சித்ரகுப்தனும் சித்ரா பவுர்ணமியும்
- ஒரு சிலர் வாழ்க்கையில் தீராத துன்பங்களால அவதிபட்டுக் கொண்டே இருப்பார்கள்.
- மனம் சம்பந்தப்பட்ட அனைத்து இன்னல்களுக்கும் தீர்வு கிடைக்க பிரபஞ்சம் வழங்கிய உபாயமே பவுர்ணமி பூஜையாகும்.
ஜோதிட ரீதியாக உயிர் எனப்படுவது லக்னம் என்றால், அந்த உயிரை இயக்கும் உடல் சந்திரனாகும். ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடமே ராசியாகும். ஒரு ஜாதகத்தில் லக்னமும், ராசியும் இரண்டு கண்கள். எந்த முறையில் ஒருவருக்குப் பலன் கூறினாலும் லக்னம் மற்றும் சந்திர ராசி அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்துப் பலன் சொல்வதே துல்லியமானதாக இருக்கும். உதாரணமாக தொழில் தொடர்பான கேள்விகளுக்கு லக்னத்திற்கு பத்தாமிடத்தையும், ராசிக்கு பத்தாமிடத்தையும் சேர்த்து பலன் உரைத்தால் அது மிக துல்லியமாக இருக்கும்.
ஒருவருக்கு உயிர் நாடியான லக்னமும் லக்னாதிபதியும் பலவீனமாகி இருந்தால் ராசிநாதன் என்று சொல்லப்படக் கூடிய சந்திரன் இருக்கும் வீட்டின் அதிபதி கிரகமே அந்த ஜாதகரை வழிநடத்தும். ஆக ஒருவரின் ஜாதகத்தில் உள்ள சந்திரன் பலம் பெற்றால் எளிதில் வெற்றியைத் தொட முடியும். சுய ஜாதகத்தில் உள்ள சந்திரனை பலப்படுத்த முன்னோர்கள் உபதேசித்த வழிபாட்டு முறையே பவுர்ணமி பூஜையாகும்.
அதேபோல் ஒரு சிலர் வாழ்க்கையில் தீராத துன்பங்களால அவதிபட்டுக் கொண்டே இருப்பார்கள். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எந்த பலனும் இல்லாமல் மீண்டும் மீண்டும் பிரச்சினைகளில் சிக்கி தவித்து கொண்டே இருப்பார்கள். அவர்களின் மனோ நிலை விரக்தியின் உச்ச நிலையில் இருக்கும். தனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது? எல்லோரும் நிம்மதியாக தானே இருக்கிறார்கள் என்று நினைப்பார்கள்.
எல்லா மனிதனுக்கும் ஏதோ ஒரு பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கும் என்ற உண்மை தெரியாது. அவர்களின் வேதனை மட்டுமே அவர்களுக்கு தெரிந்த ஒன்றாக இருக்கும். அதனால் பிரச்சினையைக் கண்டு அஞ்சிக் கொண்டு இருந்தால் தீர்ந்து விடுவதில்லை. தீராத, தீர்க்க முடியாத சில சிக்கல்களுக்கும், மன பயத்திற்கும் சில பரிகாரங்களை செய்து மன நிம்மதியை தேடிக்கொள்ள முடியும்.
மனம் சம்பந்தப்பட்ட அனைத்து இன்னல்களுக்கும் தீர்வு கிடைக்க பிரபஞ்சம் வழங்கிய உபாயமே பவுர்ணமி பூஜையாகும்.
சூரியன் மற்றும் நிலாவிற்கு நடுவே பூமி வரும் நாளே பவுர்ணமியாகும். அன்று சூரியனின் முழு வெளிச்சமும் நிலாவின் முன்பக்கத்தின் மேல் முழுமையாக பதிவதால் நிலா வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும்.
பூமியின் மேல்மட்ட பகுதியில் நிலாவின் ஈர்ப்புவிசை தாக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும். நிலாவின் நற்சக்தி வேலை செய்யும் போது, ரத்தஓட்டமும் பிராண சக்தியும் இயல்பாகவே மேல்நோக்கி பயணம் செய்யும்.
