சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவம் அறிவோம்- உடல் உறுப்புகளை பாதிக்கும் சர்க்கரை நோய்

Published On 2023-04-03 16:48 IST   |   Update On 2023-04-03 16:48:00 IST
  • தானிய உணவு, நார்சத்து உணவு கூடவே பழங்கள், காய்கறிகள் என உணவு முறை பரிந்துரைக்கப்படுகின்றது.
  • சர்க்கரை, சுவீட்ஸ் எடுத்துக் கொள்பவர்கள் இது தரும் பாதிப்பினை படித்து அறிந்து கொள்ள வேண்டும்.

சர்க்கரையினைப் பற்றி அதன் பாதிப்புகளைப் பற்றி எவ்வளவு எழுதினாலும், டி.வி.யில் அநேகர் தொடர்ந்து பேசினாலும் கூடவே ஒரு தனி கருத்தும் உலா வருகின்றது. அது என்ன?

'எனக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இல்லை. என் அப்பா, அம்மாவிற்கும் இல்லை. நான் ஏன் பயந்து பயந்து கட்டுப்பாட்டில் இருக்கணும். நான் ஜாலியரய் ஐஸ்கிரீம், சாக்லேட், சிப்ஸ் என வாழ்ந்து விட்டு போகின்றேனே" என்ற கருத்துதான் பலரிடம் உள்ளது.

சர்க்கரை என்பது கார்போ ஹைடிரேட்டின் ஒரு பிரிவு. இது அதிக உணவுகளில் காணப்படுகின்றது. சுவீட்ஸ், இனிப்பு பானங்கள் போன்ற இவற்றினை மிக அதிகமாக பயன்படுத்தும்போது உடலுக்கு தாக்குதலைத் தருகின்றது. முக்கிய பாதிப்பாக எடை கூடுகின்றது. இதன் காரணமாக சர்க்கரை நோய் பிரிவு2 ஏற்படலாம். இருதய நோய் ஏற்படலாம். இன்று ஆய்வுகள் சில வகை புற்று நோய்களுக்குக் கூட சர்க்கரை ஒரு காரணமாக இருப்பதாக சொல்கின்றன. பல் பாதிப்பு ஏற்படுகின்றது. அதிக சர்க்கரையை எடுத்து கொள்ளும் போது வாயில் ஆசிட் உற்பத்தியாவதால் பல் பாதிப்பு, பல் சொத்தை ஏற்படுகின்றது.

அதிக சர்க்கரை உடலின் சக்தியில் ஏற்றத் தாழ்வுகள், மனநிலையில் சற்று எரிச்சல், சோர்வு போன்ற உணர்வுகளை ஏற்படுத்தலாம்.

கார்போஹைடிரேட் எனப்படும் மாவு சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் போதும் இதே தீய பாதிப்புகள் ஏற்படுகின்றன. கார்போஹைடிரேட் உடனடி சக்தி கொடுக்கும் ஒன்றுதான். ஆனால் மைதா போன்ற நார்சத்து இல்லாத உணவு வகைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக எடை கூடுதல், சர்க்கரை நோய் பிரிவு 2 இவற்றினை ஏற்படுத்தி விடும். அது போன்று அதிக அளவு மாவு சத்து வயிறு உப்பிசம், காற்று, வயிற்றுப் போக்கு இவற்றினை ஏற்படுத்தும்.

எனவேதான் முழு தானிய உணவு, நார்சத்து உணவு கூடவே பழங்கள், காய்கறிகள் என உணவு முறை பரிந்துரைக்கப்படுகின்றது. இவை தொடர்ந்து சக்தி அளிக்கும். நிதானமாக ரத்தத்தில் சர்க்கரை ஏறும். அடிக்கடி பசி எடுக்காது.

மேலும் இவற்றுடன் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு என எடுத்துக் கொள்ளும் போது அதிக சர்க்கரை ரத்தத்தில் ஏறுவதை தவிர்க்கின்றது.

