- சரிவிகிதமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் சரியாக உடல்நலத்தைப் பேண முடியும்.
- உலகில் உள்ள உயிரினங்களில் மனம் என்பது உள்ள ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமேயாகும்.
உடல் நலமும் உள்ள நலமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற உன்னதமானவர்களே!
வணக்கம்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை இயக்கத்திற்கும் அவனது உடல் மற்றும் உள்ளம் ஆகியவையே அடிப்படைக் காரணிகளாய் அமைகின்றன. எந்த அளவிற்கு நாம் நமது உடலின் நலத்தில் அக்கறை காட்டுகிறோமோ, அதே அளவிற்கு நமது உள்ளத்தின் நலத்திலும் அக்கறை செலுத்தவேண்டும்.
அதனால் தான் கவியரசர் கண்ணதாசன் "உடலும் உள்ளமும் நலந்தானா?" எனத் திரைக் காதலனைக் கேட்பதுபோல் நம் எல்லோரையும் பார்த்துக் கேட்கிறார். உள்ளம் நலமாக இருந்தால் தான் உடல் வளமாக இருக்கும். உடல் வளமாக இருந்தால் தான் உள்ளம் நலமாக இருக்கும்.
உடலுக்கு உருவம் இருக்கிறது. அங்கங்கள் இருக்கின்றன. ஆனால் உள்ளம் என்பதற்கு உருவமும் கிடையாது. அங்கங்களும் கிடையாது. நிலையான இருப்பிடமும் கிடையாது. நமது உடல்சார்ந்த சிந்தனைப் பரப்புகளெங்கும் அது வியாபித்து நிற்கும். ஆனாலும் உள்ளம் சார்ந்த நலக்குறைவுகளால் நமது உடலில் அவ்வப்போது சில மாற்றங்கள் உண்டாகும்; உடல்நலக் குறைபாட்டு அடையாளங்களைக் கொண்டே நமது மன நிலைகளில் கேடு உண்டாகியிருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
சரிவிகிதமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் சரியாக உடல்நலத்தைப் பேண முடியும். அதேபோலச் சரிவிகிதமான சிந்தனை ஒழுக்கம் மூலமாக நமது மன நலத்தையும் சிதைந்து போகாமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும். உடலில் பாதிப்பு என்றால் அது பார்ப்பவர்களுக்கு வெளிப்படையாகப் புலப்பட்டுவிடும்; ஆனால் மனநிலையில் கோளாறு என்றால், பொதுப்படையாகப் பார்ப்பவர்களுக்குச் சட்டென்று தெரிந்து விடுவதில்லை.
ஒரு மனநல மருத்துவர், ஒரு மனநோயாளியிடம் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எனக்குக் கூறினார். "அவர்கள் திடகாத்திர மானவர்களாகவும் பார்வைக்கு எந்தவிதக் குறைபாடும் இல்லாதவர்கள் போலவும்தான் தென்படுவார்கள். சில நேரங்களில் அவர்களோடு பேசிப்பார்த்தால் நம்மைவிடத் தெளிவாக அறிவுபூர்வமாகப் பேசவும் செய்வார்கள்" என்கிறார்.
இப்படித்தான் ஒருநாள் மருத்துவர் தனது மருத்துவமனைக்குள் நுழைந்து கொண்டிருந்த போது, ஒருவர் தனது ஒரு கையை நீட்டி உள்ளங்கையை விரித்து வைத்துக்கொண்டு, மற்றொரு கை விரல்களால் இந்தக் கையிலிருந்து எதையோ எடுத்துக் கீழே போடுவதுபோலத் தொடர்ந்து பாவனை செய்து கொண்டிருந்தார்.கொஞ்ச நேரம் அவரது அருகில் நின்று தீவிரமாக இதைக் கவனித்த மருத்துவர் அவரிடம், "ஐயா! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அந்த நோயாளிர் கீழே போடுவதை நிறுத்தாமல் சொன்னார்,"கீழே வாத்துகளுக்குத் தீவனம் போட்டுக் கொண்டிருக்கிறேன்!" என்று.
