null
பாரதியின் மறைவும் பாவேந்தரின் தொடர்பும் பற்றி கண்ணதாசன் கவிதைகள்
- திரைப்படங்கள் பொதுவாக மகிழ்ச்சி அளிப்பவை.
- பாவேந்தரின் குணநலன்களுக்கு பொருந்தாத துறை என்று கூடச் சொல்லலாம்.
மகாகவி பாரதியைப்போல் இன்னொரு கவிஞரை இப்பூமியில் பார்ப்பது அரிது... பரந்து விரிந்த உலகளாவிய பார்வை பாரதியினுடையது. ஒரு தேசியக் கவிக்குரிய அத்தனை இலக்கணங்களும் ஒருங்கே அமையப் பெற்ற ஒப்பற்றவர் மகாகவி பாரதி...
பழமையில் சிறந்தது அனைத்தையும் போற்றி... புதுமைகள் அனைத்தையும் தன் கவிதையிலே ஏற்றி... வாழ்ந்து மறைந்த புரட்சிக் கவிஞன் பாரதி. தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிதைத்துறையில் மட்டுமல்லாது, பல்வேறு நவீன இலக்கியம் மற்றும் அரசியல், சமூகம், தேசப்பற்று, தெய்வீகம் என அனைத்துத் துறைகளிலும் தனது எழுத்து வன்மையினாலும் உள்ளொளி மின்னும் உணர்ச்சியாலும் இந்நாட்டிற்கே ஒரு பெருவழியைக் காட்டி, ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கிய மகாகவிதான் பாரதி....
அவன் எழுதாத இலக்கியம் இல்லை, தொடாத துறைகள் இல்லை... முன்னூறு வருடங்கள் ஆனாலும் படைக்க முடியாத இலக்கியங்களை 39 வயதிலேயே இந்த உலகிற்கு வாரி வழங்கிய வள்ளல் பாரதி.
அகராதியிலே இருக்கின்ற அலங்காரச் சொற்களுக் கெல்லாம் வாழ்வும், வளமையும் கொடுத்த அந்த மகாகவி இத்தனை இளம் வயதிலேயே மறைந்துவிட்ட கொடுமை நடந்திருக்கவே கூடாது...
தைரியமும், தன்னம்பிக்கையும் நிறைந்து இரும்பு நெஞ்சத்தோடு இவ்வுலகில் நடைபோட்டவன், திருவல்லிக்கேணி யானை தின்றுவிட்ட கரும்பாகிப் போனானே என்பதை எண்ணும்போது... இதயம் சுக்கு நூறாக உடைந்து போகிறது... தனது மனதிற்குள்ளே பாரதிக்கு, ஒரு சிம்மாசனத்தையே கொடுத்திருந்த கண்ணதாசன், 'கவிஞனுக்கு அஞ்சலி' என்ற தலைப்பில் எழுதிய கவிதையைப் பார்ப்போம்...
"ஆன்ற கவிஞர் அனைவோருக்கும் முன் முதலாய்
தோன்றும் கவிதைச் சுடரொளியே நீ வாழ்க!
பேசுந் தமிழர் பெரும் பொருளை கூறிவிட்ட
வாசத் தமிழ்மலரே வாரதியே நீ வாழ்க!
தொட்டதெல்லாம் பொண்ணாகத் துலங்கும் கவிக்கடலே
பட்டமரம் தழைக்க பாட்டெடுத்தோய் நீ வாழ்க!
எங்கே தமிழ் என்று என்தமிழர் தேடுகையில்
இங்கே தமிழென் றெடுத்து வந்தோய் நீ வாழ்க!
கருக்கிருட்டில் பாழ்குழியில் கால்பதித்த செந்தமிழை
உருக்கி மொழி மண்டபத்தில் உலவவிட்டோய் நீ வாழ்க!
நெஞ்செலும்புக் கூடாகி நிலைகுலைந்த மானிடரை
அஞ்சுதலைவிட்டு அழைத்து வந்தோய் நீ வாழ்க!
