கிடைக்கிறது. ஐந்தாமிடமும் பூர்வ புண்ணிய ஸ்தானமும் பலம் குறைந்தால் எளிதில் அதிர்ஷ்டம் வசப்படுவதில்லை. மனிதனை இயக்கும் சக்தியான நிலையான செல்வத்தை அடையும் மார்க்கத்தை நமது முன்னோர்கள் சில குறிப்பிட்ட வழிபாட்டு, விரத முறையால் அடைய முடியும் என்று உபதேசித்துள்ளார்கள். அத்தகைய விரதங்களில் ஒன்று தான் ஏகாதசி விரதம் .
ஏகாதசி விரதம்
திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம் என்பது பெரியோர் வாக்கு. திதிகளில் மிகவும் உன்னத மானதாகவும், உயர்வானதாகவும் கருதப்படுவது ஏகாதசி திதி. ஏகாதசி என்ற சொல்லுக்கு பதினொன்றாம் நாள் என்று பொருள். ஏகம்+தசம் (10+1) ஏகாதசித் திதியின் அதிபதி மகா விஷ்ணு என்பதால் இந்த நாளில் அவரை வழிபடுவதால் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும் என்று நம்பப்படுகிறது.
மகா விஷ்ணுவை நினைத்து வழிபடும் விரதங்களில் முதன்மையானதாகவும் சக்தி மிகுந்ததாகவும் இருப்பது ஏகாதசி விரதம். மனிதப் பிறவியில் அறிந்தும், அறியாமலும் செய்த அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி, நிறைந்த செல்வம் பாக்கிய பலன் மற்றும் முக்தியைத் தரும் விரதமாகும்.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்க விரும்பும் அனைத்து புண்ணியத்தையும் கொடுக்கும் விரதம். புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று யாருக்கு விதி இருக்கிறதோ அவர்களே இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
இப்படி பாவத்தை போக்கி புண்ணியம் தருவதுதான் ஏகாதசி விரதத்தின் மகிமை. இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் 'அஸ்வமேத யாகம்' செய்த பலன் கிடைக்கும். காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை, தாய்க்கு சமமான தெய்வம் இல்லை, கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்று புராணங்கள் கூறுகின்றன.
வைகுண்ட ஏகாதசி
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு ஏகாதசி திதி வந்தாலும் மார்கழி மாதத்தின் வளர்பிறை வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு பெற்றது. வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மார்கழி மாத சுக்லபட்ச வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் அசுரர்களை சம்ஹாரம் செய்ய மகாவிஷ்ணு மூன்று கோடி தேவர்களுடன் பூலோகத்தில் எழுந்தருளினார். எனவே வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.
தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரை இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயணம் என்றும், தேவ லோகத்தின் இரவை தட்சிணாயணம் என்றும் அழைப்பார்கள். இதன்படி மார்கழி மாதம் தேவலோகத்தில் விடியற்காலையாகும். அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் 'உஷத் காலம்" என்கிறோம்.
இந்த நேரத்தில் வைகுண்ட வாசல்கள் திறந்தே இருப்பதால் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் வைகுண்ட ஏகாதசி. அன்று விஷ்ணு ஆலயங்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும். இறைவனை தொழும் ஜீவாத்மா, வைகுண்ட வாசல் வழியாக பரமாத்மாவை சேருகிறது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறு கிறது. வைகுண்ட ஏகாதசியை 'மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பார்கள். இத்தகைய சிறப்பு மிகுந்த வைகுண்ட ஏகாதசி திருக்கணித பஞ்சாங்கப்படி சோபகிருது வருடம் மார்கழி மாதம் 7-ம் நாள் (23.12 2023) அன்று பரணி நட்சத்திரத்தில் சனிக்கிழமை வருகிறது.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்கும் முறை
ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அன்று ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும். மறு நாள் ஏகாதசி அன்று அதிகாலையில் நீராடி பெருமாள் கோவிலுக்கு சென்று, சொர்க்கவாசல் வழியாக வந்து இறைவனை வணங்க வேண்டும். நாள் முழுவதும உபவாசம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்கர நாம ஸ்தோத்திரங்களையும் பாடல்களையும் பாராயணம் செய்ய வேண்டும். அன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனை துதி செய்ய வேண்டும். பெருமாள் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபடலாம். அல்லது வீட்டில் இருந்தபடியே இறைவனின் திருவுருவ படத்திற்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம். அல்லது மிக எளிமையாக 'ஓம் நமோ நாராயணாய" என்று கூறிக்கொண்டே இருந்தால் கூட போதுமானது.
