ஆரோக்கியம் அளிக்கும் அஞ்சறைப்பெட்டி- விருந்திலே மருந்தாகும் நறுமணமூட்டிகள்
- தமிழரின் வரலாற்றை, வாழ்வியலை புரட்டிப் பார்த்தால் தமிழனின் ஒவ்வொருவர் வீடுகளிலும் மரபு சார்ந்த மருத்துவ முறைகள் இருந்தன.
- நமது அன்றாட வாழ்விலும் சரி, உணவிலும் சரி நறுமணமூட்டிகளின் பங்கு அளப்பரியது.
'கமகம' என்று மணக்காத உணவால் சண்டை, சச்சரவுகள் வீட்டில் மட்டுமா என்ன? இல்லவே இல்லை. அந்த 'கமகம' மணத்தை தரும் கறிமசால் பொருள்களுக்காக நாட்டிலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சண்டைகள் நடந்தேறியுள்ளது. எத்தனை எத்தனை போர்கள், போராட்டங்கள், இழப்புகள் இந்த மணம் தரும் அஞ்சறைப்பெட்டி மூலிகைகளுக்காக நடந்துள்ளது என்பதை வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
அதுவும் கிட்டத்தட்ட இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மணமூட்டிகளின் மரபும், மூலதனமும் இந்தியாவும், தென் கிழக்கு ஆசிய நாடுகளும் தான் என்பது ஆச்சர்யம். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான் உலக நாடுகள் மணத்திற்காக நறுமணமூட்டிகளை தேடி அலைந்தன. ஆனால் நோய் தீர்க்கும் மருந்தாக அவற்றை சித்த மருத்துவம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தியுள்ளது என்பது மிக மிக சிறப்பு.
கொஞ்சம் தமிழரின் வரலாற்றை, வாழ்வியலை புரட்டிப் பார்த்தால் தமிழனின் ஒவ்வொருவர் வீடுகளிலும் மரபு சார்ந்த மருத்துவ முறைகள் இருந்தன. இன்றளவும் கிராமப்புற மக்கள் முதல் மாநகர விஞ்ஞானிகள் வரை அவரவர் தமது உடல் சார்ந்த உபாதைகளை போக்கிக் கொள்ள தத்தம் வீட்டு சமையலறையைத் தான் முதலில் தேடுகின்றனர்.
முக்கியமாக சித்த மருத்துவர்களை அணுகும் ஒவ்வொருவரும் கேட்கும் முதல் வினா, 'இதற்கு ஏதாவது ஹோம் ரெமீடி இருக்கிறதா?' என்பது தான். உண்மையில் அஞ்சறைப்பெட்டி கடைசரக்குகள் மரபு என்பதைக் கடந்து பல்வேறு மருத்துவ குணமுள்ள வேதிப்பொருட்களின் கலவையாக உள்ளது. இவற்றை தடுப்பு மருந்தாகவும், முதலுதவிப் பெட்டியாகவும் உபயோகப்படுத்தி நலம் பேணும் பழக்கம் நம்மிடையே இருந்து வந்துள்ளது.
கடைசரக்குகளை கொண்டு உணவில் மாற்றும் சிறு சிறு பக்குவங்கள் மிகப்பெரிய நோய்நிலைகளில் இருந்து நம்மைக் காக்கும் மருந்தகங்கள் என்று சொன்னால் மிகையாகாது. இத்தகைய மரபு சார்ந்த இயற்கையோடு இயைந்த வாழ்வியல் முறைகளை மறந்து, மேற்கத்திய கலாச்சாரத்தின் ஈர்ப்பால் நவீன நாகரிகம் என்ற பெயரிட்டு பழகி, நோய்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் அடிமையாகி வாழ்நாள் குறைந்தது தான் மிச்சம்.