மருத்துவர் தீவிரத்தன்மை குறையாமல் கேட்டார்," உங்களுடைய கையில் தீவனம் எதுவும் இல்லையே ஐயா?"
"ஆமாம்! நீங்கள் சொல்வது சரிதான்!. ஆனால் கீழே வாத்துகள்கூட இல்லைதான்! அதற்காகத் தீவனம் போடாமல் இருக்க முடியுமா?" என்று கேட்டாரே பாருங்கள்! இப்போது மருத்துவரும் நோயாளி நிலைக்கு மாற்றப்பட்டு விட்டார்.
பல நேரங்களில் தெளிவாக யோசிப்பதாலேயே நமது மனம் நோயின்றி இருப்பதாக நம்பிவிடுவது பெருந்தவறாய் முடிந்துவிடும். உடலும் மனமும் ஒன்றினொன்று இயைபுடையதாகவும் தொடர்புடையதாகவுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. நமது நீடிய ஆயுளுக்கும் தடைபடாத செயல்பாடுகளுக்கும் உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாத தேவை ஆகிறது.
உலகில் உள்ள உயிரினங்களில் மனம் என்பது உள்ள ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமேயாகும். மனது உள்ளதனால் அவன் மனிதன் என்று அழைக்கப்படுகிறான். கண், காது, மூக்கு, வாய், உடல் எனும் ஐம்பொறிகளும் முழுமையாகவோ அல்லது ஒன்றிரண்டு குறைவாகவோ உடையவை உயிரினங்கள்; இந்த ஐம்பொறிகளோடு ஆறாவது அறிவாகிய மனத்தை உடையவன் மனிதன். எனவே ஐம்பொறி இயக்கத்திற்கும் அடிப்படையான சிந்திக்கும் செயலைச் செய்து கொண்டிருக்கிற உள்ளத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டியது மனிதனின் இன்றியமையாக் கடமையாகும்'
இன்றைய வாழ்வியல் போக்கில் மனிதனை மனவியல் நோக்கில் அதிகம் பாதிக்கக் கூடிய நோய் மன அழுத்தம் என்பதாகும். மனம் அழுத்தத்திற்கு ஆளாகும் மனிதர்களுக்கு அவர்களை அறியாமலேயே கைகால் நடுக்கம், உடலில் பதற்றம், வேகமான இதயத்துடிப்பு, மூச்சு வாங்குதல் போன்றவை ஏற்படும். மனம் நோய்வாய்ப் பட்டிருப்பதற்கான அறிகுறிகள் இவை; இதற்கு உடலியல் சார்ந்த மருத்துவம் பார்ப்பது மட்டும் பலன் அளிக்காது.
சுந்தர ஆவுடையப்பன்
அதே போல சிலருக்கு உடம்பில் நீண்ட நாள் தீராத வலிகள், கைகால் மூட்டுகளிலோ, முதுகுப்பகுதிகளிலோ இருக்கலாம். இந்த வலிகள் தொடர்ந்து இருக்கும்பட்சத்தில், மனவியல் ரீதியான பாதிப்புகள் உண்டாகலாம். மனத்தளர்ச்சி ஏற்பட்டு, வாழ்க்கையில் பற்றில்லாமல் அவநம்பிக்கை பெருகிவிடுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. உடலுக்கு மருத்துவம் பார்க்கும் அதே வேளையில் உள்ளத்தில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான மனவியல் சிகிச்சையையும் இணையாக மேற்கொள்ள வேண்டும்.
சிலருக்கு வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் தீராத ஆவல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்; அதைச் செய்யவேண்டும்! இதைச் செய்ய வேண்டும்! அதைச் சாதிக்கவேண்டும்! இதைச் சாதிக்கவேண்டும்! என்று அலைபாயும் மனத்துடனேயே அலைந்து கொண்டிருப்பார்கள்;
இப்படிப்பட்டவர்கள் அளவுக்கதிகமாக உணவுண்டு, உடல் அவஸ்தையிலும் தவிப்பார்கள்! என்கின்றனர் மருத்துவர்கள்.
