சிறப்புக் கட்டுரைகள்
null

17-ந்தேதி சனிப்பெயர்ச்சி: 2023 பொது பலன்கள்

Published On 2023-01-10 15:45 IST   |   Update On 2023-01-10 15:45:00 IST
  • சனி என்பதால் மற்ற கிரகப் பெயர்ச்சியை விட சனிப் பெயர்ச்சி பற்றிய ஆர்வம் அனைவருக்கும் அதிகம் இருக்கிறது.
  • பழமைக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பழைய வீடுகளின் விற்பனை அதிகரிக்கும்.

கிரகங்களில் அதிக வருடம் ஒரு ராசியில் தங்கும் கிரகம் சனி என்பதால் மற்ற கிரகப் பெயர்ச்சியை விட சனிப் பெயர்ச்சி பற்றிய ஆர்வம் அனைவருக்கும் அதிகம் இருக்கிறது.

நிகழும் மங்களகரமான சுபகிருது. வருடம் தை மாதம் 3-ம் நாள் 17.1.2023 செவ்வாய் கிழமை அன்று மாலை 6.04 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி நவகிரகங்களில் நீதிமானாக போற்றப்படும் ஸ்ரீ சனி பகவான் தனது சொந்த வீடான மகர ராசியில் (காலபுருஷ10-ம் ராசி) அவிட்டம் 2-ம் பாதத்தில் இருந்து மற்றொரு சொந்த வீடான கும்ப ராசி (காலபுருஷ11-ம் ராசி) அவிட்டம் 3-ம் பாதம் சென்று ஆட்சி பலம் பெறப்போகிறார்.

சனி பகவான் தனது 3-ம் பார்வையால் காலபுருஷ முதல் ராசியான மேஷத்தில் உள்ள ராகுவையும் 7-ம் பார்வையால் காலபுருஷ 5-ம் ராசியான சிம்மத்தையும் 10-ம் பார்வையால் காலபுருஷ அஷ்டம ஸ்தானமான விருச்சிகத்தையும் பார்வையிடுகிறார். சனி பகவானின் பிரதான காரகம் தொழில். சனி என்றாலே தொழில் தான். தொழில் ஸ்தான அதிபதி சனி லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் தொழில் மூலம் சனி பகவான் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பெரும் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தர இருக்கிறார்.

3,10-ம் பார்வை பலன்கள்

சனி பகவானின் 3-ம் பார்வை பதியும் மேஷமும் 10-ம் பார்வை பதியும் விருச்சிகமும் செவ்வாயின் வீடுகள் என்பதால் மழைப் பொழிவு அதிகரிக்கும். தகவல் தொடர்பு துறையின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும்.

விவசாயம், காவல்துறை, ராணுவம், பாதுகாப்புத்துறை, விளையாட்டுத்துறை, கட்டுமானத் துறை, ரியல் எஸ்டேட் துறை, பொறியியல் துறை, போக்குவரத்து, சமையல் கலை, வாகனங்கள் தயாரிப்பு போன்ற துறைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். செயற்கை உடல் உறுப்புகளின் உற்பத்தி தேவை, பயன்பாடு அதிகரிக்கும்.இரண்டு நான்கு சக்கர வாகனங்களின் புழக்கம் அதிகரிக்கும். சொத்துக்களின் விலை உயரும். சொத்துக்கள், நில மோசடி தொடர்பான வழக்குகள் அதிகரிக்கும் பழைய பொருட்களின் மதிப்பு உயரும்.

பழமைக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பழைய வீடுகளின் விற்பனை அதிகரிக்கும். பழைய வீடுகள், கட்டிடங்களை வாங்கி புதுப்பிப்பதில் ஆர்வம் அதிகமாகும். மக்கள் நவீன பொருட்களை பயன்படுத்தி அதனால் பாதிப்படைந்து மீண்டும் பழைய முறைக்கு மாறுவார்கள். உதாரணமாக பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி அதனால் ஏற்படும் தீமைகளால் துணிப்பையை உபயோகிப்பதை கூறலாம். தங்க நகை பயன்பாடு அதிகரிக்கும். தங்கம், வெள்ளி விலை உயரும்.

