சிறப்புக் கட்டுரைகள்

இதயம் ஒரு கோவில்- மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி

Published On 2023-03-31 15:30 IST   |   Update On 2023-03-31 15:30:00 IST
  • மாரடைப்பு வருவதற்கும் தொடக்கத்திலேயே பல அறிகுறிகளை உணரலாம்.
  • இதயம் ஒரு அமைதியான உழைப்பாளி.

நம் உடல் தான் கோவில். அந்த இதயத்துக்குள் தான் கடவுள் இருக்கிறார். கடவுள் குடி கொண்டு இருக்கும் இதயத்தை மிகவும் பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும்.

திடீரென்று மாரடைப்பு என்று சொன்னார், ஆஸ்பத்திரிக்கு போகும் போதே இறந்து விட்டார் என பலர் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம். கொஞ்சம் முன் கூட்டியே கொண்டு வந்திருக்க கூடாதா என்பார் அவரை பரிசோதிக்கும் டாக்டர். மாரடைப்புக்கான அறிகுறிகள் என்பது சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்கனவே தெரிந்து விடும்.

தீ இல்லாமல் புகை வராது. புகை வந்தாலே அங்கு நெருப்பு இருக்கிறது என்று தானே அர்த்தம்.

உதாரணமாக உலகில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்றை எடுத்துக் கொள்வோம். காய்ச்சல் வரும், இருமல் இருக்கும், மூச்சு விட கஷ்டமாக இருக்கும். இது தான் முதலில் நாம் கண்ட கொரோனா அறிகுறி. அடுத்தக்கட்டமாக எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருக்கும். இப்படி கொரோனா கடுமையாக தாக்கி நுரையீரல் பாதிக்கப்பட்டு தான் லட்சக்கணக்கானோர் மரணத்தை தழுவினர்.

அதேபோல் மாரடைப்பு வருவதற்கும் தொடக்கத்திலேயே பல அறிகுறிகளை உணரலாம். அதனை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒரு மாணவர் பள்ளிக்கு செல்லாமல் டிமிக்கி கொடுக்கிறார் என்றால் அவருக்கு படிப்பில் நாட்டமில்லை என்று அர்த்தம். ஆசிரியர் பள்ளிக்கு வராமல் இருந்தால் அந்த பணியின் மேல் அவருக்கு நாட்டமில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதில் 2 பேரும் பள்ளிக்கு வராமல் இருப்பது நாட்டமில்லாத அறிகுறியை காட்டுகிறது.

இதயமானது ஓய்வின்றி துடித்துக் கொண்டே இருக்கிறது. நிமிடத்துக்கு 70 முதல் 80 முறை துடிக்கிறது. ஒரு எந்திரம் போல் உடலுக்குள் இதயம் ஓடிக் கொண்டே இருக்கிறது. அந்த இதயம் வேலை செய்வது நமக்கு தெரிவதில்லை. பம்ப் மாதிரி சுருங்கி விரிந்து கொண்டே இருக்கிறது. இதயம் ஒரு அமைதியான உழைப்பாளி.

அதே இதயம் 80- ஐ கடந்து 100 முறை துடிக்கும் போது உடலில் படபடப்பு ஏற்படும். ரெயில் போவது போல் டப்... டப்... என்று வேகமாக அடிக்கும். இதேபோன்ற மாற்றம் எப்போது தெரியவருகிறதோ அப்போது இதயம் பழுதாகி விட்டது என்று அர்த்தம். அமைதியாக வேலை பார்க்கும் வரை இதயம் நல்ல இதயம் தான்.

வலி தெரிவதில்லை. இதயம் வேலை செய்வது தெரிவதில்லை, வேகமாக நடக்கிறோம், மாடிப்படி ஏறுகிறோம், எந்த மாற்றமும் இல்லை. அப்படியானால் இதயத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.நேற்று வரை நன்றாகத் தான் இருந்தது, இன்று மார்பில் என்னமோ செய்கிறது. உடம்பே சரியில்லை, சோர்வாக இருக்கிறது. நடக்க கஷ்டமாக இருக்கிறது, மாடிப்படி ஏறினால் மேல் மூச்சு வாங்குகிறது என்றால் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உனக்கு உடம்பு சரியில்லை, டாக்டரிடம் சென்று சிகிச்சை பெறு என்று இதயம் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் பலர் அலட்சியமாக விட்டு விடுகிறார்கள்.