மூட்டறுந்து கால்முடங்கி மூக்கா லழுதவரைக்
கூட்டிவந்து வேல்கொடுத்த கொற்றவனே நீ வாழ்க!
நாடுமொழி நாடாது நாடுவன கேடாகக்
கூடெடுத்தோர் மேனிக்கு குருதி தந்தோய் நீ வாழ்க!
இமயமலை மேற்தொடங்கி இளங்குமரி எல்லை வரை தவழ்ந்து வரும் சந்திரனே! சாரதியே நீ வாழ்க! என்று வரும் என்றே ஏங்கிநின்ற சுதந்திரத்தை கண்டவன் போல் பாடி வைத்த கற்பனையே நீ வாழ்க! தாயின் மணிக்கொடியை தலைமேல் மிதக்க விட்டுச் சேயாய் அகங்குளிர்ந்த சித்தனே நீ வாழ்க! காலக் கடல் கடந்து கவிதையெனும் தோணியிலே நீளவழி வந்தவனே! நித்திலமே நீ வாழ்க! பாரதத்தை வாழ வைக்க பாட்டெழுதிப் பாட்டெழுதி பூரத்தில் ஏற்றிவிட்ட பொன்மகனே நீ வாழ்க!"
மேற்கண்ட இருபத்தாறு வரிக்கவிதையில், பாரதியின் மொத்த சரித்திரத்தையும் எழுதிவிட்டார் கண்ணதாசன். இத்தனை எளிய தமிழில் பாமரனும் புரிந்து கொள்ளும் அளவுக்கு, எந்தக் கவிஞரால் எழுத முடியும்? என்ற கேள்விதான் என் மனதிற்குள்ளே எழுகிறது... திரைப்படப் பாடல்களில் அவர் கையாண்ட அதே எளிமையை கவிதையிலும் கையாளுவதே கண்ணதாசனின் வெற்றி ரகசியம்... பாரதியின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த கண்ணதாசனின் பார்வை பாவேந்தர் பாரதிதாசன் மீது எப்படிப்படர்ந்திருந்தது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்....
இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் பாரதிக்கு அடுத்தபடி பெரிதும் பேசப்பட்டவர் பாவேந்தர் என்றும் புரட்சி கவிஞர் என்றும் போற்றப்பட்ட பாரதிதாசனே. புதுவை மாநகரில் ஓர் ஆசிரியனாக பணிபுரிந்து கொண்டு தனது இலக்கிய வாழ்வை துவக்கியவர் பாரதிதாசன்.
ஆரம்ப காலத்தில் சுப்ரமணியர் துதியமுது என்று தெய்வீக பாடலையும் கதர் ராட்டினப் பாட்டு என்ற தேசியத்தையும் சார்ந்த பாடல்களை தான் முதலிலே எழுதி வந்தார் பாரதிதாசன். நாளாக நாளாக சமூக மாறுதலை உருவாக்கப் போராடும் புரட்சி கவிஞராக மாறி, பகுத்தறிவுச் சிந்தனையில் ஈர்க்கப்பட்டு, சமூகநீதி, சமூக சீர்திருத்தம், பெண்ணுரிமை, கடவுள் மறுப்பு என்று அவரது பயணம் புதிய திசை நோக்கிச் சென்றது.
சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மகாகவி பாரதியார் ஆங்கிலேயர் கைகளில் அகப்படாமல் புதுவைக்கு வந்து ஒரு பத்தாண்டு காலம் தங்கி இருந்தார். அப்போதுதான் பாரதியாரோடு பாரதிதாசனுக்கு ஒரு அறிமுகம் ஏற்பட்டு... போகப் போக பாரதியை தனது குருவாகவே ஏற்றுக்கொண்டு தனது கனக சுப்புரத்தினம் என்ற பெயரை "பாரதிதாசன்" என்று மாற்றிக் கொள்ளும் அளவுக்கு குருபக்தி கொண்டிருந்தார் பாரதிதாசன்.
