சிறப்புக் கட்டுரைகள்

ஜனவசிய ரகசியம்

Published On 2023-05-23 11:05 GMT   |   Update On 2023-05-23 11:05 GMT
  • ஜனவசியத் தன்மை நிறைந்த ஒருவர் வாழ்வில் அடைய முடியாத வெற்றிகளே கிடையாது.
  • தொழில், வியாபாரம்,உத்தியோகம், அரசியல், கலைத்துறை போன்ற அனைத்து துறையிலும் வெற்றி பெற ஜனவசியம் மிக முக்கியம்.

வசியம் என்றால் ஈர்ப்பு, கவர்தல், அடக்குதல், பழக்குதல், பணிதல் எனப் பொருள்படும்.வசியம் என்றால் சக மனிதர்கள் மேல் ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பு.

ஒருவர் மேல் யாருக்கு வசியம் ஏற்படுகிறதோ அவர்களிடம் தங்கள் பாசத்தையும், உள்ளன்பையும் வெளிப்படுத்துவார்கள். ஒருவர் மேல் யாருக்காவது இனம் புரியாத ஈர்ப்பு, வசியம் இருந்தால் எந்த சூழ்நிலையிலும் பிரியமாட்டார்கள்.

ஜனவசியம் என்றால் ஒருவரின் தோற்றம், நடை, உடை, பாவனை, செயல்பாடு போன்ற காரணிகளால் ஈர்க்கப்பட்டு பலர் அவருடன் நட்பாக பழகுவது அல்லது அவர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வ தாகும். ஜனவசியத் தன்மை நிறைந்த ஒருவர் வாழ்வில் அடைய முடியாத வெற்றிகளே கிடையாது.

நமக்கு முன் பின் தெரியாதவர்கள் நமக்கு வேண்டிய செயல்களை செய்ய வைக்க ஜனவசியம் அவசியம். முன் பின் பழகாதவர்களால் ஒருவர் நற்பலன்களை பெறுவதற்கு ஜனவசியம் அவசியம்.தொழில், வியாபாரம்,உத்தியோகம், அரசியல், கலைத்துறை போன்ற அனைத்து துறையிலும் வெற்றி பெற ஜனவசியம் மிக முக்கியம்.

உலக மக்கள் மத்தியில் புகழப்படுவதற்கு, தங்கள் பால் மக்களை வசியம் செய்வதற்கும் ஜனவசியம் மிக அவசியம். மிக எளிமையாக ஒருவருடைய திறமைகள் சிறப்பான முறையில் உலகில் பேசப்பட்டால் ஜனவசியம் நிறைந்தவர் எனக் கூறலாம்.

நிமிர்ந்த நேர் கொண்ட பார்வையும், வேகமான நடையும் கொண்டவர்கள். குழந்தையைப் போல் எவரிடமும் சுலபமாக பழகுபவர்கள்.

தன்னம்பிக்கையால் முடியாததையும் முடியும் என்பவர்கள். யாராலும் செய்ய முடியாத காரியத்தை கூட செய்து காட்டும் வல்லமை உடையவர்கள். வருமானத்திற்காக கஷ்டப்பட மாட்டார்கள். எந்த தொழில் செய்தாலும் பல மடங்கு லாபம் உண்டு. வசீகரத்தால் லாபத்தையும் திடீர் தன லாபத்தையும் பெறக்கூடியவர்கள்.

இவர்கள் வெளித்தோற்றத்திற்கு வெகுளியாக காட்சியளித்தாலும் தங்கள் வேலைகள் மற்றும் செயல்களில் மிகுந்த காரியவாதிகள். சமூகத்தில் இவர்களுக்கென தனிப்பட்ட மதிப்பு மரியாதை இருக்கும்.

வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதனை நேர்மறையாக எடுத்து கொள்ள கூடியவர்கள்.மனதில் தன்னம்பிக்கையும், தளராத லட்சியமும், செயல்களில் கண்ணும், கருத்துமாகவும் இருக்கக்கூடியவர்கள்.தன் பிரச்சினைகள் மட்டுமல்லாது மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் தங்களின் மதிநுட்பத்தால் தீர்த்து வைப்பார்கள். ஒரே சமயத்தில் பல காரியங்களில் கவனம் செலுத்தும் திறமை உடையவர்கள்.இவர்கள் சுக, போகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். மனதிற்கு பிடித்தவாறு விரும்பிய வாழ்க்கையை அமைத்து கொள்ளக்கூடியவர்கள். நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்கும்.

பல திறமைகளை தன்னுள் கொண்டவர்கள் என்பதால் தான் மட்டும் அறிவாளி என்று நினைக்க கூடியவர். ரகசியத்தைக் வாழ்நாள் முழுவதும் காப்பவர்கள். பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்பவர்கள். ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள் பிரபஞ்சத்திடமிருந்து இவர்களுக்குத் வந்து கொண்டே இருக்கும். மக்களைக்கவர்வதில் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை. எத்தகைய நபர்களைச் சந்தித்தாலும், தங்களது தனித்தன்மையை அவர்களுக்குச் சீக்கிரம் உணர்த்தி பல வருடகாலம் நண்பர்களாக நீடித்துத் தொடர்பு கொள்ளும் தன்மையும், பலமும் உண்டு.இவர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட எந்தத் துறையிலும், தங்களது திறமையின் மூலம் விரைந்து உச்சியை அடைந்துவிட வேண்டும் என்று துடிப்பார்கள். கடும் உழைப்பால் புகழையும், பெருஞ்செல்வத்தையும் மிக சிறப்பாக தேடிக் கொள்வார்கள்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

 மனிதர்களாய் பிறந்தவர்கள் அனைவரும் ஜனவசியத்துடன் வாழ்வதை விரும்புவார்கள். ஜனவசியத்துடன் வாழ்க்கையில் வெற்றி நடை போடுபவர்கள் பலர் இருந்தாலும் பிறரை வசீகரிக்கும் தன்மையின்றி பலர் இருக்கிறார்கள். ஜோதிட ரீதியாக ஜனவசியத்தை அதிகரித்து வாழ்க்கையில் வெற்றி நடை போடுவது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.

ஜோதிட ரீதியாக மனிதர்களுக்கு ஜன வசியத்தை வழங்குவதில் காலபுருஷ 5-ம் அதிபதியான சூரியனும், கால புருஷ 9-ம் அதிபதியான குருவும் முன்னிலை வகிக்கிறார்கள். உதாரணத்திற்கு நமது மறைந்த முன்னால் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம்.

28.1.1917காலை 6.30 மணிக்கு கண்டியில் பிறந்தவர்.இவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் நின்ற புதன், சுக்ரனுக்கு லக்ன அதிபதி குருவின் பார்வை. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் உச்சம் பெற்று பாக்கிய அதிபதி சூரியன் வாக்கு ஸ்தானத்தில் நிற்கிறார். இவர் உலகம் அறிந்த திரைக்கலைஞர், அரசியல் தலைவர்.

லக்னத்தில் நின்ற புதன், சுக்ரன் மேல் குருவின் 9-ம் பார்வை பதிந்ததால் பார்த்த மாத்திரத்தில் எளிதில் ஒருவரை கவரும் அழகு, வசீகர தோற்றம்.

நல்ல நடிப்புத் திறமை, கலைத்துறையில் வெற்றியைத் தந்தது. வாக்கு ஸ்தானத்தில் நின்ற சூரியன், செவ்வாய் பேச்சாற்றலால அனைவரையும் ஈர்க்கும் வல்லமையைத் தந்தது. இவருடைய பேச்சை வேதவாக்காக அனைவரும் கேட்டார்கள். 6-ம் அதிபதி சுக்ரன் ராகுவுடன் குருப் பார்வையில் நின்றதால் எதிரிகளை வெல்லும் வலிமை உண்டானது. பொது ஜனத் தொடர்பை குறிக்கும் ஏழாம் அதிபதி புதன் லக்னத்தில் நின்றதால் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள், அரசியல் தொண்டர்கள். இவை எல்லாவற்றுக்கும் மேல் சனி, குரு சம்மந்தம் இருப்பதால் தர்ம கர்மாதிபதி யோகம்.

இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போதும் ஜனவசியத்தால் தேர்தலில் வெற்றி பெற்றார். இது போன்ற ஜனவசியம் நிறைந்த அரசியல் தலைவர், கலைத்துறை சாதனையாளர் உலகில் இல்லை என்றால் அது மிகைப்படுத்தலாகாது. அவர் மறைந்தாலும் அவருடைய ஜனவசியம் குறையவில்லை.

எம்.ஜி.ஆர் என்ற பெயருக்கு ஓட்டுப் போடுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். "வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற பாடல் இவருக்கு மிகப் பொருந்தும்.

ஜனவசியம் பெற ஒருவரின் ஜாதகத்தில் குருவும், சூரியனும் பலம் பெற வேண்டும் எனப்பார்த்தோம். எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஜாதகத்தில் குருவும், சூரியனும் பலம் பெற்றதாலே ஜனவசியம் பெற்றவராக வாழ்ந்தார்.

பரிகாரம்

ஆக சுய ஜாதகத்தில் சூரியனும் குருவும் பலம் பெற்றால் ஜனவசியம் பெற்றவர்களாக உலகப் புகழ் பெற்று வலம் வர முடியும் என்பது தெளிவாகிவிட்டது.

ஜனவசியம் இல்லாதவர்கள் எப்படி ஜனவசியம் பெற்று சாதனையாளர் பட்டியலில் இடம் பெற முடியும் என்று பார்க்கலாம். ஒருவரின் சுய ஜாதகத்தில் சூரியன், குருவை பலப்படுத்தினால் ஜனவசியம் நிரம்ப பெற்று சாதாரண மனிதனும் சாதனையாளர்களாக மாறலாம்.

சூரியன்

கால புருஷ 5-ம் அதிபதியான சூரியன் நவகிரகங்களில் முதன்மையான கிரகம். மனிதர்களுக்கு ஆன்ம பலம் வழங்குபவர். சுய ஜாதகத்தில் சூரியன் சுப பலத்துடன் வலுவாக இருந்தால் ஆன்மபலம் பெருகும். உடல் தேஜஸ் பெறும். ஜனவசியம் அதிகரித்து கவுரவம், புகழ், அந்தஸ்து, செல்வாக்கு,

சொல்வாக்கு, குல தெய்வ அருள்கடாட்சம், நல்ல புத்திரர்கள், முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். சூரியன் கிழக்கு திசை அதிபதி என்பதால் சூரியன் பலம் பெற்றால் வீட்டில் நற்சக்திகள் நிரம்பி இருக்கும். சூரியன் பலம் குறைந்தால் ஆன்மா பலம் இழந்து மன அமைதிகுறையும். கடவுள் நம்பிக்கை இருக்காது.சித்து வேலைகள், ஏமாற்று வேலைகள் செய்து பிழைப்பு நடத்துவர். அரச தண்டனை, தண்டம் கட்ட நேரும். குடும்பத்தில் மதிப்பு, மரியாத குறையும். பொறுப்பற்றவராக இருப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து ஜனவசியம் குறையும்.ஒருவருக்கு சமுதாய அங்கீகாரம், அரசின் ஆதரவு, முக்கிய பிரமுகர்களின் நட்பு, நல்ல பொருளாதாரம் ஆகியவற்றை ஜனவசியத்தின் மூலம் வழங்குபவர் சூரியபகவான்.

சூரியனை பலப்படுத்த சூரிய பகவானின் அருளை பெற ஞாயிறு தோறும் விரதம் இருந்து சூரியனையும்,சிவபெருமானையும் வழிபட வேண்டும்.சூரிய விரதம் இருந்து சிவனை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆயுள் நீடிக்கும். கொடிய நோய்கள் ஏதும் அண்டாது.முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும். முக வசீகரம் ஜனவசியத்தை அதிகரித்து சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலையை ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது.

