சிறப்புக் கட்டுரைகள்

மரணத்தை வென்ற மகாகவி பாரதி பற்றி கண்ணதாசன் கவிதைகள்

Published On 2023-02-11 14:15 IST   |   Update On 2023-02-11 14:15:00 IST
  • கண்ணதாசன். இப்படிப்பட்ட ஞானப் புலவர்கள் இந்த பூமியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறப்பார்கள்.
  • இந்திய தேசத்து தேசிய கவி என்ற பட்டம் பாரதிக்கு மிகமிக பொருத்தமான பட்டம்.

வான்வெளியில் பாரதியை சந்தித்து உரையாடியதை தனது கற்பனைக்கேற்ப கண்ணதாசன் வடிவமைத்து வழங்கிய கவிதைகளை சென்ற தொடரில் படித்தோம். இப்போது அதே பாரதியை... அதாவது நிஜ உலக பாரதியை நமது கண் முன்னே வேறு கோணத்தில் கண்ணதாசன் படம்பிடித்து காட்டுவதை பார்ப்போம்..

இந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்ட காலம் என்பது ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி கோலோச்சிய கொடுமைகள் நிறைந்த காலமாகும். உலக மகா சமுத்திரத்தில் இந்திய கப்பல் பல சிக்கல்களோடு சுதந்திரத்தை நோக்கி பயணித்த போது அதை தாங்கிப் பிடித்த குறிப்பிடத்தக்க தலைவர்களில் பாரதியும் ஒருவன் என்பதை நயம்பட எடுத்துரைக்கிறார் கண்ணதாசன்...

"காற்றும் புயலும் கடுகிய இடியும்

தூற்றலும் உயரத்துள்ளும் அலையும்

கொந்தளித் திருந்த கொடிய காலத்தே

இந்திய கப்பலை இயக்கினர் சில்லோர்...

அந்தக் கப்பலில் ஆணிகள் பழுதாய்

யந்திரம் பழுதாய் யாவையும் தவறாய்

இருந்த காலத்தே இயக்கத் தொடங்கினர்..!

அப்படி இயக்கிய அற்புதக் கைகளை தட்டிக் கொடுத்தும் தனி வலு சேர்த்தும் முட்டுக்கொடுத்தும் முடுக்குறச் செய்த பாரத கவிஞன் பாரதி ஒருவனே...

தமிழ்நாட வனால் தலை நிமிர்ந் திருந்தது

வடநாட வனால் வாழ்வை அறிந்தது

கவிதை சுவையைக கற்றிலா மக்கள்

ஆங்கிலச் சுகத்தில் ஆழ்ந்த காலத்தே

தன்னந்தனியே தமிழிற் பாடிய வண்ணக் கவிஞன் மரணமில் பாரதி"

மகாகவிகள் அத்தி பூத்தது போல மண்ணில் அவதரிக்கிறார்கள் அப்படி அபூர்வமாய் தோன்றிய மகாகவி பாரதியால் தமிழ்நாடே தலை நிமிர்ந்திருந்தது.

அண்மையில் தான் காசியிலே பாரதி பெயரிலே தமிழ் சங்க விழாவினை ஒன்றிய அரசு நடத்தியதையெலாம் நாம் தொலைக்காட்சியிலே பார்த்து மகிழ்ந்தோம். இதைத்தான் நமது கவியரசர் கண்ணதாசன் ஒரு தொலைநோக்கு பார்வையில் "வடநாட வனால் வாழ்வை அறிந்தது" என்று அப்பொழுதே ஏதோ ஒரு கணிப்பில் பாரதியைப் பற்றி எழுதியிருக்கிறார் .

அது மட்டுமல்ல நமது மக்களுக்கு ஆங்கிலம் என்றாலே ஓர் இனம் புரியாத மயக்கம்.. ஆங்கிலம் பேசினால் அதை மிகப்பெரிய அங்கீகாரம் என்றும் அடையாளம் என்றும் நினைப்பார்கள். அப்படிப்பட்ட காலத்திலேயே கூட ஆங்கிலத்திலே புலமை பெற்றிருந்த பாரதி தமிழை தான் உயர்த்தி பிடித்தான். "தமிழ் படித்தோர் சாவதில்லை"என்ற பொன்மொழியை நினைவில் கொள்ளுமாறு "வண்ணக் கவிஞன் மரணமில் பாரதி" என்கிறார் கண்ணதாசன்.