மறுநாள் துவாதசி அன்று கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி பகவானின் நாமத்தைச் சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி, உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம். இறைவனுக்கு நெல்லிக்காய், அகத்திகீரை போன்றவை படைத்து இயன்ற அன்னதானம் செய்த பிறகு சாப்பிட வேண்டும். விரதத்தை கடைபிடித்தவர்கள் நெல்லிக்காய், சுண்டக்காய், அகத்திகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்களும் விரதம் இருப்பவர்களின் சிந்தனையில், இறைவனின் நினைப்பு மட்டுமே இருக்க வேண்டும். வயோதிகர்கள், உடல் நலம் குறைந்தவர்கள் உப்பு, சர்க்கரை சேர்க்காத திரவ உணவு மற்றும் இறைவனுக்கு சமர்ப்பித்த பழங்களை உண்ணலாம்.
கர்மவினை தொடர்பான தாக்கத்திலிருந்து விடுபட சனிக்கிழமை மிக உகந்த நாள். மகாவிஷ்ணு வழிபாட்டை சனிக்கிழமை கடைபிடிக்க உன்னதமான பலன் கிடைக்கும்.
ஏகாதசியன்று உபவாசம் இருந்து மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்றால் சுய ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் செயலற்றுப் போகும். வறுமை விலகி நிலையான நிரந்தரமான முன்னேற்றம் கிடைக்கும்.
விரதத்தினால் ஏற்படும் பலன்கள்
மகாவிஷ்ணு படத்திற்கு துளசி மாலை அணிவித்து, அவல், லட்டு வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக பொருளாதாரம் தொடர்பான அனைத்து குறைகளும் சீராகும்.
சகல செல்வங்களும் உண்டாகும்.
தொழிலில், உத்தியோகத்தில் ஏற்றம் கூடும். கொடுத்த பணம் வசூலாகும். தீராத நோய்கள் அகலும். பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். பித்ரு தோஷம் மற்றும் பிரம்மஹத்தி தோஷம் அகலும். முக்தி கிடைக்கும். உடலும், ஆன்மாவும் சுத்தமடையும்.
மார்கழி 7 (23.12.2023) சனிக்கிழமை, ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி திதி சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் வருகிறது. ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழில் சுக்கிரன் இருக்கும் ஆண்கள், சுக்கிரன்+சனி, ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் சுக்கிர, சனி தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமி படத்திற்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.
மார்கழி 8, 24.12.2023 ஞாயிற்றுக் கிழமை, துவாதசி, கிருத்திகை நட்சத்திரம்.
ஞாயிற்றுக்கிழமை சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாள். கிருத்திகை சூரியனின் நட்சத்திரம்.
ஞாயிற்றுக்கிழமையும், கிருத்திகை நட்சத்திரமும் துவாதசி திதியும் இணைந்த நாளில் மகாவிஷ்ணுவை வழிபட அரசு உத்தியோகம் கிடைக்கும். அரசாளும் யோகம் கிடைக்கும்.
கண் தொடர்பான பாதிப்புகள் அகலும்.தந்தையின் அன்பும், ஆசிர்வாதமும் கிடைக்கும். சமுதாய அந்தஸ்து, கவுரவம்'புகழ், வெற்றி, தைரியம் உங்களை வழி நடத்தும்.
பித்ரு தோஷம் மற்றும் பிரம்மஹத்தி தோஷத்தால் குடும்பத்தில் முன்னேற்றம் குறைவு இருப்பவர்கள் துவாதசி திதி அன்று இயன்ற உணவு தானம் தண்ணீருடன் சேர்த்து வழங்க நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
சுய ஜாதகரீதியான சங்கடங்கள் விலகி நிம்மதி அடைய ஏகாதசி விரதத்தை கடைபிடித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.