இரும்பு பொருள்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு அதிகமாகும். பெட்ரோல், டீசல், எரிபொருட்கள் விலை ஏறும். எண்ணெய் வித்துக்களின் விலை ஏறி இறங்கும். புதிய கனிம வளங்கள், எண்ணெய் கிணறுகள் கண்டறியப்படும். பூமிக்கு அடியில் இருக்கும் பொருட்கள் பற்றிய ஆய்வு அதிகரிக்கும். பூமியில் புதையுண்ட பல வரலாற்று கலை பொருட்கள், அற்புதங்கள் கண்டறியப்படும். அறுவை சிகிச்சைகளில் அதி நவீன முறைகள் கையாளப்படும்.

7-ம் பார்வை பலன்கள்

சனியின் 7-ம் பார்வை பதியும் கால புருஷ 5-ம்மிடம் சூரியனின் வீடான சிம்மம் என்பதால் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். கல்வி கற்காதவர்களே இல்லை எனும் நிலை உருவாகும். அடிப்படை வசதி கூட இல்லாத கிராமங்கள், கிராம மக்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ச்சி அடையாத சிறு சிறு ஊர்கள் பெரிய ஊர்களுடன் இணைக்கப்பட்டு வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்ல போதிய திட்டங்கள் போடப்படும். நாட்டின் தொழில் வளர்சியில் அபரிமிதமான வரலாறு காணாத வளர்ச்சி இருக்கும்.

தொழில் வளர்ச்சியில் இந்தியா உலகத்தின் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு இணையாக முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும். தொழிலில் வளர்ச்சிக்கு இருந்த அனைத்து தடை, தாமதங்களும் விலகும். நாட்டில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். உழைக்கும் வர்க்கம் எனப்படும் சமூகத்தின் அடிமட்டத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மக்கள் ஏற்றம் பெறுவர். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த சனிப்பெயர்ச்சி இருக்கும் என்றால் அது மிகையாகாது.

உழைக்கும் மக்கள் தங்களுடைய வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உழைக்கும் மக்களை ஊக்குவிக்க தோன்றி பிரிந்த மிக பழமையான கட்சிகள் இணைந்து ஒன்றாக ஒரு பெயரில் செயல்பட வாய்ப்பு உள்ளது. அடி தட்டு மக்களும், மேல்தட்டு மக்களுக்கும் கிடைத்த அரசின் சலுகைகள், மானியங்கள் நடுத்தர மக்களையும் சென்று அடையும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடியவர்கள் ஆயிரம் லட்சம், கோடி என பணம் சரளமாக புரளும். நிலையில்லாத வருமானம், தொழில் இல்லாதவர்கள் நிலையான வருமானம், தொழில் கிடைக்கப் பெறுவார்கள். வேலையில்லா திண்டாட்டம் ஒழியும். பல புதிய தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் உருவாகுவார்கள். வேலை இல்லா திண்டாட்டம் முற்றிலும் நீங்கும்.ஒரு காலத்தில் நாட்டை ஆள்பவர்கள் மக்களை சுரண்டி வாழ்ந்தார்கள்.

இப்பொழுது நாட்டை ஆள்பவர்கள் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாட்டை ஆள வேண்டிய சூழல் வந்துவிட்டது. மக்களிடையே விழிப்புணர்வு அதிகம் வந்துவிட்டது. தொழிலாளர்களின் கை ஓங்கும். நாட்டு நலத்திற்கு புதிய சட்டங்கள். திட்டங்கள் வடிவமைக்கப்படும். ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், முதலாளி, தொழிலாளிகளிடம் மனபேதம் இருக்கும். ஆட்சியாளர்கள் மேல் மக்களுக்கு அதிருப்தி உண்டாகும். கட்சித்தாவல், உட்பூசல் மிகுதியாகும்.