சிலர் காலை 6-8 இட்லி, மதியம் அதிக சாதம் உணவு, இரவில் வெகு நேரம் சென்று புரோட்டா குருமா என எடுத்துக் கொள்வர். சிறிய அளவில் உணவும் நடுவில் ஸ்நாக்ஸ் முறையிலும் எடுத்துக் கொள்வர். குக்கர் இட்லி 3, இதற்கேற்ற புரதம், காய்கறி சாம்பார் என எடுத்துக் கொள்ளலாம். 11 மணி அளவில் ஒரு மீடியம் ஆப்பிள் (அ) ஏதேனும் ஒரு பழம் (அ) மோர் என எடுத்துக் கொள்ளலாம். கொட்டை வகை உணவுகள் (அ) சுண்டல் போன்றவை 4 மணி அளவில் எடுத்துக் கொள்ளலாம். இப்படி அவரவர் வேலை, வயது, சூழ்நிலை இவற்றிற்கேற்ப அவர்களே தன் உணவு முறையினை மாற்றிக் கொள்ளலாம். காலையில் முட்டையின் வெள்ளை கரு, ஓட்ஸ் போன்றவைகளும் சிறந்ததே. பிரவுன் அரிசி, கியூனோனா, ஓட்ஸ், பருப்பு வகைகள் இவை நார்சத்து கூடுதலான நல்ல உணவுகள். வெள்ளை பிரெட், பாஸ்தா, பேக்கரி கேக் வகைகள் இவை எளிதில் சர்க்கரை அளவினை உயர்த்துபவை.

ஏன் இப்படி சர்க்கரையை பற்றி அதிகளவு அறிவுறுத்தப்படுகிறது. அதிக சர்க்கரை, சுவீட்ஸ் எடுத்துக் கொள்பவர்கள் இது தரும் பாதிப்பினை படித்து அறிந்து கொள்ள வேண்டும். அவை

* சீக்கிரம் முதுமை ஏற்படும்.

* நோய் எதிர்ப்பு சக்தியினைக் குறைத்து விடும்.

* தாதுக்கள் உடலில் சீராய் இராது.

* ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும்.

* நோய் பாதிப்பு எளிதில் ஏற்படும்.

* கொழுப்பு சத்து கூடும்.

* மறதி நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் கூடுகின்றது.

* பல் சொத்தை, ஈறுகளில் பாதிப்பு ஏற்படும்.

* எடை கூடும்.

* பூஞ்சை பாதிப்பு ஏற்படும்.

* சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம்.

* பரபரவென இருப்பர்.

* மனச்சோர்வு இருக்கும்.

* பார்வை பலவீனப்படும்.

* மூட்டு வலி பாதிப்பு ஏற்படும்.

* எலும்பு தேய்மானம் உருவாகும்.

* இருதயம் பாதிக்கப்படும்.

* ரத்த சோகை ஏற்படும்.

* சிறுநீரக கற்கள், பித்த பை கற்கள் உருவாகலாம்.

* ஹார்மோன்கள் சீராய் இராது.

* கல்லீரலில் கொழுப்பு சேரும்.

* தலைவலி பாதிப்பு ஏற்படலாம்.

இதனையெல்லாம் படித்த பிறகு அனைவருமே அளவான சர்க்கரையினை உணவில் சேர்த்துக் கொள்வர் என நம்பிக்கை கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்ப்பதன் அவசியத்தினை மேலும் நன்கு உணர்ந்து பயன் பெறுவார்கள் என நம்புவோமாக.

(நமது உடலில் 75 சதவீதம் நீர் உள்ளது. இதுவே நம் உடலின் செயல்பாடுகளுக்கு உதவுகின்றது. சில சமயங்களில் உடலில் நீர்தேக்க வீக்கம் ஏற்படலாம். அதிக உப்பினை உணவில் சேர்ப்பது அதிக நேரம் உட்கார்ந்தோ, நின்றோ இருப்பது, சில வகை மருந்துகள் இவைகளால் ஏற்படலாம்).