பாட்டைக் கேட்டு பரவசப்பட்டு

கை தட்டுவோரைக் காணா நாளில்

தோன்றிய உணர்ச்சியை சுடராய் வடித்து

பிற்காலத்துப் பிள்ளைக்கு வைத்தான்

கும்பிடு வாரின்றி கோயில் கட்டினான்..

கும்பிட இந்நாள் கூட்டம் திரண்டது...

ஒளிஇலாக் குகையில் ஓவியம் தீட்டினான்...

ஓவியமே இன்று ஒளி விளக்கானது ...

பாரதி இந்த நாட்டின் விடுதலைக்காக, உணர்ச்சிமிக்க கவிதைகள் வடித்து வழங்கியதையும்...தேடுவோர் இல்லாமலே தெய்வத்திற்கு கோவில் கட்டிய பெருமையையும் இப்போது அந்த கோவிலின் பெருமை உணரப்படுகிறது என்பதையும் இலை மறை காயாக எடுத்து இயம்புகிறார் கண்ணதாசன்...

சந்திர மண்டலத்தை பற்றி எவரும் சிந்திக்காத நாளில் சந்திர மண்டல இயல் கண்டு தெளிவோம் என்று தொலைநோக்கு பார்வையோடு பாடியவன் தான் பாரதி ... அவன் பாடிய எழுபது ஆண்டுகள் கழித்துத் தான்... சந்திர மண்டலத்தினை பற்றிய சிந்தனையே நமது விஞ்ஞானிகளுக்கு வந்தது என்கிறார் கண்ணதாசன் ..

"சந்திர மண்டலம் சந்திப்போம் என

மந்திரக் கவிஞன் மனச் சொல் உதிர்த்தான்

எழுபதாண்டுகள் எட்டிய பின்பு தான்

அந்த விஞ்ஞானம் அறிந்தது உலகம் "என்பதே கவிதை வரிகள்.

கங்கையும் காவிரியும் இணைக்கப்பட வேண்டும் என்பது பாரதியின் கனவு .. அது மட்டுமல்ல .. காவிரியில் விளையும் வெற்றிலையை கொடுத்து கங்கையில் விளையும் கோதுமையை வாங்கி தேச ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவோம் என்பதும் பாரதியின் கனவு தான் ..

கங்கை நதிப்புரத்துக் கோதுமை பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

என்ற வைர வரிகளை மனதிலே வைத்து

"வடக்கு கங்கையை மத்திய இந்திய

மண்ணுக்கு கிழுத்து வருவோம் என்றான்

இன்று தானே நாம் இப்பெரு நாட்டில்

கங்கை காவிரி கலப்பை பேசினோம்

புல்லும் விளையாப் பொட்டை நிலத்தில்

தண்ணீரில்லாத் தனிப்பெரும் காட்டில்

நின்றபடியே நெல்முளைத்த தென

பாடிப் பாடிப் பரவசப்பட்டான் " எனப்

பாடுகிறார் பாரதியைப் பற்றி கண்ணதாசன் சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே இதோ கிடைத்துவிட்டது ஆனந்த சுதந்திரம் என்று பாரதி பாடியதை கோடிட்டு காட்டுகிற வகையில்

சுதந்திரம் இந்த தூய பூமிக்கு

வராதென்றே பலர் வாழ்ந்த காலத்தில்

அடைந்து விட்டோமென ஆர்ப்பரித்தான்- அவன்

கல்லில் அடியில் கனிந்ததோர் கனிமரம்

வாளைத் தொடும்படி வளர்ந்தது என்று வழக்கமான தனது வைர வரிகளால் பாரதியை வாழ்த்துகிறார். கண்ணதாசன் .

இன்னும் ஒரு படி மேலே போய்...

