சிறப்புக் கட்டுரைகள்

இல்லற பிரச்சினைகளை தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி

Published On 2023-07-25 17:28 IST   |   Update On 2023-07-25 17:28:00 IST
  • சாமுண்டீஸ்வரி அம்மனின் கோவில் மைசூரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
  • சிவபிரானுக்கு எதிரில் அமைந்திருக்கும் நந்தி மாபெரும் நந்தியாகும்.

இன்றைய கர்நாடக மாநிலத்தில், மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி ஆலயம் பிரபலமான 18 மகா சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

மிகப் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் குடிகொண்டு அருள்பாலிக்கும் சாமுண்டி தேவி தனது பிரதிநிதியாக மைசூரை ஆண்டு வந்த மன்னர்களை நியமித்து அறநெறி வழியில் அவர்களை ஆட்சி செய்ய வழி காட்டி வந்த தெய்வம்.

சாமுண்டியை மைசூர் ராஜ்யத்தின் காவல் தெய்வமாக அனைவரும் வழிபட்டு வந்தனர்; வருகின்றனர்.

தன்னை அண்டி வந்த சகல மக்களுக்கும் அவர்கள் வேண்டிய நல்ல காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தரும் சக்தி வாய்ந்த அம்மனாக இன்று வரை விளங்குகிறாள் சாமுண்டி.

கிரவுஞ்ச பீடம்

சாமுண்டீஸ்வரி அம்மனின் கோவில் மைசூரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சாமுண்டி மலையின் உச்சியில் சுமார் 3000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாமுண்டீஸ்வரி ஆலயம் கிரவுஞ்ச பீடம் என்று அழைக்கப்படுகிறது.

மகாநந்தி

இந்த மலையின் மீது அமைந்திருக்கும் கோவிலுக்குச் செல்ல ஆயிரம் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 800-வது படிக்கட்டில் ஒரு சிறு சிவன் கோவில் உள்ளது. சிவபிரானுக்கு எதிரில் அமைந்திருக்கும் நந்தி மாபெரும் நந்தியாகும். கருங்கல்லினால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நந்தி சிலை 15 அடி உயரம் உள்ளது. 24 அடி நீளம் உள்ளது.

பெரியகோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி ஒரே கல்லினால் அமைக்கப்பட்ட ஒன்றாகும். இதன் நீளம் சுமார் 16 அடி. உயரம் சுமார் 13 அடி.

ஆக, நாட்டில் உள்ள நந்திகளில் பெரிய நந்தியைக் கொண்டுள்ளது சாமுண்டீஸ்வரி ஆலயம்.

12-ம் நூற்றாண்டில் ஹொய்சாள வம்ச மன்னர்களால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டது.பின்னர் இந்த கோவிலுக்கான கோபுரத்தை விஜயநகர சாம்ராஜ்ய மன்னர் 17-ம் நூற்றாண்டில் கட்டினார்.

மகாபல கிரி

மகாபல கிரி என்று அழைக்கப்பட்ட இந்த மலையில் மகாபலேஷ்வர் என்ற பெயரில் சிவபெருமான் ஆலயம் ஒன்றும் உள்ளது. இது மிகப் புராதனமானது. இந்த ஆலயத்தில் உள்ள கணபதி மற்றும் ஆஞ்சநேயர் சுயம்பு மூர்த்திகள்.

முன்பொரு காலத்தில் மகாபலேஸ்வரர் ஆலயமும் சாமுண்டீஸ்வரி ஆலயமும் ஒரே மதில் சுவருக்குள் அமைந்திருந்தது. பின்னால் சாமுண்டீஸ்வரியின் தேர் பவனிக்காக ஆலயங்கள் பிரிக்கப்பட்டு தேர் செல்லும் பாதை தனியே அமைக்கப்பட்டது.

சுயம்பு லிங்கமாக உருவாகியுள்ள மகாபலேஸ்வரர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வலது புறம் உள்ள ஆலயத்தில் இருந்து அருள் பாலித்து வருகிறார்.

மகிஷாசுர வதம்

சாமுண்டி தேவியைப் பற்றி கந்த புராணமும் மார்க்கண்டேய புராணமும், தேவி பாகவதமும் விவரிக்கின்றன. முன்னொரு காலத்தில் மைசூர் பிரதேசத்தை மகிஷாசுரன் என்ற அசுரன் ஆண்டு வந்தான். அவன் சிவபிரானை நோக்கிக் கடும் தவம் புரிந்து அவர் அருளைப் பெற்றான். தனக்கு சாகா வரம் வேண்டும் என்று அவன் கேட்க சிவபிரான் அவனிடம் அவனுக்கு ஆண்கள், விலங்குகள், நீர் ஆகியவற்றால் மரணம் ஏற்படாதிருக்க வரத்தை அருளினார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த மகிஷாசுரன் தனக்கு மரணமே இல்லை என்ற மமதையில் அனைவரையும் கொடுமைப்படுத்தி வந்தான்.