உப்பினை குறைத்து உணவில் சேர்த்துக் கொள்வது, பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகள் உள்ள வாழைப்பழம், சர்க்கரைவள்ளி, பாலைகீரை, உருளை, தயிர், இளநீர், பீட்ரூட், கீரை வகைகள், ஆரஞ்சு, உலர் திராட்சை போன்றவை எடுத்துக் கொள்வது. வைட்டமின் பி6 சத்து நிறைந்த உணவுகள் (எடுத்துக்காட்டு) சூரியகாந்தி விதை, கொண்டை கடலை, மீன், காரட், பச்சை பட்டாணி, பிஸ்தா, வேர்கடலை, உருளை, ப்ரவுன் அரிசி போன்றவை நல்லது.

மக்னீசியம் சத்து நிறைந்த உணவுகள் (எடுத்துக்காட்டு) பூசணி விதை, பசலை கீரை, அடர் சாக்லேட், கீரை வகைகள், பாதாம், முந்திரி, சோயா பன்னீர், பருப்பு வகைகள், தயிர், மீன், சூரியகாந்தி விதை ஆகியவை பயன் அளிக்கும்.

பொதுவில் உணவு முறை மாறுதல்களும் நல்ல பலனை அளிக்கும்.

உடற்பயிற்சி என்பதும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருப்பதும் அவசியம்.

சிலவகை மருந்துகள் இந்த பாதிப்பினை ஏற்படுத்தலாம். மருத்துவர் ஆலோசனை அவசியம்.

ஹார்மோன் மாறுபாடுகள், கர்ப்ப காலம், மாதவிடாய் நின்ற காலம் இவற்றில் உடலில் நீர்தேக்கம் ஏற்படலாம்.

இருதய பாதிப்பு, நச்சுப் பொருட்கள், தைராய்டு பிரச்சினை, அலர்ஜி போன்றவையும் இந்த வீக்கத்தினை ஏற்படுத்தலாம்.

edema எனப்படும் இந்த வீக்கம் பாதம், கணுக்கால் இவற்றில் காணப்படும்.

சிறுநீரக பாதிப்பு, சத்துணவு பற்றாமை ஆகியவற்றாலும் வீக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

நாமே காரணங்களை முடிவு செய்யக்கூடாது. மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதற்காகவே அவசியத்தினை உணர்த்தும் விதமாக கருத்துக்கள், அறிகுறிகள் இங்கு கூறப்பட்டுள்ளன.

Underarm-அக்குள்: வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. வியர்வையும், உடலில் ஒரு பிசுபிசுவென்ற தன்மையும் பாடாய் படுத்தி விடும். அதிக தூரம் வெயிலில், நெரிசலில் பயணிப்பவர்கள் கூடுதலாக இந்த தாக்குதலை அனுபவிப்பார்கள். குளிர்ந்த (அதாவது சாதாரண நீரில்) நீரில் குளிப்பது, இதற்கான தரமான சோப்பினை, கிருமி நாசினி சோப்பினை பயன்படுத்துவது. தரமான பவுடர் உபயோகிப்பது போன்றவை அனைவரும் செய்யும் ஒன்றுதான். Undearm எனப்படும் அக்குள் மற்றும் உடல் மடிப்பு உள்ள பகுதிகளில் வியர்வை சற்று துர்நாற்றம் உடையதாக இருக்கும். ஏனெனில் இங்கெல்லாம் கிருமிகள் எளிதாய் பெருகி விடும். இதற்கு இரு முறை சுத்தமான குளியலே நல்ல தீர்வாக இருக்கும். பலர் வேப்பிலை பொடி, மஞ்சள் தூள் கலந்து பயன்படுத்துவர். ஆனால் இந்த கைமடிப்பில் கொஞ்சம் கடுமையான நாற்றம் இருந்தால் இதற்கு சில மருத்துவ காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன்கள் சுரப்பதில் முறையின்மை, தைராய்டு சுரப்பி, சீராய் இயங்காமை, கீட்டோ அசிடோசிங் எனப்படும் சர்க்கரை நோய் தீவிரம் இவற்றினால் இருக்கலாம். கவனம் தேவை.

