சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

Published On 2023-05-24 12:46 GMT   |   Update On 2023-05-24 12:46 GMT
  • எழுந்தால் விழுந்துவிடுவோம் அல்லது விழவைத்து விடுவார்கள் என்று விட்டுவிடுபவர்களை வரலாறும் விட்டுவிடுகிறது.
  • ஆனந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவுசெய்தார் கோபால்ராவ் ஜோஷி.

நம்முடைய வாழ்வில் நாம் எத்தனையோ தடைகளை சந்திக்கிறோம். தடங்கல்களால் தடுக்கி விழுகிறோம். எத்தனைதான் முயற்சி செய்தாலும் நம்மை முன்னேற விடாமல் நம் கால்களை உடைத்துவிடும் அளவிற்கு தடுக்கிறார்களே என்று மனம்உடைந்து போய் அழுகிறோம்.

அழுது ஓய்ந்த பின்னர், தடைகளைக் கண்டு தயங்கிநின்றுவிடாமல் தட்டுத் தடுமாறியாவது எழுந்து நிற்பவர்களையும், நின்றபின் தன் லட்சியத்தை நோக்கி ஓடவோ, பறக்கவோ செய்பவர்களையும், தான் நினைத்ததை அடைந்து தனக்கும் சமூகத்திற்கும் பயன்படுமாறு வாழ்ந்தவர்களையும், வாழ்பவர்களையும் மட்டுமே காலமும், வரலாறும் தன் பக்கங்களில் குறித்துவைத்துக் கொள்கின்றன.

எழுந்தால் விழுந்துவிடுவோம் அல்லது விழவைத்து விடுவார்கள் என்று விட்டுவிடுபவர்களை வரலாறும் விட்டுவிடுகிறது.

உங்களுக்குத் தெரியுமா நண்பர்களே! ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை கடலைக் கடப்பது பாவமென்றும், அப்படி மீறிச்செல்பவர்களை தங்கள் குலத்திலிருந்தே விலக்கி வைத்துவிடுவதென்றும் என அயல்நாடுகளுக்குச் செல்ல நம்முடைய இந்திய நாட்டில் அத்தனை தடைகள் இருந்தன.

மேற்படிப்புக்கோ, பிற காரணங்களுக்காகவோ வெளிநாடு செல்ல ஆண்களுக்கே அத்தனை தடைகள் என்றால் பெண்களுக்கு கேட்கவா வேண்டும்! வீட்டைத் தாண்டி வெளியே செல்வதே கடினம் என்றபோது நாட்டைத் தாண்டி பெண்கள் செல்வதா! வாய்ப்பே இல்லை என்ற சூழல்.

ஆனால் அந்தத் தடைகளை எல்லாம் உடைத்து நாட்டைத் தாண்டிச் செல்ல ஒரு பெண் முயற்சி செய்தாள். தன்னுடைய முன்னேற்றத்திற்காக மட்டும் அல்ல, இந்த சமூகத்தின் நன்மைக்காகவும் அவள் பயணப்பட வேண்டி இருந்தது. இங்கிலாந்தின் மகாராணி விக்டோரியாவால் பாராட்டப்பட்ட அந்தப்பெண்ணைப் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் என்ற ஊரில் 1865 மார்ச் 31-ம் நாள் பிறந்தவர் யமுனா. யமுனாவிற்கு ஒன்பது வயது ஆனபோது அதே ஊரில் வாழ்ந்துவந்த மனைவியை இழந்த முப்பது வயதுடைய கோபால்ராவ் ஜோஷி என்பவருக்கு இரண்டாம் திருமணம் செய்துவைத்தார்கள். ஆ..! குழந்தைத் திருமணமா! என்றெல்லாம் கேட்க முடியாத காலம்.

அஞ்சல்துறையில் எழுத்தராக பணியாற்றிக் கொண்டிருந்த கோபால்ராவ் ஜோஷி, யமுனா என்னும் தன்னுடைய இளம் மனைவிக்கு ஆனந்தி என்று பெயரிட்டார். முற்போக்கு சிந்தனை கொண்டவராக இருந்த ஜோஷி, சிறுமியாக இருந்த தன்மனைவி கல்விபெற வேண்டும் என்பதில் ஆர்வமுடையவராக இருந்தார். ஆனந்தியை ஊக்கப்படுத்தி படிக்கவைத்தார்.

150 ஆண்டுகளுக்கு முன் சமூகத்தின் தடைகளைத் தாண்டி பெண்களைப் படிக்கவைப்பது என்பதே பெரிய சவாலாகத்தான் இருந்தது. ஆனால் தன் மனைவியை படிக்கவைப்பதில் எழுந்த விமர்சனங்களை ஜோஷி பொருட்படுத்தவில்லை. ஆனந்தியும் ஊக்கமுடன் ஆங்கிலம் மற்றும் பிறகல்வியையும் கற்றுவந்தார். ஒருநாள் படிப்பதை விட்டுவிட்டு சமையலறையிலேயே நீண்ட நேரத்தை செலவழித்ததற்காக ஆனந்தியிடம் சற்று கடுமையாகவே நடந்துகொண்டார் ஜோஷி. அதன்பின்னர் தன்படிப்பில் விடாத கவனம் செலுத்தினார் ஆனந்திபாய்.

