நண்பனைபோல் ஓடோடி வந்து காக்கும்- கோடி நன்மை தரும் குல தெய்வ வழிபாடு!
- குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது என்பவை பழமொழிகள்.
- நாம் நினைக்கும் போது உதவி செய்யும் தெய்வமே குல தெய்வம் ஆகும்.
"குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது !"
"குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது" என்பவை பழமொழிகள்.
குல தெய்வம் என்று கூறப்படும் தெய்வங்கள், அந்தந்தக் குடும்பங்களில், அல்லது, குழுவினரில், இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமெனில், ஒவ்வொரு சாதிப் பிரிவினரில் தோன்றி, தங்கள் குலம் செழிக்கப் பாடுபட்டு, தியாகம் புரிந்து , இன்னல்களில் இருந்து காப்பாற்றியவர்கள் ஆவர்.
அத்தகைய நம் முன்னோர்களின் படிமங்கள்தான், குலதெய்வங்கள் என்று போற்றப்படுகின்றனர். அவர்களைச் சிற்பிக்க கோயில்கள் அமைத்து, வழிபாடு செய்கிறார்கள்.
அப்படி நம் முன்னோர்களின் கண்முன்னே வாழ்ந்து மறைந்தவர்களை நாம் வணங்குவது நமது தலையாய கடமையாகும்.
நம்முடைய குலதெய்வம் என்பது நமக்கும் ஓடோடி வந்து உதவி செய்யும் உயிர்க்காக்கும் நண்பனை போல! நாம் நினைக்கும் போது உதவி செய்யும் தெய்வமே குல தெய்வம் ஆகும்.
நம்முடைய சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும்,ஒவ்வொரு குல தெய்வம் இருக்கும்.குல தெய்வத்தை கும்பிடும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்கள்முழுவதும் பங்காளி ஆவார்கள்.இவர்கள் அண்ணன், தம்பி உறவு முறையாக கருதுபவர்கள். இவர்களுக்குள் பெண் கொடுக்கவோ,எடுக்கவோ மாட்டார்கள்.
குலதெய்வம் வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் முடி, குல தெய்வம் கோயிலில் சென்று மொட்டை போடுவார்கள்.சிலர் காது குத்துவார்கள். மேலும் நம்முடைய வீட்டில் எந்த சுபகாரியங்கள் செய்தாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்கவேண்டும்.
எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து விட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். மேலும் வருடந்தோறும் நம்முடைய குலதெய்வத்தை வழிபடுவதால் நன்மைகளும்,சந்தோசங்களும் குடும்பத்தில் நிலவும் என்பது உண்மை.
இன்றைய நாகரீக சூழ்நிலையில் ஒவ்வொருவரும் வேலை விசயமாக கிராமத்தை விட்டு நகரங்களிலும், வெளிநாடுகளிலும் வாழ்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில் வீடு,வாகனம் வாங்கும் முன்போ,சுப காரியம் செய்யும் முன்போ நாம் குல தெய்வத்தை வணங்கி விட்டு செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும்.
நீங்கள் எந்த சுப காரியங்கள் செய்யும் முன், குலதெய்வத்தை நேரில் தரிசிக்க முடியாவிட்டால், ஒரு தேங்காயை எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டின் வாசலுக்கு வந்து சூரியனை கும்பிட்டுவிட்டு உங்க வீட்டிற்கு எந்த திசையில் உங்கள் குலதெய்வம் இருக்கிறதோ, அந்த திசையை பார்த்து குலதெய்வத்தை மனதுக்குள் துதித்துக்கொண்டே தேங்காயை உடைத்து விட்டு நீங்க செய்யப்போகும் சுப காரியத்தை செய்யுங்கள். கண்டிப்பாக குலதெய்வம் உங்களை எப்போதும் பாதுகாக்கும்.
இதை, குலதெய்வ ஆலயத்திற்கு தொலை தூரத்தில் இருப்பவர்கள் செய்யலாம். மற்றபடி குல தெய்வ ஆலயங்களின் அருகில் இருப்பவர்கள் கட்டாயம் எந்த சுப காரியங்களை செய்வதற்கு முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு செய்வது தான் நல்லது.
சரி! குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்?
ஜோதிடத்தில் லக்கினத்திற்கு ஐந்தாம் இடம் பூர்வ,புண்ணிய ஸ்தானம். இதை வைத்துதான் ஓருவரின் தந்தை வழி பாட்டனார், தாய்மாமன், புத்திர பாக்கியம், கர்ம வினை, புகழ், இப்பிறவியில் அனுபவிக்கப்போகும் நன்மைகள் என அனைத்தையும் தெரிந்துக்கொள்ள முடியும்.
இந்த இடத்தை வைத்து ஓரளவு நம்முடைய குல தெய்வத்தை அறியலாம்.இந்த இடங்கள் ஆண் ராசியா, பெண் ராசியா எனக் கண்டுபிடித்து, அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா எனத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் அது நில ராசியில் (ரிஷபம், கன்னி, மகரம்) உள்ளதா, நீர் ராசியில் (கடகம், விருச்சிகம், மீனம்) உள்ளதா, என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த தெய்வம் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கலாம்.