ச.நாகராஜன்

இதனால் தேவர்கள் மிகவும் தொல்லைக்குள்ளாகவே அவர்கள் சிவபிரானை அணுகி தங்களைக் காக்குமாறு வேண்டினர். சிவபிரானும் மனம் கனிந்து அவர்களிடம் இதற்காக தேவியை அணுகுமாறு கூறினார்.

பார்வதி தேவியை அணுகிய தேவர்கள் தங்கள் நிலையைத் தெரிவிக்க, தேவி அவர்களிடம் அஞ்ச வேண்டாம் என்று கூறி தாமே சாமுண்டியாக அவதரிப்பதாக உறுதி கூறினார்.

அதன்படியே ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை சாமுண்டியாக மைசூரில் அவதரித்தார். மகிஷனுடன் உக்கிரமாகப் போர் புரிந்த சாமுண்டி தேவி அவனை வதம் செய்தார்.

தேவியின் உக்கிரத்தைத் தாங்க முடியாத மகிஷசுரன் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கடைசியில் சப்தமி திதி, மூல நட்சத்திரத்துடன் கூடிய திங்கள்கிழமை அன்று சாமுண்டி மலைக்கு ஓடி வந்து அம்மனின் திருப்பாதங்களில் சரண் அடைய அவனது தலையைத் துண்டித்தாள் அம்மன். அவனைத் தனது பாதங்களில் ஐக்கியப்படுத்த அனைவரும் மகிஷனின் வதத்தால் மகிழ்ந்தனர்.

மகிஷன் வதம் செய்யப்பட்ட பின், தேவர்கள் தேவியின் உக்கிரத்தைத் தணித்து சாந்தப்படுத்தினர்.

மார்க்கண்டேய மகரிஷி தேவிக்கு எட்டு கரங்களுடனான வடிவத்தை இங்கு அமைத்தார். அன்றிலிருந்து இன்று வரை அம்மன் அங்கிருந்து அருளாட்சி செய்து வருகிறார்.

மகிஷனின் நினைவாக மகிஷாவூர் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் காலப்போக்கில் மருவி மைசூர் என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.

மார்க்கண்டேயரின் ஆசிரமமும் இந்தப் பகுதியில் உள்ளது. மார்க்கண்டேயர் கடும் தவத்தை இங்கு மேற்கொண்டதை புராணங்கள் சித்தரிக்கின்றன. இங்குள்ள சிவலிங்கம் பக்தர்களால் விசேஷமாக வழிபடப்படுகிறது.

சாமுண்டி பெயர் காரணம்

தேவி சும்ப நிசும்பர்கள் என்ற அரக்கர்களையும் வதம் செய்தாள். அந்த அரக்கர்களின் சேனாதிபதிகளான சண்ட முண்டர்களையும் வதைத்ததால் சாமுண்டி என்ற பெயரைப் பெற்றாள்.

சாமுண்டி தேவி 64 யோகினிகளில் ஒரு யோகினியாக அருள் சக்தியுடன் விளங்குகிறார். ஒடிசாவின் புவனேஸ்வரில் 64 யோகினிகளுக்கான கோவில் உள்ளது. இங்கு சாமுண்டாவின் சிலை உள்ளது.

பிராம்மி, வைஷ்ணவி, மகேஸ்வரி, குமாரி, வராகி, ஐந்திரி, சாமுண்டா என்ற சப்த மாதர்களில் ஒருவர் சாமுண்டி தேவி.

சாமுண்டி ஆன்மீக சக்தியை வெளிக் கொணரும் மகா சக்தியாக வர்ணிக்கப்படுகிறாள்.

தேவியின் பிரதிநிதியாக ஆண்ட மைசூர் மன்னர்கள் மைசூர் உடையார் மன்னர்களின் குல தெய்வம் சாமுண்டீஸ்வரி. மன்னனைக் காத்த அம்மனின் அருள் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் மைசூரை நான்காம் சாம்ராஜ உடையார் ஆண்டு வந்தார். அவர் சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்து திரும்பும் போது மழை பெய்யவே, ஒரு மரத்தடியில் பல்லக்கு நிறுத்தப்பட்டு அவர் கீழே இறங்கினார். மலை உச்சியை நோக்கி அவர் வேண்ட நினைத்த போது கோவில் சரியாகத் தெரியாததால் அங்கிருந்து நகர்ந்து தள்ளிச் சென்று கோவிலை தரிசனம் செய்தார். அதே சமயம் பல்லக்கு இருந்த மரத்தின் மீது மின்னலுடன் இடி விழ அது எரிந்து சாம்பலானது. தன் உயிரைக் காத்த அம்மனுக்கு அவர் நன்றி தெரிவிக்கும் வண்ணம் கோவிலைச் சிறப்புற விரிவாக்கினார்.

