சிறப்புக் கட்டுரைகள்

ஸ்ரீ சக்கரத்தில் மறைந்திருக்கும் சக்தி- விஞ்ஞானிகள் வியக்கும் மெய்ஞானம்!

Published On 2023-06-08 10:45 GMT   |   Update On 2023-06-08 10:45 GMT
  • சிதம்பரத்தில் இருக்குது சிதம்பர ரகசியம்’ என்பதைக் கேள்விப்பட்ட அவர் சிதம்பரம் வந்தார்.
  • ஓம் முழுவதுமாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவரான கார்ல் சகன், நடராஜரை தரிசிக்க சிதம்பரம் வந்தார் என்றால் ஆச்சரியமாக இல்லை?

மிகப்பெரும் எழுத்தாளர், செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்த விஞ்ஞானி, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது விண்கலங்களை சுக்ரன், செவ்வாய், வியாழன் ஆகிய கிரகங்களுக்கு அனுப்ப பெரிதும் உதவி செய்தவர் - இப்படி இவர் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உலகின் மிகப் பிரபலமான, ஏராளமானோர் பார்த்த, தொலைக்காட்சித் தொடரான காஸ்மாஸ் (Cosmos) தொடரை உருவாக்கியவர் அவரே. பதிமூன்று எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி அவர் சுவைபட விளக்கியாக வேண்டும்.

இதை நல்ல ஒரு அறிமுக உரையுடன் தொடங்க அவர் எண்ணினார். இதற்காகப் பிரபஞ்சம் பற்றிய அறிவை உலகின் எந்த பழைய நாகரிகம் நவீன அறிவியலுக்கு ஒப்ப சரியாகக் கொண்டுள்ளது என்பதை ஆராய ஆரம்பித்தார் அவர்.

எகிப்திய, சுமேரிய, அசிரிய, கிரேக்க, ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்களை அவர் ஆராய்ந்தார். அவருக்கு திருப்தி உண்டாகவில்லை. கடைசியில் இந்து நாகரிகத்தின் பக்கம் அவர் பார்வை திரும்பியது. வியந்து பிரமித்தார் அவர்.

அறிவியல் ரீதியாக பிரபஞ்சத்தின் வயதை இந்து புராணங்கள் கூறுவதோடு ஒப்பிட்டுப் பார்த்த அவர், "உலகின் மிகப் பெரும் மதங்களில் இந்து மதம் ஒன்றே தான் பிரம்மாண்டமான முடிவில்லாத பிரபஞ்சமானது, உருவாகி, பிரளய காலத்தில் அழிந்து மீண்டும் உருவாகிறது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. நவீன பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கருத்துடன் கால அளவீடுகளில் ஒத்துப் போகும் ஒரே மதம் இது தான். பூமி, சூரியன் வயதையும் தாண்டி 'பிக் பேங்' தோன்றியதிலிருந்து பாதி அளவு காலத்தைப் பற்றி மட்டும் அல்ல, இன்னும் எல்லையற்ற காலத்தைப் பற்றியும் அது கூறுகிறது." என்று கூறிப் புகழ்ந்தார்.

'பிரபஞ்சத்தின் இயக்கத்தை சிவ நடராஜாவின் நடனம் சுட்டிக் காட்டுகிறது. சிதம்பரத்தில் இருக்குது சிதம்பர ரகசியம்' என்பதைக் கேள்விப்பட்ட அவர் சிதம்பரம் வந்தார். நடராஜரைத் தரிசித்தார்.

தனது காஸ்மாஸ் தொடரில் நடராஜரை தனது பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் பார் எவர்' இல் காண்பித்து பிரபஞ்சம் பற்றி விளக்கினார்.

காமராமேன், சவுண்ட் ரிகார்ட் செய்வோர், எழுத்தாளர்கள், டைரக்டர் புடைசூழ அவர் சிதம்பரத்திற்கு ஒரு நாள் காலை ஆறு மணிக்கு வந்த போது உலகத்தின் பார்வை சிதம்பரம் பக்கம் திரும்பியது.

இதே கால கட்டத்தில் பிரபல விஞ்ஞானியான பிரிட்ஜாப் காப்ரா சிவ நடராஜாவின் நடனம் பற்றி அறிந்து வியந்தார். ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானியான இவர் தனது மிக பிரபலமான நூலான 'தி டாவோ ஆப் பிசிக்ஸ்' என்ற நூலை 1975ஆம் ஆண்டு வெளியிட்டார். உலகில் இருபத்திமூன்று மொழிகளில் சுமார் 43 பதிப்புகளை உடனே கண்டது இந்தப் புத்தகம். அவர் அணுவின் அசைவை நடராஜரின் நடனத்தில் கண்டார். அணுத்துகளின் விஞ்ஞானத்தைக் கற்க விரும்புவோர் முதலில் நடராஜரைப் பற்றி அறிய வேண்டும் என்றார் அவர்!