நீர் ராசி என்றால், ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடங்களுக்கு அருகில் குலதெய்வம் இருக்கும்.
நில ராசியில் வந்தால், வயல்வெளி சார்ந்த இடங்களில் இருக்கும்.
நெருப்பு ராசியில் (மேஷம், சிம்மம், தனுசு) நின்றால், அவர்களின் குலதெய்வம் மலை மேல் இருக்கும்.
இவ்வாறு குலதெய்வம் பற்றி வீட்டின் மூத்த பிள்ளையின் ஜாதகத்தைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்.
சிலருக்கு பிறப்பிலே குலதெய்வ தோஷம் இருக்கும். இதை பூர்வ புண்ணிய தோஷம் என்பார்கள். அதாவது ஐந்தாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும் லக்கினத்திற்கு தீய கிரகங்கள் இருந்தாலும் அது குலதெய்வ தோசத்தை கொடுக்கும்.மேலும் இது புத்திர தோசத்தையும் கொடுக்கும்.
ஐந்தாமிடம் என்பது நம்முடைய முற்பிறவியை குறிக்கக்கூடிய இடம்!
யார் ஒருவர் இப்பிறவியில் தாய்,தந்தையற்கு உரிய மரியாதை அளிக்காமல் அவர்களை மனம் நோக செய்தாலும், அதே போல் குல தெய்வத்தை வணங்காமல் இருந்தாலும் மறு பிறவியில் அவர்கள் குல தெய்வ தோசத்துடன் பிறப்பார்கள். இதுதான் புத்திர தோசத்தையும் கொடுக்கும்.
அதாவது போன பிறவியில் செய்யும் கர்ம வினைகளே நமக்கு வரக்கூடிய தோசங்கள். இந்த மாதிரி குலதெய்வ தோசம் இருப்பவர்கள் கண்டிப்பாக தனக்குரிய குலதெய்வத்தை கெட்டியாக பிடித்து கொண்டால் அனைத்து தோசங்களும் நிவர்த்தியாகும்.
குலதெய்வத்தை அந்தெந்த பங்காளி வகையறாக்களுக்கு ஏற்றபடி வணங்குவார்கள். அதை அறிந்து கொண்டு அதற்குரிய வழிமுறைகளில் வணங்குவது சிறப்பாகும்.
"சார் எனக்கு ஜாதகமே இல்லை!எங்க வீட்டுல எழுதி வைக்கல அல்லது தொலைந்துவிட்டது"என சிலர் சொல்வார்கள். அவர்கள் எப்படி குலதெய்வ வழிபாடு செய்வது?
இவர்கள் திருச்செந்துர் முருகனை குலதெய்வமாக வணங்கலாம்! அதாவது புத்திரக்காரகன் குரு பகவான். இந்த குரு பகவானின் ஸ்தலம்தான் திருச்செந்தூர்!
எனவே குல தெய்வம் தெரியாதவர் திருச்செந்தூர் முருகனை அன்றைய நாளில் குலதெய்வமாக வணங்க ஆரம்பிக்கலாம்.
அதேபோல் குலதெய்வ வழிபாடு,பெண் திருமணம் செய்து சென்றால் கணவனின் குலதெய்வத்தையே தன் குலதெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.
பங்குனி உத்திரம் நாளில் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை..
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.
பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம்.
குலதெய்வ கோவில்களான காவல் தெய்வங்கள் என அழைக்கப்படும் கோவில்களுக்கு பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின்போதும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்வார்கள்.
இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
இந்த ஆண்டு 2023,ஏப்ரல் / 5 ஆம் நாள் ( 5-4-2023) பங்குனி உத்திர நட்சத்திர நாள் ஆகும். அன்றைய தினம் பௌர்ணமி என்பதால் வழிபட, மிகமிக உகந்த நாளாகவும் அமைகிறது.
மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதுடன், பங்குனி உத்திரம் நாளில் சென்று வழிபடுவது மேலும் நல்ல நற்பயனைப் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது !
பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள். வழக்கமாக உங்கள் முன்னோர்களால் செய்யப்படும் பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வழிபாடு முடிந்ததும் அங்கேயே சமைத்து பந்தி போட்டு பரிமாறி வீடு திரும்புவதும், குலதெய்வத்தை திருப்திப்படுத்தும்.
பங்குனி உத்திரத்தன்று வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டின் பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்துக்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்யலாம்.
குலம் சிறக்கவும், குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை மகிழ்விக்க பங்குனி உத்திர நாளே நல்ல நாள்... ஒருவரது குலத்தை வழி வழியாக பாதுகாக்கும் வலிமையும், சக்தியும் குலதெய்வத்துக்கே உண்டு.
மேலும் இந்த பங்குனி உத்திர தினம் ஒரு அற்புதமான தினம். இந்த தினத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் திருமணம் நடந்தது. குறிப்பாக சபரி சாஸ்தா என சொல்லக்கூடிய ஐயப்பன் அவதரித்தது பங்குனி உத்திர தினம் அன்றுதான். முருகப்பெருமான் திருமணமும் அன்றுதான்.
இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திரத்தன்று குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை பூஜை செய்து இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!
தொடர்புக்கு:- 9442729693