பதினான்கு வயதில் ஆனந்திக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. பிள்ளைப்பிறப்பை தாங்கமுடியாத சிறுவயது. ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு பிள்ளைப்பிறப்பு உள்ளிட்டவைகளுக்கு மருத்துவம் பார்க்க முடியாத காலமாக அது இருந்தது. பெண் மருத்துவர்கள் என்று யாரும் இல்லை.

ஆனந்தியின் உடல்நிலையே மோசமாக இருந்தது. இதில் பத்துநாட்களான அவளின் குழந்தையோ போதுமான மருத்துவ வசதி கிடைக்காததாலும், பராமரிக்க முடியாததாலும் பரிதாபமாய் இறந்துபோனது. இதனால் பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளான ஆனந்தி, பெண்மருத்துவர் என்று யாரும் இல்லாத சூழ்நிலையில் தான் மேற்படிப்பு படித்து மருத்துவராக விரும்புவதாக தன் கணவர் ஜோஷியிடம் தெரிவித்தார்.

ஆனந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவுசெய்தார் கோபால்ராவ் ஜோஷி. தன் மனைவி ஆனந்திபாய் ஜோஷி அமெரிக்காவில் மேற்படிப்பை அதாவது மருத்துவப்படிப்பை படிக்க இயலுமா என்று கேட்டு அமெரிக்க மிஷனரியைச் சார்ந்த ராபர்ட் வைல்டர் என்ற கிருத்துவ மறைபணியாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். தனக்கும் அமெரிக்காவில் வேலை ஏதேனும் கிடைக்குமா என்றும் அக்கடிதத்தில் கேட்டிருந்தார்.

கடிதத்தைப் படித்த ராபர்ட் வைல்டர், கோபால்ராவ் தம்பதியினர் கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டால் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக நிபந்தனை விதித்தார். அதற்கு இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் ராபர்ட் வைல்டர் தனக்கு கோபால்ராவ் எழுதிய கடிதத்தை தன்னுடைய பத்திரிகையான "பிரின்ஸ்டன்ஸ் மிஷனரி ரிவ்யூ"வில் வெளியிட்டார்.

அமெரிக்காவில் வெளிவந்த இப்பத்திரிகைச் செய்தியினை நியூஜெர்சியைச் சேர்ந்த தியோடிசியா கார்பெண்டர் என்பவர், பல்மருத்துவம் பார்த்துகொள்ள காத்திருந்தபோது படிக்க நேர்ந்தது. இந்தியாவில் இருக்கும் இளம்பெண்ணான ஆனந்திபாய் ஜோஷியின் மருத்துவப்படிப்பின் மீதான ஆர்வமும், தன் மனைவியைப் மருத்துவம் படிக்கவைக்கத் துடிக்கும் கோபால்ராவின் ஆர்வமும் தியோடிசியாவின் மனதை ஈர்த்தன. ஆனந்திபாய் அமெரிக்காவில் தங்கிப் படிப்பதற்கான இடத்தை அளிக்க முன்வந்தார் தியோடிசியா. அதைக்குறித்து அவர்களுக்கு கடிதமும் எழுதினார். மேலும் கடிதப் பரிமாற்றம் தொடர்ந்தது.

இதற்கிடையே கோபால்ராவிற்கு மேற்கு வங்காளத்தில் உள்ள செராம்பூருக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டது. பென்சில்வேனியா மகளிர் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு ஆனந்திபாய் விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு இடமும் கிடைத்துவிட்டது. ஆனால் ஆனந்திபாய்க்கு உடல்நலம் குன்றிப் போனது. காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல் என அவதிப்பட்டார். இதையறிந்த தியோடிசியா அமெரிக்காவில் இருந்து மருந்துகள் வாங்கி அனுப்பிவைத்தார். உடல்நலம் சரியில்லாத இந்தநிலையில் தான்மட்டும், எப்படி அமெரிக்கா செல்வது என்று கவலைப்பட்டு தன் தயக்கத்தை தெரிவித்தார் ஆனந்திபாய். ஆனால் கோபால்ராவ் விடவில்லை. "நீதான் மருத்துவம் படிக்கவேண்டும் என்று விரும்பினாய். பிரசவத்தின்போது நீ பட்ட துன்பத்தை நினைத்துப் பார்; மற்றப் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய நீயே இப்படித் தயங்கினால் எப்படி? தனியாகப் போவதைப்பற்றியும் இங்கே உள்ளவர்களின் விமர்சனங்களைப் பற்றியும் கவலைப்படாதே! நீ கண்டிப்பாக போய்ப் படிக்கத்தான் வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