பாரதியின் மறைவுக்குப் பிறகு தந்தை பெரியாருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடைய பகுத்தறிவு கொள்கையில் இரண்டறக் கலந்து விட்டார் பாரதிதாசன். அப்போதுதான் கவிதைகளையும் கதை பாடல்களையும் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் நாவல்களையும் நாடகங்களையும் பல்வேறு ஏடுகளில் எழுத ஆரம்பித்தார். அதனுடைய விளைவு திரைப்படத்துறையில் கால் பதிக்கும் வாய்ப்பினை பாரதிதாசனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.
திரைப்படங்கள் பொதுவாக மகிழ்ச்சி அளிப்பவை. அதிர்ஷ்டவசமாக மனித சமுதாயத்திற்கு கிடைத்த அற்புத சாதனம். அதனை நல்வழியில் உபயோகித்தால் சமூகத்தில் பொறுப்புணர்ச்சியையும் விழிப்புணர்வையும் எளிதில் ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்து தான் திரைத்துறையில் பாரதிதாசன் கால்பதித்து களம் இறங்கி இருப்பார் என எண்ணுகிறேன்.
நாம் சொல்ல வேண்டிய செய்திகளை கருத்துக்களை ஏடுகளில் எழுதினாலும் விரைந்து சென்று மக்களிடம் சேர்த்து விடுகிற சக்தியும் வேகமும் சினிமாவில் தான் இருக்கிறது என்று பாவேந்தர் நினைத்திருக்கக்கூடும். அதனுடைய வெளிப்பாடு தான் 1950 லேயே தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கி விட்டார் பாரதிதாசன்.
கவி காளமேகம் என்ற படத்திற்கு 1940-ம் ஆண்டிலேயே கதை, வசனம், பாடல்கள் எழுதிய பெருமை பாவேந்தருக்குண்டு.
அதனைத் தொடர்ந்து பாரதியார் (1944) சுபத்ரா (1946) ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (1947) சுலோச்சனா (1947) மற்றும் பொன்முடி (1980) குமரகுருபரர் (1950) வளையாபதி (1950) போன்ற படங்களுக்கு எழுதி திரையுலகில் தனக்கென ஒரு இடத்தினை தக்க வைத்துக் கொண்டார்.
அண்ணாவின் கதை வசனத்தில் 1952-ல் உருவான ஓர் இரவு படத்திற்கு "துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா" என்ற பாட்டினை சிறப்பாக எழுதி முத்திரை பதித்து விட்டார் பாவேந்தர். பாட்டு சிறப்பாக வந்த மகிழ்ச்சியில் ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியார் அந்தப் பாட்டுக்கு ஆயிரம் ரூபாய் பணத்தினை மிகுந்த மகிழ்ச்சியோடு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த காலத்தில் ஆயிரம் ரூபாய் என்பது மிக பெரிய தொகை. பாலாமணி அல்லது பக்காத்திருடன் படத்தின் மூலம் புரட்சிக்கவிஞர் திரைப்படத்துறையில் கால் பதித்த ஆண்டு 1948 ஆகும். அதற்கு பின்னால் தான் அறிஞர் அண்ணா 1948-ம் ஆண்டு நல்ல தம்பி படத்திற்கும் 1947-ம் ஆண்டு ராஜகுமாரி என்ற படத்திற்கு கலைஞர் மு. கருணாநிதியும் கதை, வசனம் எழுதினார்கள் என்பது வரலாறு. இவர்களுக்கு பின்னாலே தான் கவிஞர் கண்ணதாசன் திரைப்படத்துறையில் கால் பதித்துள்ளார். அதாவது ஜூபிடர் பிக்சர் தயாரித்த கன்னியின் காதலி என்ற திரைப்படமே (1948) கண்ணதாசன் எழுதிய முதல் திரைப்படம் ஆகும்.