நமது அன்றாட வாழ்விலும் சரி, உணவிலும் சரி நறுமணமூட்டிகளின் பங்கு அளப்பரியது. மணமூட்டிகள் வெறும் மணத்திற்காக மட்டுமின்றி மருத்துவ குணத்திற்காகவும் நமது முன்னோர்கள் காலம் முதல் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம் வீட்டு சமையலறையானது அஞ்சறைப்பெட்டி மணமூட்டிகள் இல்லாமல் முழுமை பெறாது. அஞ்சறைப்பெட்டி நமது ஆரோக்கியத்தின் அடிப்படை. நமது நலத்திற்க்கான நன்கொடை. நமது பாரம்பரியத்தோடு ஒன்று சேர்ந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஒரு காலகட்டத்தில் தங்கத்தை விட அதிக விலைமதிப்புள்ள பொருளாக நறுமணமூட்டிகள் திகழ்ந்தன. முக்கியமாக 'கருப்பு தங்கம்' என்று கருதப்பட்ட மிளகு பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. உலகமே வணிக நோக்கில் அஞ்சறைப்பெட்டி விதைகளையும், வேர்களையும் உற்று நோக்கியது.
ஆனால் நமது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவம் அஞ்சறைப்பெட்டியின் மருத்துவ குணங்களையும், பயன்களையும் பட்டியலிட்டு கூறுகின்றது. சித்த மருத்துவம் கடைசரக்குகளை உலக மக்களின் மருத்துவ நலனுக்காக பயன்படுத்த வழிகாட்டியுள்ளது.
வாஸ்கோடகாமா எனும் போர்த்துக்கீசியர் வருகைக்கு பின்னர் முக்கியத்துவம் பெற்ற மிளகும், ஏலக்காயும் இன்னும் பல மணமூட்டிகளும் அயல்நாடுகளுக்கு பயணிக்க துவங்கிவிட்டது. அதுவரை வெளிநாட்டு உணவுகளுக்கு மணம் என்பதே தெரியாமல் இருந்தது. மணம் மட்டுமல்ல, மருத்துவ குணமும் இல்லாமல் இருந்தது. எகிப்து நாட்டில் மம்மிகளை பாதுகாக்கத் தான் இந்த மூலிகை சரக்குகள் அடங்கிய வாசனை திரவியங்களை பயன்படுத்தியதாகவும் வரலாறு தெரிவிக்கின்றது. ஆனால் அதற்கு முன்னரே 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற கோட்பாட்டை பின்பற்றி அஞ்சறைப்பெட்டியை பயன்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர் நம் முன்னோர்கள்.
சித்த மருத்துவ தத்துவத்தின்படி நோய்களுக்கு அடிப்படை காரணமாக கூறுவது வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் தான். இதனை 'மிகினும் குறையினும் நோய் செய்யும்' என்ற பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர் வாக்கினால் அறியலாம். ஆக வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் அதிகமாவதும், குறைவதும் நோய்களுக்கு காரணமாக அமைகிறது என்கிறது தமிழ் மருத்துவம்.
சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் இவற்றை சரிப்படுத்தி நோய்கள் உண்டாகாமல் தடுக்க, மஞ்சள், மிளகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், சுக்கு ஆகிய மணமூட்டிகளை சேர்த்து உணவை மருந்தாக மாற்றினர். இவற்றை சித்த மருத்துவம் திரிதோட சமபொருட்களாக பயன்படுத்துகிறது.
அதாவது இயல்பு நிலையில் இருந்து திரிந்த வாதம், பித்தம், கபம் இவற்றை சமநிலைக்கு கொண்டு வரும் பொருட்டு இவற்றை பயன்படுத்துகிறது. பித்தம் அதிகரித்தால் சீரக தண்ணீரும், வெந்தயக்குழம்பும், கபம் அதிகரித்தால் மிளகு ரசமும், பாட்டி வைத்தியமாய் பழகி வரும் அஞ்சறைப்பெட்டி மருத்துவ முறைக்கு உதாரணங்கள்.