கடல்கடந்து மேற்கத்திய நாட்டுக்கு மேல்படிப்புக்காகச் செல்லவிருக்கும் ஆனந்திபாயை கண்டித்து வைதீகர்கள் பழித்துப் பேசினர். அதேநேரத்தில் ஆனந்திபாயை ஊக்கப்படுத்திய கிருத்துவர்களோ மதம்மாற வலியுறுத்தினர். இக்கட்டான இச் சூழ்நிலையில் ஆனந்திபாய் செராம்பூர் கல்லூரிக் கூடத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அங்குவந்த மக்களிடம் தன்னுடைய மருத்துவர் கனவை விவரித்து, தான் படித்துவந்ததும் இந்தியப் பெண்களின் துயர்துடைக்க விரும்புவதாகவும், இந்தியாவில் பெண்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்போகும் தன்னுடைய குறிக்கோளையும் இதற்காக தானும், தன் கணவரும் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளையும் பற்றி விரிவாக எடுத்துப் பேசினார். மேலும் தான் ஒருபோதும் கிருத்துவ மதத்திற்கு மாறமாட்டேன் என்றும் சத்தியம் செய்தார்.

ஆனந்திபாய் ஆற்றிய உரை நாடெங்கும் பரவி அவருக்கு நிதி உதவி வர ஆரம்பித்தது. முத்தாய்ப்பாக அப்போதைய இந்திய வைசிராய் ரிப்பன் பிரபுவும் தன் பங்காக ரூ. 200 அளித்தார். இதுவரை ஆண் மருத்துவர்களையே கண்ட இந்திய மக்களுக்கு ஒரு பெண் மருத்துவராகப் போகிறார் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக பெண்கள் இனி விடிவுகாலம் பிறந்துவிடும் என்று பெரிதும் மகிழ்ந்தனர்.

1883- ன் இறுதியில் தன் உடல்நலத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கல்கத்தாவில் இருந்து கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு பயணமானார் ஆனந்திபாய். பென்சில்வேனியா மருத்துவக் கல்லூரியில் தன் மேற்படிப்பைத் தொடங்கினார். புதிய இடம், புதிய சீதோஷ்ண நிலை, புதிய உணவு எதுவுமே அவருடைய உடல்நலத்திற்கு ஏற்றதாக இல்லை. காச நோயால் பாதிக்கப்பட்டார் ஆனந்திபாய். ஆனாலும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு தன் லட்சியத்தினை விடாமல் பயின்று மருத்துவத்தில் எம்.டி. பட்டத்தைப் பெற்றார்.

இந்தியப் பெண் ஒருவர் முதன்முதலாக மருத்துவப் பட்டம் பெற்றதை அறிந்து அப்போதைய இங்கிலாந்து இந்தியப் பேரரசி விக்டோரியா மகாராணி ஆனந்திபாயைப் பாராட்டி வாழ்த்துச் செய்தி அனுப்பினார். எம்.டி. பட்டம் பெற்று 1886-ல் இந்தியாவிற்கு திரும்பிய ஆனந்திபாயை இந்திய மக்கள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்தியப் பெண்கள் உயர்கல்வி பெறவும், குறிப்பாக மருத்துவக் கல்வி பயிலவும் ஊக்கப்படுத்திப் பேசினார் ஆனந்திபாய்.

நாடு திரும்பிய முதல்பெண் மருத்துவர் ஆனந்திபாயை அன்றைய சுதேசி மாநிலமான கோல்ஹாப்பூரில் (இன்றைய மகாராஷ்டிரா) இருந்த ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையானது, பெண்கள் மருத்துவப் பிரிவின் பொறுப்பு மருத்துவராக பணியாற்ற இணைத்துக் கொண்டது.

தன் வாழ்வின் பெரும் லட்சியத்தை எட்டிய மருத்துவர் ஆனந்திபாயின் கனவு பெண்களுக்கான ஒரு மருத்துவக் கல்லூரியை இந்தியாவில் தொடங்கவேண்டும் என்பதுதான். ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லை அல்லவா! மருத்துவராகவே இருந்தாலும் உயிரைப் பாதிக்கும் நோய் தாக்கிவிட்டால் அவரும் அதற்கு கட்டுப்பட்டுதானே ஆகவேண்டும். தன்உடல்நிலையை காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் காசநோய் கொஞ்சம் கொஞ்சமாக ஆனந்திபாயின் உடல்நிலையை மோசமாக்கிக் கொண்டே வந்தது.

"என்னால் முடிந்தவரை நான் சாதித்துவிட்டேன். என் கனவுகளை நனவாக்குவது இனிவரும் பெண்களின் கைகளில் உள்ளது" என்று தன் கடைசிவார்த்தைகளைப் பேசிய ஆனந்திபாய் ஜோஷி 1887 பிப்ரவரி 26-ம் நாள் தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார்.

மருத்துவராகி பல சாதனைகளை படைக்கவேண்டும் என்று நினைத்தாலும் பல சோதனைகளைக் கடந்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற சாதனையைப் புரிந்த புரட்சிப் பெண்ணான ஆனந்திபாய் ஜோஷியை நாமும் போற்றுவோம்.

தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

Tags:    

Similar News