ச.நாகராஜன்

 1977, அக்டோபர் 29-ந் தேதி நடந்த 'பிசிக்ஸ் அண்ட் மெடா பிசிக்ஸ்' என்ற கருத்தரங்கத்தில் பேசும் போது, "நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இதையே இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனமாக அருமையான ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் படைத்துள்ளனர்" என்று கூறினார்.

கடவுள் துகளைப் பற்றி ஆராயும் உலகின் மிகப்பெரும் சோதனைச்சாலையான செர்ன் ஜெனிவாவில் அமைந்துள்ளது. இதற்கு இந்திய அரசு 2 மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலையைப் பரிசாக அளிக்க அதை செர்ன் தனது முகப்பில் நிறுவியுள்ளது.

ஓம் தரும் அளப்பற்ற நன்மைகள்

ஓம் என்னும் மந்திரச் சொல் உடலில் ஏற்படுத்தும் அளப்பரிய அதிசயங்களை ஆராய்ந்தவர் அமராவதியில் உள்ள சிப்ளா காலேஜ் ஆப் என்ஜினியரிங் டெக்னா லஜியில் பேராசிரியராகப் பணியாற்றும் அஜய் அனில் குர்ஜர். அந்தக் கல்லூரியின் முதல்வரான சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இவர் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சிக்கான காரணம்? 1999 மே மாதம் 29-ந் தேதி திடீரென்று தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அவரது தாயாருக்கு பேசும் சக்தி போய்விட்டது. மூளையில் ரத்தம் கட்டி விட்டதால் அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார். அடுத்த நாள் அவருக்குக் கோமா நிலை ஏற்பட்டது.

இதைப் போக்க ஓம் பற்றிய ஆராய்ச்சியில் அனில் இறங்கினார். ஒம் என உச்சரிக்கும் போது மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதை அவர் நவீன சாதனங்கள் வாயிலாகக் குறிக்க ஆரம்பித்தார். நரம்பு மண்டலத்தில் ஓம் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதை அவர் கண்டு அதிசயித்தார். ஓம் என்று நாம் ஒலிக்கும் போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.

'அ' என்ற ஒலி சுவாச அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் 'உ' மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளின் வழியே வரும் 'ம' தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழு சுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது. ஓம் முழுவதுமாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

அனிலின் தாயார் ஓம் மந்திரத்தை படிப்படியாக உச்சரிக்க ஆரம்பித்தார். விளைவு, 90 சதவிகிதம் பேசும் ஆற்றல் பழையபடி வந்து விட்டது.

இந்த ஆராய்ச்சி ஆறு வருட காலம் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண்-பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட குழுவிடம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.

1) ஓம் உச்சரிப்பால் மன அழுத்தம் குறைகிறது

2) எதன் மீதும் செய்யும் ஒருமுனைப்படுத்தப்பட்ட கவனக் குவிப்பு அதிகரிக்கிறது.

3) ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம் உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது.

இப்படி விரிவாக டிஜிடல் சிக்னல் பிராசசிங் உத்திகளைப் பயன்படுத்தி தனது முடிவுகளை உலகத்திற்கு அறிவித்தார் அனில்.

ஸ்ரீ சக்கரத்தை ஆராய்ந்த ரஷிய விஞ்ஞானி!

ஸ்ரீ சக்கரத்தை ஆராய வேண்டும் என்று மாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் கணிதவியல் விஞ்ஞானி அலெக்சி குலைச்சேவ் என்பவருக்கும் ரஷிய விஞ்ஞானக் கழகத்தின்தலைவரான இன்னொரு விஞ்ஞானி ஐவான் கோவலான் சென்கோ என்பவருக்கும் ஏற்பட்டது.

ஸ்ரீ சக்கரத்தில் உள்ள கோடுகள், முக்கோணங்கள் மற்றும் வடிவியல் அமைப்பைக் கண்டு பிரமித்த இவர்கள் கணினி மூலமாக அதைத் தீவிரமாக ஆராய ஆரம்பித்தனர்.

இந்தச் சக்கரத்தின் நடுவில் பிந்துவும் (புள்ளி) சுற்றி ஒன்பது முக்கோணங்களும் உள்ளன. மேல் நோக்கி உள்ள நான்கு முக்கோணங்கள் சிவனையும் கீழ் நோக்கிய ஐந்து முக்கோணங்கள்சக்தியையும் குறிக்கின்றன.

எல்லையற்ற சக்தி, ஆரோக்கியம், செல்வம், ஞானம், முக்தி ஆகியவற்றைப் பெற காலம் காலமாக இதை அனைவரும் வழிபடுவது கண்கூடு.