தர்ம கர்மாதிபதி யோகம்

ஆண்டு முழுவதும் கால புருஷ 9-ம் அதிபதி குருவை கால புருஷ 10-ம் அதிபதி சனி பார்க்கிறார். இது தர்ம கர்மாதிபதி யோகம். இதனால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். மக்களின் மனதில் அமைதியும், திருப்தியும் உண்டாகும். வாழ்வாதாரமும், வாழ்க்கைத்தரமும் உயரும். புதிய சாதனையாளர்கள் உருவாகுவார்கள். அறிவியல் வளர்ச்சி அதி உன்னத நிலையை அடையும். இதுவரை மருந்து கண்டுபிடிக்காத, தீர்க்க முடியாத, தீராத பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். அதிக கோவில்களில் ஆலய திருப்பணிகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் வளர்ச்சி அடையும். பல புதிய தொழில்கள் உருவாகும். புதிய நிறுவனங்கள் அதிகமாக தொடங்கப்படும். நலிந்த பழைய தொழில்கள் மீண்டும் சீரமைக்கப்படும். முதலாளிகள் தொழிலாளிகளுக்குள் மன பேதம் அதிகரிக்கும். விலைவாசி உயரும். தங்கத்தின் விலை உயரும். தங்கத்தின் மீது மோகம் பயன்பாடு அதிகரிக்கும்.

குருச் சண்டாள யோகம்

ஏப்ரல் 22, 2023 முதல் அக்டோபர் 30, 2023 வரை சுமார் 6 மாத காலம் குருவும், ராகுவும் மேஷ ராசியில் சனி பார்வையில் சஞ்சரிக்கிறார்கள். குருவும் ராகுவும் இணைந்து ஒரே ராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று பொதுவாக கூறப்படுகிறது.கோட்சாரத்தில் குருபகவான் ராகுவுடன் சம்மந்தம் பெறும் காலங்களில் சர்வதேச பொருளாதார நிபுணர்களால் கூட நிர்ணயிக்க முடியாத வகையில் பொருளாதாரத்தில் மிகப் பெரிய ஏற்றம் இறக்கத்தை ஏற்படுத்தி உலக வர்த்தகத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவார்.

உலக பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். அனைத்து பணப்பரிமாற்றமும் டிஜிட்டல் முறைக்கு மாற்ற உரிய நடவடிக்கைள், வழிமுறைகள், சட்ட திட்டங்கள் உருவாகலாம். வங்கிகள், நிதிநிறுவனங்கள், வட்டித் தொழில், சீட்டு நடத்துபவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம்.கடுமையான புத்திர தோஷம், புத்திர சோகம் ஏற்படலாம். பலர் செயற்கை கருத்தரிப்பு முறையை நாடுவார்கள். சனிபகவான்  சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் 14.3.2023 முதல் 6.4.2024 வரை செயற்கை கருத்தரிப்பு முறையை நாடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 

சனி + குரு, ராகு சேர்க்கை

இந்த ஒராண்டில் சற்று ஏறக்குறைய 9½ மாத காலங்கள் ஜனவரி 17, 2023 முதல் கும்ப ராசியில் நிற்கும் சனி பகவானின் 3-ம் பார்வை மேஷ ராசியில் உள்ள ராகு மேல் பதிகிறது. சனியின் 3-ம் பார்வைபடும் மேஷ ராசியில் அக்டோபர் 30, 2023 வரை ராகு நிற்கிறார். ஏப்ரல் 22, 2023 முதல் ஒரு வருட காலத்திற்கு குருவும் சனி பார்வை பெறுகிறார். அசுப கிரகங்களான சனி மற்றும் ராகு இடையே குரு சஞ்சாரம் செய்கிறார் என்பதால் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு  நிலவும்.

