சிறப்புக் கட்டுரைகள்

கோடீஸ்வர யோகம் எப்படி அமையும்?

Published On 2023-05-09 16:45 IST   |   Update On 2023-05-09 16:46:00 IST
  • மனித நாகரீகத்தின் வளர்ச்சியை பண்டமாற்று முறையில் இருந்து பணப்பரிவர்த்தனைக்கு மாறியதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
  • ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்கும் யோகங்களை 3 விதமாகப் பிரிக்கலாம்.

மனித நாகரீகத்தின் வளர்ச்சியை பண்டமாற்று முறையில் இருந்து பணப்பரிவர்த்தனைக்கு மாறியதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். பணம் இல்லாத உலகத்தைப் பற்றி நினைப்பது கடினம். மனித வாழ்க்கையின் அனைத்து சம்பவங்களையும் பணம் எனும் சடசடக்கும் காகிதமே நிர்ணயிக்கிறது. மனித வாழ்வின் அன்றாட தேவைகளான உணவு ,உடை இருப்பிடம் போன்ற அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் வாழ்வாதார சக்தியாக பணம் விளங்குகிறது.

அதனால் தான் "பணம் பத்தும் செய்யும் " என்று கூறி வைத்தார்கள். தற்போது பணம் சம்பாதிப்பது மனிதர்களின் வாழ்நாள் லட்சியம், குறிக்கோளாக மாறிவிட்டது. பணம் சம்பதிக்க குறிப்பாக கோடீஸ்வர யோக அந்தஸ்து பெறவே அனைவரும் விரும்புகிறார்கள். மனிதர்கள் கோடீஸ்வர யோகத்தை விரும்பினாலும் அந்த யோகம் எளிதில் அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்கும் யோகங்களை 3 விதமாகப் பிரிக்கலாம்.

1. பிறவி யோகம்

2. திடீர் யோகம்

3. நிலையற்ற யோகம்

பிறவி யோகம்

கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகு சிலருக்கே அமையும். நான்காம் அதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாம் அதிபதிகள் பலம் பெற்ற ஜாதகர் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார். முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் பணக் கஷ்டம் தெரியாமல் இருப்பார்கள்.

திடீர் யோகம்

வாழ்க்கையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் சாதாரண அடிமட்டத்தில் அடிமை தொழில் செய்து கொண்டு ஜீவனத்துக்கு கூட கஷ்டம் அனுபவிப்பார்கள், சுகபோக வாழ்க்கை இந்த ஜென்மத்தில் கிடைக்காது என்று நினைக்கும் பலர் திடீர் யோகத்தின் மூலம் சமூகத்தில் உச்ச நிலையை அடைகின்றனர். தகுதிக்கு மீறிய வாழ்வு கிடைத்து அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியத்தை அடைகிறார்கள்.எதிர்பாராத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகி விடுகிறார்கள். அடிமட்ட நிலையில் இருக்கும் திடீர் யோகம் பெற சுய ஜாதகத்தில் 1, 2,5 9, 11ம்மிடம் பலம் பெற வேண்டும்.

நிலையற்ற யோகம்

வசதியாக வாழ்ந்து கொண்டு இருப்பவர் திடீரென தாழ்வான நிலைக்கு செல்வதும், சாதாரண நிலையில் வாழ்ந்தவர் எதிர்பாராத திடீர் தனயோகம் பெற்று உயர்ந்த நிலைக்கு செல்வது அல்லது குறுகிய காலம் வசதியான வாழ்க்கை வாழ்வது அல்லது குறுகிய காலம் பணத்தடுமாற்றம் ஏற்படுவது என ஏற்ற இறக்கம் நிறைந்த நிலையற்ற பலனை அனுபவிப்பார்கள்.