நன்றாக சாப்பிடுகிறோம். சாப்பிட்ட உடன் திடீரென நெஞ்சு வலிக்கிறது. சாப்பிட்டவுடன் வயிற்று வலி வந்தால் அது அஜீரணம். சாப்பிட்டால் நெஞ்சு வலி ஏன் வருகிறது, சாப்பிட்ட பின்னர் ரத்தம் வயிற்றுக்கு போகும். அங்கு தான் செரிமான வேலை இருக்கிறது. குடலுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருந்தால் தான் செரிமானம் நடக்கும். அந்த சமயம் இதயத்துக்கு ரத்தம் வருவதில்லை என்றால் அங்கே வலி வருகிறது. இது ஆகாரத்துக்கு பின் வரும் நெஞ்சு வலி ஆகும். நடந்தால் வலி வரும். நின்று விட்டால் வலி வராது. மாடிப்படி ஏறினால் வலி இருக்கும். நின்று விட்டால் வலி இருக்காது. இது சைலண்ட்டான நெஞ்சு வலி. எந்தவிதமான அறிகுறியுமே இல்லாமல் மாரடைப்பு ஏற்படுவது.

2-வது வாயுத்தொல்லை என்ற மாறு வேடத்தில் வரும். திருமணத்துக்கு போனேன். பிரியாணி ஒரு பிடி பிடித்தேன். அஜீரணம் மாதிரி நெஞ்சு எரிச்சலாக இருக்கிறது. அதற்கு மருந்து வாங்கி சாப்பிட்டேன், இஞ்சி மிட்டாய் சாப்பிட்டேன். இருந்தாலும் உடல் பழைய நிலைக்கு வரவில்லை என்பார்கள். வாயுத்தொல்லையால் நெஞ்சு வலி என்ற ஒன்றே கிடையாது. வாயுத்தொல்லை என்றாலே இதயத்தின் ஓலம் என்று தான் பொருள். இதயம் தனக்கு சரியாக ரத்தம் கிடைக்கவில்லை என்று எண்ணும்போது ஏற்படும் முணுமுணுப்புக்கு பெயர் தான் வாயுத்தொல்லை.

பயங்கரமாக நெஞ்சு வலிக்கிறது என்றால் இதயம் சத்தம் போடுகிறது. என்னை கவனி, எனக்கு ரத்த ஓட்டம் சரியாக வரவில்லை. உடனே ஆஸ்பத்திரிக்கு செல், இல்லை என்றால் நான் நின்று போவேன் என ஓலமிடுகிறது. இதற்கு பெயர் தான் மாரடைப்பு.

பசிக்கிறது என்றால் குழந்தை ஓ வென்று அழுகிறது. பசியில்லாத போது குழந்தை அழுவதில்லை. அது போல தான் அந்த இதயத்துக்கு பசி. ரத்த ஓட்டம் சரியில்லை. இதயத்துக்கு வேண்டியது ரத்த ஓட்டம். அந்த ஓட்டம் சரியாக நடந்தால் தான் ஆக்சிஜன், குளுக்கோஸ் போன்றவை உள்ளே செல்லும்.

சிலருக்கு படுத்திருக்கும் போது வலி வரும். சிலருக்கு உடலுறவின் போது வலி வரும். கோபப்படும் போதும், சத்தம் போடும்போதும் வலி வரும். சத்தம் போடும்போது ஆ வென்று நெஞ்சை பிடித்தார். கீழே விழுந்து விட்டார் என்பார்கள். சத்தம் போடும் போதும், கோபப்படும் போதும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அந்த சமயம் அனைத்து ரத்த குழாய்களும் சுருங்குகிறது. அதனால் ரத்த ஓட்டம் தடைபடுவதால் மாரடைப்பு வருகிறது.

1-வது சைலண்டாக வரும் நெஞ்சு வலி, 2-வது வாயுத்தொல்லை போன்ற மாயை, 3-வது நடந்தால் வரும் நெஞ்சு வலி, 4-வது படுத்திருந்தால் வரும் நெஞ்சுவலி, 5-வது மாரடைப்பு.

நெஞ்சு வலி வந்தால் அது மாரடைப்பாக இருப்பதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. இரவு 10 மணிக்கு ஒருவருக்கு திடீரென மாரடைப்பு வருகிறது. வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல அரை மணி நேரம் ஆகும். ஆம்புலன்சை வரச் சொல்ல வேண்டும், அடுத்து ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும், எப்படியானாலும் 20 நிமிடம் ஆகும்.அதற்குள் மாரடைப்பு தீவிரமாகி விடக்கூடாது.

அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் பேசாமல் படுத்துக் கொள்ள வேண்டும். ஆம்புலன்சுக்கு போன் செய்து அழைக்கலாம். உறவினர்கள் உதவியை நாடலாம். எக்காரணம் கொண்டும் நீங்கள் எழுந்து நடக்க வேண்டாம். மாரடைப்பு வந்த சமயம் நடந்தோம் என்றால் ஆபத்து அதிகம். மாடிப்படியில் இறங்க கூடாது. நாமே மோட்டார் சைக்கிளை ஓட்டி ஆஸ்பத்திரிக்கு சென்று விடலாம் என்றும் முயற்சிக்க வேண்டாம். அது பெரிய ஆபத்தில் போய் முடிந்து விடும்.

அதனால் மாரடைப்புக்கு முதலுதவி என்பது அமைதியாக படுத்துக் கொள்வது தான். அடுத்தது லோடிங் டோஸ் மாத்திரைகள் (உயிர் காக்கும் மருந்து) இருந்தால் சாப்பிடுங்கள். அதில் டிஸ்பிரின், அடார்வாஸ் டாடின், குலோபிடாப் என 3 விதமான மாத்திரை இருக்கும். ஆஸ்பத்திரியில் ஒரு கவரில் போட்டு கொடுக்கிறோம். அதன் விலை 70 ரூபாய் மட்டும் தான்.

சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிக மன அழுத்தம், மன குழப்பம் உள்ளவர்கள், டென்சன் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்புண்டு. அப்படிப்பட்டவர்கள் லோடிங் டோஸ் மாத்திரைகளை எப்போதும் கூடவே வைத்துக் கொள்ளுங்கள். ஆண்கள் தங்கள் சட்டைப்பையிலேயே வைத்திருங்கள். பெண்கள் தங்கள் கைப்பைகளில் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

நெஞ்சுவலி வந்தவுடன் லோடிங் டோஸ் மாத்திரைகளை சாப்பிட்டு விட வேண்டும். மாத்திரைகளாக விழுங்க முடியாதவர்கள் பொடியாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். லோடிங் டோஸ் மாத்திரைகள் ரத்தத்தின் அடர்த்தியை உடனே குறைத்து மாரடைப்பின் தீவிர தன்மையை குறைக்கும். இந்த மாத்திரைகள் சாப்பிடுவதால் 100 சதவீதம் உயிர் பிழைக்க சாத்தியம் உண்டு. மாத்திரை அடுத்த பாதிப்பு ஏற்படாதவாறு 3 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும். அதற்குள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

எப்போதுமே பெரிய அளவில் உடல் பிரச்சினை வரும்போது ஒரு மணி நேரத்துக்குள் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும். தலையில் அடிபட்டாலோ, மாரடைப்பு வந்தாலோ, ஒரு பக்க மூளை வேலை செய்ய வில்லை என்றாலோ, தற்கொலைக்கு முயற்சித்தாலோ அந்த நபரை காப்பாற்ற வேண்டுமானால் ஒரு மணி நேரத்துக்குள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று விட வேண்டும். அந்த ஒரு மணி நேரம் என்பது தங்கமான நேரம். ஒரு மணி நேரத்தை கடந்து சென்றால் சிகிச்சை பலன் கொடுக்காமல் போகும்.

லோடிங் டோஸ் மாத்திரை ஒரு மணி நேர தங்கமான நேரத்தை 3 மணி நேரமாக அதிகரித்துக் கொடுக்கும். இல்லாவிட்டால் தாமதமாக வந்து விட்டீர்களே, வரும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதே என்ற துயர சொல்லைத் தான் கேட்க வேண்டியிருக்கும். இந்த மாத்திரைகளை கையில் வைத்து பயன்படுத்தி ஆயிரக்கணக்கான இதய நோயாளிகள் உயிர் பிழைத்துள்ளனர்.

அதை விடுத்து சோடா குடிப்பது, சூடாக காபி, டீ குடிப்பது, எண்ணை போட்டு நெஞ்சில் தேய்ப்பது போன்றவைகள் எந்த பயனையும் தராது. அதற்கு பதில் பாதிக்கப்பட்ட நோயாளி மூச்சை நன்றாக இழுத்து விடலாம். அப்போது ஆக்சிஜன் நிறைய நம் உடலில் சென்று பலனை கொடுக்க வாய்ப்புண்டு.