இந்த காலகட்டத்தில் மக்கள் தொழில் உத்தியோகத்திற்காக அதிகம் இடம் பெயருவார்கள். நோய் தாக்கம், நோய் பயம் அதிகரிக்கும். ஆயுள் காரகன் சனி கால புருஷ 8-ம் இடமான விருச்சிகத்தைப் பார்ப்பதால் ஆயுள் பற்றிய பயம் தேவையில்லை. மதமாற்றம் அதிகரிக்கும். சாஸ்த்திர நம்பிக்கை குறையும். பணவீக்கம் அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தின் மேல் மக்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். போலி சாமியார்கள் அதிகரிப்பார்கள். 

மதகுருமார்கள் சட்ட சிக்கலை சந்திப்பார்கள். விருப்ப திருமணங்கள் அதிகரிக்கும். மக்களுக்கு வெளிநாட்டு மோகம், அந்நிய கலாச்சாரம் மீது ஆர்வம் அதிகரிக்கும். மக்கள் தொழில், வேலைக்காக வெளிநாட்டிற்கு அதிகம் இடம் பெறுவார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது நல்லது.

கிரக சஞ்சார பலன்கள்

கும்பராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்கள் வழியே பயணித்து பலன் தருவார். ராகுவின் சதய நட்சத்திரமும் சனி பகவானின் பகை கிரகங்களில் நட்சத்திரம் என்பதால் சற்று சுமாரான பலன்கள் நடைபெறும்.

அவிட்டம் 17.1.2023 முதல் 14.3.2023 வரை

செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை சுணங்கிக் கிடந்த அரசுப் பணிகள் எல்லாம் விறுவிறுப்பு அடையும். செவ்வாய் மத்திய அரசாங்கம் என்பதால் அரசின் திட்டங்களை நிறைவேற்ற ஏராளமான இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சதயம் 14.3.2023 முதல் 6.4.2024 வரை 

ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வயதான முதியவர்கள் இருந்தால் அரசின் உதவித் தொகை கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சியில் ஏற்ற இறக்கங்கள் மிகுதியாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் மக்கள் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. நாட்டின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுமா? மக்களை சென்றடையுமா என்ற சந்தேகம் ஏற்படும். பலருக்கு மனகுழப்பம் மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும்.

பூரட்டாதி 6.4.2024 முதல் 29.3.2025 வரை

குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் நல்ல சாதகமான பலன்கள் நடைபெறும். பலர் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை சொந்த முதலீடு செய்து தொழில் தொடங்குவார்கள். மக்களுக்கு சொந்த மண்ணில் உழைக்கும் ஆர்வம் மிகும். ஏற்றுமதி இறக்குமதியில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக நமது வளர்ச்சி இருக்கும். பல புதிய ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் உருவாகும். பல புதிய பெண் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் உருவாகுவார்கள். கடல் சார்ந்த பகுதியில் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும்

கடல் சார்ந்த தொழில்களின் வளர்ச்சியை அளவிட முடியாது. கல்வித்துறை, நிதித்துறை, நீதித்துறை, தூதரகம், கடற்படையினரின் பணிகள் சிறப்படையும். ஆன்மீகம், மதபோதனை, கல்வித்துறை, வங்கிப் பணியின் வளர்ச்சி உன்னதமானதாக இருக்கும். மோட்ச நிலையை அடைய மக்கள் சித்தர்கள் வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஏராளமான சித்தர்களின் வழிபாட்டுத் தலங்கள் உருவாகும்.வாழும் சித்தர்களில் பலர் மோட்சம் அடைவார்கள். கிரகங்கள் தங்கள் கடமையை செய்யட்டும்.

சனி என்றால் பழமை. மனிதர்களாகிய நமது கடமைக்கு கிரகங்களின் சுப அதிர்வலைகள் கிடைக்க பழமையான சிவ ஆலயங்களுக்கு இயன்ற பூஜை பொருட்கள் வாங்கித் தரலாம். நாடும் வீடும் நலம்பெற ஓய்வு நேரம் கிடைக்கும் போது சுந்தரகாண்டம் படிப்பது மிகச்சிறந்த பரிகாரம்.

Tags:    

Similar News