ஞானப் புலவன் நல்லாசிரியன்

ஈகை சாதிகள் இடுப்பை ஒடித்தவன்

கானப் பெருங்குயில் கற்பனை சிகரம்

ஆயிரம் ஆண்டில் அதிசயமாக

ஒருமுறை பிறக்கும் உயர்ந்த பிறப்பு

சொல்லச் சொல்ல சுவைமிகும் பெயரை

எண்ண எண்ண இனித்திடும் பெயரை

பிறந்தநாள் கண்டு நாம் பேசி மகிழ்கிறோம்

இறந்தநாள் கண்டு நாம் எண்ணிப் பார்க்கிறோம்

காலத் தலைவன் கல்வெட்டாயினான்

கன்னித் தமிழ் அவன் காவலில் வாழ்ந்தது

அன்புத் தமிழே! அன்னை பாரதமே

இன்பக் கவிஞனை எண்ணுவாய் தினமே

என்று பாரதியின் பெருமையை உயர்த்தி பிடிக்கிறார் கண்ணதாசன். பிராமண வகுப்பிலே பிறந்திருந்தாலும் அந்த சனாதன சாஸ்திரங்களில் இருந்து விட்டு விடுதலையாகி சாதிகளின் இடுப்பை ஒடித்தவன் பாரதி என்று பாடுகிறார் கண்ணதாசன். இப்படிப்பட்ட ஞானப் புலவர்கள் இந்த பூமியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறப்பார்கள்.

கன்னித் தமிழ் மொழிக்கே காவலாய் வாழ்ந்தவன் பாரதி. அவனுடைய கவிதைகள் அனைத்துமே காலத்தால் அழியாத கல்வெட்டுக்கள். பிறந்தநாள் இறந்த நாளில் மட்டுமே அவனை எண்ணாமல் "அன்புத் தமிழே, அன்னை பாரதமே" இந்த இனிய கவிஞனை என்றைக்கும் நிதம் நிதம் எண்ணித் துதிப்பாய் என்று எழுதி பாரதிக்கு மகுடம் சூட்டுகிறார் கண்ணதாசன்.

பாரதி உயிரோடு இருக்கும் பொழுது அவன் கொண்டாடப்படவில்லை என்ற ஆதங்கத்தை ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுத்துகிறார் கண்ணதாசன்.

தேசப்பற்றிலும் சரி, தெய்வீக பற்றிலும் சரி, தமிழ்ப்பற்றிலும் சரி, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களிலும் சரி, பெண் உரிமையிலும் சரி, விடுதலையிலும் சரி சாதி மதங்களைச் சாடியதிலும் சரி பாரதிக்கு ஈடாக இன்னொருவரை காட்டுவது இயலாது என்பதுதான் உண்மை. அதைத்தான் கண்ணதாசன் நமக்கு உரைக்கும் படி உணர்த்திக் காட்டுகிறார்.

பாரதி எதற்குமே ஆசைப்பட்டதில்லை. பசியையும் வறுமையையும் பொறுத்துக் கொண்டான். ஆனால் அன்னை பரா சக்தியிடம் அவன் விரும்பிக் கேட்டது ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஒரு "காணி நிலம் வேண்டும்" என விரும்பி கேட்டு வைத்தான். 10, 12 தென்னை மரங்களுக்கு இடையே ஒரு குடிசை போட்டு பத்தினி பெண்ணோடு வசித்திருக்க வேண்டும்... வானத்திலே முழு நிலவு வலம் வர வேண்டும்... அங்கே கத்தும் குயில் ஓசை சற்றே காதில் விழ வேண்டும்... அந்தச் சூழ்நிலையில் ஒரு அமைதியை காண வேண்டும் என்பதுதான் பாரதியின் விண்ணப்பம். இந்த வித்தியாசமான விண்ணப்பத்தை கவிதையில் தருகிறார் கண்ணதாசன்.

ஆசைதனக் கொரு காணி நிலம் என்று

அற்புத பாட்டிசைத்தான் - அன்று

ஆறறிவற்றவர் தம்மிடையே தமிழ்

ஆனந்த கூத்திசைத்தான்

மீசை துடித்திட மேனி கொதித்திட

வீரக்கனல் வடித்தான் - கவி

வேந்தன் உலகத்தில் மகாகவி வாணரை

வெல்லும் தமிழ் கொடுத்தான்...