மன்னர் அம்மனுக்கு சமர்ப்பித்த காணிக்கையும் விசேஷமான ஒன்றாக அமைந்தது. தங்கக் காசுகளால் அமைந்த நட்சத்திர மாலிகா என்ற காசுமாலையை அவர் அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார். அதில் சமஸ்கிருதத்தில் அமைந்துள்ள முப்பது சுலோகங்கள் தேவியைப் போற்றுகின்றன.

கோவிலின் அமைப்பு

கோவில் அமைப்பு சிறப்புற அமைக்கப்பட்டுள்ள ஒன்றாகும். ராஜ கோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. நவரங்க மண்டபம், அந்தராளம், பிரகாரம், கர்ப்பகிருகம் என நாற்கர வடிவில் இது உள்ளது.

கோவிலின் கோபுர வாயிலில் கணபதி அருள் பாலிக்க இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.

கருவறையின் முன்னே கொடிமரம், அம்மனின் பாதம் நந்தி ஆகியவை அமைந்துள்ளன. சந்நிதியின் வலப்புறம் பைரவர் இருக்க வாயிலில் நந்தினி மற்றும் கமலினி ஆகியோர் துவாரபாலகியராக உள்ளனர். எட்டுக் கரங்களுடன் சாமுண்டி அம்மன் அருள் பாலிக்கிறார்.

ஸ்ரீ சக்கரம்

இங்குள்ள ஸ்ரீ சக்கரம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். 6" x 6" x 6" என்ற அளவில் பஞ்ச தாதுக்களால் அமைக்கப்பட்ட யந்திரம் இது. இன்னொரு பூப்ரஸ்தார சக்கரமும் 6" x 6" என்ற அளவில் 1964-ம் ஆண்டு அமைக்கப்பட்டு நிறுவப்பட்டது. தங்கத்தினாலான இந்த சக்கரம் 60 தோலா எடையுள்ளது. சாமுண்டியின் பீடத்தில் தேவியின் பாதங்களுக்கு அருகே இவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

சகல தோஷங்களையும் போக்கி நலன்களை அருள்வது ஸ்ரீ சக்கரம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மகிஷனின் சிலை

சாமுண்டி மலையில் உள்ள பிரமாண்டமான நந்தியைப் போலவே இங்குள்ள மகிஷாசுரனின் சிலையும் பிரம்மாண்டமான ஒன்று. இது மேற்கு நோக்கிச் செல்லும் மலைப்பாதையில் அமைந்துள்ளது. வலது கையில் தலைக்கும் மேலே தூக்கிப் பிடித்த பெரிய வாளையும் இடது கையில் படம் எடுக்கும் நாகப் பாம்பையும் ஏந்தியவாறு அச்சுறுத்தும் பார்வையுடன் மகிஷனின் சிலை அமைந்துள்ளது.

பிரச்சினைகளைப் போக்கும் தெய்வம்

இங்கு வந்து வழிபடுவோரின் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.குறிப்பாக கணவன் - மனைவி உறவில் ஏற்படும் பிரச்சினைகள் உடனடியாகத் தீரும் என்பது ஐதீகம்.

சாமுண்டீஸ்வரியை பக்தர்கள் அனைவரும் விமரிசையாக நவராத்திரி - தசரா விழாவில் கொண்டாடி வருகின்றனர். ஆயிரக் கணக்கில் பக்தர்கள் திரள, வண்ண மின் விளக்குகள் ஒளிர, அம்மன் யானை மீது சிம்மாசனத்தில் அமர்ந்து பவனி வருகிறாள். மிகச் சிறப்பாக நடக்கும். இந்தத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளும் உண்டு.

மன்னர் மற்றும் மக்கள் என அனைவருக்குமான தெய்வமாகத் தொன்று தொட்டு இருந்து வரும் சாமுண்டீஸ்வரி தனது அருளால் அனைவரையும் நல்வழிப்படுத்தி சகல நலங்களையும் தந்து வருவது கண்கூடு.

சாமுண்டீஸ்வரியை வணங்குவோம். அனைத்து நலன்களையும் பெறுவோம்!

தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

Tags:    

Similar News