சிறப்புக் கட்டுரைகள்

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

Published On 2023-12-01 17:33 IST   |   Update On 2023-12-01 17:33:00 IST
  • வீடு கட்டி பால்காய்ச்சும் போது முதலில் பசுமாட்டைத்தான் வீட்டுக்குள் நுழைப்பார்கள்.
  • வாழைமரத்தைப் போல பெண்களைப் பசுவிற்கும் ஒப்பிடுவார்கள்.

கோமாதா எங்கள் குலமாதா

குலமாதர் நலங்காக்கும் குணமாதா....

கண்ணை இருக்கமா மூடிக்கிட்டு இந்த வரிகளைப் பாடிப் பாருங்களேன். தப்பித்தவறி சரஸ்வதி சபதம் பட செட்டுக்குள்ளே நுழைஞ்சிட்டோமோன்னு ஒரு வியப்பு வரும். அப்படி ரசிகர்கள் மனதில் பதிந்து போன ஒரு பாடல் இது. அதுக்கு தத்ரூபமா அதில் நடித்தவர்களும் ஒரு காரணம்.

அதென்னப்பா எதை எடுத்தாலும் சினிமாவில் இருந்தே உதாரணம் சொல்றீங்கன்னு கேட்பவர்களுக்கு.....நம்மைச் சுற்றிலும் ஒலி, ஒளி ஊடகங்கள் தான் கோலோச்சுது. அதிலும் சினிமாவின் ஆதிக்கம் ஆளவும் செய்கிறதே. விஷயத்திற்கு வருவோம்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....

அதென்னங்க நல்ல மாடு கெட்ட மாடுன்னு எப்படி வகை பிரிக்கிறீங்க ? தீய செயல்கள் செய்யும் மனிதனை, உதாரணமா நம்ம சீரியல் வில்லன்கள் மற்றும் வில்லிகளை வைத்துக்கொள்ளலாம். என்னதான் கதாநாயகி டப்பா கணக்கில் கிளிசரினை வைத்துக் கொண்டு, கர்ச்சிப்களை ஈரமாக்கினாலும், சீரியல் ஹிட் அடிப்பதென்னவோ வில்லன்கள் வில்லிகளின் நடிப்பில்தான். அவங்க டிரஸ்சிங் பிளஸ் லுங்கிங் பார்க்கவே டி.ஆர்.பி எகிறும்.

இந்த பழமொழியின் வழக்கு அர்த்தம், மாடு போலத்தான் மனிதனும் சூட்டைப் போல வலி மிகுந்த ஒரு சொல்லில் தவறு செய்பவர்கள் திருந்திவிட வேண்டும் என்ற அர்த்தத்தில் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல்லு என்பார்கள்.

சொல்பேச்சு கேட்காத கால்நடைகளுக்கு சூடு வைப்பது என்பது பழமொழியின் அர்த்தம் கட்டாயமா இல்லை. அர்த்தத்திற்கு போகும் முன் மாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

ஒரு பசு தன்னுடைய முதன் கன்றை பிரசவிக்கும்போது அதனை தேனு என்பார்கள். இரண்டாவது கன்றைப் பிரசவித்ததும் கோ என்பார்கள். அந்த பசுவைத்தான் கோமாதா பூஜைக்கு பயன்படுத்துவார்கள் என்பதும், இந்த பூஜை சகல ஐஸ்வர்யங்களையும் கொண்டு வரும் என்பதும் ஐதீகம். சிவபெருமானின் வாகனமும் காளை மாடுதான். எமதர்மனின் வாகனமும் எருமைமாடுதான்.

முற்காலத்தில் ராஜாக்கள் அரண்மனைகள் கட்டும் போது உபயதோமுகி என்னும் பூஜை செய்துதான் கட்டிடம் கட்டுவார்கள். இதிலும் ஒரு சுவாரஸ்யம் உண்டு. அந்த பசு பிரசவத்தின் போது, கன்றின் முன்னங்காலும் தலையும் தான் முதலில் வெளிவரும். இவ்வாறு இரண்டு பக்கமும் தலையையுடைய பசுவை உபயதோமுகி என்பார்கள். இப்போதும் வீடு கட்டி பால்காய்ச்சும் போது முதலில் பசுமாட்டைத்தான் வீட்டுக்குள் நுழைப்பார்கள்.

பொன் பொருளை விடவும், கால்நடைகளாகிய ஆடு மாடு வைத்திருப்பவர்களே செல்வந்தர்களாக அன்றைய காலத்தில் கருதப்பட்டார்கள். உழைப்பிற்கு பெயர் பெற்றதுதான் மாடு. கடுமையான வேலை செய்பவர்களை மாடு போல் உழைக்கிறான் என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.

ஒரு நாட்டின் மீது போர்த்தொடுக்க விரும்பும் அரசன் அந்நாட்டின் எல்லைக்குள் புகுந்து அங்குள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வருவான். அப்படி கவரப்பட்ட பசுக்களை மீட்டு வருவது வெட்சித்திணை ஆகும். தொல்காப்பியத்தில் அரசர்களின் போரைப் பற்றி பேசும் பகுதிகளில் முதல் கட்டமே பசுக்களைக் கவரும் வெட்சித்திணைதான் என்கிறது.

லதா சரவணன்


வாழைமரத்தைப் போல பெண்களைப் பசுவிற்கும் ஒப்பிடுவார்கள். பசுவின் கர்ப்பகாலம் 9 மாதம் 9 நாள். எருமையின் கர்ப்பகாலம் 10 மாதம் 10 நாள். தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் தாய்மையின் இலக்கணமாகவும் பசுக்களைச் சொல்வது உண்டு.