ராசிக் கட்டத்தில் உள்ள பன்னிரு பாவகங்களில் பணபர ஸ்தானம் சிறப்பாக அமைந்தால் மட்டுமே பணம் எனும் தனம் வசப்படும். பணபர ஸ்தானம் என்பது ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டு மற்றும் பதினொன்றாமிடமாகும். இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமும் பதினொன்றாமிடமான லாப ஸ்தானமுமே ஜாதகரின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் பாவகமாகும்.

தன ஸ்தானம்

ஒருவரின் வாழ்க்கை செல்வச் செழிப்பானதா? அல்லது வறுமையில் கஷ்டப்பட நேரிடுமா? சுயதொழில் மூலம் செல்வச் சேர்க்கை ஏற்படுமா அல்லது உத்தியோகத்தின் மூலம் செல்வச் சேர்க்கை ஏற்படுமா ? வாழ்க்கைத்துணை மூலம் செல்வச் சேர்க்கை உண்டாகுமா? அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஜாதகருக்கு உண்டா? போன்றவற்றை தன ஸ்தானமே தீர்மானிக்கும். தன ஸ்தானம் பலம் பெற்றால் ஜாதகர் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். ஜாதகர் செல்வாக்கு சொல்வாக்கு பெற்ற சீமானாக விளங்குவார். பணக்கஷ்டம் தெரியாதவர். பேச்சுத் திறமையால் வருமானம் ஈட்டும் காரியவாதிகள்.

பேச்சுத் தொழிலை மூலதனமாக கொண்டவர்கள். பல வழிகளில் வருமானம் ஈட்டும் தந்திரவாதிகள். கலகலப்பாக பேசி தன்னை சார்ந்தவர்களை சந்தோஷமாக வைத்து காப்பாற்றுவார்கள்.இவர் பிறக்கும் போது குடும்பம் சாதாரண நிலையில் இருந்தாலும் இவர் பிறந்த பிறகு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். தனத்தை பெருக்குவது பற்றியும், தன் குடும்பத்தை காப்பது பற்றியும் சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும். இவர்கள் பூர்வீகத்தில் வருமானம் ஈட்டி சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். மகிழ்சியான குடும்ப வாழ்க்கை அமையும்.

இதற்கு அசுப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் அல்லது தன ஸ்தானம் பலம் குறைந்தால் கடன், வறுமை, கஷ்ட ஜீவனம், பூர்வீகத்தில் வாழ முடியாத நிலை, குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை இன்மை, பிறரை அண்டி பிழைத்தல் போன்ற நிலை நீடிக்கும்.

லாப ஸ்தானம்

உப ஜெய ஸ்தானமான 11-ம் பாவகத்தின் முலம் பல்வேறு வகையில் தனபிராப்தி, சொத்து சேர்த்தல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து பல வகையில் வருவாய், லாபம் போன்றவை ஏற்படும்.தேவைக்கு அதிகமாக பணம் பொன், பொருள் உள்ளவர்கள் ஜாதகத்தில் 11-ம் இடமான லாப ஸ்தானம் வலிமையாக இயங்கும்.ஒரு சிலர் குறுகிய காலத்தில் பணம், புகழ், அந்தஸ்து பெறுவது 11ம் அதிபதியின் தசை புக்தி காலங்களில் மட்டுமே என்றால் அது மிகையாகாது.

பதினொன்றாம் அதிபதி மற்றும் 11-ல் நின்ற கிரகம் பலம் பெற்றால் ஜாதகர் அதிர்ஷ்டப் பிறவி. கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பா, மூத்த சகோதரருடன் வசதியான கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வாழ்வார்கள். அவர்களால் லாபமும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கோடீஸ்வர யோகம், சமுதாய அந்தஸ்து, அரசியல் ஆர்வம், அதிகாரம், கவுரவம் உண்டு. தொட்டதெல்லாம் பொன்னாகும். கூட்டுத் தொழில் வெற்றி தரும். அதிகமான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். குடும்பம் அமைந்த பிறகு பண வரவு அதிகமாகும். ஜாதகருக்கு பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் லாபம் தரும். சிறுவயதிலேயே வருமானம் ஈட்டத் துவங்குவார்கள். வங்கித் தொழில், வட்டித் தொழில், பைனான்ஸ், சீட்டு பிடித்தல் போன்றவற்றில் நல்ல ஆதாயம் உண்டு. பேச்சை ழூலதனமாக கொண்ட தொழிலில் சாதனை படைப்பார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் நடத்துவார்கள். சுருக்கமாக கவுரவத் தொழில் உண்டு.