அதனால் அன்று உங்கள் குணம் எதுவாக இருந்தாலும், அது மேம்படும். நீங்கள் தியான நிலையில் இருந்தால், அன்று உங்கள் தியானநிலை ஆழமாகிறது. நீங்கள் அன்பு நிறைந்தவர் என்றால், அன்று அன்பு பெருக்கெடுக்கும். நீங்கள் பயம் நிறைந்தவராய் இருந்தால், உங்கள் பயவுணர்வு இன்னும் அதிகரிக்கும். அளப்பறிய சக்தியையும் விழிப்புணர்வையும் வழங்கும் ஆத்மக்காரகன் சூரியனும், மனோகாரகன் சந்திரனும் சம சப்தமாக பார்ப்பதால் சூரியகலை, சந்திரகலை சமநிலை பெற்று மனிதர்களின் மனம் ஒரு நிலைப்பட்டு மனதில் சாந்தமும் அமைதியும் ஏற்படும். மனம் ஒரு நிலைப்படும் போது செய்யப்படும் பூஜைகள் , வழிபாடுகள், தான தர்மங்கள் பல மடங்காக உடனே பலன் தரும்.இந்தப் பவுர்ணமி தினமானது மாதம் ஒரு முறை வந்தாலும் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு பல தனிச் சிறப்புக்கள் உள்ளன. சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் உச்சமாக இருப்பார். கிரகங்கள் உச்ச வீட்டில் சஞ்சாரம் செய்யும் போது பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதன் வலிமையும் மிகுதியாக இருக்கும். உச்ச கிரகங்களின் கதிர் வீச்சு பூமிக்கு மிகுதியாக கிடைக்கும்.
ஆத்மகாரகனான சூரியனும் மனோகாரகனான சந்திரனும் பலம்பெறும் சித்ரா பெளர்ணமிக்கு மிகுதியான சக்தி உண்டு. சூரியன் தன் முழு வலிமையுடன் சந்திரனை பார்க்கும் சித்ரா பெளர்ணமி நாளில் சூரிய ஒளியால் பகல் பொழுதும், சந்திர ஒளியால் இரவு பொழுதும் பிரகாசமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும் போது மனிதர்களின் பூஜைகள், வழிபாடுகள், தான தர்மங்கள் பல மடங்காகி புண்ணிய பலன் மிகுதியாகும்.
சித்ரா பவுர்ணமி 2023
மனிதர்களாய் பிறந்த அனைவரும் இரண்டு விதமான வினையில் இருந்து விடுபட விரும்புவார்கள். ஒன்று கர்ம வினை, இரண்டாவது பொருள் குற்றம்.இதிலிருந்து விடுபட சித்ரா பவுர்ணமியன்று கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிபாட்டு முறைகளைக் காணலாம்.
ஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 22ம் நாள் வெள்ளிக் கிழமை 5.5.2023 அன்று சுவாதி நட்சத்திரத்தில் சித்ரா பவுர்ணமி நிகழ்கிறது.
சித்ரா பவுர்ணமியும் சித்திரகுப்த வழிபாடும்
மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து இறப்பிற்கு பிறகு அவர்களின் ஆன்மா வசிக்கப் போகும் சொர்க்கம்-நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எமதர்மனின் உதவியாளரான சித்திர குப்தனை வழிபடும் நாள் சித்ரா பவுர்ணமி.
மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்திரகுப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி ஏடுடன் பிறந்ததாக ஐதீகம். நாம் செய்யும் புண்ணிய செயல்களையும் பாவ செயல்களையும் தவறாமல் நடுநிலையாக, அவரவரின் பூர்வ புண்ணியங்களின் படி ஆராய்ந்து மறையாத எழுத்துக்களால் கணக்குப் புத்தகத்தில் எழுதுவதாக நம்பிக்கை.
சித்' என்றால் 'மனம்' என்றும், 'குப்த' என்றால் 'மறைவு' என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களின் புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார் சித்ரகுப்தர் என்று பொருள். அதனால் எமதர்மனின் உதவியாளரான சித்திர குப்தனை வழிபட்டு புண்ணிய பலனை அதிகரிக்க செய்ய முடியும்.
சித்திரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படம் வைத்து மலர் அலங்காரம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து பழங்கள், காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, சம்பா அரிசியில் தயாரித்த அவல், பச்சரிசி வெல்லம் கலந்த இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை புகுத்தி தீப தூபம் காட்டி சித்ர குப்தனை மனதார வழிபட பாவபலன் குறைந்து புண்ணிய பலன் பெருகும்.மனிதர்களின் பூர்வ ஜென்ம பாவபுண்ணியங்கள் எல்லாம் சனி கிரகத்தில் தான் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
இருளை நீக்கும் வலிமை வெளிச்சத்திற்கு மட்டுமே உண்டு. மனிதர்களின் பாவ புண்ணிய கணக்கை எழுதும் சித்ரகுப்தனின் கணக்கு புத்தகம் என்பது சனி கிரகமாகும். எனவே இந்த நாளில் விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபட்டால் கர்ம வினை நீங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மனிதர்கள் செய்யும் பாவங்களை அறிந்து செய்யும் பாவம் அறியாமல் செய்த பாவம் என இரண்டாக வகைப்படுத்தலாம். அறியாமல் செய்த பாவங்களில் இருந்து விடுபட விரும்புபவர்கள் சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும். அதே போல் தெரிந்து செய்த பாவத்திற்கு மன்னிப்பு கோரி பாவச் சுமையை குறைத்துக் கொள்ளலாம்.
அதுபோலவே அன்று செய்யும் தான, தர்மங்கள் கடுகளவாக இருந்தாலும் அது மலையளவாக புண்ணியம் பெற்றுத் தரும். முக்கியமாக நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் போன்ற எழுத பயன்படும் பொருட்களை தானமாக வழங்கினால் வாழ்வு சிறக்கும்.