சிலருக்கு அடிக்கடி கோபம் வருவதுகூட ஒருவித மனவியல் குறைபாடுதான். கோபத்தை ஒரு ஆயுதமாகக் கையாண்டால் வாழ்க்கையில் நிர்வாகத்தில் வென்றுவிடலாம் என்று சிலர் கருதவும் செய்கின்றனர். கோபத்தால் உடலியல் அடிப்படையில் நலக்குறைவுகள்தாம் வருமேயொழியத் துளியளவும் நன்மை விளையாது. எனவே தொடர் மனப்பயிற்சி மூலமாகக் கோபத்தைத் துரத்திவிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
எப்போதும் நல்ல சிந்தனைகளை நெஞ்சமெல்லாம் தேக்கி, மகிழ்ச்சியோடு இருப்பவர்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் இயல்பாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களை அகற்றி விட்டாலே நேர்மறை எண்ணங்கள் தாமாகவே நம் மனத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும். அதற்கு 'நல்லவை நாடி இனியவை சொல்ல வேண்டும்' என்கிறார் திருவள்ளுவர்.
ஒரு காட்டில் ஓர் ஆசிரியரும் ஒரு மாணவரும் மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்றுகொண்டிருந்தனர். இருவருக்கும் யோகப் பயிற்சியும் தியானப் பயிற்சியும் அத்துபடி. ஆள் அரவமற்ற நடு வனத்துக்குள் சென்று கொண்டிருந்தபோது ஏதோ சிறு சலசலப்புக் கேட்டு, மாணவன் லேசாகத் திரும்பிப் பார்த்தான். அவர்கள் இருவருக்கும் பின்னால் பத்தடி தூரத்தில் ஆஜானுபாகுவான புலி ஒன்று அவர்களை நோக்கி கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தது.
அதிர்ந்துபோன மாணவன் அச்சத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல், "குருவே பின்னால் பத்தடி தூரத்தில் புலியொன்று நம்மை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கிறது. இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?" என்று கேட்டான். பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஆசிரியர் சொன்னார்,
" புலியிடமிருந்து தப்பிக்க நாம் மூன்று விதமான செயல்களை மேற்கொள்ளலாம்!.
ஒன்று இப்படியே வரிந்து கட்டிக்கொண்டு எவ்வளவு விரைவாக ஓட முடியுமோ அவ்வளவு விரைவாக ஓடத் தொடங்கலாம். ஆனால், நாம் பதினாறு அடி வேகத்தில் பாய்ந்து ஓடினால், புலி முப்பத்து இரண்டு அடி வேகத்தில் நம்மை முந்தி வந்து தாக்கும். உயிர் தப்பிக்க ஒரு சதவீதம்கூட வாய்ப்பு இல்லை.
இரண்டாவது, நாம் நடந்து செல்வதை நிறுத்திவிட்டுக் கற்சிலைபோல அப்படியே நின்றுவிடுவது. அப்படி நின்றுவிட்டால் நமக்குப் பின்னாலிருந்து வரும் புலி அசைவற்று நிற்கும் நம்மை ஒன்றும் செய்யாமல் நம்மைக் கடந்து சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இப்படி நடப்பதற்குப் புள்ளி ஒரு சதவீதம் வாய்ப்பே இருக்கிறது. அதனால் இந்த உபாயத்தாலும் உயிர்தப்பிக்க வாய்ப்புப் பிரகாசமாக இல்லை.
மூன்றாவதாக நான் சொல்லப்போகும் வழியே ஆகச் சிறந்த நல்லவழி. நாம் நமது நடையை நிறுத்தாமல் மெதுவாக நடந்து கொண்டே கண்களைமூடி ஆழ்நிலை தியானத்தில் ஆழ வேண்டும்.