லாப ஸ்தானம் கெட்டால்

பொது வாழ்க்கையில் பிரச்சினைகள், ஏமாற்றங்கள் வரும். தீய சகவாசத்தால் பெயர் கெடும். எவ்வளவு சம்பாதித்தாலும் இவர்களால் பணத்தை சேமித்து வைக்கவே முடியாது. பண பர ஸ்தானத்திற்கு கேந்திர, திரிகோணாதிகள் சம்பந்தம் இருப்பது மிக மிக சிறப்பு.லக்ன ரீதியான அசுப கிரகங்களின் சம்பந்தம் இருப்பது பொருளாதாரத்தில் தன் நிறைவற்ற நிலையைத் தரும்.

கோடீஸ்வர யோகம் எப்படி வரும் ஜாதகத்தில் 1,2,5,9,11-ம் இடங்கள் சுப வலிமை பெற வேண்டும். அத்துடன் சூரியன் பலம் பெற்றால் தந்தையாலும், சந்திரன் பலம் பெற்றால் தாயாலும், செவ்வாய் பலம் பெற்றால் நண்பர், கணவர், உடன்பிறப்பாலும், புதன் பலம் பெற்றால் மாமனாலும், சொந்த அறிவாலும், குரு பலம் பெற்றால் முன்னோர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், புத்திரர்களாலும், சுக்கிரன் பலம் பெற்றால் மனைவியாலும், சனி, ராகு, கேது பலம் பெற்றால் வேலையாட்கள் மூலமும், நேர்மையற்ற வழியிலும் செல்வம் சேரும்.ஜோதிடரீதியாக சுக்ரன் தரும் செல்வம் ஆயிரக்கணக்கிலும், சனி தரும் செல்வம் லட்சக்கணக்கிலும், குரு தரும் யோகம் கோடிக்கணக்கிலும், ராகு தரும் பணம் கோடியின் .மடங்குகளிலும் இருக்கும்.

தசா புக்தி பலம்

ஜனன கால ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் மனிதனின் வாழ்வை நிர்ணயிக்கிறது. ஒருவருக்கு ஜாதகத்தில் உள்ள கிரகங்களும், பாவகங்களும் யோகம் தரும் விதத்தில் அமைந்தால் மட்டும் போதாது. ஜாதகத்தில் எத்தனை யோகங்கள், தோஷங்கள் இருந்தாலும் அந்த சாதக பாதகத்தை தரும் கிரகங்களின் தசா புக்திகள் நடைபெற்றால் மட்டுமே ஜாதகர் பலனை அனுபவிக்க முடியும். அவரது வாழ்நாளுக்குள் அனுபவிக்க வேண்டிய பருவத்தில் அந்த யோக கிரகங்களின் தசை வந்தால் மட்டுமே யோக பலனை பரிபூரணமாக அனுபவிக்க முடியும்

அந்த விதிப் பயனை ஜாதகர் எப்போது அனுபவிப்பார் என்பதை தசா புக்திகளே தீர்மானிக்கின்றன.