ஆஸ்பத்திரியை அடைந்ததும் அங்கும் முதலுதவி சிகிச்சை அளிப்பார்கள். தொடர்ந்து இ.சி.ஜி., ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, ரத்த பரிசோதனை என பல பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொள்வர். தொடர்ந்து இதய பிரச்சினைக்கான காரணம் கண்டறியப்பட்டு அதற்கேற்ற சிகிச்சை அளிக்கப்படும்.

அடுத்து மாரடைப்பு வந்தவரை சுற்றி இருக்கும் உறவினர்கள் அந்த நபரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். மாரடைப்பு வந்தவர் பதட்டத்துடனும், அச்சத்துடனும் காணப்படுவார். சுற்றியிருக்கும் நீங்கள் அவரை மேலும் அச்சம் அடைய வைக்கக் கூடாது. அய்யோ, அம்மா என அழுது சத்தம் போட்டால் பாதிக்கப்பட்டவர் மேலும் அச்சம் அடைந்து நோயின் தாக்கம் அதிகரிக்க நாமே காரணமாகி விடுவோம். எனவே பாதிக்கப்பட்டவரை தைரியமாக இருங்கள், பயப்படாதீர்கள். டாக்டரிடம் சென்று சரி செய்து விடலாம் என நம்பிக்கை தரும் வார்த்தைகளை பேசுங்கள். உங்கள் முகத்தில் தைரியத்தை காட்டுங்கள். அந்த தைரியம் நோயாளியை பிழைக்க செய்யும்.

மாரடைப்பு வந்துட்டே, இனி பைபாஸ் சர்ஜரி தான் என்று கவலைப்பட வேண்டாம். எல்லோருக்கும் பைபாஸ் சர்ஜரி தேவைப்படாது. இப்போது நல்ல மருந்துகள் எல்லாம் வந்து விட்டன. இதயத்தில் சிறிய பிரச்சினை தான் என்றால் மருந்து செலுத்தி 2 நாளில் சரியாகி வீட்டுக்கு திரும்பி விடலாம்.

மாரடைப்பு என்பது இதயத்துக்கு ரத்தம் செல்லும் சிறு குழாயில் ரத்தம் உறைந்து கட்டியாக இருக்கும். அந்த கட்டியை அகற்றி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தால் தான் மீண்டும் இதயம் நல்ல முறையில் இயங்கும். அந்த ரத்த கட்டியை மருந்து கொடுத்து உடைக்கலாம். அந்த முயற்சி பலன் அளிக்காத பட்சத்தில் தான் அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டி இருக்கும்.

4 ஏக்கர் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் 3 ஏக்கருக்கு மட்டும் தண்ணீர் செல்கிறது. ஒரு ஏக்கர் நிலத்துக்கு தண்ணீர் செல்லவில்லை. அப்படி என்றால் அந்த ஒரு ஏக்கர் நிலம் வாடிப்போய் விடும். அதேபோல தான் வாடிப்போன இதயம் தான் மாரடைப்பு. அந்த வாடிப்போன இதயத்தை பழைய படி ரத்த ஓட்டத்தை சீர் செய்து இதயத்தை இயங்கச் செய்வது தான் மருத்துவர்களின் பணி.

மாரடைப்பால் இந்தியாவில் 20 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். 10 லட்சம் பேர் பிழைப்பது இல்லை. 5 லட்சம் பேருக்கு மருந்திலேயே சரி செய்யப்படுகிறது. மீதம் உள்ள 5 லட்சம் பேருக்கு தான் அறுவை சிகிச்சை, பைபாஸ் சர்ஜரி தேவைப்படுகிறது.

எனவே சரியான நேரத்தில் சரியான மருத்துவத்தை செய்தால் உங்களுக்கு மருந்து மூலமாகவே மாரடைப்பு வியாதியை சரி செய்ய முடியும். மாரடைப்பு மீண்டும் வராமலும் தடுக்க முடியும். ஒரு டாக்டரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் கடைசி வரை அவரிடமே சிகிச்சை பெறுங்கள். அவர் மருந்து எடுத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி என பல ஆலோசனைகளை வழங்குவார். அந்த வழிமுறைகளை கடைபிடித்து மாரடைப்பை எதிர்த்து போராடி வெற்றி காணலாம்.

தொடர்புக்கு:- info@kghospital.com, 98422 66630

Tags:    

Similar News