முதுமையில் சீரண மண்டல தொந்தரவுகளும், தீர்வுகளும்
- முதுமையில் சீரண மண்டலத்துக்கு நலம் பயக்கும் சத்தான எளிய உணவுகளை நாடுவது நலத்திற்கு நல்லது.
- தியானம் பழகி அவற்றை போக்கிக்கொள்வது நல்லது.
பிறந்தது முதல் இறக்கும் வரை நமது உடல் உறுப்புகள் இயந்திரத்தனமாய் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய ஓய்வறியா உறுப்புகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது சீரண மண்டல உறுப்புகள். இந்த சீரண மண்டலம் கிட்டத்தட்ட ஓர் இயந்திரம் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்றைய நவீன வாழ்வியலில் துரித உணவுகள் ஏற்படுத்தும் உடல் உபாதைகளை நேரடியாக எதிர்கொள்வது சீரண மண்டல உறுப்புக்கள் தான். முதுமையில் வயது மூப்பின் காரணமாக இந்த உறுப்புக்கள் சோர்ந்து போவதால் பல்வேறு செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி மேலும் துன்புறுத்தும்.
நவீன மருத்துவ வளர்ச்சியினால் ஒட்டுமொத்த ஆயுட்காலம் முதுமையில் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சி தான். இருப்பினும் அத்தகைய வாழ்நாளை ஆரோக்கியமாக கடக்க முடியாமல் அதிக உடல் உபாதைகள் உண்டாகி முதுமையை துன்புறுத்துகின்றன. அதில் செரிமானக் கோளாறுகள் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கக்கூடியதாய் இருக்கின்றன.
வாழும் இறுதிக்காலத்தில் நாவிற்கு சுகம் தரும் அறுசுவை உணவினை உண்ண முடியாத சூழலை முதுமை மாற்றங்கள் உண்டாக்கிவிடுகின்றன. காரணம், முதுமையில் இயற்கையாகவே உமிழ்நீர் சுரப்பிக் கோளங்கள் செயல்பாடு குறைந்து, உமிழ்நீர் சுரப்பும் குறைகிறது. மேலும் நாவில் சுவை மொட்டுக்கள் தேய்மானம் அடைவதால், சுவை உணரும் திறனும் குறைவது வருத்தம் தான். இத்தகைய சூழலில் அறுசுவை முதுமைக்கு எட்டாக்கனியாகி விடுகிறது.
முதுமையில் உணவில் விருப்பமின்மை (உணவு வெறுப்பு) பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் காணப்படுகிறது. முதுமையில் சிதைந்த பற்களும், குறைந்து போன சுவை உணரும் தன்மையும், ரத்தத்தில் குறைந்து போன டெஸ்டோஸ்டீரோன் எனும் ஆண் ஹார்மோன் அளவும் இதற்கு காரணமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் குறைபாடு உண்டாகி, உடல் மேலும் பலவீனமடைகிறது. எனவே முதுமையில் சீரண மண்டலத்துக்கு நலம் பயக்கும் சத்தான எளிய உணவுகளை நாடுவது நலத்திற்கு நல்லது.
அதே போல் முதுமையில் உணவுக்குழாயின் அடிப்பகுதியில் உள்ள இறுக்கு தசைகள் (LES) வலுவிழந்து போவதாலும், அதன் செயல்பாடு குறைவதாலும், இரைப்பையில் உள்ள உணவுப்பொருட்கள் எதிரெடுக்க நேரிடுக்கின்றது. இதனால் 'ஜெர்ட்' (GERD) எனும் எதிரெடுத்தல் பிரச்சினை பெரும்பாலான முதியவர்களுக்கு உண்டாகக்கூடும்.
அசீரணம், உணவு விழுங்க சிரமம், புளியேப்பம், நாட்பட்ட வறட்டு இருமல், சில சமயம் வாந்தி, வாய் குமட்டல், இதனால் இரவில் தூக்கமின்மை ஆகிய தொந்தரவுகள் கூடி முதுமையை வருத்தும். நெஞ்சு எரிச்சல் மற்றும் உணவு எதிரெடுத்தல் ஆகிய குறிகுணங்கள் அதிக பாதிப்பை உண்டாக்கும். இந்த நோய்நிலை முதுமையில் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிகம் பேருக்கு உண்டாகும்.