இந்தியாவெங்கும் ஏராளமான ஆலயங்களில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இதை ஆராய்ந்த ரஷிய விஞ்ஞானிகள் பிரமிப்பின் எல்லைக்கே சென்றனர். நவீன கணினி கூடம் இதை முழுவதுமாக ஆய்வு செய்யப் போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்ட இவர்கள் ஒன்பது முக்கோணங்கள் ஒன்றை ஒன்று வெட்டினால் ஏற்படும் சந்திப்புப் புள்ளிகள் எவ்வாறு பல்வேறு புள்ளிகளுடன் ஒன்றோடு ஒன்று இணையும் என்ற கண்டுபிடிப்பும் இன்னும் விளங்கிக் கொள்ள முடியாத அநேக அறிவியல் வினாக்களும் இந்த யந்திரத்தில் பொதிந்துள்ளன என்றனர் அவர்கள்.

இதை மனநலம் பாதிக்கப்பட்டு தன் நிலையை இழந்தவரிடையே பயன்படுத்திய அவர்கள் பாதிக்கப்பட்டோர் நலமடைவதைக் கண்டு பிரமித்தனர். குறிப்பிட்ட முறைப்படி இந்த ஸ்ரீ சக்கர யந்திரம் அமைக்கப்பட வேண்டும். இதே போல உள்ள ஆனால் குறிப்பிட்ட முறைப்படி அமைக்கப்படாத யந்திரத்தை அவர்கள் பயன்படுத்திய போது சிகிச்சை பலனளிக்கவில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். இந்த ஆய்வை, ஆய்வின் மேலாளரும் உறுதிப்படுத்திய பின்னர் உலகினருக்கு ஆய்வு பற்றி அவர்கள் தெரிவித்தனர்.

மூளை ஆற்றலைக் கூட்டும் தோப்புக்கரணம்!

லாஸ் ஏஞ்சல்சை சேர்ந்த டாக்டர் எரிக் ராபின்ஸ் மூளை ஆற்றலை ஊக்குவிக்க ஒரு பயிற்சியை அனைவருக்கும் சொல்லித்தருகிறார்.

ஒரு மாணவன் பள்ளியில் பாடங்களைச் சரியாகவே கற்கமுடியவில்லை. அவர் கூறிய பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தவுடன் அவன் 'ஏ' கிரேடுடன் முதல் மாணவனாக ஆனான்.

பயிற்சி என்ன? பாதங்களை நேராக இருக்கும்படி வைத்து கால்களை தோள்களின் அகலத்திற்கு விரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வல்து காதை இடது கை கட்டை விரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். இதே போல இடது காதை வலது கை கட்டை விரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குந்தி அமர்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்கும் போது மூச்சை வெளியிட வேண்டும். ஆக இப்படி உட்கார்ந்து எழுந்தால் போதும்.

இந்தப் பயிற்சியை மூன்று நிமிடம் செய்தாலேயே மூளை ஆற்றல் கூடும். இது நிரூபிக்கப்பட்ட பயிற்சி ஆனது

யேல் நரம்பு-உயிரியல் நிபுணரான டாக்டர் யூஜீனியஸ் ஆங், காது மடல்களைப் பிடிக்கும் போது மூளையின் நரம்புப் பாதைகளை தூண்டி விடும் அக்குபங்சர் புள்ளிகளை அழுத்துகிறோம் என்கிறார்.

மூளையின் இரு பாதிகளும் காது மடல்களின் எதிர்புறங்களில் உள்ளன. எதிரெதிர் கைகளைப் பயன்படுத்தி காது மடல்களைப் பிடிப்பதால் நுண்ணிய ஆற்றலைத் தூண்டும் மனித உடலின் ஒரு சிறப்பான அமைப்பைப் பயன்படுத்தியவர்களாக ஆகிறோம்.

அட, பிள்ளையார் முன்னால் போடும் தோப்புக்கரணத்திற்கு - உக்கிக்கு - இவ்வளவு சக்தியா என்று வியக்க வேண்டியது தான்; பிரமிக்க வேண்டியது தான். அறிவியல் பிள்ளையார் உக்கியை ஆமோதிக்கிறது. பகுத்தறிவாளர்களுக்கு வேறு என்ன வேண்டும்?

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் விஞ்ஞானம் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து வருகிறது.

இதைப் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுகையில் விஞ்ஞானம், ஆன்மீகத்தை ஆய்வு செய்வதை வரவேற்பதாகக் கூறியதோடு, முத்தாய்ப்பாக இப்படிக் கூறினார்:

"நமது மகரிஷிகள் காலத்தால் முற்பட்டவர்கள். அவர்களின் கூற்றை உண்மை என்பதை உலகம் அறிய நெடுங்காலம் ஆகும்".

தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

Tags:    

Similar News