அதே போல் அக்குள் அரிப்பு என்பது பொதுவில் சாதாரண மானதாக இருக்கக் கூடும். ஆனால் தொடர்ந்து விடாது ஏற்படும் அரிப்பு என்பது பயன்படுத்தும் ரேசர், ஆடை, கிரீம் காரணமாக இருக்கலாம். சிகப்பு திட்டு, கருமை திட்டு இவை பூஞ்சை காரணமாக இருக்கலாம். மருத்துவர் ஆலோசனை அவசியமாகும்.

Cmder arm-இதனால் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். கடுமையான உடற்பயிற்சி, கனமான பொருளை தூக்குதல் இவையும் வலியினை ஏற்படுத்தும். என்றாலும் வேறு சில மருத்துவ காரணங்கள் இருக்கின்றதா என்பதை அறிய உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

அளவுக்கு அதிகமாக சிலருக்கு வியர்த்துக் கொண்டே இருக்கும் ஹார்மோன் மாறுபாடு, மாதவிடாய் நிற்கும் காலம் போன்றவற்றில் அதிக வியர்வை கொட்டலாம் .

இவை மருத்துவர் உதவி, சிகிச்சை பெற வேண்டியவை என்பதற்காகவே வலியுறுத்தப்படுகின்றது .

உங்கள் வாழ்க்கையில் பலருக்கு பல கனவுகள் இருக்கும். சிலர் தன்னை பெரிய விஞ்ஞானியாக நினைத்துக் கொள்வார்கள். சிலர் தன்னை தலைசிறந்த கலைஞராக நினைத்துக் கொள்வார்கள். இப்படி எண்ணற்ற பிரிவுகளில் தன் மனதின் ஈடுபாட்டுக்கேற்ப கற்பனையில் வாழ்வர். இலக்கை அடைய முடியாமல் சோர்ந்து விடுவர். நாம் நமக்குள் உண்மையாக சிலவற்றினை உணர வேண்டும். எந்த ஒரு பிரிவிலும் உயர்நிலையை ஒரு நாளிலோ ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ ஒரு வருடத்திலோ அடைய முடியாது. ஆய்வு கூறும் ஒரு உண்மை என்னவென்றால்,

84 சதவீதம் மக்கள் இலக்கு இல்லாமலேயே வாழ்கின்றனர் ஆனால் இலக்கு என்பது இதனை நான் சாதிக்க வேண்டும் என்ற ஒன்று. இது ஒவ்வொருவர் மனதிலும் இருக்க வேண்டும். சிலருக்கு பல பிரிவுகளில் இலக்கு இருக்கும். அதில் முதல் 10 முக்கியமானவற்றினை எழுதுங்கள் அதில் முதல் மூன்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மற்றவற்றினை கவனம் செலுத்த வேண்டாம் இனிமையான ஆரவாரமற்ற மெலிதான இசை உங்கள் கவனத்தினை சிதறாது பார்த்துக் கொள்ளும்.

செய்யும் வேலையில் அவ்வப்போது ஐந்து நிமிட இடைவெளி அளியுங்கள். 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அரை மணி நேரம் ஓய்வு கண்களை மூடி இருத்தல் நடை போன்ற சிறு சிறு பயிற்சிகளை செய்ய வேண்டும்.

ஓய்ந்து விழும் வரை வேலை செய்வது தவறு. அதற்காக பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவது நாளடைவில் காணாமலே போய்விடும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும் 'இலக்கு இருந்து அதற்காக முயலும் பொழுதே வாழ்வு சிறக்கும்'.

Tags:    

Similar News