என்பதே அக்கவிதை.

பெற்றோர்களின் வாழ்த்து பிள்ளைகளுக்கு எப்போதும் எங்கிருந்தாலும் இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த வாழ்த்து எவரும் தர முடியாத சக்தி உடையதாகவே இருக்கும். அதனால் நமது மகாகவி பாரதி எழுதிய கருத்தினை உள்வாங்கிக் கொண்டு கவியரசர் கண்ணதாசன்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே

ஒரு சக்தி பிறக்குதென்றான் - அவன்

சாப்பிடும் சோற்றுக்கு வைக்கவில்லை கவிச்

சந்ததி வைத்து சென்றான்...

சிந்தை யணுவிலும் ரத்தத்திலும் இந்த

தேசத்தில் பாசம் வைத்தான் - அட

தீயொரு பக்கமும் தேனொரு பக்கமும்

தீட்டிக் கொடுத்து விட்டான்

என்றெழுதி... நாங்கள் வெறும் சோற்றுக்காக பிறந்தவர்கள் அல்ல. கவிதை படைக்க வல்லவர் என்றும் தேசபக்தியையே சிந்தையில் கொண்டவர் என்றும் குறிப்பிடுகிறார் கண்ணதாசன்.

இந்திய தேசத்து "தேசிய கவி" என்ற பட்டம் பாரதிக்கு மிகமிக பொருத்தமான பட்டம். தமிழ்நாட்டில் பிறந்தவன் என்றாலும் பாரதியின் பார்வை அனைத்தும் உலகளாவிய பார்வைதான். அவனுடைய கவிதைகள் அனைத்துமே காலத்தை வென்று நிற்கும் கல்வெட்டுக் கவிதைகள் தான். இன்று நடப்பதை அன்றே உரைத்த தொலைநோக்கு பார்வைக்கு சொந்தக்காரன் என்பதை

சந்திர சூரியர் உள்ள வரையிலும்

சாவினை வென்று விட்டான் - ஒரு

சரித்திரப் பாட்டினில் பாரத தேசத்தின்

தாய்மையை வளர்த்து விட்டான்

இந்திர தேவரும் காலில் விழும்படி

என்னென்ன பாடிவிட்டான் - அவன்

இன்று நடப்பதை அன்று சொன்னான் - புவி

ஏற்ற முரைத்து விட்டான்...

என்ற கவிதையில் அழகுபட உரைக்கிறார் கண்ணதாசன். அது மட்டுமின்றி ஏற்கனவே இன்னொரு கவிதையில் சொன்னது போல்... கங்கை நீர் வீணாக கடலிலே சென்று கலக்காமல் கேரள தேசம் வரைக்கும் அந்த நீர் பயன்பட வேண்டும். அதற்கு மாறாக சேரத்து தந்தத்தை கூட தருவதற்கு தயாராக உள்ளோம் என்ற பாரதியின் வரிகளை உள்வாங்கிக் கொண்டு...

வங்கத்து நீரினை மையத்து நாட்டுக்கு

வாரிக் கொணர் என்றான் - அந்த

வானம் அளந்து விஞ்ஞானம் படைத்திட

வாரும் தமிழரென்றான்...

சிங்க மராட்டியர் கற்பனை கீடொரு

சேரத்து தந்தமென்றான்... இந்த

தேச பெருமைக்கு ஆரம்பம் செய்தவன்

பாரதித் தேவன் என்பான்

என்று கவிதையை நிறைவு செய்கிறார் கண்ணதாசன். ஒரு மனிதனுக்கு தேசபக்தி என்பது ரத்தத்தில் ஊறிப் போய் இருக்க வேண்டும். அப்படித்தான் ஒவ்வொரு கணமும் பாரதி வாழ்ந்து காட்டினான். இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு கவிஞனும் தேசப்பற்றில் பாரதியை பின்பற்ற வேண்டும் என்பது கண்ணதாசனின் ஆசை. அதைத்தான் தனது கவிதையில் அர்த்தமுள்ள வைர வரிகளாகச் செதுக்கியிருக்கிறார் கண்ணதாசன்.

அடுத்த வாரம் சந்திப்போம்.

Tags:    

Similar News