இந்த காலகட்டங்களில் சேலம் மாடர்ன் தியேட்டர்சுக்கு படவேலைகள் சம்பந்தமாக பாரதிதாசன் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்த போது கண்ணதாசனும் அங்கு தான் பணியாற்றி கொண்டிருந்தார். எனவே இருவருடைய சந்திப்பும் அங்கே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பாரதிதாசன் என்ற பெயர் மிகவும் பிரபலமாக இருந்ததால் அவரைப் பார்த்தாலே எல்லோருமே மரியாதை செலுத்துகிற வகையில் கம்பீரமாக இருப்பார்... அவரிடம் நெருங்கி பேசுவதற்கே எல்லோரும் அஞ்சுவர் என்ற செய்திகள் எல்லாம் உண்டு.
இருந்தாலும் காலப்போக்கில் கண்ணதாசன் மெல்ல மெல்ல வளர்ந்து வர அவருடைய பாடல்கள் எல்லோரது பாடல்களையும் விட மிகவும் பிரபலமாகி பேசப்படும் அளவுக்கு இருக்கும்போது பாரதிதாசன் - கண்ணதாசன் சந்திப்புகள் அடிக்கடி நிகழ்ந்துள்ளன. கண்ணதாசனின் தென்றல் அலுவலகத்திற்கு பாரதிதாசன் வருகை புரிந்து வாழ்த்தியுள்ள செய்திகளை கண்ணதாசனே பதிவு செய்துள்ளார். கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன் தயாரித்த அம்பிகாபதி படத்திற்கு 1956-ல் கதை, வசனம் எழுதுவதற்கு பாவேந்தரை வரவழைத்தது கண்ணதாசன் தான். அந்த படத்தின் இயக்குனர் பா.நீலகண்டனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாவேந்தர் கதை, வசனம் முழுமையாக எழுத முடியாது போயிற்று.
திரைப்படத்துறை என்பது வளைந்து கொடுத்து விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொண்டு பயணிக்கிற ஒரு வித்தியாசமான துறை. பாவேந்தரின் குணநலன்களுக்கு பொருந்தாத துறை என்று கூடச் சொல்லலாம். ஆனால் வருமானம் பெருக்கெடுத்து ஓடுகிற துறை. அங்கே பணத்திற்கு எவ்விதப் பஞ்சமும் இல்லை.
தன்மானம், சுய மரியாதைக்குப் பேர் போன பாவேந்தர் பணத்திற்காக எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டார். தனது கொள்கைகளை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டார். அதனால் திரைப்படத் துறையில் இருந்து பின்னாட்களில் கொஞ்சம் விலகியே இருந்தார். ஆனால் அவருடய படைப்புக்களான குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, பிசிராந்தையார் நாடகம் மற்றும் மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சி காப்பியம் போன்ற நூல்களையும் குயில் மற்றும் முல்லை இதழ்களையும் தொடர்ந்து நடத்தி வந்தார். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.
தமிழ்க் கவிஞர்களும், புலவர்களும், பேராசிரியர்களும் பாவேந்தரைப் பெரிதும் மதித்துப் போற்றினர். இப்போது பொன்னடியார் என்றழைக்கப்படும் கவிஞர் பொன்னடியான் அவர்கள் பாவேந்தரின் நிழல் போல இருந்து அவரோடு முழுக்காலமும் பயணித்தவர் இப்போதும் பாவேந்தர் புகழ் பரப்பி முல்லைச்சரம் இதழை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
பாவேந்தரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டு விளங்கியவர் பிரபல கவிஞர் சுரதா அவர்கள். சுப்புரத்தின தாசன் என்ற பாரதிதாசனின் இயற்பெயரை சுருக்கி பாவேந்தரின் நினைவாக "சுரதா" என மாற்றி வைத்துக் கொண்டார். பின்னாளில் இவர் உவமைக்கவிஞர் என அழைக்கப்பட்டார்.