சந்தர்ப்பம் கிடைச்சா உடனே பெண்களைப் புகழ்ந்துடுவீங்களேன்னு கேட்கறீங்க. சயின்ஸ் படி 2009ம் ஆண்டில் பசுக்களோட மரபணுக்களை சோதனை செய்ய 22ஆயிரம் வகை மரபணுக்களில் 80 சதவீதம் மனிதர்களுடன் ஒத்துப்போகிறதாம்.

அரோச் எனப்படும் காட்டு மாடுகளின் வம்சாவழிதான் பசுமாடுகள். மொத்தம் பசுக்களில் மட்டும் 80 இனங்கள் உள்ளன. பசுவின் பாலில் உணவுப் பொருட்கள் மட்டுமல்ல, அதன் கழிவான சாணம்,கோமியம் போன்றவை உரமாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

ஒரு நாளைக்கு 45கிலோ உணவு சாப்பிடும் மாடுகள், 250 முதல் 500 லிட்டர் வரையில் தன் கழிவுடன் மீத்தேன் வாயுவை வெளியேற்றுகிறது. ஆறு மைல் தொலைவுக்கு அப்பால் இருந்தாலும் உணரும் மோப்பசக்தி பசுக்களிடம் உண்டு.

அமிர்தத்திற்காக பாற்கடலைக் கடையும் போது, வெளிவந்த காமதேனு என்கிற பசு வசிஷ்டர் ஆசிரமத்தில் இருந்து வந்தது. விருந்தாளியாக வந்த மன்னர் விசுவாமித்திரரின் படையினருக்கு காமதேனுவின் உதவியால் விருந்து படைத்தார் வசிஷ்டர். இந்த அரியவகை பசு தன் அரண்மமையில் இருக்க வேண்டும் என்று அதை கவர முயல, காமதேனுவை தன்னுடைய தவ வலிமையால் காப்பாற்றினார் வசிஷ்டர். இந்த நிகழ்வின் பிறகே, விசுவாமித்திரர் தீவிரமாய் தவம் புரிந்து, பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றார் என்கிறது புராணம்.

காளையை அடக்கு பொண்ணைத் தருகிறேன் என்று எத்தனை மாமனார்கள் மருமகன்களுக்கு செக் வைத்திருக்கிறார்கள். 80 முதல் 90 களின் கிராமியப் படங்களில் மாடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.

மனிதர்களைப் போலவே தன் விருப்பமானவர்களின் உணர்வுகள் தனதாக்கிக் கொண்டு, சந்தோஷமும், சோகமாக இருந்தால் மன அழுத்தத்துடன் இருக்குமாம். அப்படி உணர்வு பூர்வமான தருணத்தில் அதன் இதயத்துடிப்பில் மாற்றம் நிகழ்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

காளைகளை விற்க மாட்டுச்சந்தைகள் நடைபெறுவது உலகபிரசித்தியாகும். அதிலும் காங்கேயம் காளைகளுக்கு நல்ல மவுசு உண்டு. ஐந்து மனிதர்களின் வலிமையை ஒரு மாடு கொண்டிருக்கிறது.

எருமைமாடு மேல மழை பெய்தா மாதிரி நிக்குறியேன்னு திட்டுவதை கேட்டு இருப்போம். அடிச்சி வெளுக்கும் மழை, வெட்டவெளியில் உதிரும் வெய்யில்ன்னு எல்லாத்தையும் பார்த்து தைரியமா நிற்கும் உம்பளாச்சேரி மாடுகள். விவசாயம், பாரம் இழுத்தல், சமீபகாலமா ஜல்லிக்கட்டுக்கு கூட பயன்படுத்தப்படுகிறது. சந்தையில் இந்த மாடுகளின் கன்றுக்குட்டிகள் ரூ.15 ஆயிரம் வரை விலை போகுமாம்.

இந்த ஒரு மாடு இருந்தாலே போதும், பல ஏக்கர் விவசாயத்திற்கு தேவையான உரமும், சாணமும், சிறுநீரும் மண்ணில் பட்டால், அந்த நிலம் பொண்ணு விளையும் பூமியா மாறிப்போகுன்னு இந்த உம்பளாச்சேரி மாடுகளுக்கு ஏக கிராக்கி இருக்கு.

முத்துமுத்தாய் நெல் விளைந்தாலும் உம்பளாச்சேரி மோருக்குச் சோறு கிடைக்காது என்று காளமேக புலவர் ஒரு பாடல்ல எழுதியிருக்காரு.

இதையெல்லாம் கடந்து அவங்களைக் கொண்டாடவே நாம உழவர்திருநாளன்று பொங்கல் வைச்சி கடவுளா கொண்டாடறோம். அப்படிப்பட்ட மாட்டுக்கு சூடுன்னு இனி பழமொழியோட அர்த்தத்தை மாற்றிச் சொல்லமாட்டோம் இல்லையா?

சரி உண்மையான விளக்கம் என்ன? அதைச் சொல்லாம போனா எப்படி? சொல்றேன்... சொல்றேன்...

நல்ல மாட்டுக்கு ஒரு சுவடுதான் என்ற வார்த்தையே சூடு என்று திரிந்து போனது. சந்தையில் உழவுக்கும், வளர்ப்புக்கும் மாடு வாங்க செல்லும் போது, மாட்டின் அடிச்சுவட்டை வைத்தே அதன் வலிமை, உடல்நலத்தை கணித்து வாங்குவார்கள். அந்த அடிச்சுவடுதான் சூடாகிப் போனது.

Tags:    

Similar News