தன்னை எதிர்க்கும் எதிராளி அரசனாகவே இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து சூரிய பகவானை வழிபட்டால், எதிரிகள் வீழ்ந்து போவார்கள்.

குரு பகவான்

சுப கிரகங்களில் தலைமை கிரகமான குரு பகவான் மனிதர்கள் வாழ்வில் பல்வேறு உன்னதமான சுப பலன்களை வழங்குபவர். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். தெளிந்த ஞானம், நல்ல கல்வி, பெற்றோர், குல தெய்வ அருள், நல்ல பொருளாதாரம், சிறப்பான பழக்க வழக்கம், அரசியல் மற்றும் நிர்வாகத்தில் தலைமை பதவியில் அமர வைத்து பல மக்களை வழி நடத்தும் பொறுப்பு தருவார்.

சமூகத்தில் பெரிய மனித தோரணை ஏற்படுத்தக் கூடியவர்.குரு என்றால் குழந்தை, பொருளாதாரம், அளவில்லாத பணம். அதனால் தான் அளவிற்கு அதிகமாக பணம் வைத்து இருப்பவர்களுக்கு குழந்தைகள் மூலம் மன வேதனையை தருவார் அல்லது குழந்தை பிறக்காது.

நல்ல பண்பான பிள்ளைகளத் தரும் குருபகவான் அவர்களை நல்ல முறையில் வளர்க்கத் தேவையான பொருளாதாரத்தை வழங்குவதில்லை. குரு பார்க்க கோடி குற்ற நிவர்த்தி. குரு எந்த ஒரு ஜாதகத்திலும் கெட்டு போக கூடாது. இத்தகைய சுப பலன்களை வழங்கும் குருபகவான் சுய ஜாதகத்தில் சுப பலம் பெற்றால் ஜனவசியம் அதிகரிக்கும்.

சென்ற இடமெல்லாம் பாராட்டும், பட்டங்களும், பதக்கங்களும் தேடி வரும். உட்கார்த்த இடத்திலிருந்து உலகை வளைத்து சட்டைப் பையில் வைத்துக் கொள்ள முடியும். தொழில், உத்தியோகத்தால் சமுதாய அந்தஸ்துடன் வாழ்பவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் சூரியன், குருபகவான் சுப வலுப்பெற்று ஜனவசியம் நிரம்பி இருக்கும்.

குரு பலத்தை அதிகரிக்க வியாழக்கிழமை ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபட வேண்டும். அந்தணர்களுக்கு தான, தர்மம் வழங்க முத்தாய்பான ஜனவசியம் வந்து சேரும். பலர் பரிகாரம் எவ்வளவு காலம் செய்ய வேண்டும் என்று போன் பண்ணுகிறார்கள். நமது எண்ணங்களும், லட்சியங்களும் நிறைவேறும் வரை நம்பிக்கையோடு வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க நிச்சயம் நல்ல காலம் பிறக்கும்

வாழ்வில் வெற்றிபெற, தொட்டது துலங்க பிரபஞ்ச சக்தியை பெற ஜனவசியம் தேவைப்படுகிறது. உடலுக்கு ஓரளவிற்குத்தான் சக்தி உள்ளது. ஆனால், மனம் என்பது இயற்கையை மீறி காலம் கடந்து நிற்கக்கூடியது. மனம் என்றால் ஆன்மா.அந்த ஆன்மாவின் ஆற்றலால் பலவிதமான சாதனைகளை புரியமுடியும். எனவே ஜனவசியத்தை அதிகரிக்க யந்திரம், தந்திரம், மாந்தரீகம், தாயத்து போன்றவற்றை நாடி நேரத்தையும், பணத்தையும் வீண் செய்து மன உளைச்சலை அதிகரிக்காமல் கூறப்பட்ட பரிகாரங்களை பயன்படுத்தி பயன் பெற வாழ்த்துக்கள்.

Tags:    

Similar News