வெளிநாடுகளில் உள்ள உணவு முறைகளில் மஞ்சள்,மிளகு,சீரகம் ஆகிய எதுவும் இருந்ததாக தெரியவில்லை. இதனால் அதிகப்படியான தொற்று நோய்களும், தொற்றா நோய்களும் அவர்களை ஆட்கொண்டது. ஒரு கால கட்டத்தில் சர்க்கரை வியாதி, உடல் பருமன், புற்றுநோய் ஆகிய கொடிய அரக்க நோய்கள் எல்லாம் தலைவிரித்து ஆட துவங்கியது.
இனியும் ஆரோக்கியத்தை நழுவ விட கூடாது என்று எண்ணி, நம் பாரம்பரிய உணவு முறையில் அடங்கியுள்ள மருத்துவ ரகசியங்களை அறிந்துகொண்ட வெளிநாட்டினர், நமது அஞ்சறைப்பெட்டி கடைசரக்குகளை பயன்படுத்த துவங்கி பயனடைந்தும் வருகின்றனர். நம் பாரம்பரிய பொக்கிஷமான அஞ்சறைப்பெட்டி கடைசரக்குகள் அடங்கிய உணவுமுறைகளை அயல்நாட்டினர் கொண்டாடும் இத்தருணத்தில், நம் நாட்டினர் வெளிநாட்டு உணவுமுறைகளை நாடுவது என்பது ஆரோக்கியத்தை கண்ணெதிரே பறிகொடுக்கும் செயல் தான்.
அஞ்சறைப்பெட்டி சரக்குகள் சேராத தென்னிந்திய உணவான சாம்பாருக்கும், ரசத்திற்கும் மணமும் இருக்காது, மருத்துவ குணமும் இருக்காது. சாம்பார், ரசத்திற்கு என்று தனித்தனி மருத்துவ குணங்கள் இருப்பதை சில ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.
நமது பாரம்பரிய முறைகளோடும், வாழ்வியல் நெறிமுறைகளோடும் ஒன்றிணைந்தவை நறுமணமூட்டிகள். நம் வாழ்வியலோடு பயணித்து, நம்மை காத்து வருபவையும் அவைகள் தான். பாட்டி வைத்தியமான அவற்றை பல இடங்களில் அன்றாட வாழ்வில் பயன்படுத்தாமல் தினசரி வாழ்நாளை கடக்க முடியாது.
அஞ்சறைப்பெட்டி கடைசரக்குகள் எனப்படும் வாசனைப் பொருட்கள் என்பது மூலிகைகளின் பகுதிப் பொருட்கள் தான். அவை தாவரப் பகுதிகளின் வேர், தண்டு, இலை, பூ, காய், கனி இவற்றில் ஒன்றாக இருப்பதும் அறியக்கிடக்கின்றது. பல்வலிக்கு கிராம்பு, வாய் துர்நாற்றத்துக்கு ஏலக்காய், தொண்டைக் கரகரப்புக்கு மிளகு என்று நாள்தோறும் நறுமணமூட்டிகளை நாம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
காலம் காலமாக மிளகினை உணவில் காரத்திற்கு பயன்படுத்தி வந்த நாம், போர்த்துகீசியர்கள் வருகைக்கு பின் அவர்கள் கொண்டு வந்த மிளகாயை பழகி விட்டது நோயினை வாசல் தேடி வரவைக்க வழிவகுத்தது. மிளகாய் என்ற சொல்லுக்கு மிளகு+ஆய் என்பது பொருள். அதாவது மிளகு போன்ற காரத்தை உடைய பொருள். ஆனால் மிளகு போன்ற மருத்துவ குணத்தை உடைய பொருள், மிளகாய் இல்லை என்பது ஆணித்தரமான உண்மை.