ஜெர்ட் நோயில் வயிற்றில் உள்ள அமிலம் உணவுக்குழாயில் எதிரெடுத்து மேலே வருவதால் பல்வேறு துன்பங்களை உண்டாக்கும். முதுமையில் கிட்டத்தட்ட நூற்றில் 20 பேருக்கு இந்த ஜெர்ட் தொந்தரவு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஜெர்ட் நோய்நிலையானது நமது நாட்டில் மட்டுமல்லாது, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் மிகப்பெரும் சவாலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நவீன வாழ்வியலில் துரித உணவு முறையால் 'ஜெர்ட்' முதியோர்களை விட இளையோர்களுக்கு அதிகம் காணப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஜெர்ட் நோய்நிலையால் அதன் பின்விளைவாக உணவுக்குழாய் அழற்சி, குடல்புண் போன்றவை ஏற்படக்கூடும். நாட்பட்ட ஜெர்ட் தொந்தரவு இருக்கும் பெரும்பாலான முதியோர்களுக்கு 'குடல் இறக்கம்' (hiatus hernia) ஏற்படுவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜெர்ட் எனும் உணவு எதிரெடுத்தல் பிரச்சினைக்கு 'ஆன்டாசிட்' எனும் வயிற்று புளிப்பகற்றும் மருந்தினை வருடக்கணக்கில் எடுத்துக்கொள்வது முதுமையில் பலரிடம் வாடிக்கையாக உள்ளது. மருத்துவர் ஆலோசனையின்றி தொடர்ந்து ஆன்டாசிட் வகை மருந்துகளை எடுத்துக்கொள்வதால் பல்வேறு பின் விளைவுகள் உண்டாகும் என்றும் ஆய்வுகள் எச்சரிக்கை விடுக்கின்றன.
முக்கியமாக புரதசத்து பொருட்களின் செரிமானம் பாதிக்கப்படுவதாகவும், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி12 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உட்கிரகிக்கப்படுவது தடுக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, எளிமையாக சித்த மருத்துவத்தை நாடுவது குடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
சித்த மருத்துவக் கூற்றின்படி 'ஜெர்ட்' நோய்நிலையானது வாதமும், பித்தமும் தன்னிலை மாறுவதால் உண்டாவதாக அறியப்படுகின்றது. முக்கியமாக வாதமே அனைத்து நோய்களுக்கும் முக்கிய காரணம். 'வாதமலாது மேனி கெடாது' என்பது தேரையர் சித்தர் கூறும் பிணிகளுக்கான முதல் காரணம். முதுமையில் அத்தகைய வாதத்துடன் கூடும் பித்தம் ஜெர்ட் குறிகுணங்களை உண்டாக்குவதாக அறியப்படுகின்றது.
வாதத்தை குறைக்கும் சித்த மருந்துகளும், பித்தம் குறைக்கும் மருந்துகளும் ஜெர்ட் நோய்நிலையில் நல்ல பலன் தரும். எளிமையாக சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள நிலாவரை சூரணம், கடுக்காய் சூரணம், சிவதை சூரணம் ஆகிய மருந்துகள் மலத்தைப் போக்கி அபானனை வெளியேற்றி வாதத்தைக் குறைக்கும்.
நிலாவரை சூரணம் எனும் மருந்து மலம் போக்கி தன்மை உடையது. இரவில் படுக்கை போகும் போது அரை முதல் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ள நற்பலன் தரும். முதுமையில் பேதி மருந்துக்கு பதிலாக மலமிளக்கி மருந்துகளே எடுத்துக்கொள்ள உகந்தது.
ஜெர்ட் குறிகுணத்தைக் குறைத்து சீரணத்தை எளிமையாக்க சித்த மருந்தான ஏலாதி சூரணம் அளப்பரிய பயன் தரும். பெருங்காய சூரணம், இந்துப்பு சூரணம் ஆகிய சித்த மருந்துகளும் வாதம் குறைக்க உதவும். பித்தம் குறைக்க சீரக சூரணம், அதிமதுர சூரணம், மாதுளை மணப்பாகு, வில்வாதி லேகியம் ஆகிய மருந்துகள் நல்ல பயனளிக்கும்.
வாதபித்தம் குறைத்து நோய்நிலையைக் குறைக்கும் சீரகம், சோம்பு, ஓமம் ஆகிய அஞ்சறைப்பெட்டி சரக்குகளை அவ்வப்போது கசாயமாக்கி குடித்து வர வயிற்றுப் பொருமல், வாந்தி, வாய்க்குமட்டல், நெஞ்சு எரிச்சல் ஆகிய குறிகுணங்கள் குறையும். செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.
வாதமே ஜெர்ட் பிரச்சினைக்கு முதன்மைக் காரணமாக உள்ளதால் வாதம் அதிகரிக்கும் உணவுப்பொருட்களாகிய கிழங்கு வகைகள், (கருணைக்கிழங்கு தவிர), பட்டாணி வகைகள், வாதபித்தம் இரண்டையும் அதிகரிக்கும் அசைவ உணவுகள் இவற்றை தவிர்ப்பது நல்லது. உடல் பருமனை சீராக பராமரிப்பதும் அவசியம்.