பாரதியாருக்கு எப்படி ஒரு பரம்பரை தோன்றி வளர்ந்ததோ அதே போன்று பாவேந்தருக்கும் ஒரு பரம்பரை தோன்றி அவர் புகழைப் பரப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் நமது கவியரசர் கண்ணதாசனுக்கும் பரம்பரை உண்டு. என் போன்றவர்கள் கண்ணதாசன் வழி வந்தவர்களே. காலத்தால் நிலைத்த கவி என்னும் தலைப்பில் பாவேந்தர் பற்றி...
"தேனிலே நனைத்த சொற்கள்
திகைப்புறும் எழுத்துக் கோவை
வானிலா அணைய மாட்சி
வளர்க்குமோர் உவமைக் காட்சி
ஊனிலே உயிரிலே போய்
உவப்புறச் செய்யும் வண்ணம்
ஞானமே கவிதையாக
நல்கினான் புரட்சி வேந்தன்"
எனப்பாடுகிறார் கண்ணதாசன். "தமிழுக்கு அமுதென்று பேர்... தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்று தமிழை உணர்ச்சிகரமாகவும், தமிழின் மேன்மையை உயர்த்திப் பிடித்த பாவேந்தரின் சொல்லாட்சிப் பெருமையினைத்தான் கண்ணதாசன்
"தேனிலே நனைத்த சொற்கள்
திகைப்புறும் எழுத்துக் கோவை" என்றெழுதிப் பெருமைப்படுகிறார்.
"விதவையின் துயரம் பற்றி
வெண்ணிலா அழகைப் பற்றி
மதுரமாம் தமிழைப் பற்றி
மங்கையர் உறவைப் பற்றி
முதியவர் காதல் பற்றி
மோகனக் குடும்பம் பற்றி
எதையவன் எழுதா(து) ஒய்ந்தான்
எடுத்ததைத் தொடுத்தான் நன்றாய்" என்று
பாவேந்தரின் ஒவ்வொரு வரிக்குள்ளும் ஓராயிரம் பொருள் வைத்து எழுதுகிறார் கண்ணதாசன். கோரிக்கை அற்று கிடக்குதண்ணே இங்கே வேரில் பழுத்த பலா" என்றும் விதவைத்துயரம் பற்றி எழுதிய கவிதையும், "நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்தே - நிலவென்று சொல்லுகிறாய் ஒளி முகத்தை" என்னும் ஏற்கனவே பாவேந்தரின் வைர வரிகளைக் குறிப்பிட்டே மேற்கண்டவாறு எழுதுகிறார் கண்ணதாசன்.
"காலத்தால் உயர்ந்தே நிற்கும்
கவிஞர்கள் சிலர்தான் உண்டு
ஞாலத்தை ஈர்த்த வேந்தன்
நல்லறி வாளன்; மேனிக்
கோலத்தின் மறவர் சிங்கம்
குணத்திலே குழந்தைத் தங்கம்
ஆலெனப் படர்ந்து நின்றான்
அரசென வணங்க வைத்தான்" என்றும்
"பாரதிதாசன் என்னும்
பாவலன் பெயரைக் கேட்டால்
மாரதி, நடனம் செய்வாள்...
மன்மதன் யாழை மீட்ட
நேரத்தைப் புரிந்து கொண்டே
நிகரிலா விழா வெடுக்கும்
ஓர் தமிழ் அரசை எந்த
உள்ளமும் வணங்குமாக.. என்று
ஞாலமே போற்றுகிற கவிஞராக பாவேந்தர் திகழ்ந்தார் என்பதையும் கோலத்திலே சிங்கமாகவும், குணத்திலே தங்கமாகவும் விளங்கினார் என்பதையும் அவர் தொடாத துறைகளே இல்லை எனபதையும் அதனால் கவிதை உலகில் ஆலெனப் படர்ந்து, இலை விரித்து, கிளைவிரித்து விழுதுவிட்ட புரட்சிக் கவிஞராக புவியிலே வலம் வந்தார் பாவேந்தர் பாரதிதாசன் என்றும் புகழாரம் சூடி மகிழ்கிறார் கண்ணதாசன்.
அடுத்த வாரம் சந்திப்போம்.