சித்த மருத்துவம் கூறும் நோய்க்கு அடிப்படையான வாதம், பித்தம்,கபம் இவற்றை நல்ல நிலையில் வைக்க அஞ்சறைப்பெட்டி நறுமணமூட்டிகளே போதுமானவையாக உள்ளது. இவை சித்த மருத்துவ முதலுதவிப் பெட்டிகள். அவசரகாலத்தில் உதவும் வைத்திய நண்பர்கள்.
வாதம் அதிகரித்தால் உதவும் ஓமமும், பெருங்காயமும், பூண்டும், இஞ்சியும் நமக்கு பக்கபலம். பித்தத்தை தன்னிலைப்படுத்த உதவும் வெந்தயமும், ஏலக்காயும், சீரகமும், தனியாவும் நமது ஆரோக்கிய கேடயங்கள். கபம் அதிகரித்த காலத்தில் உதவும் மிளகும்,மஞ்சளும் நமக்கு உதவும் ஆன்டிபையோட்டிக் கடைசரக்குகள். இதனை முறையாக பயன்படுத்துவது நவீன மருந்துகளின் பயன்பாட்டை குறைக்க உதவும். நோய்களை விரட்டும். பிணிகளை தூர பறக்கவிடும்.
கொரோனாவின் முதல் அலையின் போது, நோயின் தன்மையை அறியாத போதே, நோய் எதிர்ப்புசக்திக்காக அதிகம் பயன்படுத்தப்பட்டது மஞ்சள் தான். பெரிய பெரிய மருத்துவமனைகளில் கூட மஞ்சள் சேர்த்த பால் கொடுத்து கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை தேற்றிய வரலாறு நம்மில் பலருக்கு தெரியும்.
இந்த நூற்றாண்டில் மட்டும் இந்த நிலைமை இல்லை. கடந்த நூற்றாண்டில் உலகத்தை அச்சுறுத்திய ஸ்பானிஷ் புளு காய்ச்சல் கொள்ளை கொள்ளையாய் உயிர்களை பறித்து சென்ற காலத்தில் தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டது வாசனைப் பொருளான பெருங்காயம் தான். ஆக தொற்றா நோய்களை தடுக்க மட்டும் தான் நறுமணமூட்டிகள் என்று இல்லாமல்,தொற்று நோய் காலத்திலும் அவற்றின் பயன்கள் நமக்கு பக்க பலம் என்பதையும் மறுக்க முடியாது.
அவற்றை முறையாக தெரிந்துகொண்டு பயன்படுத்த துவங்குவது உடல் நலத்திற்கும் நம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நன்மை பயக்கும். பொருளாதார செலவினங்களை குறைக்க உதவும். எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகளை பழகிவிட்ட நவீன உலகில், அஞ்சறைப்பெட்டியை அனைத்து தரப்பினரும், அனைத்து வயதினரும் அறிந்து வைத்துக்கொள்வது அவசியம்.
'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்', 'சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியர்க்கு மிஞ்சிய தெய்வம் இல்லை' போன்ற நம் நாட்டு பழமொழிகளை வெறும் வாய்மொழியாக மட்டும் அனுபவிக்காமல், அவற்றில் உள்ள அறிவியலை, மருத்துவ உண்மைகளை ஆராய்ந்து உற்று நோக்கினால் அஞ்சறைப்பெட்டி மரபின் மருத்துவ அறிவியலின் உண்மை விளங்கும்.நமது மரபு மருத்துவத்தின் பெருமையும் விளங்கும்.
மகத்துவம் மிக்க மருத்துவ குணமுள்ள நம் நாட்டு அஞ்சறைப்பெட்டி சரக்குகளைப் பற்றியும், சித்த மருத்துவம் கூறும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும், பிற நாடுகளின் மரபு மருத்துவத்தில் அவற்றின் பயன்பாடு குறித்தும், அவற்றை பயன்படுத்தும் முறைமைகள் பற்றியும், அறிவியல் பூர்வமான தகவல்களுடன் இனி வரும் வாரங்களில் விரிவாக காண்போம். ஆரோக்கியத்தை நிலைநாட்டுவோம்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com