பித்தத்தை தூண்டும் தேநீர், கபின் வேதிப்பொருளைக் கொண்ட காபி, காற்றேட்டப்பட்ட பானங்கள், புளிப்பு தன்மையுள்ள பழங்கள், அதிக காரம் மற்றும் மசாலா சேர்ந்த உணவு வகைகள், மது, புகை, கொழுப்புப் பொருட்கள் இவை நோயின் குறிகுணத்தை அதிகரிக்கும். ஆகவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
முக்கியமாக இரவில் எண்ணெய் பொருட்களைத் தவிர்த்து எளிதில் செரிக்கும் உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது. செரிமானத்தைத் தூண்டும் பிஞ்சுக்காய்கறிகள், புளிப்பில்லாத பழங்கள் இவற்றை அதிகம் சேர்க்கலாம். பாரம்பரிய உணவு வகைகளை நாடுவதன் மூலம் சத்துக்கள் பற்றாக்குறையை தீர்க்க முடியும். வாரம் ஒருமுறை ஆமணக்கு எண்ணெய் இரவில் வெந்நீரில் அல்லது பாலில் கலந்து எடுத்துக்கொள்வது வாதம் குறைக்கும் எளிய வழிமுறை. இது முதுமையில் ஜெர்ட் நோய் வராமல் தடுக்கும்.
வாழ்வியல் மாற்ற நெறிமுறைகளும் ஜெர்ட் நிலைமையில் பலன் தரக்கூடியன. தலைக்கு தலையணை வைத்து சற்று உயரமாக படுத்தலும், இரவு உணவினை அளவு குறைவாக எடுத்துக்கொள்வதும், உணவு உண்ட பிறகு நேரடியாக படுக்கைக்கு செல்லாமல் சிறிது தூரம் நடைப்பயிற்சி பழகுவதும் ஜெர்ட் நோயின் குறிகுணங்களைக் குறைக்கும். மன அழுத்தமும், மன பதட்டமும் ஜெர்ட் நோயின் குறிகுணங்களை அதிகரிக்கும். ஆகையால் அவ்வப்போது தியானம் பழகி அவற்றை போக்கிக்கொள்வது நல்லது.
இறுக்கமான உடையை அணிவது தற்போதைய கால கட்டத்தில் அதிகமாகிவிட்டது. இதனால் சீரண மண்டல உறுப்புகள் இயல்பாக செயல்படும் தன்மை பாதிக்கப்படுவதால் ஜெர்ட் நோயின் குறிகுணங்கள் உண்டாகக்கூடும். ஆகவே பாரம்பரிய உடையில் நாட்டம் காண்பது குடல் உறுப்புகளுக்கு நன்மை தரும். தளர்த்தியான ஆடை அணிந்து ஹாலாசனம், வஜ்ராசனம், உஷ்ட்ராசனம், பாவன முக்தாசனம், அர்த்த மச்சேந்திராசனம் ஆகிய எளிய யோகாசனப் பயிற்சி முறைகளை மேற்கொள்வதும் பலனளிக்கும்.
குடல் நலமே உடல் நலத்துக்கும் அடிப்படை என்கிறது இன்றைய நவீன அறிவியல். இதனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கணித்திருந்த நம் முன்னோர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து எடுக்க வலியுறுத்தி வந்தனர். குடல் நலம் காப்பது மன நலனுக்கும், இதய நலனுக்கும் நல்லது என்கிறது நவீன அறிவியல்.
மேலும் குடல் நலம் நாட்பட்ட தொற்றா நோய்களான நீரிழிவு, இதயநோய், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை தடுக்கும் எளிய வழிமுறை என்கிறது நவீன அறிவியல். ஆக, குடல் நலம் காக்கும் உணவு முறைகளும், ஆசனப் பயிற்சிகளும் முதுமையின் நலத்திற்கு அவசியம்.
அறுபது வயதைக் கடந்த பல முதியவர்கள் மருத்துவமனை வாசலை நாடி தவம் இருப்பதற்கு குடல் சார்ந்த நோய்களும் அதன் நலமின்மையும் முக்கிய காரணமாகின்றன. ஆக குடல் நலமே உடல் நலம் என்பதைக் கருத்தில் கொண்டு இயற்கையான உணவையும், இடைஞ்சல் தராத மருந்தையும் நாடுவதே முதுமையில் சீரண மண்டலத்திற்கு தரும் மாபெரும் விருந்து.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com