மனத்திற்குள், 'நான் ஒரு புள்ளி; இந்தப் பிரபஞ்சத்தின் மையப்புள்ளி. இந்தப் புள்ளியிலிருந்து, அன்பு, கருணை, இரக்கம், பரோபகாரம் போன்ற அமைதிக் குணங்கள் அலையலையாய் பரவத் தொடங்கவேண்டும். நான் எனும் புள்ளியிலிருந்து நாம் பரப்பத் தொடங்கும் அன்புக் குணங்கள், முதலில், நம்மைச் சுற்றிலும் உள்ள வனங்களில் உள்ள செடி கொடி மரம் பூ கனி புல் பூண்டு உயிரினங்கள் அனைத்திலும் பரவி, அவற்றை அன்புமயமாகவும் கருணை மயமாகவும் மாற்ற வேண்டும். அப்படியே தியான அலைகளை விரிவாக்க விரிவாக்க அவை, வனம் தாண்டி, மலைதாண்டி, கடல்தாண்டி, வாழுகிற எல்லா ஜீவராசிகளையும் அன்புமயத்தில் கரையச் செய்ய வேண்டும்.
இப்படி அன்புமயத் தியானத்தில் ஈடுபடுவதன் மூலம், நமக்கு வேறாய் வந்து கொண்டிருக்கும் புலியை, நமது அன்பு வசியத்தால் நம்மில் ஒருவராய் ஆக்கி, அதன் கொடூர குணத்திலிருந்து அதனைச் சாதுவாக மாற்றித் தப்பித்து விடலாம்" என்றார் குருநாதர்.
புலியோடு போரிட்டு வெல்வதை விட, அல்லது ஓடித் தப்பிப்பதைவிட, மனத்தால் அன்பு வசியப்படுத்தி அதனை வசப்படுத்திக் கொள்ளலாம் என்பதே ஆசிரியர் கூறிய உபாயம்.
புலியை வெல்வதற்கே மனத்தை அன்புமயப் படுத்தும் உபாயம் போதும் என்னும்போது, அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களை வெல்வதற்கும் அதனையே கடைப்பிடிப்பதில் தவறு ஒன்றும் இல்லையே!.
ஆனால் மனப் பயிற்சி என்பது ஒரேநாளில் வாய்த்துவிடக்கூடிய ஜீபூம்பா சமாச்சாரம் அல்ல; உடம்பை வளப்படுத்தவும் நலப்படுத்தவும் அன்றாடம் உடற்பயிற்சி என்பது எவ்வளவு அவசியமோ அதைப்போலவே மனப் பயிற்சிக்கும் கடுமையான முயற்சிகள் அவசியம். முறையான உடற்பயிற்சியாளர் மூலமே உடற்பயிற்சி வித்தைகளைக் கற்றுக் கொள்ளவேண்டும். முறையான யோக, தியானப் பயிற்சியாளர்கள் மூலமே மனத்தை நலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
உடல் செம்மையாக முறையான உணவுப்பயிற்சியும் தேகப்பயிற்சியும் போதும். ஆனால் மனமது செம்மையாகத் தொடர்ந்த நற்சிந்தனைகளும் நற்செயல்களும், மனம் அடக்கும் பயிற்சிகளும் அவசியம் தேவை.
'மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை' என்று ஆன்றோர்கள் கூறுவது, மனத்தை அடக்கியோர் தெய்வீகநிலைக்கு உயர்ந்து விடுவர் என்பதை எடுத்துரைக்கவே ஆகும். செம்மை மனநலமும் திறமான உடல் நலத் தூய்மையும் உடையவர்கள் மந்திரம் செபித்துத்தான் தெய்வீக நிலையை அடைய வேண்டும் என்கிற கட்டாயமில்லை.
நலம்பெறுவோம்! நலமாக்குவோம்! உடல் வாழ்க! உள்ளமும் வாழ்க!!
தொடர்புக்கு 9443190098