சித்ரா பவுர்ணமியும் மகாலட்சுமி பூஜையும்.
இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளில் காலபுருஷ 5ம் அதிபதியான சூரியன் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்திலும் சந்திரன் ராகுவின் நட்சத்திரமான சுவாதியிலும் சஞ்சரிக்கிறது. எனவே அன்று செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி தேவியை விரதமிருந்து வழிபட்டால் சிறப்பான பல பலன்களைப் பெற முடியும்.இந்த விரதத்தை திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணமாகாத கன்னிப் பெண்களும் கடைபிடிக்கலாம். விரதத்துக்கு முதல் நாள் வீட்டை சுத்தம் செய்து பசு மாட்டின் கோமியம் தெளித்து மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும்.
பவுர்ணமியன்று பூஜை அறையில், பலகையை போட்டு, அதன் மீது மாக்கோலம் போட வேண்டும். மஹாலஷ்மியின் படம் வைத்து கோலத்திற்கு நடுவில் நெல் பரப்பி தட்டு வைத்து அதன் மீது கலசம் வைத்து, பட்டுப்பாவாடை, நகைகள் போட்டு மஞ்சள், குங்குமம் வைத்து, பூச் சூட்டி, கும்பத்தை அலங்காரம் செய்து கோலமிட்டு மகாலட்சுமியை கலசத்தில் ஆவாஹனம் செய்ய வேண்டும். பஞ்சமுக நெய் விளக்கு ஏற்றி கும்பத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம், அன்னம்,நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல், பால் பாயாசம் சுண்டல் போன்ற உணவுப் பொருட்கள் படைக்க வேண்டும்.
பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ஹர நாமம் ஆகியவற்றை படிக்க வேண்டும். சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். திருமண தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். கடன் தீர்ந்து பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். வறுமை அகலும்.
சூரியனின் அதிதேவதை சிவன், சந்திரனின் அதிதேவதை அம்பிகை. எனவே சிவசக்தியை சித்ரா பவுர்ணமியில் வழிபட்டால் கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.பாவங்கள் குறைவதோடு ராகு/கேது, பூர்வ ஜென்ம தோஷம், களத்திர தோஷம், புத்ர தோஷம், கல்வி தோஷம் போன்ற தோஷங்கள்
விலகும்.சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.
குல தெய்வம், இஷ்டதெய்வம், வழிபாடு;-
சித்ரா பவுர்ணமி எல்லோரும் சிறப்பாக கொண்டாடுகிற வைபவம். இந்த நாளில், கோவிலில் உள்ள விக்ரகங்களின் சக்தி அதிகமாக வெளிப்படும் என்பதாக ஐதீகம். ஆகவே, அந்த நாளில், கோவிலுக்குச் செல்லும் போது நல்ல அதிர்வலைகள் நம் மீது பட்டு, நம்மை செம்மையுறச் செய்யும். அதனால் அன்று குல, இஷ்ட தெய்வ கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. இயலாதவர்கள் சித்ரா பெளர்ணமியன்று வீட்டில் செய்யப்படும் பூஜைக்கு, தான தர்மத்திற்கும் பன்மடங்கு வீரியம் அதிகம். சித்ரா பவுர்ணமி அன்று அதிகாலையில் குளித்து பூஜையறையில் குல, இஷ்ட தெய்வ படங்களையும் துடைத்து சந்தனம் குங்குமமிட்டு பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
பூஜையறையில் விளக்கேற்றி இயன்ற உணவு, சுண்டல் மற்றும் கேசரி, சர்க்கரைப் பொங்கல், அவல் பாயாசம் மற்றும் பழங்களை படைத்து தீபதூப ஆராதனைகள் செய்யுங்கள். முடிந்தால், குடும்பத்தார் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது இன்னும் சிறப்பு வாய்ந்தது. அன்று இரவு சந்திர தரிசனம் செய்ய வேண்டும். இயன்ற தான தர்மங்களை வழங்க வேண்டும். சித்ரா பவுர்ணமியில், வீட்டில் சிரத்தையுடன் செய்யப்படும் பூஜையால், இதுவரை வீட்டில் இருந்த தரித்திர நிலை மாறும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவு நீங்கி, சந்தோஷமும் குதூகலமும் குடிகொள்ளும். மகிழ்ச்சி என்ற உணர்வு மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகும்.
தீராத, தீர்க்க முடியாத சுமைகளை இறைவன் பாதத்தில் சமர்ப்பிக்க மகிழ்ச்சி என்ற உணர்வு உங்களுடன் உறவாடும். வாழ்க்கை தித்திக்கும். இந்த சித்ரா பவுர்ணமி நாளில் அனைத்து துன்பங்களும் விலகி இன்பம் பெற நல்வாழ்த்துக்கள்.