அவரது வாழ்நாளுக்குள் அனுபவிக்க வேண்டிய பருவத்தில் தசை வர வேண்டும். அதுவே யோக ஜாதகம் .உதாரணமாக ஷட் பலத்திலும் பாவகத்திலும் சுக்கிரன் வலிமை பெற்ற ஒருவருக்கு 25 வயதில் சுக்கிர தசை நடந்தால் சிறப்பான தொழில் தன வரவு , உரிய வயதில் திருமணம், உல்லாச வாழ்க்கை, ஆடை, ஆபரண சேர்க்கை, சொத்து சுக சேர்க்கை உண்டாகும்.அதுவே 70 வயதில் வந்தால் சுக்கிரனால் கிடைக்கும் சுக போகத்தை அனுபவிக்க முடியாது.வயதிற்கு பொருத்தமான சுப பலன்களை வழங்கக்கூடிய தசா புக்திகள் தொடர்ந்து நடத்தும் ஜாதகமே யோக ஜாதகம்.

ஷட் பலத்தால் அதிக வலிமை பெற்ற கிரகங்கள் தங்கள் தசா-புக்தி காலங்களில் அனுகூலமான பலன்களைத் தரும். மிகவும் வலுக்குன்றிய கிரகங்கள் தங்கள் தசா-புக்தி காலங்களில் அனுகூல மற்ற பலன்களைத் தரும்.

ஒரு ஜாதகரின் உயிர் புள்ளியாகிய லக்கினம் என்ற லக்னாதிபதியால் தான் ஒரு ஜாதகம் செயல்படுத்தப்படுகிறது. எனவே லக்னம், லக்னாதிபதிபலம் மிகவும் முக்கியம். தனயோகம் என்பது 1, 2, 5, 9, 11 ஆகிய இடங்கள் மற்றும் அந்த இடத்தின் அதிபதிகள் மூலம் நிர்ணயிக்கிறோம். அத்துடன் தன கிரகங்களான குரு, சுக்கிரன், சனி, ராகு ஆகியோரின் அமர்வு மிக முக்கியம். இவை எல்லாம் சரியாக அமையும் போது பல்வேறு வகையில் தனபிராப்தி உண்டாகும். அதே நேரத்தில் யோகமும், அம்சமும், பாக்கியமும் சேர்ந்து இருந்தால் தனம் எனும் பணம் கொட்டும். எந்த ஜாதகமாக இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் யோகம் இருக்கும். ஆனால் அந்த யோகம் என்ன தன்மையில் உள்ளது. எந்த அளவில் உள்ளது என்பதில்தான் விஷயம் உள்ளது. இதில் அளவு என்பது நாம் வாங்கி வந்த வரம், கொடுப்பினை, அம்சம். இந்த கர்மா நமக்கு நல்ல அம்சத்தில் இருந்தால் நிச்சயம் செல்வ வளம், தன பிராப்தி, பண மழை கொட்டும், மேலும் தனயோகம் ராஜயோகங்கள் இருந்தாலும் தீய கிரக சேர்க்கை, தீய யோகங்கள், நீச்ச யோகங்கள் பரல் பலம் போன்றவை குறைந்த ஜாதகங்கள், நீச்ச தசை, பாதக ஸ்தான தசை, விரய ஸ்தான தசை போன்ற பலம் குறைந்த தசா நடக்கும் ஜாதகங்கள் அடிக்கடி சரிவை சந்திக்கும். வாழ்க்கைப் பாதை சகடயோகம் போல் மாறி, மாறி ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். தன, லாப கிரக யோகமும், ராஜயோக தசையும், அனுபவிக்கும் பாக்கியமும் ஒருங்கே அமைந்தால்தான் குபேர தன சம்பத்து, கோடீஸ்வர யோகம் சித்திக்கும்.

பரிகாரம்

கோடீஸ்வர யோகம் பெற விரும்புபவர்கள் பச்சை மருதாணி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து நவக்கிரகங்களை மனதார வேண்டி ஒன்பது பிடி பிடித்து காய வைத்து பொடியாக்கி சாம்பிராணியுடன் கலந்து தூபம் மிட நல்ல பணவரவு ஏற்படும்.

Tags:    

Similar News